தேவனின் சமூகத்தில் தன்னம்பிக்கை
நம்முடைய வாழ்க்கையை தயாளத்துவமும் நற்குணமும் நிரப்ப நாம் கருத்தாய் தேடும்போது தேவனை நாடும்படியான நமது தன்னம்பிக்கை ஓங்கும்.
என் அன்பான சகோதர சகோதரிகளே, இந்த முக்கியமான பொது மாநாட்டில் உங்களுடன் பேசுவதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். என் கண்களுக்கு தொடர்ந்து வயதாகிறது. நான் என்னுடைய செய்தியைக் கொடுக்கும்போது, உங்கள் புரிதலுக்காக நன்றி.
பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையில் அதிக வேகம் இருக்கிற நாளில் நாம் வாழ்கிறோம். அநேக காரியங்களில் முன்னேற்றத்தை கண்டு நான் சந்தோஷத்தினால் நிரம்பியிருக்கிறேன்.
நம்முடைய வாலிபர்களால் நான் விசேஷமாக உணர்த்தப்பட்டிருக்கிறேன். அவர்களில் அதிகமானோர் சேவை செய்கிறார்கள். அவர்கள் தங்களுடைய மூதாதையர்களைத்தேடி ஆலயத்தில் நியமங்களை நிறைவேற்றுகிறார்கள். நம்முடைய வாலிபர்களும் இளம் பெண்களும் சாதனை எண்ணிக்கையில் ஊழிய சேவைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கிறார்கள். வளரும் தலைமுறை இயேசு கிறிஸ்துவின் நம்பிக்கைக்குரிய பின்பற்றுபவர்களாக வளர்ந்து வருகிறார்கள்.
சமீபத்திலே நான் புதிய கொள்ளுப் பேத்தியை சந்தித்தேன். அவளுடைய வாழ்க்கையில் சந்திக்க இருக்கும் சவால்களைப்பற்றி நான் யோசிக்கும்போது, இயேசு கிறிஸ்துவில் விசுவாசத்தைக் கட்டி எழுப்பும்படியாக அவளுக்கு உதவ நான் பெரிதும் விரும்புகிறேன். அவளுடைய எதிர்கால சந்தோஷத்திற்கு அவள் அவரது சுவிசேஷத்தின்படி ஜீவிப்பது அவசியம்.
அவள் நம் ஒவ்வொருவரையும்போல சவால்களை சந்திப்பாள். நாம் யாவரும் சுகவீனம், ஏமாற்றம், சோதனை, இழப்பு ஆகியவைகளை அனுபவிப்போம். இந்த சவால்கள் நம்முடைய தன்னம்பிக்கையை சீர்குலைக்கலாம். ஆயினும் இயேசு கிறிஸ்துவின் சீஷர்களாகிய நாம் வேறு வகையான தன்னம்பிக்கையைப் பெறக்கூடும்.
நாம் தேவனுடனான உடன்படிக்கைகளைச் செய்து கைக்கொள்ளும்போது ஆவியினாலே பிறந்த தன்னம்பிக்கையைப் பெறலாம். கர்த்தர், தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்திடம் நம்முடைய தன்னம்பிக்கை “தேவனின் பிரசன்னத்தில் பெலப்படும்” என்று சொன்னார். தேவனின் சமூகத்தில் தன்னம்பிக்கையைப் பெற்றிருப்பதால் வரும் ஆறுதலை சற்று யோசித்துப் பாருங்கள்.
தேவனுக்கு முன்பாக தன்னம்பிக்கையைப் பெற்றிருப்பதைப் பற்றி நான் பேசும்போது, தேவனை இப்போதே தொடர்புகொள்ளுவதற்கான தன்னம்பிக்கை கொண்டிருப்பதைப் பற்றி குறிப்பிடுகிறேன். பரலோக பிதா நமக்குச் செவிசாய்க்க வேண்டும் என்றும், நம் தேவைகளை நம்மை விட அவர் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் நம்பிக்கையுடன் ஜெபிப்பதை நான் குறிப்பிடுகிறேன். நாம் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு அவர் நம்மை நேசிக்கிறார், நம்முடனும் நாம் நேசிப்பவர்களுடனும் இருக்க தேவதூதர்களை அனுப்புகிறார் என்ற தன்னம்பிக்கையைப் பற்றி நான் குறிப்பிடுகிறேன். நம்முடைய மிக உயர்ந்த திறனை நாம் ஒவ்வொருவரும் அடைய உதவ அவர் ஏங்குகிறார் என்ற தன்னம்பிக்கையைப் பெற்றிருப்பதைக் குறிப்பிடுகிறேன்.
இப்போது அப்படிப்பட்ட தன்னம்பிக்கையை நாம் எப்படி பெறுகிறோம்? “உனது உள்ளம் … சகல மனுஷர்களிடத்திலும் தயாளம் நிறைந்ததாய் இருப்பதாக, உனது சிந்தனைகளை நற்குணம் இடைவிடாது அலங்கரிப்பதாக; அப்போது தேவனின் சமூகத்தில் உனது தன்னம்பிக்கை பெலப்படும்.”
திறவுகோல் அங்கே இருக்கிறது! கர்த்தருடைய சொந்த வார்த்தைகளில், தேவ சமூகத்தில் தன்னம்பிக்கையைப் பெறுதலுக்கான வழியை தயாளத்துவமும் நற்குணமும் திறக்கின்றன! சகோதர சகோதரிகளே, இதை நாம் செய்ய முடியும். தேவனின் சமூகத்தில் நமது தன்னம்பிக்கை உண்மையாகவே பெலப்பட முடியும், இப்பொழுதே!
தயாளத்துவம், நற்குணம், இரண்டையும் நாம் கருத்தில் கொள்வோமாக.
முதலில், தயாளத்துவம். இரு வருடங்களுக்கு முன்பு இயேசு கிறிஸ்துவின் உடன்படிக்கையை பின்பற்றுகிறவர்களாய் சமாதானம் பண்ணுகிறவர்களாகுங்கள் என்று நம்மை அழைத்திருந்தேன். அன்று சொன்னதை நான் மறுபடியும் சொல்கிறேன்: “கோபம் எதையும் இணங்கச் செய்திடாது. விரோதம் யாரையும் கட்டி எழுப்பாது. பிணக்கு ஒருபோதும் உணர்த்தப்பட்ட தீர்வுகளுக்கு வழிவகுக்காது.”
மனுஷர் யாவர் மேலும் உண்மையான தயாளத்துவம், சமாதானம் பண்ணுகிறவர்களின் தரக்குறியீடாக இருக்கிறது! பொதுவிலும் தனிமையிலும் நம்முடைய உரையாடல்களில் தயாளத்துவத்தைக் கொண்டிருப்பது அவசியம். என்னுடைய முந்தைய ஆலோசனையை இதயப்பூர்வமாக ஏற்றுக்கொண்டவர்களுக்கு நன்றி கூறுகிறேன். ஆனாலும் நாம் இன்னமும் சிறப்பாக செய்ய முடியும்.
பொது உரையாடல்களிலும் சமூக ஊடகங்களிலும் தற்போதைய விரோத மனப்பான்மை அசச்சுறுத்தக்கூடியதாய் இருக்கிறது. வெறுப்புணர்வுள்ள வார்த்தைகள் கொடிய ஆயுதங்கள். பரிசுத்த ஆவியானவர் நம்முடைய நீங்காத துணையாக இருப்பதிலிருந்து பிணக்கு தடுத்து விடுகிறது.
இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களாக, சமாதானம் பண்ணுகிறவர்களாக, நாம் வழிநடத்த வேண்டும். தயாளத்துவம் நம்முடைய சுபாவத்தின் பகுதியாக மாறும்போது மற்றவர்களை இழிவுபடுத்தும்படியான நமது உணர்வை இழந்துவிடுவோம். மற்றவர்களை நியாயந்தீர்ப்பதை நிறுத்திவிடுவோம். வாழ்க்கையின் அனைத்து தரப்பினர் மீதும் நாம் தயாளத்துவம் கொண்டிருப்போம். மனுஷர் யாவர் மேலும் தயாளத்துவம் நம்முடைய முன்னேற்றத்திற்கு அவசியம். தெய்வீக நடத்தைக்கு தயாளத்துவமே அஸ்திபாரம்.
இயேசு கிறிஸ்துவின் உண்மையான சீடர்களுக்கு நமது பரலோக பிதாவிடமிருந்து ஒரு பரிசு, குறிப்பாக நேசிக்கக் கடினமாக இருப்பவர்களுக்கு, நமது இருதயங்களை அதிக அன்பினால் நிரப்பும்படி நமது பரலோக பிதாவிடம் மன்றாடுவோம். இரட்சகரே சமாதானப் பிரபு. நாம் சமாதானத்திற்கான அவருடைய கருவிகளாக இருக்க வேண்டியவர்கள்.
இப்போது நாம் நற்குணத்தைப் பற்றி பேசலாம். கர்த்தர் நம்மிடத்தில் நம்முடைய சிந்தனைகளை நற்குணத்தால் இடைவிடாமல் அலங்கரிக்கச் சொல்லுகிறார். எந்த ஒரு அனுகூல எண்ணத்தையும் நீங்கள் நற்குணத்தால் மெருகேற்றும் போது நீங்கள் பெறும் ஊக்கத்தை கற்பனை செய்து பாருங்கள். நற்குணம் அனைத்தையும் சிறப்பானதாயும் சந்தோஷகரமாயும் ஆக்குகிறது! மறுபுறத்தில், அசுத்த எண்ணத்தோடு, ஒரு கொடிய எண்ணத்தோடு, அல்லது ஒரு மனசோர்வடையச் செய்யும் எண்ணத்தோடு நீங்கள் நற்குணத்தை சேர்க்கும்போது என்ன ஆகுமென்று யோசித்துப்பாருங்கள். நற்குணம் அந்த சிந்தனைகளை விரட்டிவிடும். நற்குணம் கவலையான தொந்தரவான எண்ணங்களிலிருந்து உங்களை விடுதலையாக்கும்.
சகோதர சகோதரிகளே, உலகம் அதிக துன்மார்க்கத்தில் வளரும் போது நாம் அதிகமதிகமாய் சுத்தமுள்ளவர்களாக வளர வேண்டும். நம்முடைய சிந்தனைகளும் வார்த்தைகளும் செயல்களும் குன்றாத நற்குணமிக்கதாயும் மனுஷர் யாவர் மேலும் இயேசு கிறிஸ்துவின் தூய அன்பினால் நிறைந்திருக்கவும் வேண்டும். நம் முன்னே இருக்கிற நல்வாய்ப்பு தேவன் நாம் எப்படிப்பட்ட ஜனமாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறாரோ அப்படிப்பட்ட ஜனமாக மாறுவதுதான்.
கர்த்தருடைய வீட்டில் வழக்கமாக ஆராதிப்பது நற்குணம் தயாளத்துவம் ஆகிய இரண்டுக்குமான நமது திறனை அதிகரிக்கிறது. இப்படியாக ஆலயத்தில் செலவிடும் நேரம் கர்த்தருக்கு முன்பான நம்முடைய தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது. ஆலயத்தில் செலவிடும் நேரத்தை அதிகப்படுத்துதல் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு ஆயத்தப்பட நமக்கு உதவும். அவருடைய வருகையின் நாளையோ மணியையோ நாம் அறியவில்லை. ஆனால் அந்த “பெரிதும் பயங்கரமுமான நாளுக்காக” நம்மை ஆயத்தப்படும்படியாக வலியுறுத்த கர்த்தர் எனக்கு உணர்த்துகிறார் என்பதை நான் அறிகிறேன்.
நம்முடைய வாழ்க்கையை தயாளத்துவமும் நற்குணமும் நிரப்ப நாம் கருத்தாய் தேடும்போது தேவனை நாடும்படியான நமது தன்னம்பிக்கை ஓங்கும். கர்த்தருக்கு முன்பாய் உங்களுடைய தன்னம்பிக்கை வளரத்தக்கதாக மனமுவந்து அடியெடுக்குமாறு உங்களை அழைக்கிறேன். பின்பு நம்முடைய பரலோக பிதாவினிடத்தில் நாம் அதிகரிக்கிற தன்னம்பிக்கையோடே போகும்போது நாம் அதிக சந்தோஷத்தினால் நிரப்பப்படுவோம், இயேசு கிறிஸ்துவில் உங்கள் விசுவாசம் அதிகரிக்கும். நம்முடைய மிகப்பெரிய நம்பிக்கைகளையும் மிஞ்சுகிற ஆவிக்குரிய வல்லமையை நாம் அனுபவிக்கத் துவங்குவோம்.
சமீப காலத்தில் ஆலயம் கட்டுதலின் வேகத்துக்காக கர்த்தருக்கு நன்றி உள்ளவர்களாக இருக்கிறோம். அவருடைய வழிகாட்டுதலின்படி இன்று இந்த ஒவ்வொரு 15 இடங்களிலும் ஒரு ஆலயத்தைக் கட்ட திட்டங்களை அறிவிக்கிறோம்:
-
ரெய்னோசா, மெக்சிகோ
-
சோரிலோஸ், பெரு
-
ரிவேரா, உருகுவே
-
காம்போ கிராண்டே, பிரேசில்
-
போர்டோ, போர்ச்சுகல்
-
உயோ, நைஜீரியா
-
சான் ஜோஸ் டெல் மான்டே, பிலிப்பைன்ஸ்
-
நூமியா, நியூ கலிடோனியா
-
லிவர்பூல், ஆஸ்திரேலியா
-
கால்டுவெல், ஐடஹோ
-
பிளாக்ஸ்டாப், அரிசோனா
-
ராபிட் சிட்டி, தெற்கு டகோட்டா
-
கிரீன்வில், சவுத் கரோலினா
-
நோர்போக், வர்ஜீனியா
-
ஸ்பானிஷ் போர்க், யூட்டா
இஸ்ரவேலின் மீட்பராகிய இயேசு கிறிஸ்து இந்த தம்முடைய சபையை வழிநடத்துகிறார் என்று நான் சாட்சியமளிக்கிறேன். அவர் மறுபடியும் வர ஆயத்தம் செய்துகொண்டிருக்கிறார். அவரை வரவேற்க நாமும் அவ்வாறே ஆயத்தம் செய்வோமாக. இதற்காக நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.