நாங்கள் கிறிஸ்துவைப்பற்றிப் பேசுகிறோம்
நாம் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள், அவருடைய ஒளியைப் பெறவும் பகிர்ந்து கொள்ளவும் நாம் முயல்கிறோம்.
முன்னுரை
நீண்ட வெளிநாட்டுப் பணியின் முடிவில், வீடு திரும்ப இன்னும் ஒரு நள்ளிரவு விமானப் பயணத்திற்கு, தயாராக, நானும் என் மனைவி லீசாவும் விமான நிலைய முனையத்திற்குள் நுழைந்தோம். நீண்ட வரிசையில், அடிமேல் அடிவைத்து. பலருடன் நாங்கள் நின்றபோது, விமானங்களை அடைவது, பாஸ்போர்ட் மற்றும் விசா பரிசீலனையை மேற்கொள்வது மற்றும் பாதுகாப்பு சோதனைகளை வெற்றிகரமாக கடப்பது குறித்து கவலைப்படும் சக பயணிகளின் அதிகரித்து வரும் பதட்டத்தை உணர முடிந்தது.
இறுதியாக, அறையில் இருந்த அதிக அளவு மன அழுத்தம் மற்றும் கவலையால் பாதிக்கப்படாத ஒரு சுங்க அதிகாரி அமர்ந்திருந்த ஒரு இடத்தை அடைந்தோம். அவள் கிட்டத்தட்ட இயந்திரத்தனமாக, கண் தொடர்பு இல்லாமல், என் ஆவணங்களை எடுத்து, என் படத்தை உறுதிப்படுத்தி, ஒன்றன்பின் ஒன்றாகப் பக்கங்களைப் புரட்டி, இறுதியாக என் பாஸ்போர்ட்டில் பலத்த சத்தத்துடன் முத்திரை குத்தினாள்.
பின்னர் அவள் லீசாவின் ஆவணங்களை எடுத்தாள். உணர்ச்சிவசப்படாமல், தலை குனிந்து தனது வேலையில் கவனம் செலுத்தி, அவள் ஒரு நிபுணர் பார்வையுடன் பக்கங்களை முறையாகப் புரட்டி, தன் முன் இருந்த ஆவணங்களின் விவரங்களில் கவனம் செலுத்தினாள். அவள் திடீரென்று நிறுத்தி, தலையை உயர்த்தி, லீசாவை வேண்டுமென்றே மற்றும் இதமாக மேல்நோக்கிப் பார்த்தபோது நாங்கள் சற்று ஆச்சரியப்பட்டோம். மென்மையான புன்னகையுடன், லீசாவின் பாஸ்போர்ட்டில் மெதுவாக முத்திரை குத்தி, ஆவணங்களை அவளிடம் திருப்பிக் கொடுத்தாள். என் மனைவி பதிலுக்கு புன்னகைத்தாள், ஆவணங்களை ஏற்றுக்கொண்டாள், அன்பான பிரிவு வார்த்தைகளைப் பரிமாறிக் கொண்டாள்.
“என்னதான் நடந்தது?” நான் நம்ப முடியாமல் கேட்டேன்.
லீசா பின்னர் அந்த அதிகாரி பார்த்ததை எனக்குக் காட்டினாள்—இரட்சகரின் உருவம் கொண்ட ஒரு சிறிய அட்டை. அது தற்செயலாக அவளுடைய பணப்பையிலிருந்து லீசாவின் பாஸ்போர்ட்டின் மடிப்புகளில் நழுவி இருந்தது. இதைத்தான் அந்த சுங்க அதிகாரி கண்டுபிடித்திருந்தாள். இதுதான் அவளுடைய முழு நடத்தையையும் மாற்றியிருந்தது.
Grace and Truth, by Simon Dewey, courtesy of altusfineart.com, © 2025, used with permission
இரட்சகரின் இந்த சிறிய படம், இரண்டு தொடர்பில்லா அந்நியர்களின் இருதயங்களை இணைத்தது. இயேசு கிறிஸ்துவின் ஒளியின் அழகு, அற்புதம் மற்றும் யதார்த்தத்தைப் படம் பிடித்தது அது தனிப்பட்டதல்லாததை தனிப்பட்டதாக மாற்றியது, அந்த நாளின் எஞ்சிய பகுதியிலும், அதிலிருந்து அடிக்கடி, அந்த இனிமையான, எளிமையான தருணத்தை நான் பிரமிப்புடன் சிந்தித்து, தேவனுடைய பிள்ளைகள் மீது கிறிஸ்துவின் ஒளியின் மகிமையான விளைவில் மகிழ்ந்திருக்கிறேன்.
நாங்கள் கிறிஸ்துவைப்பற்றிப் பேசுகிறோம்
நாம் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள், அவருடைய ஒளியைப் பெறவும் பகிர்ந்து கொள்ளவும் நாம் முயல்கிறோம். சபையின் பெயரில் மறைமுகமாக “இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்,“ என்ற நமது இறையியல் உள்ளது. பண்டைய மற்றும் ஜீவிக்கிற தீர்க்கதரிசிகள் மூலம், நமது பரலோக பிதா நம்மிடம் “இவருக்குச் செவி கொடுங்கள்!” என்றும் “கிறிஸ்துவிடம் வாருங்கள்” என்றும் கட்டளையிட்டுள்ளார். நாங்கள் கிறிஸ்துவைப்பற்றிப் பேசுகிறோம். கிறிஸ்துவில் களிகூருகிறோம், கிறிஸ்துவைப்பற்றிப் பிரசங்கிக்கிறோம், கிறிஸ்துவைக் குறித்து தீர்க்கதரிசனமுரைக்கிறோம்.
இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று நாம் கற்பிக்கிறோம், மேலும் இயேசு தம்முடைய பூலோக ஊழியத்தின் போது தம்முடைய சுவிசேஷத்தைப் போதித்து, தம்முடைய சபையை ஸ்தாபித்தார்.
இயேசு தம்முடைய வாழ்க்கையின் முடிவில், கெத்செமனே தோட்டத்தில் துன்பப்பட்டு, நம்முடைய பாவங்களுக்குப் பாவநிவர்த்தி செய்தார், சிலுவையில் அறையப்பட்டார், என்று நாம் சாட்சியமளிக்கிறோம்.
இரட்சகரின் பாவநிவாரண பலியின் காரணமாக, நாம் மனந்திரும்பும்போது மன்னிக்கப்பட்டு நமது பாவங்களிலிருந்து சுத்திகரிக்கப்பட முடியும் என்பதில் நாம் களிகூர்கிறோம். இது நமக்கு சமாதானத்தையும் நம்பிக்கையையும் தருகிறது, அதே நேரத்தில் தேவனின் பிரசன்னத்திற்குத் திரும்பி, முழுமையான மகிழ்ச்சியைப் பெறுவதை சாத்தியமாக்குகிறது.
இயேசுவின் உயிர்த்தெழுதலால், மரணம் ஒரு முடிவு அல்ல, மாறாக ஒரு முக்கியமான முன்னேற்றப் படியாகும் என்று நாம் தீர்க்கதரிசனம் கூறுகிறோம். “நாம் அனைவரும் இறந்த பிறகு மீண்டும் உயிர்த்தெழுப்படுவோம். இதன் பொருள் ஒவ்வொரு நபரின் ஆவியும் சரீரமும் மீண்டும் ஒன்றிணைந்து என்றென்றும் வாழும்.”
கிறிஸ்துவண்டை வாருங்கள்.
நம் காலத்தில் ஜீவிக்கும் தீர்க்கதரிசிகள்—நமக்குக் கற்பிக்கவும் வழிநடத்தவும் தேவனிடமிருந்து வெளிப்பாட்டைப் பெறுபவர்கள்—கிறிஸ்துவண்டை வர நம்மை அதிகதிகமாக அழைக்கிறார்கள். அவர்கள் நம் இருதயங்களையும், காதுகளையும், கண்களையும் அவர் மீது முழுமையாக மையப்படுத்த உதவுகின்றனர். இயேசு கிறிஸ்துவின் மீது நாம் கவனம் செலுத்த வடிவமைக்கப்பட்ட, பிரதான தலைமையால் அறிவிக்கப்பட்ட, அனுசரிப்புகள் மற்றும் மேம்பாடுகளின் ஏராளமான உதாரணங்களை நாம் மேற்கோள் காட்டலாம். இவற்றில் சில:
-
“மார்மன் சபை“ என்ற பெயரை எடுத்துவிட்டு, அதற்கு பதிலாக “பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை“ என்ற சரியான பெயருடன் மாற்றுவதற்கான முடிவு.
-
கூடுமிடங்களில் காட்சிப்படுத்த புதிய, உணர்த்தப்பட்ட கிறிஸ்து குறித்த தலைப்புள்ள கலைப்பொருட்கள் கிடைத்தல்.
-
“கிறிஸ்துவின் சீஷன்“ மற்றும் “கிறிஸ்துவை நோக்கிப் பார்“ போன்ற இயேசு கிறிஸ்துவை மையமாகக் கொண்ட இளம் பெண்கள் மற்றும் ஆரோனிய ஆசாரியத்துவ குழுமம் தலைப்புகள் மற்றும் இசை.
-
வரலாற்றில் மிகவும் மகிமையான நிகழ்வுகளாக இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தி மற்றும் மெய்யான உயிர்த்தெழுதலுக்கு அதிக முக்கியத்துவம்.
-
ஈஸ்டர் பண்டிகையை வெறும் விடுமுறை நாளாகக் கொண்டாடாமல், இயேசு கிறிஸ்துவை மையமாகக் கொண்டு கொண்டாடுதல்.
-
இயேசு கிறிஸ்து சபையின் காட்சி அடையாளத்தின் அறிமுகம் மற்றும் அதன் குறியீட்டு தன்மை.
இவற்றில் சிலவற்றின் தாக்கத்தை நாம் கூர்ந்து கவனிப்போம். முதலில், சபை சின்னம்.
சபை சின்னம்
2020 ஆம் ஆண்டில், தலைவர் ரசல் எம். நெல்சன் சபைக்கு ஒரு புதிய காட்சி அடையாளத்தை அறிமுகப்படுத்தினார். இந்த சின்னம் கிறிஸ்து தனது சபையின் மையமாக இருக்கிறார், மற்றும் நம் வாழ்வுக்கும் மையமாக இருக்க வேண்டும் என்ற சத்தியத்தை பிரதிபலிக்கிறது. இந்த பழக்கமான சின்னத்தை இப்போது ஆலய பரிந்துரைகள், சபை வலைத்தளங்கள் மற்றும் பத்திரிகைகளில், சுவிசேஷ நூலக செயலிக்கான ஐகானாகவும், ஆயுதப்படைகளில் பணியாற்றும் சபை உறுப்பினர்களில் பலரின் இராணுவ அடையாளக் குறிச்சொற்களிலும் காண்கிறோம். இந்த சின்னத்தில் ஒரு மூலைக்கல்லில் உள்ள சபையின் பெயர் அடங்கும், இது இயேசு கிறிஸ்துதான் பிரதான மூலைக்கல் என்பதை நினைவூட்டுகிறது, இங்கே கம்போடியன் மொழியில் காட்டப்பட்டுள்ளது, மற்றும் 145 மொழிகளில் பயன்பாட்டில் உள்ளது.
இந்த சின்னத்தின் மையம் பெர்ட்டல் தோர்வால்ட்சனின் அருமையான பளிங்கு கிறிஸ்டஸ் சிலையின் பிரதிநிதித்துவமாகும், இது சபையுடன் பரவலாக தொடர்புடையதாக மாறியுள்ளது மற்றும் பார்வையாளர் மையங்களிலும் உலகெங்கிலும் உள்ள ஆலய மைதானங்களிலும் காணப்படுகிறது. சபை சின்னத்தில் அதன் முக்கியத்துவம், நாம் செய்யும் அனைத்திற்கும் கிறிஸ்துவே மையமாக இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது. அதேபோல், இரட்சகரின் நீட்டிய கரங்கள், அவரிடம் வருபவர்களை அரவணைக்கும் அவரது வாக்குறுதியைக் குறிக்கின்றன. இந்த சின்னம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் அன்பின் காட்சி பிரதிநிதித்துவமாகவும், ஜீவிக்கும் கிறிஸ்துவின் நிலைத்த நினைவூட்டலாகவும் உள்ளது.
ஆர்வத்தினால், சபை சின்னத்தின் ஒரு முக்கிய அம்சம் குறித்து பல குடும்பத்தினரிடமும் நண்பர்களிடமும் விசாரித்தேன். ஆச்சரியப்படும் விதமாக, அது உள்ளடக்கிய ஒரு பரிசுத்தமான அம்சத்தைப் பற்றி பலருக்குத் தெரியாது. இயேசு கிறிஸ்து வளைவின் கீழ் நிற்கிறார். இது கல்லறையிலிருந்து வெளிவரும் உயிர்த்தெழுந்த இரட்சகரைக் குறிக்கிறது. சபை சின்னத்தைப் பயன்படுத்துவதிலும் கூட, உயிர்த்தெழுந்த, ஜீவிக்கும் கிறிஸ்துவை நாம் உண்மையிலேயே கொண்டாடுகிறோம்.
உன்னத மற்றும் பரிசுத்த ஈஸ்டர்
இப்போது ஈஸ்டரின் முக்கியத்துவத்தைப் பற்றி சிந்திப்போம். ஈஸ்டர் தொடர்பான சமீபத்திய பிரதான தலைமைச் செய்திகளில், “நமது ஜீவிக்கும் இரட்சகரின் போதனைகளைப் படிப்பதன் மூலமும், முழுமையாக நமது சமூகத்தில், குறிப்பாக நமது சொந்த குடும்பங்களுக்குள் ஈஸ்டர் மரபுகளை ஸ்தாபிக்க உதவுவதன் மூலமும் அவரது உயிர்த்தெழுதலைக் கொண்டாட“ நமக்கு சவால் விடுக்கப்பட்டுள்ளது. சுருக்கமாகச் சொன்னால், ஈஸ்டரின் உன்னதமான மற்றும் பரிசுத்தமான கொண்டாட்டத்திற்கு நகர நாம் ஊக்குவிக்கப்பட்டுள்ளோம்.
ஈஸ்டர் பற்றிய தொடர்ச்சியான வெளிப்பாடுகளை நான் விரும்புகிறேன், மேலும் ஈஸ்டரை ஒரு பரிசுத்தமான மற்றும் புனிதமான நிகழ்வாக மாற்றுவதற்கான உங்கள் பல முயற்சிகளுக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை ஒரு மணி நேர திருவிருந்து கூட்டத்தை நடத்துவதோடு மட்டுமல்லாமல், தகுதியான நிகழ்ச்சிகளுக்கான பிற எடுத்துக்காட்டுகளில் தொகுதி மற்றும் பிணைய ஆராதனைகள் மற்றும் குருத்தோலை ஞாயிற்றுக்கிழமை மற்றும் புனித வாரத்தின் போது நிகழ்ச்சிகள் ஆகியவைகள் அடங்கும். இந்த நினைவுகூரல்களில் குழந்தைகள், இளைஞர்கள் நிகழ்ச்சிகள், மேலும் பெரும்பாலும் மதங்களுக்கு இடையேயான சேர்ந்திசைக் குழுக்களும் அடங்குகின்றன. மற்றவர்கள், உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்காக ஜீவிக்கும் கிறிஸ்து திறந்த இல்லங்களை நடத்தியும் பல மதப்பிரிவு சமூக ஈஸ்டர் நிகழ்வுகளில் பங்கேற்றுமுள்ளனர்.
இத்தகைய நடவடிக்கைகள், எருசலேம் நகரத்தில் இரட்சகரின் வெற்றிகரமான பிரவேசத்தின் போது அவரைப் புகழ்ந்து குரல் கொடுத்த திரளான மக்களைப் பிரதிபலிக்கின்றன. இந்த மிக முக்கியமான விடுமுறையை நினைவுகூருவதற்காக வீட்டிலேயே குடும்பமாக ஆராதிக்க பிரதான தலைமையின் அழைப்புக்கு உங்கள் பதில்கள் பற்றிய அறிக்கைகள் சமமாக ஈர்க்கக்கூடியவை.
ஈஸ்டரை ஒட்டிய குடும்ப ஆராதனை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது என்று நான் நம்புகிறேன். இரண்டு வருடங்களுக்கு முன்பு, ஈஸ்டரைக் கனம்பண்ணும் விதத்தை மேம்படுத்த எங்கள் குடும்பத்தினரின் உறுதியைப் பற்றி நான் பேசினேன். ஒப்புக்கொள்ளும்விதமாக, இது இன்னும் முன்னேற்றத்தில் உள்ள ஒரு வேலை. நாங்கள் எப்போதும் ஒரு சிறப்பு ஈஸ்டர் ஞாயிறு உணவு, ஈஸ்டர் கூடைகள் மற்றும் ஈஸ்டர் முட்டை வேட்டையை அனுபவித்திருக்கிறோம், இன்னும் அனுபவிக்கிறோம். இருப்பினும், நமது கொண்டாட்டத்தில் இயேசு கிறிஸ்துவையும் அவரது பாவநிவர்த்தியையும் மையமாகக் கொண்ட ஒரு மனமுவந்த ஆவிக்குரிய பரிமாணத்தைச் சேர்ப்பது, இந்த மிகவும் பரிசுத்தமான நிகழ்வுகளின் நமது நினைவுகூரலுக்கு ஒரு இனிமையான சமநிலையைக் கொண்டு வந்துள்ளது.
இந்த ஆண்டு ஈஸ்டரை கிறிஸ்துவை மையமாகக் கொண்டதாக மாற்றுவதற்கான எங்கள் மூன்றாவது முயற்சியாகும். கிறிஸ்துமஸ் பிறப்பு விழாவைப் போலவே, எங்கள் குடும்ப ஈஸ்டர் தின நாடகத்திலும் பழங்கால உடைகள், புதிய ஏற்பாடு மற்றும் மார்மன் புஸ்தகத்திலிருந்து வேத வாக்கியங்களைப் படித்தல், இசை, ஈஸ்டர் படங்கள், பனை ஓலைகள் மற்றும் நான் முற்றிலும் நேர்மையாகச் சொன்னால், சிறிது குழப்பம் ஆகியவையும் அடங்கும். “ஓசன்னா… கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்தரிக்கப்பட்டவர்; உன்னதத்தில் ஓசன்னா“ மற்றும் “இவர் கலிலேயாவின் இயேசு“ போன்ற குருத்தோலை ஞாயிறு துதிகளைப் பிள்ளைகளும் பேரக்குழந்தைகளும் படித்து துதிப்பது, கிறிஸ்துமஸ் நேரத்தில் “பூமியில் சமாதானம், மனிதர்கள்மேல் பிரியம்“ எவ்வளவு பொருத்தமாக இருக்கிறதோ, அவ்வளவு பொருத்தமாகத் தெரிகிறது.
இப்போது நாம் அலங்காரங்களின் கலவையை அனுபவிக்கிறோம். ஒரு காலத்தில் முயல்கள் மற்றும் ஈஸ்டர் முட்டைகள் மட்டுமே இருந்தன, இப்போது கிறிஸ்டஸ் மற்றும் காலியான கல்லறையின் உருவங்கள், கல்லறைக்கு வெளியே தோட்டத்தில் உயிர்த்தெழுந்த இரட்சகர் தோன்றுதல் மற்றும் நேபியர்களுக்கு இரட்சகரின் தோற்றம் ஆகியவற்றுடன் சமநிலைப்படுத்தப்படுகின்றன. ஈஸ்டரை வெறும் ஒரு நாளாக இல்லாமல் ஒரு பருவமாக மாற்றவும் நாம் முயற்சி செய்கிறோம். குருத்தோலை ஞாயிறு மற்றும் புனித வெள்ளி மற்றும் புனித வாரம் முழுவதும் நடந்த புனித நிகழ்வுகள் குறித்து நாம் அதிக உரையாடல், சிந்தனை மற்றும் கொண்டாட்டத்துடன் இருக்க முயற்சிக்கிறோம்.
இயேசு கிறிஸ்துவின் பாவநிவாரண பலியையும், அவரது உண்மையான மற்றும் மகிழ்ச்சியான உயிர்த்தெழுதலையும் மதிக்க ஈஸ்டர் நமக்கு வாய்ப்பளிக்கிறது. தோட்டத்திலும் கல்வாரியிலும் இரட்சகரின் துன்பத்தை நாம் கற்பனை செய்யும்போது நம் இருதயங்கள் கனமாக இருக்கின்றன, ஆனால் காலியான கல்லறையையும் “அவர் உயிர்த்தெழுந்தார்!“ என்ற பரலோக ஆணையையும் நாம் கற்பனை செய்யும்போது நம் இருதயங்கள் மகிழ்ச்சியடைகின்றன.
ஒரு உண்மையான உயிர்த்தெழுதல்
“மனிதகுலத்திற்கான அனைத்து செய்திகளிலும் மிகவும் மகிமையான ஈஸ்டர் மற்றும் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை எதிர்நோக்குவதற்கான“ சமீபத்திய பிரதான தலைமை ஊக்குவிப்பு இந்த பருவத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. பல்வேறு கிறிஸ்தவ இறையியலாளர்களிடையே உயிர்த்தெழுதலை உருவகமாகவும் குறியீட்டு ரீதியாகவும் பார்க்கும் போக்கு அதிகரித்து வருவதாகத் தோன்றினாலும், “உயிர்த்தெழுதல் என்பது இதுவரை வாழ்ந்த அனைவரும் உயிர்த்தெழுப்பப்படுவார்கள், மேலும் உயிர்த்தெழுதல் என்பது உண்மையானது“ என்ற நமது கோட்பாட்டை நாம் உறுதிப்படுத்துகிறோம். “ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறது போல கிறிஸ்துவுக்குள் எல்லோரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.” இயேசு கிறிஸ்து ஒவ்வொரு ஜீவ ஆத்துமாவிற்காகவும் மரணத்தின் கட்டுகளை உடைத்தார்.
இயேசு நமக்கு அளிக்கும் கிருபையைக் கண்டு நாம் அனைவரும் உண்மையிலேயே வியப்படைகிறோம். “ஒருவன் தன் சிநேகிதருக்காக தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை எனும் அவரது வார்த்தைகளை நாம் தழுவிக் கொள்கிறோம்
“கிறிஸ்தவத்தைப் பிரசங்கிப்பது என்பது [அப்போஸ்தலர்களுக்கு] முதன்மையாக உயிர்த்தெழுதலைப் பிரசங்கிப்பதாகும்“ என்று சி.எஸ். லூயிஸ் கூறினார். … அப்போஸ்தலர் நடபடிகளில் பதிவாகியுள்ள ஒவ்வொரு கிறிஸ்தவ பிரசங்கத்திலும் உயிர்த்தெழுதல் மையக் கருப்பொருளாக உள்ளது. உயிர்த்தெழுதலும் அதன் விளைவுகளும் கிறிஸ்தவர்கள் கொண்டு வந்த ‘சுவிசேஷம்’ அல்லது நற்செய்தியாகும்.”
“உயிர்த்தெழுதல் இருப்பதால், கல்லறை ஜெயம் கொள்ளுகிறதில்லை. மரணத்தின் வேதனை கிறிஸ்துவிலே விழுங்கப்பட்டிருக்கிறது.”
முடிவுரையும் சாட்சியமும்
முடிவில், ஈஸ்டர் பிரதிநிதித்துவப்படுத்தும் பரிசுத்த நிகழ்வுகளை இன்னும் மனமுவந்து நினைவுகூர நமது ஜீவிக்கும் தீர்க்கதரிசி மற்றும் அவரது ஆலோசகர்களின் அழைப்புகளை ஏற்றுக்கொள்பவர்கள் அனைவரும் இயேசு கிறிஸ்துவுடனான தங்கள் பிணைப்பு எப்போதும் வலுவடைவதைக் காண்பார்கள் என்று நான் சாட்சியமளிக்கிறேன்.
சில நாட்களுக்கு முன்பு, கல்லறை, கல்லறையை மூடியிருந்த கல், இயேசு, மரியாள், சீஷர்கள் மற்றும் தேவதூதர் ஆகியோரின் எளிய பிரதிகளைப் பயன்படுத்தி தனது நான்கு வயது பேரனுடன் ஈஸ்டர் கதையை ஒத்திகை பார்த்த ஒரு பாட்டியைப் பற்றி நான் அறிந்தேன். கல்லறையில் அடக்கம், மூடுதல், திறப்பு மற்றும் உயிர்த்தெழுதலின் தோட்டக் காட்சியை தனது பாட்டி பகிர்ந்து கொள்வதை அந்தச் சிறுவன் உன்னிப்பாகக் கவனித்துக் கேட்டான். பின்னர் அவன் தன்னைப் பற்றிய உருவங்களை நகர்த்தும்போது கதையை ஆச்சரியப்படும் விதமாக கவனமாக மீண்டும் கூறினான். இந்த இனிமையான தருணத்தைத் தொடர்ந்து, நமக்கு ஏன் ஈஸ்டர் என்று தெரியுமா என்று அவனிடம் கேட்கப்பட்டது. சிறுவன் மேலே பார்த்து, குழந்தைத்தனமான காரணத்துடன், ”ஏனென்றால் ஜீவிக்கிற அவரால்” என்று பதிலளித்தான்.
அவர் உயிர்த்தெழுந்தார், அவர் ஜீவிக்கிறார் என்பதுபற்றி, அவனுடைய சாட்சியம், உங்களுடைய சாட்சியம், தேவதூதர்கள் மற்றும் தீர்க்கதரிசிகளின் சாட்சியத்துடன் நான் என் சாட்சியத்தைச் சேர்க்கிறேன், அதுபற்றி நான் சாட்சியமளிக்கிறேன், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.