பொது மாநாடு
வாழ்க்கையை நேசித்தல்
ஏப்ரல் 2025 பொது மாநாடு


14:10

வாழ்க்கையை நேசித்தல்

வாழ்க்கை என்பது நம் பிதாவின் பரிபூரண திட்டத்தின் மிகவும் விலைமதிப்பற்ற பகுதியாகும், மேலும் அவரது கட்டளைப்படி நாம் வாழ்க்கையை நேசிக்கிறோம் மேலும் உயிரைப் பாதுகாக்கிறோம்.

நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்து, நமக்குப் போதித்தார், “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.”

சமீபத்தில் யூட்டாவில் உள்ள ஒரு ஆயர், தனது தொகுதியில் ஒரு இளம் பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதுள்ள அன்பின் வெளிப்பாட்டைப் பற்றி என்னுடன் பகிர்ந்து கொண்டார். தொடர்ச்சியான அழகான நிகழ்வுகளின் மூலம், பெற்றோர் இரட்சகரிடமும் அவரது சபையிடமும் திரும்பத் தீர்மானித்தனர். அவர்கள் சபையிலிருந்து வெகு தொலைவில் இருந்த காலத்தில், அவர்களின் பதின்ம வயது மகள் ஒரு இளைஞனுடன் தொடர்பு கொண்டிருந்தாள். திரும்பி வந்த இந்த விலைமதிப்பற்ற மகள், இளம் பெண்கள் சாட்சியக் கூட்டத்தின் போது தனது பரலோக பிதாவிடமிருந்து மகத்தான அன்பை உணர்ந்தாள். கட்டளைகளை இன்னும் முழுமையாக கடைப்பிடிக்க அவள் தீர்மானித்தாள். அவள் எழுதினாள், “நான் என் ஆயருடன் மனந்திரும்புதல் செயல்முறையைத் தொடங்கினேன்.”

விரைவில், அவள் நோய்வாய்ப்பட்டாள். அவளுடைய வார்த்தைகளில்: “[ஒரு] பரிசோதனை … நான் கர்ப்பமாக இருந்தேன் என்று காட்டியது. நான்… அழ ஆரம்பித்தேன்… என் அப்பா என்னைத் தன் கைகளால் சுற்றிக்கொண்டு, எல்லாம் சரியாகிவிடும் என்று உறுதியளித்தார். … என் காதலன்… குழந்தையை அழித்துவிடச் சொன்னான்… நான் மறுத்துவிட்டேன்.

தேவையிலிருப்போரிடத்தில் அக்கறை

அவள் தொடர்ந்தாள்: “எங்கள் தொகுதி குடும்பத்தினரிடமிருந்து எனக்கு மிகுந்த அன்பும் ஆதரவும் கிடைத்துள்ளது. அது மிக அதிகமாயிருந்தது. [எனது] ஆயரும் இளம் பெண்கள் தலைவரும் எல்லாவற்றையும் தாண்டி தங்கள் அன்பையும் ஆதரவையும் தெரிவித்தனர். … என்னையும் என் குடும்பத்தையும் வழிநடத்தும் கர்த்தரின் கரத்தை நான் கண்டிருக்கிறேன். … என்னுடையது போன்ற ஒரு தொகுதிதான் அனைவருக்கும் தேவையான குடும்பம், குறிப்பாக என் நிலையில் இருக்கும் ஒரு இளம் பெண்ணுக்கு.”

அவளும், அவளது குடும்பத்தினர் மற்றும் அவளது தொகுதி குடும்பத்தினர் இந்த கடந்த பிப்ரவரியில் அவளுடைய ஆண் குழந்தையை அன்புடன் வரவேற்றனர்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து

தலைவர் ரசல் எம். நெல்சன் கூறினார், “கர்த்தருடைய உண்மையான மற்றும் ஜீவனுள்ள சபையின் ஒரு தனிச்சிறப்பு எப்போதும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட … தேவனின் தனிப்பட்ட பிள்ளைகளுக்கு ஊழியம் செய்வதற்கான முயற்சியாக இருக்கும் … அவர் செய்தது போலவே, ஒருவருக்கு [அன்பான தயவுடன் ஊழியம் செய்வது].”

நீதியான தேர்வுகளுக்கு உதவுதல்

ஒரு ஒற்றைப் பெண் எதிர்பாராத குழந்தையை எதிர்பார்க்கிறாள் என்பதைக் கண்டுபிடிக்கும்போது, ​​உடல்நலக் கவலைகள், ஆவிக்குரிய கொந்தளிப்பு, சங்கடம், நிதிக் கவலைகள், கல்வி கேள்விகள், திருமண நிச்சயமற்ற தன்மை மற்றும் சிதைந்த கனவுகளின் சோகம் ஆகியவை, வேதனையும் திகைப்பும் நிறைந்த ஒரு தருணத்தில், ஒரு சிந்தனைமிக்க பெண்ணை ஆழ்ந்த வேதனையையும் வருத்தத்தையும் தரும் நடவடிக்கைகளை எடுக்க வழிவகுக்கும்.

கருக்கலைப்பு செய்ததால் அல்லது அதில் பங்கேற்றதால் ஆழ்ந்த வலியையும் வருத்தத்தையும் அனுபவித்த எவரும், தயவுசெய்து நினைவில் கொள்ளுங்கள்: கடந்த காலத்தை நம்மால் மாற்ற முடியாது என்றாலும், தேவன் கடந்த காலத்தை குணப்படுத்த முடியும். மனத்தாழ்மையுள்ள மற்றும் மனந்திரும்பிய, இருதயத்தோடு நீங்கள் அவரிடம் திரும்பும்போது, ​​அவருடைய பாவநிவாரண கிருபையின் அற்புதத்தின் மூலம் மன்னிப்பு வர முடியும்.

பூலோகப் பிறப்பின் பரிசுத்தத்தன்மையுடன் இரண்டு வார்த்தைகள் பெரும்பாலும் இணைக்கப்படுகின்றன: வாழ்க்கை மற்றும் தேர்வு. வாழ்க்கை என்பது நம் பிதாவின் பரிபூரண திட்டத்தின் மிகவும் விலைமதிப்பற்ற பகுதியாகும், மேலும் அவரது கட்டளைப்படி நாம் வாழ்க்கையை நேசித்து உயிரைப் பாதுகாக்கிறோம்; கருத்தரித்தவுடன் வாழ்க்கையின் தொடர்ச்சியைத் தேர்வு செய்கிறோம். ஒழுக்க சுயாதீனத்தின் தேர்ந்ததெடுக்கும் வரத்தையும் நாம் பொக்கிஷமாகக் கருதுகிறோம், மேலும் நீதியான தேர்வுகளை, நித்திய மகிழ்ச்சியைக் கொண்டுவரும் தேர்வுகளை, தேவனால் அங்கீகரிக்கப்பட்ட தேர்வுகளை வலுப்படுத்துகிறோம்.

ஒரு பெண்ணும் ஆணும் ஒரு பலவீனமான நேரத்தில், ஒரு முக்கியமான தேர்வை எதிர்கொள்ளும்போது, ​​நமது வார்த்தைகள், நமது கைகள், நமது இருதயங்கள்—ஆவிக்குரிய ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும், நிதி ரீதியாகவும்—இரட்சகரின் அன்பை உணர அவர்களை ஆசீர்வதிக்க முடியும், தலைவர் ஹென்றி பி. ஐரிங் சொன்னது போல ”அவர்கள் எதைக் காண்கிறார்கள் என்று நினைக்கிறார்களோ” என்பதிலிருந்து ”அவர்கள் இன்னும் பார்க்க முடியாதவை” வரை அவர்களின் ஆவிக்குரிய கண்களுக்கு ஒரு தெளிவுபடுத்தும் சரிசெய்தலைக் கொண்டுவர முடியும்.

அநித்திய வாழ்வின் கோட்பாடு

தலைவர் டாலின் எச். ஓக்ஸ் கூறினார்: “கருக்கலைப்பு குறித்த நமது அணுகுமுறை, பூலோக வாழ்க்கை எப்போது தொடங்குகிறது என்பது பற்றிய வெளிப்படுத்தப்பட்ட அறிவை அடிப்படையாகக் கொண்டது அல்ல. … தேவனின் அனைத்து ஆவிக் குழந்தைகளும் ஒரு மகிமையான நோக்கத்திற்காக இந்தப் பூமிக்கு வர வேண்டும் என்பதும், அந்த தனிப்பட்ட அடையாளம் கருத்தரிப்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே தொடங்கியது, மேலும் வரவிருக்கும் அனைத்து நித்தியங்களுக்கும் தொடரும் என்பதும் நமது அறிவால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிரதான தலைமை மற்றும் பன்னிரு அப்போஸ்தலர் குழுமம் மூலம் குரல் கொடுக்கப்பட்ட, பிறக்காத குழந்தையைப் பற்றிய கர்த்தருடைய வார்த்தை, ஒருபோதும் மாறவில்லை, யுகங்களாக தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை எதிரொலிக்கிறது, கர்த்தர் நம்மிடம் கேட்டதற்கு தெய்வீக தெளிவை அளிக்கிறது.

“பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை மனித வாழ்க்கையின் பரிசுத்தத்தை நம்புகிறது. ஆகையால், சபை தனிப்பட்ட அல்லது சமூக வசதிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட கருக்கலைப்பை எதிர்க்கிறது, மேலும் இதுபோன்ற கருக்கலைப்புகளுக்கு அடிபணியவோ, ஊக்குவிக்கவோ, பணம் செலுத்தவோ அல்லது ஏற்பாடு செய்யவோ கூடாது என்று அதன் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்துகிறது.

”[கர்த்தர்] சாத்தியமான விதிவிலக்குகளை அனுமதிக்கிறார்… எப்போது:

  • கற்பழிப்பு அல்லது தூண்டுதலால் கர்ப்பம் விளைகிறது, அல்லது

  • ஒரு திறமையான மருத்துவர் தாயின் வாழ்க்கை அல்லது ஆரோக்கியம் கடுமையான ஆபத்தில் இருப்பதாக தீர்மானிக்கிறார், அல்லது

  • “ஒரு திறமையான மருத்துவர் கருவில் கடுமையான குறைபாடுகள் இருப்பதை தீர்மானிக்கிறார், அது குழந்தையை பிறப்பதற்கு அப்பால் வாழ அனுமதிக்காது.

பிரதான தலைமை தொடர்கிறார்கள்: “கருக்கலைப்பு மிகவும் தீவிரமான விஷயம். [இந்த அரிய சூழ்நிலைகளிலும் கூட] பொறுப்பான நபர்கள் ஜெபம் மூலம் உறுதிப்படுத்தலைப் பெற்ற பின்னரே அதைப் பரிசீலிக்க வேண்டும்” மற்றும் மற்றவர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, கர்த்தருடைய தீர்க்கதரிசிகள் உலகிற்கு ஒரு பிரகடனத்தை வெளியிட்டனர். அது இந்த வார்த்தைகளை உள்ளடக்கியுள்ளது:

“சந்ததியை விருத்தி செய்கிற பரிசுத்தமான வல்லமைகள், சட்டப்படி திருமணமான கணவனும் மனைவியுமாகிய ஆணுக்கும் பெண்ணுக்குமிடையில் மட்டுமே பிரயோகிக்கப்பட வேண்டும் என்று தேவன் கட்டளையிட்டுள்ளார் என்பதை நாங்கள் அறிவிக்கிறோம்.

அநித்திய வாழ்க்கை தெய்வீகமாய் சிருஷ்டிக்கப்பட வேண்டிய வழியை நாங்கள் பிரகடனம் செய்கிறோம். தேவனின் நித்திய திட்டத்தில் ஜீவனின் தூய்மையையும் முக்கியத்துவத்தையும் நாங்கள் உறுதி செய்கிறோம்.”

இன்னும் பிறக்காத உயிரைப் பேணிப் பாதுகாப்பது என்பது ஒரு அரசியல் நிலைப்பாடு அல்ல. இது கர்த்தரால் தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு ஒழுக்க நியாயப்பிரமாணம் ஆகும்.

மேலும் வெளிப்படையாக பேசுதல்

பிரதான தலைமையில் சேவை செய்த தலைவர் ஜே. ரூபன் கிளார்க் ஜூனியரின் ஒரு அறிக்கை இன்றைய நமது இளைஞர்களை அழகாக விவரிக்கிறது:“சபையின் இளைஞர்கள் ஆவியின் காரியங்களுக்காகப் பசியுடன் இருக்கிறார்கள்; அவர்கள் சுவிசேஷத்தைக் கற்றுக்கொள்ள ஆர்வமாக உள்ளனர், மேலும் அவர்கள் அதை நேரடியாகவும், நீர்த்துப்போகாமலும் விரும்புகிறார்கள். அவர்கள் நமது நம்பிக்கைகளைப் பற்றி அறிய விரும்புகிறார்கள்; தங்கள் உண்மையின் சாட்சியங்களைப் பெற விரும்புகிறார்கள். அவர்கள் … விசாரணை செய்பவர்கள், உண்மையைத் தேடுபவர்கள். நமது வீடுகளில் உள்ள இளைஞர்களிடமும், ஒத்தாசைச் சங்கத்தில் மற்றும் மூப்பர்கள் குழும கூட்டங்களில் ஒருவரொருவரிடத்திலும், கர்த்தருடைய கற்புடைமை நியாயப்பிரமாணம், வாழ்க்கையின் பரிசுத்தத்தன்மை, பிறக்காத குழந்தைகள் மற்றும் அவர்களின் தாய்மார்களின் பராமரிப்பு பற்றி விசுவாசத்துடனும் இரக்கத்துடனும் அடிக்கடி பேசுவோமாக.

பல வருஷங்களுக்கு முன்பு தனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தைப் பற்றி ஒரு அன்பான சகோதரி எனக்கு எழுதினார்: “ஒரு 17 வயதுடையவளாக, என் காதலனிடமிருந்து எந்த ஆதரவும் இல்லாமல் நான் கர்ப்பமாக இருந்தேன். நான் வெட்கமாகவும் தனிமையாகவும் உணர்ந்தேன் [ஆனால்] நான் ஒருபோதும் [கருக்கலைப்பு] பற்றி யோசித்ததில்லை. … எனக்கு என் அன்பான குடும்பம் இருந்தது, வழிகாட்டுதலுக்காக நான் தொடர்ந்து சந்தித்த என் ஆயரும் இருந்தார். … நான் தேவனிடம் திரும்பினேன். நான் வேதங்களைப் படித்தேன் … ஜெபித்தேன் [மேலும்] என் இரட்சகர் மற்றும் மனந்திரும்புதல் செயல்முறை மூலம் பலத்தைக் கண்டேன். … [என் ஜெபங்களுக்கு] என்னால் மறுக்க முடியாத ஒரு பதில் கிடைத்தது. … அது மனவேதனையை ஏற்படுத்தியது, ஆனால் நான் என் மகளை தத்தெடுப்பதற்காக கொடுக்கப் போகிறேன் என்று எனக்குத் தெரியும். … நான் தைரியத்திற்காக ஜெபித்தேன் [மேலும்] மனந்திரும்புதலின் மூலம் இரட்சகரின் அன்பை மிகத் தெளிவாக உணர்ந்தேன், தேவன் … ஜெபங்களுக்குப் பதிலளித்து நம்மைப் பலப்படுத்துகிறார் என்பதை நான் அறிவேன்.”

ஒரு அன்பான தம்பதியினர் விலைமதிப்பற்ற பெண் குழந்தையை தத்தெடுத்து, அவளுக்கு சுவிசேஷம் கற்பித்தனர். அவள் இப்போது தனக்கென ஒரு அழகான குடும்பத்துடன் திருமணம் செய்துகொண்டாள்.

சில சமயங்களில் உயிரைப் பாதுகாப்பதோடு, மிகவும் கடினமான மற்றும் வேதனையான நிச்சயமற்ற தன்மையும் சேர்ந்து கொள்ளலாம்.

சமீபத்தில் கேத்தியும் நானும் நேசிக்கும் ஒரு இளம் தம்பதியினர் அவர்கள் எதிர்பார்க்கும் விலைமதிப்பற்ற குழந்தையைப் பற்றி எனக்கு எழுதினர்.

தந்தை எழுதினார்: “[என் மனைவி] 10 வார கர்ப்பமாக இருந்தபோது, ​​எங்கள் அதிசயக் குழந்தைக்கு டவுன் சிண்ட்ரோம் என்று பொதுவாக அழைக்கப்படும் டிரிசோமி 21 என்ற மரபணு நிலை இருப்பதைக் கண்டுபிடித்தோம். மருத்துவத் துறையிலிருந்து கருக்கலைப்பு பற்றி பரிசீலிக்க வேண்டிய அழுத்தத்தை நாங்கள் உணர்ந்தோம். சில வாரங்களுக்குப் பிறகு, எங்கள் பிறக்காத குழந்தைக்கு… வாழ்க்கையின் முதல் வருடத்தில் பல இதய அறுவை சிகிச்சைகள் தேவைப்படும் என்பதைக் கண்டுபிடித்தோம். இந்த செயல்முறை முழுவதும் தெய்வீக உதவிக்காக நாங்கள் உருக்கமாக ஜெபித்தபோது, ​​… ஆவியானவர் எங்களுக்கு ஆறுதல் அளிப்பதை உணர்ந்தோம். எங்கள் மகள் பரலோக பிதாவின் ஒரு உயர்ந்த குழந்தை என்றும், எங்கள் குடும்பத்தில் இருக்கவும் பூமிக்கு வரவும் மிகுந்த ஆசை கொண்டவள் என்றும் எங்களுக்கு வெளிப்பாடும் புரிதலும் கிடைத்தது.

குழந்தையின் தாய் எழுதினார்: “[நாங்கள்] இந்தச் செய்தியால் முற்றிலும் அதிர்ச்சியடைந்தோம், குழப்பமடைந்தோம், உண்மையாகவே இடிந்து போனோம். … நான் 14 வார கர்ப்பமாக இருந்தபோது, ​​எங்கள் குழந்தைக்கு பல பிறவி இதயக் குறைபாடுகள் இருப்பதைக் கண்டுபிடித்தோம், அது மரணத்தை விளைவிக்கும். 10–18 வார கர்ப்பகாலத்தில் எண்ணற்ற மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களைப் பார்த்தோம். … எங்கள் ஒவ்வொரு சந்திப்பிலும், கர்ப்பத்தைத் தொடர விரும்புகிறீர்களா அல்லது கலைக்க விரும்புகிறீர்களா என்று எங்களிடம் கேட்கப்பட்டது. … இரட்சகர் என் இதயத்தைக் குணப்படுத்தினார், எங்கள் பெண் குழந்தையைப் பற்றிய சமாதானத்தையும் உற்சாகத்தையும் எனக்குக் கொடுத்தார். … [பரலோக பிதா] எனக்காக ஒரு சரியான திட்டத்தை வைத்திருக்கிறார் என்பதை மீண்டும் மீண்டும் எனக்குக் காட்டியுள்ளார் [மேலும்] நான் அவரை நம்புகிறேன்.”

சரியாக ஒரு வாரத்திற்கு முன்பு அவர்கள் தங்களுடைய பெண் குழந்தையை ஆர்வத்துடன் வரவேற்றனர். அவள் அவர்களுடையவள், அவர்கள் என்றென்றும் அவளுடையவர்கள்.

அசைக்க முடியாத விசுவாசமும், விசேஷித்த தைரியமும் இயேசு கிறிஸ்துவின் சீஷர்களின் அடையாளச் சின்னங்கள்.

விசுவாசத்தின் குறிப்பிடத்தக்க உதாரணம்

பல வருடங்களாக, உறுப்பினர் பதவி இழந்த பிறகு, உடன்படிக்கைப் பாதைக்கும், ஆசாரியத்துவம் மற்றும் ஆலய ஆசீர்வாதங்களுக்கும் திரும்பத் தாழ்மையுடன் முயன்ற ஆண்களையும் பெண்களையும் சந்திக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.

ஒரு சந்தர்ப்பத்தில், பிரதான தலைமையின் சார்பாக ஒரு மனிதரை அவரது ஆசாரியத்துவத்தையும் ஆலய ஆசீர்வாதங்களையும் மீட்டெடுப்பதற்காக நான் நேர்காணல் செய்யவிருந்தேன்.

பரிசுத்த ஆலயத்தில் திருமணம் செய்து கொண்ட பிறகு, மூன்று அற்புதமான குழந்தைகளைப் பெற்ற பிறகு, அந்த மனிதன் தனது மனைவிக்கும் தனது பரிசுத்த உடன்படிக்கைகளுக்கும் துரோகம் செய்தான். ஒரு ஒற்றைப் பெண் கர்ப்பமாகி கருக்கலைப்பு செய்ய விரும்பினாள்.

கணவரின் புனித மனைவி, குழந்தையைப் பெற்றுக்கொள்ளும்படி அந்தப் பெண்ணிடம் கெஞ்சினாள், மேலும் அந்தக் குழந்தை பிறந்தவுடன் தனது சொந்தக் குழந்தைகளுடன் அதை வளர்ப்பதாக உறுதியளித்தாள்.

அந்த ஒற்றைப் பெண், கர்ப்பத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டாம் என்று சிந்தித்து ஒப்புக்கொண்டாள்.

இப்போது 10 வருடங்கள் ஆகிவிட்டன. என் முன் அமர்ந்திருந்த பணிவான சகோதரி, அந்தப் பையனைத் தன்னுடைய சொந்தப் பையனாக நேசித்தாள். தன் கணவர் தன்னையும் குடும்பத்தையும் நேசித்து, மாற்றங்கள் செய்ய எடுக்கும் முயற்சிகளைப் பற்றி என்னிடம் சொன்னாள். அவள் பேசும்போது அந்த தகப்பன் அழுதார்.

தன் கணவனின் துரோகத்தை தினமும் நினைவூட்டும் ஒரு குழந்தையை இந்த உன்னதமான தேவ பெண் எப்படித் தன் சொந்தக் குழந்தையாக எடுத்துக்கொள்ள முடியும்? எவ்வாறு? ஏனென்றால் அவள் இயேசு கிறிஸ்துவின் மூலம் பலத்தைக் கண்டாள், வாழ்க்கையின் புனிதத்தன்மையையும், வாழ்க்கையின் பரிசுத்தத்தையும் அவள் நம்பினாள். பிறக்காத குழந்தை தேவனின் குழந்தை, அப்பாவி மற்றும் தூய்மையானது என்பதை அவள் அறிந்திருந்தாள்.

குழந்தை புகைப்படங்களின் படத்தொகுப்பு.

எனதருமை சகோதர சகோதரிகளே, உலகளவில் பிறக்காத குழந்தைகள் மீதான அன்பு குறைந்து வருவது மிகுந்த கவலையளிக்கிறது. தேவன் வாழ்க்கையை நேசிக்கிறார். அவருடைய பிள்ளைகளுக்கு அழியாமையையும் நித்திய ஜீவனையும் கொண்டு வருவது அவருடைய கிரியையும் மகிமையும் ஆகும். இயேசு கிறிஸ்துவின் சீஷர்களாக, நாம் வாழ்க்கையை நேசிக்கிறோம். “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.” நாம் அவர்களுக்கு அதிகம் தேவைப்படுபவர்களிடம் நமது அன்பை இன்னும் அதிகமாகப் பகிர்ந்து கொள்வோமாக. உங்கள் மீது எனக்குள்ள அன்பையும், பூமிக்கு வரும் தம்முடைய பிள்ளைகள் மீது நமது பரலோக பிதாவின் அன்பையும் நான் தெரிவிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, ஆமென்.

குறிப்புகள்

  1. யோவான் 13:35; மத்தேயு 22:36–40 ஐயும் பார்க்கவும்.

  2. தனிப்பட்ட கடிதப் போக்குவரத்து, பிப்ரவரி 6, 2025; அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டது.

  3. தனிப்பட்ட கடிதப் போக்குவரத்து, பிப்ரவரி 6, 2025; அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டது.

  4. Russell M. Nelson, “Ministering with the Power and Authority of God,” Liahona, May 2018, 69.

  5. An example of a righteous woman in France; see Neil L. Andersen, The Divine Gift of Forgiveness (2019), 154–56.

  6. See Neil L. Andersen, The Divine Gift of Forgiveness, 219; see also Neil L. Andersen, Jesus Is the Christ (2023), 5.

  7. See official statement on abortion: “Abortion,” newsroom.ChurchofJesusChrist.org. The General Handbook states, “A person may repent and be forgiven for the sin of abortion” (General Handbook: Serving in The Church of Jesus Christ of Latter-day Saints, 38.6.1, Gospel Library). தலைவர் எஸ்றா டாப்ட் பென்சன் கூறினார், “தேவ துக்கம் என்பது ஆவியின் வரம். நமது செயல்கள் நமது பிதாவையும், நமது தேவனையும் புண்படுத்தியுள்ளன என்பது ஒரு ஆழமான உணர்தல். நமது நடத்தை, எந்த பாவத்தையும் அறியாத இரட்சகரை, எல்லாவற்றிலும் உன்னதமானவரைக் கூட, வேதனையையும் துன்பத்தையும் தாங்க வைத்தது என்ற கூர்மையான மற்றும் [ஆழமான] விழிப்புணர்வு அது. நம்முடைய பாவங்கள் அவரை ஒவ்வொரு துவாரத்திலும் இரத்தம் கசிய வைத்தன. இந்த உண்மையான மன மற்றும் ஆவிக்குரிய வேதனையைத்தான் வேதங்கள் ‘நொறுங்குண்ட இருதயத்தையும் நருங்குண்ட ஆவியையும்‘ [see கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:37] என்று குறிப்பிடுகின்றன. உண்மையான மனந்திரும்புதலுக்கு அத்தகைய மனப்பான்மையே முழுமையான முன்நிபந்தனையாகும்” (Teachings of Presidents of the Church: Ezra Taft Benson [2014], 83; see also 2 கொரிந்தியர் 7:10; 3 நேபி 9:20; 18:32).

  8. “ஏனோக்கிடம் கர்த்தர் சொன்னார்: இதோ, இவர்களே உன்னுடைய சகோதரர்கள்; அவர்கள் என் கைகளின் வேலைப்பாடுகள், அவர்களை நான் சிருஷ்டித்த நாளிலே அவர்களின் ஞானத்தை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்; ஏதேன் தோட்டத்திலே அவனுடைய சுயாதீனத்தை நான் மனுஷனுக்குக் கொடுத்தேன்;

    அவர்கள் ஒருவரிலொருவர் அன்பு கூரவேண்டும், அவர்களுடைய பிதாவான என்னை அவர்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என உன்னுடைய சகோதரர்களுக்கு நான் சொல்லி கட்டளையையும் கொடுத்தேன்; ஆனால் இதோ, அவர்கள் வாஞ்சையில்லாதிருந்தார்கள், அவர்கள் தங்களுடைய சொந்த இரத்தத்தை வெறுத்தார்கள்;”(மோசே 7:32–33).

  9. Henry B. Eyring, To Draw Closer to God (1997), 143.

  10. Dallin H. Oaks, “The Great Plan of Happiness,” Ensign, Nov. 1993, 74. தலைவர் நெல்சன் கூறினார்: “‘அர்த்தமுள்ள வாழ்க்கை’ எப்போது தொடங்குகிறது அல்லது ஆவி உடலை எப்போது ‘உயிர்ப்பிக்கப் படுகிறது’ என்பது ஒரு கேள்வி அல்ல. உயிரியல் அறிவியலில், இரண்டு கிருமி செல்கள் ஒன்றிணைந்து ஒரு செல்லாக மாறும்போது வாழ்க்கை தொடங்குகிறது என்பது அறியப்படுகிறது, இது தந்தை மற்றும் தாயிடமிருந்து இருபத்தி மூன்று குரோமோசோம்களை ஒன்றிணைக்கிறது. … வாழ்க்கையின் தோற்றம் ஒரு விவாதத்திற்குரிய பிரச்சினை அல்ல, ஆனால் அறிவியலின் உண்மை.” (“Reverence for Life,” Ensign, May 1985, 13).

  11. தலைவர் ஜான் டெய்லர் 1879-ல் பின்வருமாறு கூறினார், “கருக்கொலை, சிசுக்கொலை மற்றும் மற்ற அருவருப்பான பழக்கவழக்கங்களை நாம் [ஆட்சேபிக்க வேண்டும்] … சட்டமியற்றும் சட்டம், நீதிமன்றத் தீர்ப்பு அல்லது நாகரிகம் என்று அழைக்கப்படும் வேறு எந்த துணை வடிவத்திலும் இருக்கலாம்“ (Journal of Discourses, 755:355).

  12. Official statement on abortion: “Abortion,” newsroom.ChurchofJesusChrist.org.

  13. குடும்பம்: உலகிற்கு ஓர் பிரகடனம்,” Gospel Library.

  14. J. Reuben Clark Jr., The Charted Course of the Church in Education, rev. ed. (1994; address to Church Educational System religious educators, Aug. 8, 1938), 3, Gospel Library.

  15. See Topics and Questions, “Abortion,” Gospel Library.

  16. தனிப்பட்ட கடிதப் போக்குவரத்து, பிப்ரவரி 13, 2025; அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டது.

  17. தத்தெடுப்பின் ஆசீர்வாதத்துக்கு மற்றொரு எடுத்துக்காட்டு ஷெர்லின் ஸ்டின்சன் மற்றும் அவரது மகள் அலிசன் மற்றும் அலிசனின் தாய் ஜில் மோர்கென்சனின் கதை. ( Mary Richards, “Navigating the Journey of Adoption Reunification,” Church News, Nov. 18, 2024, பார்க்கவும்).

  18. கர்த்தருடைய உதவியாலும், நம் நீட்டிய கரங்களாலும், பலர் தங்கள் வழியைக் கண்டுபிடிக்க ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். See Amanda Becker, “Finding Hope as a Single Expectant Mother,” Liahona, July 2022 (digital only); “The Adoption Decision,” New Era, Mar. 2006, 28–33.

  19. தனிப்பட்ட கடிதப் போக்குவரத்து, பிப்ரவரி 17, 2025; அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டது.

  20. (Neil L. Andersen, The Divine Gift of Forgiveness, 246-47. பார்க்கவும்)

  21. மோசே 1:39 பார்க்கவும்.

  22. யோவான் 13:35; மத்தேயு 22:36–40 ஐயும் பார்க்கவும்.

  23. Other resources that may be helpful: Topics and Questions, “Unwed Pregnancy,” Gospel Library; “Single Expectant Parents,” General Handbook, 38.6.19; Counseling Resources, “Single Expectant Parents,” Gospel Library.