“அத்தியாயம் 13: சபையை ஸ்தாபிக்க தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுடன் ஒன்றுபடுங்கள்” என் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்: இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்ளுவதற்கான வழிகாட்டி (2023)
“அத்தியாயம் 13,” என் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்
அத்தியாயம் 13
சபையை ஸ்தாபிக்க தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுடன் ஒன்றுபடுங்கள்
இதைக் கருத்தில் கொள்ளவும்
-
சபையை ஸ்தாபிக்க தொகுதி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுடன் நான் எவ்வாறு இணைந்து பணியாற்ற முடியும்?
-
ஊழியப் பணியில் பிணையத் தலைவர்களின் மற்றும் தொகுதித் தலைவர்களின் பொறுப்புகள் என்ன?
-
தொகுதி தலைவர்களுடனான வாராந்திர ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் என்ன நடக்க வேண்டும்?
-
சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்வதிலும், புதிய மற்றும் திரும்ப வரும் உறுப்பினர்களைப் பலப்படுத்துவதிலும் தலைவர்களை நான் எவ்வாறு ஆதரிக்க முடியும்?
ஊழியக்காரர்கள் உள்ளூர் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுடன் இணைந்து மக்களைக் கண்டுபிடித்து, அவர்களுக்குக் கற்பிக்கவும், இரட்சகரிடம் வழிநடத்தவும் உதவுகிறார்கள். தேவன் மீதும் அவருடைய பிள்ளைகள் மீதும் உள்ள உங்கள் அன்பினால் நீங்கள் ஒன்றுபட்டுள்ளீர்கள். உள்ளூர் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுடன் நீங்கள் ஒற்றுமையாகச் செயல்படும் அளவிற்கு அவர் உங்கள் முயற்சிகளை சிறப்பாக்குவார். அவர்களுடன் பணிபுரிவதை உங்கள் இலக்குகள் மற்றும் திட்டங்களின் ஒரு முக்கிய பகுதியாக ஆக்குங்கள்.
உள்ளூர் தலைவர்களையும் உறுப்பினர்களையும் நீங்கள் அறிந்து நேசிக்கும்போது, அவர்களின் அழைப்புகளிலும் ஊழிய முயற்சிகளிலும் அவர்களை ஆதரிக்கக்கூடிய வழிகளைக் காண்பீர்கள். உங்கள் வரங்களையும் திறமைகளையும் அவர்களை மேம்படுத்தி பலப்படுத்தும் வழிகளில் வழங்குங்கள்.
இந்த அத்தியாயம், சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்வதிலும், புதிய மற்றும் திரும்ப வரும் உறுப்பினர்களைப் பலப்படுத்துவதிலும் உறுப்பினர்களுடன் நீங்கள் எவ்வாறு பணியாற்றலாம் என்பதை விளக்குகிறது. மேலும் தகவலுக்கு, பொது கையேடு 23 ஆம் அத்தியாயம் பார்க்கவும்.
தனிப்பட்ட அல்லது தோழமை படிப்பு
ஆல்மா 18–19ல் லாமோனி ராஜா, அவனது மனைவி மற்றும் அவனது மக்களின் மனமாற்றக் கதையை பரிசீலனை செய்யவும்.
-
இந்த மனமாற்றத்தில் அபிஷின் பங்கு என்ன? அம்மோனால் செய்ய முடியாததை அவளால் என்ன செய்ய முடிந்தது?
-
உறுப்பினர்களும் ஊழியக்காரர்களும் ஒன்றாக பணியாற்றுவது பற்றி அவளுடைய முன்மாதிரியிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?
ஊழியப் பணிக்கு உதவும் உறுப்பினர்களின் இந்த பிற உதாரணங்களைக் கவனியுங்கள்:
-
அமுலேக் (ஆல்மா 10:1–11)
-
பிரிஸ்கில்லாளும் ஆக்கில்லாள் (அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:24–28)
-
சமாரியப் பெண் (யோவான் 4:5–30, 39–42)
தலைவர்களையும் உறுப்பினர்களையும் அவர்களின் முன்மாதிரிகளைப் பின்பற்ற நீங்கள் எவ்வாறு ஊக்குவிக்க முடியும்?
உள்ளூர் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுடன் உறவுகளை உருவாக்குங்கள்
உள்ளூர் சபைத் தலைவர்களும் உறுப்பினர்களும் தேவனின் பணியில் உங்கள் பங்குதாரர்கள். பரலோக பிதாவின் பிள்ளைகளுக்கு மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்தைக் கொண்டு வர நீங்கள் ஒன்றாக பணியாற்ற உதவும் உறவுகளை உருவாக்குங்கள். இந்த உறவுகள் உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களை ஆசீர்வதிக்கும்.
உள்ளூர் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுடன் நம்பிக்கையையும் உண்மையான நட்பையும் வளர்த்துக் கொள்ளுங்கள். அவர்களுடன் சென்று அவர்களின் குடும்பங்கள், பின்னணிகள், ஆர்வங்கள் மற்றும் சபை அனுபவங்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். அவர்களின் வாழ்க்கையில் உண்மையான ஆர்வத்துடன் இருங்கள்.
நீங்கள் வருகை தரும்போது, ஒரு நோக்கத்துடன் அவ்வாறு செய்யுங்கள். நீங்கள் ஆர்வத்துடன் கண்டுபிடித்து கற்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளீர்கள் என்பதைக் காட்டுங்கள். அவர்களின் நேரத்தையும் அட்டவணையையும் மதிக்கவும்.
நீங்கள் அவர்களுடைய வீடுகளில் சந்திக்கும்போது அல்லது சுவிசேஷத்தைக் கற்பிக்கும்போது, அவர்களுடைய விசுவாசத்தைப் பலப்படுத்த உதவ நாடுங்கள். ஆவியானவர் உங்களுடன் இருக்க ஜெபத்துடன் நாடுங்கள். உங்கள் பகுதியில் ஊழியப் பணியில் உங்களுக்கு இருக்கும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
உள்ளூர் தலைவர்களை அவர்களின் பாத்திரங்களில் ஆதரிக்கவும்.
சில தலைமைத்துவ அழைப்புகள் ஊழியப் பணிக்கான பொறுப்புகளைக் கொண்டுள்ளன. இந்தப் பொறுப்புகளைப் புரிந்துகொள்வது இந்தத் தலைவர்களை ஆதரிக்க உதவும். பின்வரும் விளக்கங்கள் பொது கையேடு23 ஆம் அத்தியாயத்திலிருந்து எடுக்கப்பட்டவை.
பிணையத் தலைவர்: சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்வதற்கும் புதிய மற்றும் திரும்ப வரும் உறுப்பினர்களைப் பலப்படுத்துவதற்கும் ஆசாரியத்துவத்தின் திறவுகோல்களை பிணையத்தில் வைத்திருக்கிறார். இந்த முயற்சிகளுக்கு அவரும் அவரது ஆலோசகர்களும் ஒட்டுமொத்த வழிகாட்டுதலை வழங்குகிறார்கள்.
ஆயம்: சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்ளவும், புதிய மற்றும் திரும்ப வரும் உறுப்பினர்களை வலுப்படுத்தவும் தொகுதியின் முயற்சிகளை வழிநடத்தும் போது, மூப்பர்கள் குழுமம் மற்றும் ஒத்தாசைச் சங்கத் தலைமைகளுடன் ஒருங்கிணைக்கிறது.
மூப்பர்கள் குழுமம் மற்றும் ஒத்தாசைச் சங்கத் தலைமைகள்: சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்ளவும், புதிய மற்றும் திரும்ப வரும் உறுப்பினர்களை வலுப்படுத்தவும் தொகுதியின் அன்றாட முயற்சிகளை வழிநடத்துகிறது. அவர்கள் ஆயரின் ஒருங்கிணைப்பின் கீழ், தொகுதி ஆலோசனைக்குழுவுடன் இணைந்து இந்த முயற்சிகளை வழிநடத்துகிறார்கள். பொது கையேடு, 8.2.3 மற்றும் 9.2.3 பாரக்கவும்.
தொகுதி ஊழியத் தலைவர் (அழைக்கப்பட்டால்): தொகுதி உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள், தொகுதி ஊழியக்காரர்கள் மற்றும் முழுநேர ஊழியக்காரர்களின் பணிகளை ஒருங்கிணைக்கிறார். ஒரு தொகுதி ஊழியத் தலைவர் அழைக்கப்படாவிட்டால், மூப்பர்கள் குழுமத் தலைமையின் ஒரு உறுப்பினர் இந்தப் பொறுப்பை நிரப்புகிறார். பொது கையேடு, 23.5.3. பார்க்கவும்.
“உள்ளூர் தலைவர்களுக்கு நான் ஒரு ஆசீர்வாதமா?” என்று உங்களை நீங்களே அடிக்கடி கேட்டுக்கொள்ளுங்கள். “நான் எப்படி உதவ முடியும்?” என்ற மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
தோழமை படிப்பு
ஒரு தொகுதி தலைவரைச் சுருக்கமாகச் சந்திக்க நேரத்தைத் திட்டமிடுங்கள். நீங்கள் அவரை எவ்வாறு சிறப்பாக ஆதரிக்க முடியும் என்று கேளுங்கள். மேம்படுத்த திட்டங்களை உருவாக்குங்கள்.
வாராந்திர ஒருங்கிணைப்புக் கூட்டங்கள்
உங்கள் ஊழிய முயற்சிகளில் ஒன்றுபடுவதற்கு இளைஞர் தலைவர்கள் உட்பட உள்ளூர் தலைவர்களுடன் ஒருங்கிணைப்பு அவசியம். ஒரு தொகுதி ஊழியத் தலைவர் அழைக்கப்பட்டால், அவர் வாராந்திர ஒருங்கிணைப்பு கூட்டங்களை நடத்துகிறார். இல்லையெனில், இந்தப் பொறுப்பை நிரப்பும் மூப்பர்கள் குழுமத் தலைமை உறுப்பினர் நடத்துகிறார்.
இந்த சுருக்கமான, முறைசாரா கூட்டங்களில், உள்ளூர் தலைவர்களும் நீங்களும் சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்ளவும், புதிய மற்றும் திரும்ப வரும் உறுப்பினர்களை வலுப்படுத்தவும் முயற்சிகளை ஒருங்கிணைக்கிறீர்கள் (பொது கையேடு, 23.4 ஐப் பார்க்கவும்). கூட்டங்கள் நேரிலோ அல்லது நேரலையிலோ நடத்தப்படலாம். வாரத்தில் தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல்கள் உள்ளிட்ட பிற வழிகளிலும் ஒருங்கிணைப்பு நிகழ வேண்டும்.
“ஊழிய திட்டமிடல் மற்றும் இலக்கு அமைப்பு ஆகியவை தொகுதி அல்லது கிளை திட்டமிடல் மற்றும் இலக்கு அமைத்தலுடன் இணைந்த ஒரு ஒருங்கிணைந்த முயற்சி மற்றும் கவனம், இஸ்ரவேலைக் கூட்டிச்சேர்க்கும் பணியை நிறைவேற்ற மிகவும் உதவியாக இருக்கும்.” (Quentin L. Cook, “Purpose and Planning,” mission leadership seminar, June 25, 2019).
வாராந்திர ஒருங்கிணைப்புக் கூட்டத்திற்கு தயாராகுங்கள்.
வாராந்திர ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் பங்கேற்க தயாராக வந்து தொகுதி தலைவர்களை ஆதரிக்கவும். கூட்டத்திற்கு முன், தோழமைப் படிப்பின் போது நீங்கள் எவ்வாறு திறம்பட பங்கேற்கலாம் என்பதைப் பற்றி கலந்துரையாட நேரம் ஒதுக்குங்கள்.
நீங்கள் பணிபுரிபவர்களைப் பற்றிய தற்போதைய தகவல்களைத் தலைவர்கள் பெற, என் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள் செயலியில் உங்கள் பதிவுகளைப் புதுப்பித்த நிலையில் வைத்திருங்கள். முந்தைய கூட்டங்களில் இருந்து பணித்தல்களைப் பற்றி அறிக்கை செய்யத் தயாராகுங்கள்.
வாராந்திர ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் பங்குபெறுங்கள்.
வாராந்திர ஒருங்கிணைப்பு கூட்டங்கள் தனிநபர்களின் தேவைகளில் கவனம் செலுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. கூட்டத்தின் போது, தனிநபர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் இளைஞர்கள் உட்பட தொகுதி உறுப்பினர்களுக்கு நீங்கள் எவ்வாறு ஆதரவளிக்க முடியும் என்பதை வழங்குங்கள்.
வாராந்திர ஒருங்கிணைப்புக் கூட்டம் பொதுவாக பின்வரும் நான்கு தலைப்புகளை உள்ளடக்கியது:
கற்பிக்கப்படுபவர்களுக்கு நாம் எவ்வாறு உதவலாம்? சாத்தியமான கலந்துரையாடல் கருத்துக்கள்:
-
வரும் வாரம் எந்தெந்த உறுப்பினர்கள் பாடங்களில் பங்கேற்கலாம்? யார் அவர்களை பங்கேற்க அழைப்பார்கள்?
-
கற்பிக்கப்படுபவர்களுக்கு என்ன சவால்கள் உள்ளன? உறுப்பினர்கள் எவ்வாறு உதவ முடியும்?
-
ஞானஸ்நான தேதி திட்டமிடப்பட்டவர்களுக்குள்ள தேவைகள் யாவை? ஞானஸ்நானம் திட்டமிடப்பட்டுள்ளதா? (அத்தியாயம் 12 இல் “ஞானஸ்நான ஆராதனை” ஐப் பார்க்கவும்.)
சமீபத்தில் ஞானஸ்நானம் பெற்றவர்களுக்கு நாம் எப்படி உதவலாம்? சாத்தியமான கலந்துரையாடல் கருத்துக்கள்:
-
முதல் வருட உறுப்பினராக இருக்கும் எந்த புதிய உறுப்பினர்கள் திருவிருந்துக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்? கலந்து கொள்ளாதவர்களுக்கு நாம் எப்படி உதவ முடியும்?
-
தொகுதியில் எந்த புதிய உறுப்பினர்களுக்கு நண்பர்கள் உள்ளனர்? ஊழியம் செய்யும் சகோதர சகோதரிகள் எவ்வாறு உதவ முடியும்? இளைஞர் குழுக்கள் மற்றும் வகுப்புகள் எவ்வாறு உதவ முடியும்?
-
எந்த புதிய உறுப்பினர்களுக்கு பணி அல்லது அழைப்பு உள்ளது?
-
அவர்களுக்கு ஆலய நியமங்கள் செய்யப்படும்படிக்கு புதிய உறுப்பினர்கள் தங்கள் மரித்த மூதாதையர்களைப்பற்றி ஆராய்ச்சி செய்யத் தொடங்க நாம் எவ்வாறு உதவ முடியும். புதிய உறுப்பினர்களுக்கு ஆலய பரிந்துரை உள்ளதா? ஒரு ஆலயம் அருகில் இருந்தால், இந்த மூதாதையர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்க ஆலயம் செல்ல நாம் எப்படி அவர்களுக்கு உதவ முடியும்?
-
3 ஆம் அத்தியாயத்திலிருந்து எந்த பாடங்களை மீண்டும் கற்பிக்க வேண்டும்? உறுப்பினர்கள் எவ்வாறு பங்கேற்கலாம்?
-
என் உடன்படிக்கை பாதை முன்னேற்றத்தை ஒவ்வொரு புதிய உறுப்பினருக்கும் பரிசீலிக்கவும்.
திரும்ப வரும் உறுப்பினர்களுக்கு நாம் எவ்வாறு உதவ முடியும்? சாத்தியமான கலந்துரையாடல் கருத்துக்கள்:
-
எந்த பகுதி உறுப்பினர் குடும்பங்களை ஊழியக்காரர்கள் சந்தித்து கற்பிக்க முடியும்?
-
எந்த திரும்ப வந்த உறுப்பினர்களை ஊழியக்காரர்கள் சந்தித்து கற்பிக்க முடியும்?
-
எந்தத் திரும்பி வந்த உறுப்பினர்களுக்கு தொகுதியில் நண்பர்கள் உள்ளனர் மற்றும் சேவை செய்ய பொருத்தமான வாய்ப்புகள் உள்ளன?
-
இந்த உறுப்பினர்களுக்கு நாம் எவ்வாறு உதவ முடியும்?
கற்பிக்க இன்னும் பலரை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? சாத்தியமான கலந்துரையாடல் கருத்துக்கள்:
-
அன்பு, பகிர்வு மற்றும் அழைப்பு ஆகிய கொள்கைகளைப் பயன்படுத்த இளைஞர்கள் உட்பட தனிநபர்கள் மற்றும் குடும்பங்களுக்கு நாம் எவ்வாறு உதவ முடியும்? (அதிகாரம் 9 இல் “உறுப்பினர்களுடன் ஒன்றுபடுங்கள்” பார்க்கவும்.)
-
ஆரம்ப வகுப்புத் தலைவர்கள் உட்பட உறுப்பினர்கள், நண்பர்களை தொகுதி நிகழ்ச்சிகளுக்கு அழைக்க நாம் எவ்வாறு உதவ முடியும்?
தோழமை படிப்பு
வாராந்திர ஒருங்கிணைப்புக் கூட்டத்தின் காணொளியை பொது கையேடு, 23.4 இல் காண்க. அடுத்த வாராந்திர ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் நீங்கள் பயன்படுத்தக்கூடியதாக என்ன கற்றுக்கொண்டீர்கள்? தொகுதி தலைவர்களுடன் தேவைகளைப் பற்றி விவாதிக்கவும் திட்டமிடவும் நீங்கள் எவ்வாறு சிறப்பாகத் தயாராக முடியும்? உங்கள் அடுத்த திட்டமிடல் அமர்வில், நீங்கள் எவ்வாறு மேம்படுவீர்கள் என்பதற்கான இலக்குகளை அமைக்கவும்.
சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்வதற்கான தொகுதியின் திட்டத்தை ஆதரிக்கவும்.
தொகுதி ஆலோசனைக்குழு சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு எளிய திட்டத்தை உருவாக்குகிறது (பொது கையேடு, 23.5.6 ஐப் பார்க்கவும்). இந்த திட்டத்தைப் பற்றி நன்கு தெரிந்து கொள்ளுங்கள். வாராந்திர ஒருங்கிணைப்புக் கூட்டங்களில், தலைவர்கள் தங்கள் இலக்குகளை நோக்கிச் செயல்பட உதவும் வழிகளைத் தேடுங்கள். சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்வதில் உறுப்பினர்களை ஆதரிக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது குறித்து தலைவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
நீங்கள் ஒரு தொகுதி ஆலோசனைக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டால், நீங்கள் கற்பிக்கும் நபர்களின் முன்னேற்றம் மற்றும் நீங்கள் பெற்ற பணிகள் குறித்து ஒரு சுருக்கமான புதுப்பிப்பை வழங்க தயாராக இருங்கள் (பொது கையேடு, 29.2.5 ஐப் பார்க்கவும்). இந்த வாய்ப்பை தொகுதி தலைவர்களின் தன்னம்பிக்கையையும் நம்பிக்கையையும் வளர்ப்பதற்கான ஒரு நேரமாகப் பாருங்கள்.
உள்ளூர் பகுதியின் தேவைகளுக்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொள்ளுங்கள்
ஒவ்வொரு தொகுதி அல்லது கிளைக்கும் நீங்கள் மாற்றியமைக்க தனித்துவமான தேவைகள் உள்ளன. நீங்கள் ஒரு சிறிய கிளையிலோ அல்லது இளம் ஒற்றை வயது வந்தோர் தொகுதியிலோ பணியாற்றலாம் அல்லது பல தொகுதிகளுக்கு சேவை செய்யலாம். சில தலைவர்களுக்கு அதிக அனுபவமும், சிலருக்குக் குறைவாகவும் இருக்கும். சில தலைவர்களுக்கு மற்றவர்களை விட அதிக நேரம் கிடைக்கும்.
உள்ளூர் தலைவர்களுக்கு உதவ வழிகளைத் தேடுங்கள். உறுப்பினர்களின் ஊழியப் பணிகளில் அவர்களுக்கு உதவுமாறு அவர்கள் உங்களிடம் கேட்கலாம். புதிய உறுப்பினர்கள் தங்கள் நண்பர்களை சபைக்கு அழைக்க ஊக்குவிக்க அவர்கள் உங்களிடம் கேட்கலாம். தலைவர்களும் உறுப்பினர்களும் சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்ளும் வழிகளைக் கற்றுக்கொள்ளும்போது, ஊழியப் பணி பற்றிய மதிப்புமிக்க உள்ளுணர்வுகளை நீங்கள் வழங்க முடியும்.
சபை ஒப்பீட்டளவில் புதியதாக இருக்கும் இடங்களில், கர்த்தர் தம்முடைய சபையை எவ்வாறு ஒழுங்கமைத்திருக்கிறார் என்பதைப் புதிய உறுப்பினர்கள் புரிந்துகொள்ள உதவுமாறு கிளைத் தலைவர்கள் உங்களிடம் கேட்கலாம்.
தலைவர்களுடனான உங்கள் பணி வெவ்வேறு பகுதிகளில் வேறுபட்டிருக்கலாம், ஆனால் இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் தனிநபர்களை ஆசீர்வதிப்பதற்கும் கர்த்தருடைய சபையை நிறுவுவதற்கும் அவசியம்.
உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் நேசிக்க, பகிர மற்றும் அழைக்க உதவுங்கள்.
உறுப்பினர்கள் சாதாரண மற்றும் இயற்கையான வழிகளில் சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்ள ஊக்குவிக்கவும். பொது கையேடு அன்பு, பகிர்வு மற்றும் அழைப்பு ஆகிய கொள்கைகளைப் பின்பற்றுவதன் மூலம் உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் இதைச் செய்ய உதவும் வழிமுறைகள் மற்றும் காணொளிகளை வழங்குகிறது. (பொது கையேடு, 23.1.1, 23.1.2, மற்றும் 23.1.3 பார்க்கவும்). நீங்கள் தலைவர்களுடன் பணியாற்றும்போது இந்தக் கொள்கைகளை மனதில் கொள்ளுங்கள்.
இந்தப் பணியில் தலைவர்களின் முயற்சிகளை நீங்கள் ஆதரிக்கும்போது, நீங்கள் அவர்களுக்கு ஒரு ஆசீர்வாதமாக இருப்பீர்கள். இதன் விளைவாக, அவர்களுடைய முன்மாதிரி, உறுப்பினர்கள் சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்வதிலும், புதிய மற்றும் திரும்ப வரும் உறுப்பினர்களைப் பலப்படுத்துவதிலும் அதிக ஈடுபாடு கொள்ள உதவும்.
உறுப்பினர்கள் சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்ளும் முயற்சிகளில் அவர்களை ஆதரிப்பது பற்றிய யோசனைகளுக்கு, அத்தியாயம் 9 இல் உள்ள “உறுப்பினர்களுடன் ஒன்றுபடுங்கள்” என்பதைப் பார்க்கவும்.
வேதப் படிப்பு
பின்வரும் வசனங்ளைப் படிக்கவும்: இரட்சகரும் இந்த சீஷர்களும் எவ்வாறு அன்புகூர்ந்தார்கள், பகிர்ந்து கொண்டார்கள், அழைத்தார்கள்? இந்த எடுத்துக்காட்டுகள் உங்களை என்ன செய்யத் தூண்டுகின்றன? நீங்கள் சாதாரண மற்றும் இயற்கையான வழிகளில் சுவிசேஷத்தைப் பகிரலாம்.
அன்புகூரவும்
-
மத்தேயு 22:36–39; 25:40
-
யோவான் 13:34–35
-
அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:34
பகிரவும்
அழைக்கவும்.
ஒவ்வொரு முறை படிக்கும்போதும், நீங்கள் கற்றுக்கொண்டதைப் பதிவு செய்யுங்கள்.
புதிய உறுப்பினர்களை வலுப்படுத்துவதில் உள்ளூர் தலைவர்களை ஆதரிக்கவும்.
மக்கள் ஞானஸ்நானம் பெற்று திடப்படுத்தப்படும்போது, அவர்கள் “பரிசுத்தவான்களோடே ஒரே நகரத்தாரும் தேவனுடைய வீட்டாருமாய்,” மாறுகிறார்கள் (எபேசியர் 2:19; 1 கொரிந்தியர் 12:12–27 ஐயும் காண்க). புதிய உறுப்பினர்கள் “தேவனுடைய நல்வசனத்தினால் போஷிக்கப்படவும், அவர்களை சரியான வழியில் வைத்திருக்கவும், … கிறிஸ்துவின் தகுதிகளை மட்டுமே சார்ந்து இருக்கவும்“ உள்ளூர் தலைவர்களுடன் இணைந்து பணியாற்றுங்கள் (மரோனி 6:4).
“புதிய மனமாறியவர்கள் தாங்கள் கண்டறிந்தவற்றின் மீது ஆர்வத்துடன் சபைக்குள் வருகிறார்கள். அந்த உற்சாகத்தை நாம் உடனடியாக வளர்த்துக் கொள்ள வேண்டும். … ஊழியக்காரர்கள் தாங்கள் கற்பிக்கும் மக்களையும், புதிதாக மனமாறியவர்களையும், ஞானஸ்நானம் பெறுவதற்கு முன்பே, அவர்களுடன் தொடர்பு கொண்டு, அவர்களுக்குச் செவிசாய்க்கும், வழிகாட்டும், சபைக்கு வரவேற்கும் விசுவாசமுள்ள உறுப்பினர்களுடன் அறிமுகப்படுத்தவும் இணைக்கவும் உதவலாம். … ஞானஸ்நானத்தின் தண்ணீரில் பிரவேசிப்பவர்களுக்கு நாம் [ஊழியம்] செய்யும்போது, தேவனின் இன்னும் பல பிள்ளைகள் இறுதிவரை நிலைத்திருந்து நித்திய ஜீவனைப் பெறுவதைக் காண்போம் (Ulisses S. Soares, “Convert Retention,” mission leadership seminar, June 25, 2018).
புதிய உறுப்பினர்கள் திருவிருந்துக் கூட்டத்தில் கலந்து கொள்ள உதவுங்கள்.
புதிய உறுப்பினர்கள் சபைக்குச் செல்ல உதவுவதில் உங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. நீங்களோ அல்லது தொகுதி உறுப்பினர்களோ அவர்கள் கலந்துகொள்ள உதவுவதை உறுதிசெய்ய தலைவர்களுடன் இணைந்து பணியாற்றுங்கள். ஒரு புதிய உறுப்பினரின் திருவிருந்துக் கூட்ட வருகையைக் காட்டும் முக்கிய குறிகாட்டி, உங்களுக்கும், தொகுதித் தலைவர்களுக்கும் அவருக்கு அல்லது அவளுக்கு எப்போது கூடுதல் ஊக்கம் தேவைப்படலாம் என்பதைப் பார்க்க உதவும்.
புதிய உறுப்பினர்கள், தொகுதியில் நண்பர்கள் இருக்கும்போது, திருவிருந்துக் கூட்டங்களில் தொடர்ந்து கலந்துகொள்வதிலும், திருவிருந்தில் பங்கேற்பதிலும் தொடர்ந்து ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக அவர்கள் சுவிசேஷ வாழ்வின் முதல் ஆண்டில், அவர்களுக்குச் சொந்தமாகுதல் உணர்வை உணர உதவுங்கள். (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 84:106, 108 பார்க்கவும்.)
அத்தியாயம் 3 இல் உள்ள பாடங்களை மீண்டும் கற்பிக்கவும்.
புதிய உறுப்பினர்கள் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவிலும் அவருடைய சுவிசேஷத்திலும் தங்கள் விசுவாசத்தைத் தொடர்ந்து வலுப்படுத்த உதவுங்கள். புதிய உறுப்பினர்கள் ஆவியானவரால் தொடர்ந்து கற்றுக் கொள்ளும்போது, சுவிசேஷத்தின் சத்தியங்களும் கொள்கைகளும் ஆழமாக வேரூன்றுகின்றன.
திடப்படுத்தப்பட்ட பிறகு, ஊழியப் பாடங்களை மீண்டும் கற்பிக்கவும். நீங்கள் கற்பிப்பதில் முன்னிலை வகிப்பீர்களாக. இருப்பினும், தொகுதி ஊழியக்காரர்கள் அல்லது பிற உறுப்பினர்கள் பங்கேற்கும் வகையில் தொகுதி தலைவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுங்கள். புதிய உறுப்பினர்கள் “தேவனுடைய நல்வசனத்தினால் போஷிக்கப்பட“ (மரோனி 6:4) உதவும் ஒரு முக்கியமான வழி, அதிகாரம் 3 இல் உள்ள பாடங்களை மீண்டும் கற்பிப்பதாகும். நீங்கள் கற்பிக்கும்போது, புதிய உறுப்பினர்கள் பாடங்களில் உள்ள அனைத்து ஒப்புக்கொடுத்தல்களையும் கடைப்பிடிக்க ஊக்குவிக்கவும்.
புதிய உறுப்பினர்களுடன் வேதங்களைப் படியுங்கள், குறிப்பாக மார்மன் புஸ்தகத்தைப் படியுங்கள், சுவிசேஷக் கொள்கைகளைக் கற்பியுங்கள். அவர்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்ள அவர்களுக்கு உதவுங்கள். ஒவ்வொரு புதிய உறுப்பினருக்கும் குறிப்பிட்ட தேவைகள் உள்ளன, மேலும் நீங்கள் அவரை நேசிக்கவும் வரவேற்கவும் உதவலாம்.
உடன்படிக்கை பாதை முன்னேற்ற அறிக்கை மற்றும் எனது உடன்படிக்கை பாதை
உங்களைப் போலவே உள்ளூர் தலைவர்களும் தங்கள் ஊழிய முயற்சிகளுக்கு ஆதாரங்களைக் கொண்டுள்ளனர். இவற்றில் ஒன்று உறுப்பினர் கருவிகள் செயலி அல்லது தலைவர் மற்றும் எழுத்தர் ஆதாரங்களில் காணப்படும் உடன்படிக்கைப் பாதை முன்னேற்ற அறிக்கை ஆகும். ஞானஸ்நானத்திற்கு முன்னும் பின்னும் உடன்படிக்கைப் பாதையில் ஒரு நபர் தொடர்ந்து முன்னேறத் தேவையான முக்கியமான அனுபவங்களை உள்ளூர் தலைவர்கள் பார்க்க இந்த அறிக்கை உதவுகிறது.
எனது உடன்படிக்கைப் பாதை என்பது புதிய உறுப்பினர்கள் “இயேசு கிறிஸ்துவில் [தங்கள்] விசுவாசத்தில் உறுதியாக நிலைத்திருக்கவும், சபையில் வீட்டில் இருப்பது போல் உணரவும்“ உதவும் ஒரு ஆதாரமாகும் (எனது உடன்படிக்கைப் பாதை, iv). இது குடும்ப வரலாறு மற்றும் மரித்த மூதாதையர்கள் ஆலயத்தில் பரிசுத்த நியமங்களைப் பெற உதவுதல் போன்ற நிகழ்ச்சிகள் மற்றும் வாய்ப்புகளுக்கு புதிய உறுப்பினர்களை அறிமுகப்படுத்துகிறது. இந்த அனுபவங்கள் மூலம் புதிய உறுப்பினர்களை வழிநடத்த உள்ளூர் உறுப்பினர்களை ஊக்குவிக்கவும். கேட்டபடி ஆதரவு கொடுங்கள்.
தனிப்பட்ட அல்லது தோழமை படிப்பு
எனது உடன்படிக்கை பாதை படிக்கவும். புதிய மனமாறியவர்களை வலுப்படுத்த உறுப்பினர்களுக்கு உதவுவதில் உங்கள் பங்கு பற்றி நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்? தொகுதி ஆலோசனைக்குழுவின் முயற்சிகளை நீங்கள் எவ்வாறு ஆதரிக்க முடியும்? இந்த அத்தியாயத்தைப் படிக்கும் ஒவ்வொரு முறையும், நீங்கள் கற்றுக்கொண்டதைப் பதிவு செய்யுங்கள்.
திரும்ப வரும் உறுப்பினர்களை வலுப்படுத்துவதில் உள்ளூர் தலைவர்களை ஆதரிக்கவும்.
சில உறுப்பினர்கள் சபையில் பங்கேற்பதை நிறுத்தத் தேர்வு செய்கிறார்கள். உள்ளூர் தலைவர்களும் பிற உறுப்பினர்களும் அவர்களுடன் வலுவான உறவுகளை உருவாக்கி அவர்களைச் சென்றடைய பாடுபடுகிறார்கள். இரட்சகர் சொன்னார்:
இரட்சகர் போதித்தார், “அப்படிப்பட்டோருக்கு தொடர்ந்து ஊழியம் செய்வீர்களாக; ஏனெனில் அவர்கள் திரும்பிவந்து, மனந்திரும்பி, இருதயத்தின் முழுநோக்கோடு என்னிடத்தில் வருவார்களென்றும், அப்பொழுது நான் அவர்களை குணப்படுத்துவேனென்பதை தவிர வேறெதையும் நீங்கள் அறியீர்கள்; நீங்கள் அவர்களுக்கு இரட்சிப்பைக் கொண்டுவருகிற கருவிகளாயிருப்பீர்கள்” (3 நேபி 18:32).
உள்ளூர் தலைவர்கள் திரும்ப வரும் உறுப்பினர்கள் தங்கள் விசுவாசத்தை வளர்க்க உதவுமாறு உங்களிடம் கேட்கலாம். பெரும்பாலும் இந்தப் பணிகள் பகுதி உறுப்பினர் குடும்பங்களுடன் இருக்கும். திரும்ப வரும் உறுப்பினர்களுக்கு சுவிசேஷக் கொள்கைகளைக் கற்பித்து, செயல்பட அழைக்கும்போது, அவர்களின் வீடுகளுக்குள் ஆவியை எவ்வாறு அழைக்க முடியும் என்பதை ஜெபத்துடன் சிந்தியுங்கள். அவர்களின் கவலைகளுக்கு பச்சாதாபத்தையும் இரக்கத்தையும் காட்டுங்கள்.
சூழ்நிலைகள் அனுமதிக்கும் போதெல்லாம், வீட்டில் இன்னும் ஞானஸ்நானம் பெறாதவர்களுக்கு சுவிசேஷத்தைக் கற்பிக்கவும். உங்கள் அன்பும் ஆதரவும் கிறிஸ்துவில் அவர்களின் விசுவாசத்தை ஆழப்படுத்தவும், உடன்படிக்கைகளைச் செய்து காத்துக்கொள்ளவும் அவர்களின் விருப்பத்தை அதிகரிக்கவும் உதவும்.
திரும்ப வரும் உறுப்பினர்களுடன் நீங்கள் பணியாற்றும்போது உள்ளூர் தலைவர்களுடன் ஒருங்கிணைக்கவும். இந்த முயற்சிகள் தனிநபர்கள் மற்றும் உள்ளூர் சபை மீது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும்.
வேதப் படிப்பு
கஷ்டப்படுபவர்களுக்கு உதவுவது பற்றி இயேசு கிறிஸ்து என்ன போதித்தார்?
-
லூக்கா 15:4–10
சபையிலிருந்து விலகிச் சென்ற பலருக்கு ஆல்மாவும் அமுலேக்கும் கற்பித்தார்கள். திரும்ப வரும் உறுப்பினர்களை வலுப்படுத்துவது பற்றி அவர்களின் அனுபவங்களிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்?
படிப்பு மற்றும் பயன்படுத்துவதற்கான யோசனைகள்
தனிப்பட்ட சுவிசேஷப் படிப்பு
-
தங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொண்டு சபைக்குச் செல்லும் புதிய மற்றும் சமீபத்தில் திரும்ப வந்த உறுப்பினர்களிடம் பேசத் திட்டமிட, என் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள் செயலியைப் பயன்படுத்தவும். அவர்களுக்கு மிகவும் உதவியிருப்பது எது? உங்கள் படிப்பு குறிப்பிதழில், அவர்களின் அனுபவங்களைப் பற்றிய உங்கள் எண்ணங்களை எழுதுங்கள். நீங்கள் தற்போது கற்பிப்பவர்களுடன் இணைந்து பணியாற்ற உதவும் என்ன கற்றுக்கொண்டீர்கள்?
-
2 நேபி 31:18–20, ஆல்மா 26:1–7, ஆல்மா 32:32–43, மற்றும் மரோனி 6. புதிய உறுப்பினர்களை வலுப்படுத்துவது பற்றி இந்த வசனங்களிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்டதை எழுதுங்கள்.
தோழமை படிப்பு மற்றும் தோழமை பரிமாற்றம்
-
பொது கையேடு 23 ஆம் அத்தியாயத்தைப் படித்து கலந்துரையாடவும். உள்ளூர் தலைவர்களை அவர்களின் பொறுப்புகளில் எவ்வாறு ஆதரிக்க முடியும்?
-
வாராந்திர ஒருங்கிணைப்புக் கூட்டங்களின் போது, உங்கள் பகுதியிலிருந்து திரும்ப வரும் உறுப்பினர்கள் யாரையாவது இந்த வாரம் நீங்கள் சந்திக்க வேண்டுமென விரும்புகிறார்களா என்று தொகுதி தலைவர்களிடம் கேளுங்கள். நீங்கள் அவர்களைப் பார்க்கும்போது, இயேசு கிறிஸ்துவில் அவர்களுடைய விசுவாசத்தைக் கட்டியெழுப்ப முயலுங்கள்.
-
கடந்த ஆண்டில் ஞானஸ்நானம் பெற்று திடப்படுத்தப்பட்ட அனைவரையும் அடையாளம் காணவும். அவர்களில் ஒருவரின் பதிவை பரிசீலனை செய்து, அடுத்த வாராந்திர ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் இந்த நபருக்கு உதவ நீங்கள் எவ்வாறு தலைவர்களுடன் இணைந்து பணியாற்றலாம் என்பதைப் பற்றி கலந்துரையாடவும். உங்கள் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் என் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள் செயலியில் பதிவு செய்யுங்கள். உங்கள் பகுதியில் சமீபத்தில் மனம் மாறிய அனைவருக்கும் இதை மீண்டும் செய்யவும்.
சேகர ஆலோசனைக்குழு, மண்டல மாநாடுகள், ஊழியத் தலைமை ஆலோசனைக்குழு
-
புதிய மற்றும் திரும்ப வரும் உறுப்பினர்களை வலுப்படுத்துவது பற்றி பேச ஒரு ஆயர் அல்லது பிற தொகுதி தலைவரை அழைக்கவும். ஊழியக்காரர்கள் எவ்வாறு உதவ முடியும் என்பதை வலியுறுத்த இந்த நபரிடம் கேளுங்கள்.
-
காணாமல் போன ஆடு, காணாமல் போன காசு, கெட்ட குமாரன் (லூக்கா 15 பார்க்கவும்) பற்றிய உவமைகளைப் பற்றி கலந்துரையாடவும். ஊழியக்காரர்கள் தாங்கள் கற்றுக்கொள்வதையும், அதை தங்கள் ஊழியப் பணியில் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதையும் பகிர்ந்து கொள்ள அழைக்கவும்.
ஊழியத் தலைவர்கள் மற்றும் ஊழிய ஆலோசகர்கள்
-
புதிய உறுப்பினர்களுக்கு உதவ உள்ளூர் தலைவர்களை ஊக்குவிக்க அவர்களுடன் இணைந்து பணியாற்றுங்கள்:
-
(பொருத்தமான வயதுடைய ஆண்களுக்கு) ஒரு ஆசாரியத்துவ அலுவலுக்கு நியமிக்கப்படுங்கள்.
-
ஊழியம் செய்யும் சகோதரர்களாகவும் (பெண்களுக்கு ஊழியம் செய்யும் சகோதரிகளாகவும்) நியமிக்கப்படுங்கள்.
-
மரித்த மூதாதையர்களுக்காக ஆலயத்தில் ஞானஸ்நானம் பெற ஒரு ஆலய பரிந்துரையைப் பெறுங்கள்.
-
மரித்த மூதாதையரின் பெயரை ஆலயத்துக்கு எடுத்துச் செல்ல தயார் செய்யுங்கள்.
-
அவர்களின் தொகுதி அல்லது கிளையில் பணியாற்ற ஒரு பணி அல்லது அழைப்பைப் பெறுங்கள்.
-
-
பிணையத் தலைவருடன் ஒருங்கிணைந்து, உள்ளூர் தலைவர்களுக்கு வாராந்திர ஒருங்கிணைப்புக் கூட்டங்களை எவ்வாறு திறம்பட நடத்துவது என்பதைக் கற்றுக் கொடுங்கள்.
-
அவ்வப்போது புதிய உறுப்பினர்களைப் பின்தொடர்ந்து, அவர்கள் எப்படி இருக்கிறார்கள், ஊழியக்காரர்களும் உறுப்பினர்களும் எவ்வாறு உதவ முடியும் என்பதைக் கண்டறியவும்.
-
புதிய உறுப்பினர்களை ஊழியக்காரர்களுடன் பேசவும், சபையில் அவர்களின் அனுபவங்களைச் சொல்லவும் அழைக்கவும்.