சுவிசேஷ வகுப்புகள்
அத்தியாயம் 7: உங்கள் ஊழிய மொழியைக் கற்றுக்கொள்ளுங்கள்


“அத்தியாயம் 7: உங்கள் ஊழிய மொழியைக் கற்றுக்கொள்ளுங்கள்” என் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்: இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்ளுவதற்கான வழிகாட்டி (2023)

“அத்தியாயம் 7,” என் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்

உலக உருண்டையும் கொடிகளும்

அத்தியாயம் 7

உங்கள் ஊழிய மொழியைக் கற்றுக்கொள்ளுங்கள்

இதைக் கருத்தில் கொள்ளவும்

  • ஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்ள எனக்கு உதவ, கர்த்தர் மீதான எனது விசுவாசத்தை நான் எவ்வாறு பலப்படுத்துவது?

  • நான் ஏன் என் மொழித் திறன்களைத் தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டும்?

  • எனது ஊழிய மொழியில் பேசுவதற்கும் கற்பிப்பதற்கும் எனது திறனை எவ்வாறு மேம்படுத்துவது?

  • பாஷைகளின் வரத்தை நான் எவ்வாறு பெறுவது?

ஆவிக்குரிய விதமாக உங்களை ஆயத்தப்படுத்துங்கள்.

கர்த்தர் அறிவித்தார், “இந்த வல்லமைக்கு நியமனம் செய்யப்பட்டவர்கள் மூலம்தன்னுடைய சொந்த பாஷையில், தங்கள் சொந்த மொழியில் ஒவ்வொரு மனுஷனும் சுவிசேஷத்தின் பரிபூரணத்தைக் கேட்பான்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 90:11).

உங்கள் ஊழிய மொழியில் கற்பிக்கவும் சாட்சியமளிக்கவும் கர்த்தர் உங்களுக்கு உதவுவார் என்ற உங்கள் விசுவாசத்தை வலுப்படுத்துவதற்கான வழிகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:

  • நீங்கள் ஒரு தீர்க்கதரிசி மூலம் தேவனால் அழைக்கப்பட்டீர்கள் என்று நம்புங்கள்.

  • உண்மையான ஜெபத்தின் மூலம் தேவனின் உதவியைக் கேளுங்கள்.

  • ஒவ்வொரு நாளும் உங்கள் ஊழிய மொழியைப் படிப்பதன் மூலமும், பயிற்சி செய்வதன் மூலமும், பயன்படுத்துவதன் மூலமும் கருத்துடன் செயல்படுங்கள்.

  • கட்டளைகளைக் கைக்கொண்டு, ஊழிய தரநிலைகளின்படி வாழ்வதன் மூலம் பரிசுத்த ஆவியின் தோழமைக்குப் தகுதியாகுங்கள்.

  • தேவனையும் அவருடைய பிள்ளைகளையும் நேசிப்பதன் மூலமும், அவர்களை ஆசீர்வதிக்க விரும்புவதன் மூலமும் உங்கள் நோக்கங்களைத் தூய்மைப்படுத்துங்கள்.

அர்ப்பணிப்புடனும் கருத்துடனும் இருங்கள்

உங்கள் ஊழிய மொழியில் திறம்பட கற்பிக்கக் கற்றுக்கொள்வதற்கு கருத்தான முயற்சியும், ஆவியின் வரங்களும் தேவை. பணி கடினமாகத் தோன்றினாலும் ஆச்சரியப்பட வேண்டாம். இதற்கு நேரம் பிடிக்கும். உங்களோடே பொறுமையாயிருங்கள். நீங்கள் மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களை அர்ப்பணிக்கும்போது, ​​ஒரு ஊழியக்காரராக உங்கள் நோக்கத்தை நிறைவேற்றத் தேவையான திறன்களைப் பெறுவீர்கள்.

உங்கள் ஊழிய மொழியைக் கற்றுக்கொள்வதில் நீங்கள் தனியாக இல்லை. நீங்கள் அவர்களின் உதவியை நாடும்போது பரலோக பிதாவும் இயேசு கிறிஸ்துவும் உங்களுக்கு உதவுவார்கள். உங்கள் தோழர், உறுப்பினர்கள், நீங்கள் கற்பிப்பவர்கள், பிற ஊழியக்காரர்கள் மற்றும் பிறரின் உதவியை நாடுங்கள், அவர்களுடன் திறந்த மனதுடனிருங்கள்.

கவனமாகக் கேளுங்கள், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அந்த மொழியைப் பேசுங்கள். தவறு செய்ய பயப்பட வேண்டாம். புதிய மொழியைக் கற்றுக்கொள்பவர்கள் அனைவரும் தவறு செய்கிறார்கள். மக்கள் புரிந்துகொள்வார்கள், அவர்களுடைய மொழியைக் கற்றுக்கொள்ள நீங்கள் எடுக்கும் முயற்சிகளைப் பாராட்டுவார்கள்.

உங்கள் ஊழியம் முடியும் வரை உங்கள் மொழித் திறனை மேம்படுத்திக் கொண்டே இருங்கள். உங்களின் மொழியைப் பேசும் திறன் வளரும்போது, ​​நீங்கள் அதை எப்படிச் சொல்கிறீர்கள் என்பதை விட, நீங்கள் சொல்வதை மக்கள் அதிகமாகக் கேட்பார்கள். எப்படி தொடர்பு கொள்வது என்பது பற்றிய கவலை உங்களுக்குக் குறைவாக இருக்கும், மற்றவர்களின் தேவைகளுக்கு சிறப்பாகப் பதிலளிக்க முடியும்.

மூப்பர் ஜெப்ரி ஆர். ஹாலண்ட்

“ஒவ்வொரு ஊழியக்காரரும் ஒரு புதிய … மொழியைக் கற்றுக்கொள்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம் … சாத்தியமான எல்லா வழிகளிலும் அதில் தேர்ச்சி பெறுவார்கள். … நீங்கள் அவ்வாறு செய்யும்போது, ​​உங்கள் [கற்பித்தல்] மற்றும் சாட்சியமளிக்கும் திறன்கள் மேம்படும். நீங்கள் [நீங்கள் கற்பிக்கும் மக்களால்] சிறப்பாக வரவேற்கப்படுவீர்கள், மேலும் அவர்களுக்கு ஆவிக்குரிய ரீதியில் மிகவும் ஈர்க்கப்படுவீர்கள். …

“நாம் ஊழிய சொற்களஞ்சியம் என்று அழைப்பதில் மட்டும் திருப்தி அடைய வேண்டாம். மொழியில் உங்களை நீங்களே விரிவுபடுத்திக் கொள்ளுங்கள், அப்போது மக்களின் இருதயங்களை நீங்கள் அதிகமாகப் புரிந்துகொள்வீர்கள்” (Jeffrey R. Holland, missionary satellite broadcast, Aug. 1998).

நீங்கள் வீடு திரும்பிய பிறகும் உங்கள் ஊழிய மொழியைப் பயன்படுத்துவதைத் தொடரவும். கர்த்தர் உங்களிடம் நிறைய முதலீடு செய்துள்ளார், மேலும் உங்கள் வாழ்க்கையின் பிற்பகுதியில் உங்கள் மொழித் திறன்களை அவர் பயன்படுத்தக்கூடும்.

ஆங்கிலம் கற்கவும்

உங்களுக்கு ஆங்கிலம் பேசத் தெரியாவிட்டால், நீங்கள் ஒரு ஊழியக்காரராக அதைப் படிக்க வேண்டும். இது உங்கள் ஊழியத்தின் போதும், உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களை ஆசீர்வதிக்கும். ஆங்கிலம் கற்றுக்கொள்வது உங்கள் குடும்பத்திற்கும் ஆசீர்வாதமாக இருக்கும்.

ஆங்கிலம் கற்றுக்கொள்வது குறித்த கூடுதல் உதவிக்கு, EnglishConnect for Missionaries பார்க்கவும்

ஒரு குறிப்பிதழில் எழுதும் பெண்

மொழி கற்றலின் கொள்கைகள்

பொறுப்பேற்கவும்

உங்கள் மொழித் திறனை மேம்படுத்துவதற்கான இலக்குகளை அமைத்து, அவற்றைத் தொடர்ந்து சரிசெய்யவும். மொழிப் படிப்புத் திட்டத்தை உருவாக்குங்கள். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மொழியைப் பயன்படுத்துங்கள்.

உங்கள் படிப்பை அர்த்தமுள்ளதாக ஆக்குங்கள்

நீங்கள் படிப்பதை நிஜ வாழ்க்கை சூழ்நிலைகளிலும் உங்கள் அன்றாட நிகழ்ச்சிகளிலும் பயன்படுத்துங்கள். நீங்கள் சொல்ல வேண்டியதைச் சொல்ல உதவும் மொழியில் கவனம் செலுத்துங்கள்.

தொடர்பு கொள்ள நாடுங்கள்

உங்கள் தோழருடன் முடிந்தவரை அந்த மொழியில் பேசுங்கள். கற்றுக்கொள்ளவும் பயிற்சி செய்யவும் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உதாரணமாக, திரும்பி வரும் உறுப்பினரிடம் அல்லது நீங்கள் கற்பிக்கும் ஒருவரிடம் அந்த மொழி தொடர்பாக உங்களுக்கு உதவுமாறு நீங்கள் கேட்கலாம். அந்த மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களிடம் பேசுவதற்கு மாற்று வழி எதுவும் இல்லை.

ஒப்பிடாதீர்கள்

உங்கள் மொழித் திறனை உங்கள் தோழர் அல்லது பிற ஊழியக்காரர்களின் மொழித் திறனுடன் ஒப்பிடாதீர்கள். ஒப்பீடு பெருமை அல்லது மனச்சோர்வுக்கு வழிவகுக்கிறது.

புதிய கருத்துக்களை முழுமையாகக் கற்றுக்கொள்ளுங்கள்

நீங்கள் படித்ததைத் தொடர்ந்து மறுபரிசீலனை செய்து, புதிய சூழ்நிலைகளில் அதைப் பயிற்சி செய்யுங்கள். இது நீங்கள் கற்றுக்கொண்டதை நினைவுபடுத்திப் பார்க்கவும், அதைப் பயன்படுத்தவும் உதவும்.

மனிதன் புத்தகத்தைப் பார்த்தல்

மொழிப் படிப்புத் திட்டத்தை உருவாக்குங்கள்.

புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த ஊழியக்காரர்கள் இருவரும் தங்கள் ஊழிய மொழியைப் பேசும் திறனை மேம்படுத்த ஒவ்வொரு நாளும் என்ன செய்ய முடியும் என்பதில் கவனம் செலுத்த ஒரு மொழி படிப்புத் திட்டம் உதவுகிறது. உங்கள் மொழிப் படிப்பு நேரத்திலும், நாள் முழுவதும் நீங்கள் என்ன செய்வீர்கள் என்பது உங்கள் திட்டத்தில் அடங்கும்.

அத்தியாயம் 8 இல் உள்ள இலக்கு அமைப்பு செயல்முறையைப் பயன்படுத்தி மொழிப் படிப்புத் திட்டத்தை எவ்வாறு உருவாக்கலாம் என்பதை பின்வரும் படிகள் காட்டுகின்றன. தேவைக்கேற்ப இந்த செயல்முறையை மாற்றியமைக்கவும்.

  1. ஜெபத்துடன் இலக்குகளை நிர்ணயித்து திட்டங்களை வகுக்கவும். சுவிசேஷத்தைத் தொடர்புகொள்வதற்கும் கற்பிப்பதற்கும் உங்கள் பொதுவான திறனை மேம்படுத்த வாராந்திர மற்றும் தினசரி இலக்குகளை அமைக்கவும். வார்த்தைகள், சொற்றொடர்கள், வேதவாக்கியங்கள் மற்றும் பத்திகள் போன்றவற்றை நீங்கள் மனப்பாடம் செய்ய விரும்பும் விஷயங்களைச் சேர்க்கவும்.

  2. பதிவு செய்து திட்டமிடுங்கள். உங்கள் இலக்குகளை அடைய எந்த மொழி கருவிகள் உதவும் என்பதை முடிவு செய்யுங்கள். மொழி கருவிகளில் வேதங்கள், அகராதிகள், இலக்கண புத்தகங்கள், TALL Embark app, மற்றும் பிற அடங்கும். நீங்கள் முறையாக மொழியைப் படித்துப் பயன்படுத்த வேண்டிய நேரங்களைத் திட்டமிடுங்கள். உதாரணமாக, மதிய உணவின் போது ஒவ்வொரு நாளும் 15 நிமிடங்கள் மார்மன் புஸ்தகத்திலிருந்து சத்தமாக வாசிக்க நீங்கள் திட்டமிடலாம்.

  3. உங்கள் திட்டங்களின்படி செயல்படுங்கள். கர்த்தர் முயற்சியை விரும்புகிறார், எனவே உங்கள் இலக்குகளை அடைய கருத்தாய் உழைக்கவும். உங்கள் மொழிப் படிப்பு நேரத்தைப் பாதுகாத்து, முரண்பாடுகள் ஏற்பட்டால் அதை பின்னர் திட்டமிடுங்கள்.

  4. மதிப்பாய்வு செய்து பின்தொடருங்கள். உங்கள் படிப்புத் திட்டம் எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது என்பதை பரிசீலிப்பதற்கு அடிக்கடி அதை மதிப்பாய்வு செய்யவும். நீங்கள் மேம்படுத்தக்கூடிய வழிகளை பரிந்துரைக்க உங்கள் தோழர், ஊழியத் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் உங்கள் பகுதியில் உள்ள மற்றவர்களை அழைக்கவும். உங்கள் முன்னேற்றத்தை பட்டியலிடவும், மேம்படுத்துவதற்கான வழிகளை அடையாளம் காணவும் தொடர்ந்து திட்டமிடப்பட்ட மொழி மதிப்பீடுகளில் பங்கேற்கவும்.

மொழி அடித்தளத்தை உருவாக்குவதற்கான நீண்டகால இலக்குகளுக்கும், குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் மற்றும் நீங்கள் கற்பிக்கும் நபர்களுக்கான குறுகிய கால இலக்குகளுக்கும் இடையில் உங்கள் மொழிப் படிப்பை சமநிலைப்படுத்துங்கள்.

உங்கள் முறையான மொழிப் படிப்பு நேரத்தில், கீழே காட்டப்பட்டுள்ள மொழியின் அடிப்படைப் பகுதிகளுக்கு இடையே உங்கள் இலக்குகளையும் திட்டங்களையும் சமநிலைப்படுத்துங்கள். நாள் முழுவதும் நீங்கள் என்ன கற்றுக்கொள்வீர்கள் என்பதை முடிவு செய்யுங்கள்.

கேட்கும் திறன்கள்

வாசிப்புத் திறன்கள்

இலக்கணம்

பேசும் திறன்கள்

எழுத்துத் திறன்கள்

சொற்களஞ்சியம்

தனிப்பட்ட அல்லது தோழமை படிப்பு

ஒவ்வொரு வாரமும் உங்கள் மொழிப் படிப்பை மதிப்பிடுவதற்கு நேரம் ஒதுக்கி, பின்வரும் கேள்விகளைக் கேளுங்கள்:

  • இந்த வாரம் ஒவ்வொரு நாளும் நான் என் ஊழிய மொழியைப் படித்தேனா? எனது ஊழிய மொழியை தொடர்ந்து மேம்படுத்த நான் என்ன செய்ய முடியும்?

  • கண்டறியவும், கற்பிக்கவும், உறுப்பினர்களுடன் சிறப்பாகப் பணியாற்றவும் எனது திட்டம் உதவுகிறதா? எனது திட்டத்தில் நான் என்ன மாற்றங்களைச் செய்ய வேண்டும்?

  • எனது மொழிப் படிப்பில் நான் மிகவும் விரும்புவது எது? அதை இன்னும் அதிகமாக அனுபவிக்க நான் என்ன செய்ய முடியும்?

  • கேட்பது, வாசிப்பது, எழுதுவது மற்றும் பேசுவதைப் பயிற்சி செய்ய நான் எவ்வளவு நேரம் செலவிட வேண்டும்? சொற்களஞ்சியம், இலக்கணம் மற்றும் உச்சரிப்பை நான் எவ்வாறு சிறப்பாகக் கற்றுக்கொள்வது?

  • மொழியைப் படிக்க நான் என்ன நிகழ்ச்சிகள் மற்றும் ஆதாரங்களைப் பயன்படுத்துகிறேன்? எவை எனக்கு மிகவும் உதவுகின்றன? வேறு என்ன ஆதாரங்கள் அல்லது நிகழ்ச்சிகள் உதவியாக இருக்கும்?

  • எதில் அதிக கவனம் தேவை?

இந்தக் கேள்விகளுக்கு பதிலளித்த பிறகு, உங்கள் படிப்புத் திட்டங்களை சரிசெய்து, அவை உங்கள் முடிவுகளை மேம்படுத்துகின்றனவா என்று பாருங்கள். உங்கள் மொழிப் படிப்பை மேம்படுத்த நீங்கள் தொடர்ந்து முயலும்போது ஆவியானவர் உங்களை வழிநடத்துவார்.

உங்கள் தோழர்களுடன் கற்றுக்கொள்ளுங்கள்

உங்கள் தோழர்கள் வெற்றியை அனுபவிக்க உதவுங்கள் மற்றும் ஊழிய மொழியைக் கற்றுக்கொள்வதில் அல்லது ஆங்கிலம் கற்றுக்கொள்வதில் நம்பிக்கையைப் பெறுங்கள். உங்கள் தோழர்கள் மற்றும் பிற ஊழியக்காரர்களின் முன்னேற்றத்திற்காக அவர்களை மனதாரவும் அடிக்கடியும் பாராட்டுங்கள்.

எளிமையான மற்றும் நடைமுறைக்கு ஏற்ற கருத்துக்களை தயவுடன் வழங்கவும். அவர்களுக்குக் கற்பிக்கவும் வெற்றிகரமாகச் சாட்சியமளிக்கவும் பல வாய்ப்புகளைக் கொடுங்கள். பின்வரும் உண்மையான பதிவில், மிகவும் அனுபவம் வாய்ந்த ஒரு ஊழியக்காரர் தனது தோழருக்கு எவ்வாறு உதவினார் என்பதைக் கவனியுங்கள்.

நான் என்னுடைய இரண்டாவது பகுதிக்கு வந்திருந்தபோது, ​​இரவு விருந்தில் ஆவிக்குரிய சிந்தனையை வழங்குவதற்கான எனது முறை இது என்று என் தோழர் என்னிடம் கூறினார். என்னுடைய முதல் தோழர் எப்போதும் கற்பிப்பதில் மகிழ்ச்சி அடைவார், பாடத்தின் ஒரு சிறிய பகுதியைக் கொடுத்துவிட்டு, பின்னர் கேட்பது எனக்குப் பழக்கமாகிவிட்டது.

என் தோழரை ஆவிக்குரிய சிந்தனை கொடுக்கச் சொல்லி சமாதானப்படுத்த முயற்சித்தேன், ஆனால் அவர் அந்த பணியை ஏற்றுக்கொள்ள என்னை ஊக்குவித்தார். நான் அவரது உதவியுடன் பயிற்சி செய்தேன்.

அந்த நேரம் வந்தபோது, ​​நான் என் வேதங்களைத் திறந்து 3 நேபி 5 மற்றும் 7 லிருந்து வாசித்தேன். நான் சிரமப்பட்டேன், ஆனால் நான் தேர்ந்தெடுத்த பத்திகள் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று உணர்ந்தேன் என்பதை விளக்க முடிந்தது, நான் முடித்தபோது எனக்கு நிம்மதி ஏற்பட்டது. ஒரு கேள்வி கேட்கப்பட்டபோது, ​​நான் பதில் சொல்ல என் தோழரைப் பார்த்தேன், ஆனால் அவர் வாயைத் திறக்கவில்லை. அப்போதுதான் புரியும் பிரெஞ்சு மொழியில் ஒரு பதிலைக் கண்டுபிடித்து நானே ஆச்சரியப்பட்டுக்கொண்டேன். என்னுடைய தகவல் தொடர்புத் திறன் குறித்து நான் பாதுகாப்பற்றவனாக இருப்பதை அந்த உறுப்பினர் உணரவில்லை என்பது எனக்கு இன்னும் ஆச்சரியமாக இருந்தது. நான் தன்னம்பிக்கை அடைந்தேன், என் பிரெஞ்சு மொழி நான் நினைத்ததை விட சிறந்தது என்பதை உணர்ந்தேன்.

வாரங்கள் கடந்துவிட்டன, என் தோழர் தொடர்ந்து நான் கற்பிக்க அனுமதித்தார் —நான் அதைச் செய்ய முடியாது என்று நினைத்தபோதும், நான் அதைச் செய்ய முடியுமா என்று அவர் யோசித்தபோதும் கூட. நான் வெறுமனே அமைதியான தோழனாக இருப்பதற்குப் பதிலாக, பரலோகத்திலுள்ள நம் பிதாவின் ஒரு கருவியாக மாறிவிட்டதாக உணர்ந்தேன்.

தனிப்பட்ட அல்லது தோழமை படிப்பு

உங்கள் ஊழிய மொழியைக் கற்றுக்கொள்ள உதவும் வகையில் மற்ற ஊழியக்காரர்களுடன் இணைந்து பணியாற்றுங்கள்.

  • நீங்கள் ஒரு புதிய ஊழியக்காரருடன் பணிபுரிகிறீர்கள் என்றால், உங்கள் தோழர் மொழியைக் கற்றுக்கொள்ள அல்லது ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ள எவ்வாறு சிறப்பாக உதவ முடியும்?

  • நீங்கள் ஒரு புதிய ஊழியக்காரராக இருந்தால், உங்கள் தோழரிடம் என்ன வகையான உதவியைக் கேட்கலாம்?

பெண்ணுக்கு ஊழியக்காரர்கள் கற்பித்தல்

கலாச்சாரம் மற்றும் மொழி கற்றல்

கலாச்சாரமும் மொழியும் நெருங்கிய தொடர்புடையவை. மக்களின் கலாச்சாரத்தைப் புரிந்துகொள்வது, மொழி பயன்படுத்தப்படும் விதத்தை விளக்க உதவும். இந்தப் புரிதல், மறுஸ்தாபித செய்தியின் தனித்துவமான அம்சங்களை மக்களுக்குத் தெளிவாகப் புரியும் வகையில் உங்களுக்குத் தெரிவிக்க உதவும்.

மக்களின் நம்பிக்கையையும் அன்பையும் பெற நீங்கள் செய்யக்கூடிய மிகச் சிறந்த விஷயங்களில் ஒன்று, அவர்களின் கலாச்சாரத்தை மதித்து, பொருத்தமான வழிகளில் ஏற்றுக்கொள்வதாகும். பல பெரிய ஊழியக்காரர்கள் இதைச் செய்திருக்கிறார்கள் (1 கொரிந்தியர் 9:20–23 ஐப் பார்க்கவும்).

தனிப்பட்ட அல்லது தோழமை படிப்பு

வேறுபட்ட கலாச்சாரம் அல்லது பின்னணியைக் கொண்ட ஒருவருக்குக் கற்பிக்கத் தயாராவதற்கு உதவ, கீழே உள்ள யோசனையைப் பயன்படுத்தவும்.

  • நீங்கள் கற்பிக்கும் மக்களின் கலாச்சார மற்றும் மத பின்னணியைப் பற்றி சிந்தியுங்கள். அவர்களின் பின்னணியில், சுவிசேஷத்தின் ஒரு கொள்கையைப் புரிந்துகொள்வதை கடினமாக்கும் ஒரு அம்சத்தை அடையாளம் காணவும். இந்தக் கொள்கையைத் தெளிவாகக் கற்பிப்பதற்கான வழிகளைத் திட்டமிடுங்கள்.

பாஷைகளின் வரம்

ஆவியின் வரங்கள் உண்மையானவை. பாஷைகளின் வரமும், பாஷைகளின் விளக்கமும் பல வெளிப்பாடுகளைக் கொண்டுள்ளன. இவற்றில் சில மொழிகளைப் பேசுதல், புரிந்துகொள்வது மற்றும் விளக்குவது ஆகியவை அடங்கும். இன்று பாஷைகளின் வரம் பெரும்பாலும் ஆவியால் மேம்படுத்தப்பட்ட கற்றல் மற்றும் படிப்பில் வெளிப்படுகிறது, இது ஊழிியக்காரர்கள் தங்கள் ஊழியத்தில் மொழியைக் கற்றுக்கொள்ள உதவுகிறது.

உங்களுக்கும் நீங்கள் கற்பிப்பவர்களுக்கும் இடையில் ஒரு மொழித் தடை இருந்தாலும், பரிசுத்த ஆவியானவர் உங்கள் சாட்சியத்தின் உண்மையை வெளிப்படுத்த முடியும். அதேபோல், பரிசுத்த ஆவியானவர் வார்த்தைகளையும் சொற்றொடர்களையும் உங்கள் நினைவிற்குக் கொண்டு வந்து, மக்கள் தங்கள் இருதயங்களிலிருந்து என்ன சொல்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவ முடியும்.

பெரும்பாலும், இந்த வரங்களை நீங்கள் முயற்சி இல்லாமல் பெற முடியாது. மற்றவர்களை ஆசீர்வதிக்க நீங்கள் அவைகளைத் தீவிரமாக நாட வேண்டும் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 46:8– 9, 26 பார்க்கவும்). பாஷைகளின் வரத்தைத் தேடுவதன் ஒரு பகுதி, அந்த மொழியைக் கற்றுக்கொள்ள உழைத்து, உங்களால் முடிந்த அனைத்தையும் செய்வதாகும். நீங்கள் ஜெபத்துடன் மொழியைப் படித்து பயிற்சி செய்யும்போது பொறுமையாக இருங்கள். நீங்கள் விடாமுயற்சியுடன் முயற்சி செய்யும்போது ஆவியானவர் உங்களுக்கு உதவுவார் என்று நம்புங்கள். பாஷைகளின் வரம் உங்களுக்கும் நீங்கள் கற்பிப்பவர்களுக்கும் உதவும் என்று விசுவாசியுங்கள்.

நீங்கள் விரும்பும் அளவுக்கு தெளிவாக வெளிப்படுத்த போராடும்போது, ​​தேவனின் பிள்ளைகளின் இருதயங்களுடன் ஆவியானவர் பேச முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தலைவர் தாமஸ் எஸ். மான்சன் போதித்தார்:

“ஒவ்வொரு ஊழியக்காரருக்கும் பொதுவான ஒரு மொழி இருக்கிறது—அது ஆவியின் மொழி. இது எழுத்தாளரால் எழுதப்பட்ட பாடப்புத்தகங்களிலிருந்து கற்றுக்கொள்ளப்படுவதில்லை, வாசிப்பு மற்றும் மனப்பாடம் மூலம் பெறப்படுவதில்லை. தேவனை அறிந்து கொள்ளவும், அவருடைய தெய்வீகக் கட்டளைகளைக் கைக்கொள்ளவும் முழு இருதயத்தோடு முயல்பவருக்கு ஆவியின் மொழி வருகிறது. இந்த மொழியில் தேர்ச்சி பெற்றிருப்பது தடைகளைத் தாண்டிச் செல்லவும், இடறல்களைத் தாண்டவும், மனித இருதயத்தைத் தொடவும் அனுமதிக்கிறது.” (“The Spirit Giveth Life,” Ensign, June 1997, 2).

தனிப்பட்ட அல்லது தோழமை படிப்பு

பாஷைகளின் வரத்தைத் தேடுவதற்கான உங்கள் முயற்சிகளை மதிப்பிடுவதற்கு பின்வரும் கூற்றுகளைப் பயன்படுத்தவும். உங்கள் மொழி கற்றலை மேம்படுத்த உதவும் எண்ணங்கள் மற்றும் இலக்குகளைப் பதிவு செய்யவும்.

  • ஒரு புதிய மொழியில் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க, தேவன் தம்முடைய தீர்க்கதரிசி மூலம் என்னை அழைத்திருக்கிறார் என்று நான் நம்புகிறேன். (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 90:11)

  • கர்த்தர் மீதும் நான் சேவை செய்பவர்கள் மீதும் எனக்குள்ள அன்பு என்னை தூண்டுகிறது. (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 46:9; 1 கொரிந்தியர் 14:12)

  • கட்டளைகளைக் கைக்கொண்டு, ஊழியத் தரங்களின்படி வாழ்ந்து, தினமும் மனந்திரும்பி, பரிசுத்த ஆவிக்குத் தகுதியானவராக வாழ நான் பாடுபடுகிறேன். (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 46:9, 33)

  • பாஷைகளின் வரத்தைப் பெற நான் தொடர்ந்து ஜெபிக்கிறேன். (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 46:28, 30–32)

  • நான் ஒவ்வொரு நாளும் முடிந்தவரை ஊழிய மொழியைப் படித்து, பயிற்சி செய்து, பயன்படுத்துகிறேன். 1 கொரிந்தியர் 12:31.


படிப்பு மற்றும் பயன்படுத்துவதற்கான யோசனைகள்

தனிப்பட்ட படிப்பு

  • ஊழியர் தளத்தில் உள்ள மொழி ஆதாரங்களை பரிசீலனை செய்யவும். நீங்கள் முயற்சிக்காத ஒன்றை அடையாளம் கண்டு, அடுத்த சில நாட்களுக்கு அதை முயற்சிக்க ஒரு இலக்கை நிர்ணயிக்கவும்.

  • உங்கள் அடுத்த சேகர ஆலோசனைக் குழுவில், நல்ல மொழித் திறன் கொண்ட ஒரு அனுபவம் வாய்ந்த ஊழியக்காரரிடம், மொழியைக் கற்றுக்கொள்ள அவர் என்ன செய்தார் என்று கேளுங்கள்.

தோழமை படிப்பு மற்றும் தோழமை பரிமாற்றம்

  • உங்கள் ஊழிய மொழியில் ஒருவருக்கொருவர் ஊழிய பாடங்களைக் கற்பிப்பதைப் பயிற்சி செய்யுங்கள். ஆரம்பத்தில், புதிய ஊழியக்காரர்கள் மிகவும் எளிமையாகக் கற்பிக்கலாம், எளிய சாட்சிகளைப் பகிர்ந்து கொள்ளலாம், மனப்பாடம் செய்த வேதவாக்கியங்களை சொல்லலாம். அவர்களின் தன்னம்பிக்கையும் திறனும் அதிகரிக்கும்போது, ​​அவர்கள் கற்பித்தலில் முழுமையாக பங்கேற்க முடியும்.

  • இந்த அத்தியாயத்தில் உள்ள கருத்துக்களையும் ஊழியர் தளத்தில் உள்ள மொழி ஆதாரங்களையும் பரிசீலனை செய்யவும். அடுத்த வாரத்தில் தோழமைப் படிப்பில் நீங்கள் பயன்படுத்தக்கூடிய பரிந்துரைகளைப் பற்றி கலந்துரையாடவும்.

  • உங்கள் உச்சரிப்பைக் கேட்டு, மேம்படுத்த உதவுமாறு உங்கள் தோழரிடம் கேளுங்கள். நீங்கள் புரிந்துகொள்ளப்படாத சூழ்நிலைகளைக் கவனிக்கும்படி அவரிடம் கேளுங்கள். உங்களுக்கு உதவும் சொற்கள், சொற்றொடர்கள் அல்லது இலக்கணங்களின் பட்டியலை உருவாக்கவும். பட்டியலில் உள்ளதை எதிர்கால நிகழ்ச்சிகளில் எவ்வாறு பயன்படுத்துவது என்பதை விளக்கி பயிற்சி செய்யுங்கள்.

  • தீவிரமாகக் கேட்பதைப் பயிற்சி செய்யுங்கள். நீங்கள் கற்றுக்கொண்ட சொற்களஞ்சியம் மற்றும் வடிவங்களை அடையாளம் காண, சுறுசுறுப்பாகக் கேட்க பகலில் ஒரு நேரத்தைத் திட்டமிடுங்கள். நீங்கள் சொல்லும் விதத்திலிருந்து வித்தியாசமாக வெளிப்படுத்தப்படும் ஒரு சொற்றொடரைக் கேட்கும்போது, ​​அதை எழுதிப் பயிற்சி செய்யுங்கள்.

  • அன்று மக்கள் சொல்லக்கூடிய விஷயங்களின் பட்டியலை உருவாக்குங்கள். நீங்கள் பதிலளிக்கக்கூடிய வழிகளைத் திட்டமிட்டு பயிற்சி செய்யுங்கள்.

சேகர ஆலோசனைக்குழு, மணடல மாநாடுகள், ஊழியத் தலைமை ஆலோசனைக்குழு

  • இந்தக் கூட்டங்களில் ஒன்றில் கலந்து கொள்ள தாய்மொழி பேசுபவர்களை அழைக்கவும். ஊழியக்காரர்கள் சிறு குழுக்களாக அவர்களுக்குக் கற்பிக்க ஏற்பாடு செய்யுங்கள். உள்ளூர் மொழி பேசுபவர்களிடம் குறிப்புகளை எடுத்து ஊழியக்காரர்களின் மொழி திறனைப் பற்றி கருத்து தெரிவிக்கச் சொல்லுங்கள்.

  • மொழியைப் படிப்பதில் அவர்கள் பெற்ற வெற்றிகளைப் பற்றிச் சொல்ல ஒன்று அல்லது இரண்டு ஊழியக்காரர்களை முன்கூட்டியே நியமிக்கவும்.

  • ஊழியக்காரர்களுக்கு வழக்கமாக கடினமாக இருக்கும் மொழியின் சில பகுதிகளைச் சுருக்கமாக வழங்க அனுபவம் வாய்ந்த ஊழியக்காரர்களை நியமிக்கவும். நல்ல மொழிப் பயன்பாட்டின் உதாரணங்களை அவரிடம் சொல்லுங்கள், ஊழியக்காரர்கள் அவற்றைப் பயிற்சி செய்யச் சொல்லுங்கள்.

  • இந்தப் பண்பாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட ஊழியக்காரர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளச் சொல்லுங்கள்.

ஊழியத் தலைவர்கள் மற்றும் ஊழிய ஆலோசகர்கள்

  • ஒவ்வொரு நாளும் மொழியைத் தொடர்ந்து படிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துங்கள்.

  • ஊழியக்காரர்கள் முடிந்தவரை ஊழிய மொழியைப் பயன்படுத்த ஊக்குவிக்கவும்.

  • ஒரு முறையான படிப்பு அட்டவணையில் ஒரு ஊழிய மொழிப் படிப்பு திட்டத்தின் கூறுகளை வழங்கவும். சேகர ஆலோசனைக்குழு கூட்டங்களில் இதை பரிசீலனை செய்யவும்.

  • ஊழியக்காரர்கள் கற்றுக்கொண்டிருக்கும் மொழியில் அவர்களுடன் பேசுவதற்கான வாய்ப்புகளைத் தேடுங்கள். அவ்வப்போது இந்த மொழியில் அவர்களை நேர்காணல் செய்யுங்கள்.

  • ஊழியக்காரர்கள் தங்கள் மொழித் திறனை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது குறித்து உள்ளூர் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களிடம் யோசனைகளைக் கேளுங்கள்.

  • உங்கள் ஊழிய மொழியைக் கற்றுக்கொண்டிருக்கும் ஊழியக்காரர்கள் செய்யும் மிகவும் பொதுவான தவறுகள் குறித்து மண்டல மாநாடு அல்லது ஊழிய தலைமைக் குழுவில் அறிவுறுத்தல் வழங்குங்கள்.

  • ஆவிக்குரிய ஆதாரங்களைப் பற்றி ஊழியக்காரர்களுக்குக் கற்றுக்கொடுங்கள்.

  • ஊழியக்காரர்கள் ஊழிய மொழியில் கற்பிக்கும்போது அவர்களைக் கவனியுங்கள்.