“அத்தியாயம் 1: உங்கள் ஊழிய நோக்கத்தை நிறைவேற்றுங்கள்,” என் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்: இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்ளுவதற்கான வழிகாட்டி (2023)
“அத்தியாயம் 1,” என் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்
இந்த ஊழியக் காலத்தில் மிகப் பெரிய ஊழியக்காரர்களில் ஒருவரான டான் ஜோன்ஸ், வேல்ஸில் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தல்.
© 1993 Clark Kelley Price. நகல் எடுக்காதீர்.
அத்தியாயம் 1
உங்கள் ஊழிய நோக்கத்தை நிறைவேற்றுங்கள்
உங்கள் நோக்கம்: இயேசு கிறிஸ்துவிலும் அவருடைய பாவநிவர்த்தியிலும் விசுவாசம், மனந்திரும்புதல், ஞானஸ்நானம், பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுதல், இறுதிபரியந்தம் நிலைத்திருப்பதன் மூலம் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்தைப் பெற உதவுவதன் மூலம் மற்றவர்களை கிறிஸ்துவிடம் வர அழைக்கவும்.
இதைக் கருத்தில் கொள்ளவும்
-
ஒரு ஊழியக்காரராக எனது நோக்கம் என்ன?
-
என்னுடைய அழைப்புடன் என்ன அதிகாரமும் வல்லமையும் வருகிறது?
-
நான் எப்படி ஆவியை சார்ந்திருப்பது, அடையாளம் காண்பது, அதன் மூலம் கற்பிப்பது?
-
இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் என்பது என்ன?
-
மறுஸ்தாபிதத்தின் செய்தி என்ன? இது ஏன் மிகவும் முக்கியமானது?
-
இயேசு கிறிஸ்துவின் சபையை ஸ்தாபித்து கட்டமைக்க எனது பொறுப்பு என்ன?
-
நான் ஒரு வெற்றிகரமான ஊழியக்காரனா என்பதை எப்படி அறிவேன்?
இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்தைக் கற்பிக்கும் உங்கள் பணி
நீங்கள் மக்களால் சூழப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் அவர்களை தெருவில் கடந்து சென்று அவர்களிடையே பயணிக்கிறீர்கள். நீங்கள் அவர்களின் வீடுகளில் அவர்களைச் சந்திக்கிறீர்கள் மற்றும் இணைய வழியில் அவர்களுடன் இணைகிறீர்கள். அவர்கள் அனைவரும் தேவனின் பிள்ளைகள்—உங்கள் சகோதர சகோதரிகள். தேவன் உங்களை நேசிப்பது போலவே அவர்களையும் நேசிக்கிறார்.
இவர்களில் பலர் வாழ்க்கையின் நோக்கத்தைத் தேடுகிறார்கள். அவர்கள் தங்கள் எதிர்காலம் மற்றும் குடும்பங்களைப் பற்றி அக்கறை கொள்கிறார்கள். அவர்கள் தேவனின் பிள்ளைகள் மற்றும் அவரது நித்திய குடும்பத்தின் உறுப்பினர்கள் என்பதை அறிவதிலிருந்து வரும் சொந்தமாகுதல் என்ற உணர்வு அவர்களுக்குத் தேவை. மாறிவரும் மதிப்புகள் கொண்டிருக்கும் உலகில் அவர்கள் பாதுகாப்பாக உணர விரும்புகிறார்கள். அவர்கள் “இம்மையில் சமாதானத்தையும், மறுமையில் நித்திய ஜீவனையும் விரும்புகிறார்கள்.” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 59:23).
பலர் “அதை எங்கே காண்பதென அவர்கள் அறியாததால் அவர்கள் சத்தியத்திலிருந்து விலக்கப்பட்டார்கள்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 123:12). தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலம் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம், நித்திய சத்தியத்தை வழங்குகிறது. இந்த உண்மை மக்களின் ஆவிக்குரிய தேவைகளைப் பூர்த்தி செய்து, அவர்களின் ஆழ்ந்த விருப்பங்களை நிறைவேற்ற உதவுகிறது.
இயேசு கிறிஸ்துவின் அதிகாரம் பெற்ற பிரதிநிதியாக, “மீட்பு பரிசுத்த மேசியாவிலும் அவர் மூலமுமே வருகிறது” (2 நேபி 2:6) என்று நீங்கள் கற்பிக்கிறீர்கள். நீங்கள் மக்களை கிறிஸ்துவிடம் வந்து, அவரிடமும் அவருடைய மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்திடமும் மனம்மாற அழைக்கிறீர்கள். அவர்கள் உங்கள் அழைப்பை ஏற்றுக்கொள்ளும்போது, அவர்கள் அதிக மகிழ்ச்சி, நம்பிக்கை, சமாதானம் மற்றும் நோக்கத்தைக் கொண்டிருப்பார்கள்.
இரட்சகரிடம் வர, மக்கள் அவர் மீது விசுவாசம் வைக்க வேண்டும். இந்த விசுவாசத்தைவளர்க்க நீங்கள் அவர்களுக்கு உதவலாம், அதற்கு நீங்கள்:
-
இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்தை அவர்களுக்குக் கற்பித்து, அதன் சத்தியம் குறித்து சாட்சியமளிக்கவும்.
-
அதன் போதனைகளின்படி வாழ ஒப்புக்கொடுக்க அவர்களை அழைக்கவும்.
-
அவர்கள் செய்யும் ஒப்புக்கொடுத்தல்களைப் பின்தொடர்ந்து அதன்படி அவர்கள் செயல்பட உதவுங்கள்.
-
பரிசுத்த ஆவியின் செல்வாக்கை அவர்கள் உணரும் அனுபவங்களைப் பெற அவர்களுக்கு உதவுங்கள் (1 நேபி 10:17–19 ஐப் பார்க்கவும்).
இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் மனந்திரும்புதலுக்கு வழிநடத்தும். நம்முடைய பாவங்களுக்குப் பாவநிவர்த்தி செய்வதன் மூலம், இயேசு மனந்திரும்புதலை சாத்தியமாக்குகிறார். மக்கள் மனந்திரும்பும்போது, அவர்கள் பாவத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்டு, பரலோக பிதாவிடமும் இயேசு கிறிஸ்துவிடமும் நெருங்கி வளருவார்கள். மன்னிப்பைப் பெறுவதால் ஏற்படும் மகிழ்ச்சியையும் சமாதானத்தையும் அவர்கள் அனுபவிப்பார்கள்.
மனந்திரும்புதல் ஞானஸ்நான உடன்படிக்கைக்கும் பரிசுத்த ஆவியின் வரத்திற்கும் மக்களை ஆயத்தப்படுத்துகிறது. “எனக்கு முன்பாகக் கடைசி நாளில் கறைதிரையற்றவர்களாய் நிற்கும்படிக்கு, நீங்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்வதினாலே சுத்திகரிக்கப்படும்படிக்கு, என்னிடத்தில் வந்து என் நாமத்திலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள்.” (3 நேபி 27:20).
இரட்சகர் மற்றும் அவரது பாவநிவர்த்தி பற்றிய உங்கள் புரிதலும் சாட்சியமும் வளரும்போது, சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்ள உங்கள் விருப்பம் அதிகரிக்கும். லேகி உணர்ந்தது போல், “பூமியின் குடிகள் அறியும்படிக்கு, இவைகளை அவர்களுக்கு அறிவிப்பதின் முக்கியத்துவம் எவ்வளவு மேன்மையானதாயிருக்கிறது” (2 நேபி 2:8) என நீங்கள் உணர்வீர்கள்.
ஜீவ விருட்சம் - டாமிர் க்ரிவன்கோ
தனிப்பட்ட அல்லது தோழமை படிப்பு
1 நேபி 8 மற்றும் 11 இல் உள்ள ஜீவ விருட்சத்தின் தரிசனத்தைப் படிக்கும்போது, அதனுடன் உள்ள படத்தை ஆராயுங்கள்.
-
இந்தத் தரிசனத்தில் ஜீவ விருட்சம் எதைக் குறிக்கிறது? (1 நேபி 11:21–23 பார்க்கவும்.)
-
கனியைப் புசித்த பிறகு லேகி என்ன விரும்பினான்? (1 நேபி 8:10–18 பார்க்கவும்.)
-
தரிசனத்தில், கனியைப் புசிக்க மக்கள் என்ன செய்ய வேண்டியிருந்தது? இரட்சகரின் பாவநிவர்த்தியின் அனைத்து ஆசீர்வாதங்களையும் பெற நாம் என்ன செய்ய வேண்டும்? இந்த ஆசீர்வாதங்களில் பங்கேற்க ஒப்புக்கொடுத்தல்களும் உடன்படிக்கைகளும் எந்த வழிகளில் நமக்கு உதவுகின்றன?
-
மற்றவர்கள் சுவிசேஷத்தின் கனிகளை புசிக்க நீங்கள் பிறருக்கு எவ்வாறு உதவ முடியும்?
உங்கள் அழைப்பின் அதிகாரமும் வல்லமையும்
நீங்கள் அழைக்கப்பட்டு, “மகா சந்தோஷத்தின் நற்செய்தியையும், நித்திய சுவிசேஷத்தையும் அறிவிக்க” பணிக்கப்பட்டிருக்கிறீர்கள். (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 79:1பார்க்கவும்). மோசியாவின் குமாரர்களைப் போல, நீங்கள் தேவனுடைய அதிகாரத்துடனும் வல்லமையுடனும் கற்பிக்க முடியும் (ஆல்மா 17:2–3 ஐப் பார்க்கவும்).
கிறிஸ்துவின் வழிகாட்டுதலின் கீழ், சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும் அதிகாரம் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலம் மறுஸ்தாபிதம் செய்யப்பட்டது. நீங்கள் ஒரு ஊழியக்காரராகப் பணிக்கப்பட்டபோது, இந்த அதிகாரத்தைப் பெற்றீர்கள். அதனுடன் கர்த்தரைப் பிரதிநிதித்தப்படுத்தவும் அவருடைய சுவிசேஷத்தைக் கற்பிப்பதற்கும் உரிமை, சிலாக்கியம் மற்றும் பொறுப்பு வருகிறது.
இந்த அதிகாரம் உங்கள் அழைப்புக்குத் தகுதியாக வாழ்வதற்கான பொறுப்பையும் உள்ளடக்கியது. நீங்கள் பணிக்கப்பட்டதை உண்மையாகக் கருதுங்கள். பாவத்திலிருந்தும், அநாகரீகமான அல்லது ஆபாசமான எதிலிருந்தும் விலகி இருங்கள். உலகத்தின் வழிகளிலிருந்தும் சிந்தனைகளிலிருந்தும் விலகி இருங்கள். இயேசு கிறிஸ்துவின் சீஷர்களுக்கான ஊழியர் தரநிலைகளில் உள்ள தரங்களைப் பின்பற்றுங்கள். கர்த்தரின் பிரதிநிதியாக “விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு ” (1 தீமோத்தேயு 4:12). உங்கள் செயல்களாலும் வார்த்தைகளாலும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தை கனப்படுத்துங்கள்.
அதிகாரத்திற்கு கூடுதலாக, உங்கள் அழைப்பை நிறைவேற்ற உங்களுக்கு ஆவிக்குரிய வல்லமை தேவை. நீங்கள் அவரைப் பற்றியும், இயேசு கிறிஸ்துவைப் பற்றியும், நீங்கள் கற்பிக்கும் சுவிசேஷ சத்தியங்களைப் பற்றியும் உங்கள் சாட்சியத்தை பெலப்படுத்த தொடர்ந்து உழைக்கும்போது தேவன் ஆவிக்குரிய வல்லமையைத் தருகிறார். நீங்கள் ஜெபிக்கவும், வேதங்களைப் படிக்கவும், உங்கள் ஊழிய நோக்கத்தை நிறைவேற்ற முயலவும் அவர் ஆவிக்குரிய வல்லமையை வழங்குகிறார். நீங்கள் அவருடைய கட்டளைகளையும், இரட்சிப்பின் நியமங்களைப் பெற்றபோது நீங்கள் செய்த உடன்படிக்கைகளையும் கடைப்பிடிக்க பாடுபடும்போது அவர் ஆவிக்குரிய வல்லமையை வழங்குகிறார் ( கோட்பாடும் உடன்படிக்கைகளும் 35:24 பார்க்கவும்).
ஆவிக்குரிய வல்லமை வெளிப்பட, நீங்கள்:
-
மக்களுக்குக் கற்பிக்க வேதங்களைப் பயன்படுத்துங்கள், சுவிசேஷ சத்தியங்களைப் பற்றிய அவர்களின் புரிதலை ஆழப்படுத்துங்கள், மேலும் இந்த சத்தியங்கள் அவர்களின் வாழ்க்கையில் எவ்வாறு பொருந்தும் என்பதைப் புரிந்துகொள்ள உதவுங்கள். (1 நேபி 19:23; ஆல்மா 26:13; 31:5 பார்க்கவும்).
-
கர்த்தர் உங்களிடம் என்ன சொல்ல விரும்புகிறார் என்பது குறித்து ஆவியின் வழிகாட்டுதலைப் பெறுங்கள். (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 84:85 பார்க்கவும்).
-
எங்கு செல்ல வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய ஆவியின் வழிகாட்டுதலைப் பெறுங்கள். (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 28:15; 31:11; 75:26–27 பார்க்கவும்).
-
உங்கள் போதனையும் சாட்சியமும் ஆவியின் சாட்சியால் உறுதிப்படுத்தப்பட வேண்டும். (2 நேபி 33:1; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 100:5–8 பார்க்கவும்).
-
இரட்சிப்பின் நியமங்களில் பங்கேற்கவும் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 84:19–20 பார்க்கவும்).
-
நீங்கள் ஒரு மூப்பராக இருந்தால் ஆசாரியத்துவ ஆசீர்வாதங்களை வழங்குங்கள் (யாக்கோபு 5:14–15 பார்க்கவும்).
-
நீங்கள் பணி செய்யும் மக்களுடனும் அவர்களுக்காகவும் ஜெபியுங்கள். (ஆல்மா 6:6; 8:18–22; 10:7–11; 31:26–35; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 75:19 பார்க்கவும்).
-
கர்த்தருக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும், மற்ற ஊழியக்காரர்களுக்கும், நீங்கள் சேவை செய்யும் மக்களுக்கும் அன்பையும் நன்றியையும் வெளிப்படுத்துங்கள்.(கோட்பாடும் உடன்படிக்கைகளும் 59:7; 78:19 பார்க்கவும்).
வேதப் படிப்பு
ஒரு சாட்சியத்தை நீங்கள் எவ்வாறு பெற்று பலப்படுத்துகிறீர்கள்?
ஆவிக்குரிய வல்லமையை நீங்கள் எவ்வாறு பெறுகிறீர்கள்?
-
1 கொரிந்தியர் 2:4.
தனிப்பட்ட படிப்பு
நீங்கள் தேவனுடன் செய்து கொண்ட பின்வரும் உடன்படிக்கைகளை பரிசீலனை செய்து சிந்தியுங்கள். இந்த உடன்படிக்கைகளைக் கைக்கொள்பவர்களுக்கு தேவன் வாக்குத்தத்தம் செய்திருக்கும் ஆசீர்வாதங்களைப் படியுங்கள். அவற்றைக் கடைப்பிடிப்பதன் மூலம் நீங்கள் பெற்ற ஆசீர்வாதங்களைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். உங்கள் படிப்பு குறிப்பிதழில் உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யவும்.
ஞானஸ்நானமும் திடப்படுத்தலும்
-
இயேசு கிறிஸ்துவின் நாமத்தை உங்கள் மீது தரித்துக்கொள்ள சித்தமாயிருங்கள்.
-
தேவனின் கட்டளைகளைக் கைக்கொள்ளுங்கள்.
-
தேவனுக்கும் பிறருக்கும் சேவை செய்தல்.
-
இறுதிபரியந்தம் நிலைத்திருத்தல்.
-
2 நேபி 31:6–13; மோசியா 18:8–10, 13; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:37 பார்க்கவும்.
ஆசாரியத்துவ நியமனம் (மூப்பர்களுக்கு)
-
விசுவாசத்தோடிருங்கள்.
-
உங்கள் அழைப்புகளை சிறப்பாக்குங்கள்.
-
நித்திய ஜீவனின் வார்த்தைகளுக்குக் கருத்தாய் செவிகொடுங்கள்.
-
(கோட்பாடும் உடன்படிக்கைகளும் 84:33–44 பார்க்கவும்.)
ஆலய தரிப்பித்தல்
-
கீழ்ப்படிதல் நியாயப்பிரமாணத்தின்படி வாழுங்கள்
-
தியாகத்தின் நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியுங்கள்.
-
இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷ நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியுங்கள்.
-
கற்புடைமை நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியுங்கள்.
-
அர்ப்பணிப்பு நியாயப்பிரமாணத்தைக் கடைபிடியுங்கள்.
-
பொது கையேடு, 27.2. பார்க்கவும்.
தனிப்பட்ட அல்லது தோழமை படிப்பு
யோவான் 15:1–16 வாசிக்கவும். எந்த விதத்தில் கிறிஸ்து திராட்சைக் கொடியாக இருக்கிறார்? நீங்கள் எப்படி அந்தக் கொடியின் கிளையாக இருக்கிறீர்கள்? நீங்கள் பணிக்கப்பட்டது இந்த உறவுடன் எவ்வாறு தொடர்புடையது?
உங்கள் ஊழியச் சான்றிதழைப் படியுங்கள். நீங்கள் படித்ததைப் பற்றிய உங்கள் உணர்வுகளையும் எண்ணங்களையும் பதிவு செய்யுங்கள். இந்த அத்தியாயத்தைப் படிக்கும் ஒவ்வொரு முறையும், இந்த செயல்முறையை மீண்டும் செய்வதைக் கருத்தில் கொள்ளுங்கள். காலப்போக்கில் உங்கள் உணர்வுகள் எவ்வாறு மாறுகின்றன என்பதைக் கவனியுங்கள்.
தனிப்பட்ட படிப்பு
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 109:13–15, 21–30, 38–39, 55–57 படிக்கவும். இந்த வசனங்கள் கர்த்லாந்து ஆலயத்திற்காக தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்தின் உணர்த்தப்பட்ட பிரதிஷ்டை ஜெபத்திலிருந்து எடுக்கப்பட்டவை.
கர்த்தருடைய பரிசுத்த வீட்டில் தரிப்பிக்கப்பட்ட விசுவாசிகளுக்காக ஜோசப் ஸ்மித் கோரிய ஆசீர்வாதங்களின் பட்டியலை எழுதுங்கள். இந்த ஆசீர்வாதங்களைப் பற்றி உங்கள் உணர்வுகள் என்ன?
பரிசுத்த ஆவி உங்களுடன் இருப்பதை நாடுங்கள்
நீங்கள் சபையின் உறுப்பினராக திடப்படுத்தப்பட்டபோது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெற்றீர்கள். ஒரு ஊழியக்காரராக—மற்றும் உங்கள் வாழ்நாள் முழுவதும்—உங்கள் மிகப்பெரிய தேவைகளில் ஒன்று பரிசுத்த ஆவியை உங்களுடன் பெற்றிருப்பதுதான் (1 நேபி 10:17; 3 நேபி 19:9 ஐப் பார்க்கவும்). பரிசுத்த ஆவி தேவத்துவத்தின் மூன்றாம் நபர்.
பரிசுத்த ஆவியானவர் உங்களை வழிநடத்துகிறார், போதிக்கிறார், ஆறுதல்படுத்துகிறார். அவர் உங்களைச் சுத்திகரித்து பரிசுத்தப்படுத்துகிறார். அவர் சத்தியத்திற்கு சாட்சியமளிக்கிறார், பிதாவையும் குமாரனையும் சாட்சியம் கூறுகிறார். அவர் உங்கள் மனமாற்றத்தையும், நீங்கள் கற்பிப்பவர்களின் மனமாற்றத்தையும் ஏற்படுத்துகிறார். (3 நேபி 27:20; 28:11; ஏத்தேர் 12:41; மரோனி 8:26; 10:5; யோவான் 15:26. பார்க்கவும்)
பரிசுத்த ஆவியானவர் “நீங்கள் செய்யவேண்டிய சகல காரியங்களையும் உங்களுக்குக் காண்பிப்பார்” (2 நேபி 32:5). நீங்கள் சொந்தமாகச் செய்யக்கூடியதை விட, உங்கள் திறமைகளையும் சேவையையும் அவர் சிறப்பாக்குவார்.
பரிசுத்த ஆவி உங்களுடன் இருக்க நாடுவது உங்கள் மிகவும் நேர்மையான விருப்பங்களில் ஒன்றாக இருக்க வேண்டும். நீங்கள் அவரது தோழமையை இவ்வாறு உணர்வீர்கள்:
-
ஜெபிக்கும்போது (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 42:14 பார்க்கவும்).
-
தேவனின் வார்த்தையை பொக்கிஷப்படுத்தும்போது (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 11:21; 84:85 பார்க்கவும்).
-
உங்கள் இருதயத்தை சுத்திகரிக்கும்போது (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 112:28 பார்க்கவும்).
-
கட்டளைகளைக் கைக்கொள்ளும்போது (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 130:20–21 பார்க்கவும்).
-
ஒவ்வொரு வாரமும் திருவிருந்தில் பங்கேற்கும்போது (மரோனி 4–5; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:77, 79 பார்க்கவும்).
“வெளிப்படுத்தலைப் பெறுவதற்கு உங்களுடைய ஆவிக்குரிய திறனை அதிகரிக்க நான் உங்களிடம் கெஞ்சுகிறேன். … பரிசுத்த ஆவியின் வரத்தை அனுபவிக்கவும், பரிசுத்த ஆவியின் குரலை மிக அடிக்கடியும் மிக தெளிவாகவும் கேட்கவும் தேவையான ஆவிக்குரிய பணியைச் செய்ய தேர்ந்தெடுக்கவும்” (Russell M. Nelson, “Revelation for the Church, Revelation for Our Lives,” Ensign or May 2018, 96).
ஆவியை அடையாளம் காண கற்றுக்கொள்ளுங்கள்
பரிசுத்த ஆவியின் வழிகாட்டுதலை அடையாளம் கண்டு பின்பற்ற நீங்கள் கற்றுக்கொள்ளும்போது, உங்கள் ஊழிய நோக்கத்தை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். ஆவி பொதுவாக உங்கள் உணர்வுகள் மற்றும் எண்ணங்கள் மூலம் அமைதியாக தொடர்பு கொள்கிறது. இந்த நுட்பமான தூண்டுதல்களைத் தேடுவதற்கும், அடையாளம் காணுவதற்கும், பின்பற்றுவதற்கும் உங்களை அர்ப்பணித்துக் கொள்ளுங்கள். அவை பல வழிகளில் வருகின்றன. (அத்தியாயம் 4; மேலும் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 8:2–3; 11:12–14; கலாத்தியர் 5:22–23 பார்க்கவும்).
ஆவியால் கற்பியுங்கள்
இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் “விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது.” (ரோமர் 1:16). அந்தக் காரணத்திற்காக, சுவிசேஷத்தின் மறுஸ்தாபிதத்தின் செய்தி தெய்வீக வல்லமையால்— பரிசுத்த ஆவியின் வல்லமையால்—கற்பிக்கப்பட வேண்டும்.
கர்த்தர் சொன்னார், “விசுவாசத்தின் ஜெபத்தால் ஆவி உங்களுக்குக் கொடுக்கப்படும்; ஆவியை நீங்கள் பெறாவிட்டால் நீங்கள் போதிக்காதிருப்பீர்களாக.” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 42:14; மேலும் 50:13–14, 17–22 பார்க்கவும்). பரிசுத்த ஆவியின் வல்லமையால் நீங்கள் கற்பிக்கும்போது, அவர்:
-
உங்களுக்கு சத்தியத்தைக் கற்பித்து, நீங்கள் படித்த கோட்பாட்டை உங்கள் நினைவிற்குக் கொண்டு வருவார் (யோவான் 14:26 பார்க்கவும்).
-
உங்களுக்குத் தேவைப்படும்போது பேச வார்த்தைகளைக் கொடுப்பார் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 84:85 பார்க்கவும்).
-
நீங்கள் கற்பிக்கும் மக்களின் இருதயங்களுக்கு உங்கள் செய்தியை எடுத்துச் செல்லுவார் (2 நேபி 33:1 பார்க்கவும்).
-
நீங்களும்—ஆவியினால் பெறுபவர்களும்—ஒருவரையொருவர் புரிந்துகொண்டு, பக்திவிருத்தியடைந்து, ஒன்றாக மகிழ்ச்சியடைய உதவுவார். (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 50:17–22 பார்க்கவும்).
-
உங்கள் செய்தியின் உண்மைத்தன்மைக்கு சாட்சியமளித்து, உங்களை ஏற்றுக் கொள்பவர்களுக்கு உங்கள் வார்த்தைகளை உறுதிப்படுத்துவார் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 100:5–8 பார்க்கவும்).
நீங்கள் பரிசுத்த ஆவியைத் தேடி, சார்ந்து, போதிக்கும்போது கர்த்தர் உங்களை ஏராளமாக ஆசீர்வதிப்பார். (e அத்தியாயங்கள் 4 மற்றும் 10 பார்க்கவும்).
கிறிஸ்துவின் சுவிசேஷம் மற்றும் கிறிஸ்துவின் கோட்பாடு
இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் உங்கள் செய்தியையும் உங்கள் நோக்கத்தையும் வரையறுக்கிறது. இது உங்கள் ஊழிய சேவையின் “என்ன” மற்றும் “ஏன்” இரண்டையும் வழங்குகிறது. அவரது சுவிசேஷம் நமது இரட்சிப்பு மற்றும் மேன்மையடைதலுக்கு தேவையான அனைத்து கோட்பாடுகள், கொள்கைகள், நியாயப்பிரமாணங்கள், கட்டளைகள், நியமங்கள் மற்றும் உடன்படிக்கைகளை உள்ளடக்கியது ஆகும்.
இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைத்து, மனந்திரும்பி, ஞானஸ்நானம் பெற்று, பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெற்று, இறுதிபரியந்தம் நிலைத்திருப்பதன் மூலம், நாம் அவரது இரட்சிப்பு, மீட்பின் வல்லமையை பெற முடியும் என்பதே சுவிசேஷத்தின் செய்தி. (3 நேபி 27:13–22 பார்க்கவும்).
இது கிறிஸ்துவின் கோட்பாடு என்றும் அழைக்கப்படுகிறது. இந்தக் கோட்பாட்டின்படி வாழ்வதன் மூலம் நாம் கிறிஸ்துவிடம் வந்து இரட்சிக்கப்படுகிறோம் (1 நேபி 15:14 பார்க்கவும்). இது மார்மன் புஸ்தகத்தில் வல்லமைவாய்ந்த முறையில் கற்பிக்கப்பட்டுள்ளது (2 நேபி 31; 32:1–6; 3 நேபி 11:31–40; பார்க்கவும்). அவரது கோட்பாட்டின்படி வாழ அவர்களுக்கு உதவுவதன் மூலம் கிறிஸ்துவிடம் வர மக்களுக்கு உதவுவதே உங்கள் நோக்கம்.
”சுவிசேஷத்தின் முதல் கொள்கைகளை—மீண்டும் மீண்டும் அவர்களுக்குப் பிரசங்கியுங்கள். நாளுக்கு நாள் அவற்றைக் குறித்த புதிய கருத்துக்களும், கூடுதல் ஒளியும் உங்களுக்கு வெளிப்படுத்தப்படுவதை நீங்கள் காண்பீர்கள். தெளிவாக புரிந்துகொள்ள அவற்றை நீங்கள் விரிவாக்கலாம். அப்போது நீங்கள் கற்பிப்பவர்களுக்கு அவற்றை இன்னும் தெளிவாகப் புரிய வைக்க முடியும்.” (Hyrum Smith, in History, 1838–1856, volume E-1 [1 July 1843–30 April 1844], 1994, josephsmithpapers.org).
வேதப் படிப்பு
இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் மற்றும் கிறிஸ்துவின் கோட்பாடு பற்றி பின்வரும் வேதவாக்கியங்களும் பிரகடனமும் என்ன கற்பிக்கின்றன? நீங்கள் புரிந்துகொள்ளவும் நினைவில் கொள்ளவும் உதவும் வகையில் உங்கள் படிப்பு குறிப்பிதழில் குறிப்புகளை எழுதுங்கள்.
இயேசு கிறிஸ்துவில் விசுவாசம்
மற்ற எல்லா சுவிசேஷ கொள்கைகளுக்கும் விசுவாசமே அடித்தளம். அது செயல் மற்றும் வல்லமையின் கொள்கை ஆகும்.
நமது விசுவாசம் நம்மை இரட்சிப்புக்கு அழைத்துச் செல்ல, அது இயேசு கிறிஸ்துவை மையமாகக் கொண்டிருக்க வேண்டும். “தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்” (யோவான் 3:16).
இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் என்பது அவர் தேவனின் ஒரே பேறான குமாரன் என்ற நம்பிக்கையை உள்ளடக்கியது. அது அவரை நமது இரட்சகராகவும் மீட்பராகவும் நம்புவதாகும். (மோசியா 3:17; 4:6–10; ஆல்மா 5:7–15). அது அவரிலும், அவருடைய வார்த்தையிலும், போதனைகளிலும், வாக்குறுதிகளிலும் முழு நம்பிக்கை வைப்பதாகும். நாம் முழு இருதய நோக்கத்துடன் கிறிஸ்துவின் போதனைகளையும் முன்மாதிரியையும் பின்பற்றும்போது, அவர்மீதுள்ள நமது விசுவாசம் வளரும்.( 2 நேபி 31:6–13; 3 நேபி 27:21–22 பார்க்கவும்).
ஒரு ஊழியக்காரராக, மக்கள் இயேசு கிறிஸ்துவில் தங்கள் விசுவாசத்தை வளர்க்க ஒப்புக்கொடுத்து செய்யவும் அவற்றைக் கடைப்பிடிக்கவும் உதவுங்கள். இந்த ஒப்புக்கொடுத்தல்கள் அவர்களை நியமங்களைப் பெறவும், தேவனுடன் பரிசுத்த உடன்படிக்கைகளைச் செய்து காத்துக்கொள்ளவும் தயார்படுத்துகின்றன.
மனந்திரும்புதல்
இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் மனந்திரும்புதலுக்கு வழிநடத்துகிறது (ஏலமன் 14:13 பார்க்கவும்). மனந்திரும்புதல் என்பது தேவனிடம் திரும்புவதும் பாவத்திலிருந்து விலகிச் செல்வதும் ஆகும். நாம் மனந்திரும்பும்போது, நம்முடைய செயல்கள், வாஞ்சைகள் மற்றும் எண்ணங்கள் ஆகியவை தேவனுடைய சித்தத்திற்கு இசைவாக மாறுகின்றன.
அவருடைய பாவநிவாரண பலியின் மூலம், இரட்சகர் நமது பாவங்களுக்கான விலையைச் செலுத்தினார். (மோசியா 15:9; ஆல்மா 34:15–17). நாம் மனந்திரும்பும்போது, இயேசு கிறிஸ்து மற்றும் அவருடைய தியாகத்தின் காரணமாக நாம் மன்னிக்கப்பட முடியும், ஏனென்றால் அவர் மனந்திரும்புபவர்களுக்கு இரக்கம் காட்டும் உரிமையைக் கோருகிறார். (மரோனி 7:27–28 பார்க்கவும்). தீர்க்கதரிசி லேகியின் வார்த்தைகளில், நமது “மீட்பு … பரிசுத்த மேசியாவின் நற்கிரியைகள், இரக்கம், கிருபை ஆகியவைகளின் மூலமே வருகிறது” (2 நேபி 2:6, 8).
மனந்திரும்புதல் என்பது ஒரு நடத்தையை மாற்ற அல்லது ஒரு பலவீனத்தை வெல்ல மன உறுதியைப் பயன்படுத்துவதை விட அதிகம். மனந்திரும்புதல் என்பது கிறிஸ்துவிடம் உண்மையாகத் திரும்புவது, அவர் நம் இருதயங்களில் ஒரு “பெரும் மாற்றத்தை” அனுபவிக்கும் வல்லமையை நமக்குத் தருகிறார் (ஆல்மா 5:12–14). இது ஆவியானவருக்கு தாழ்மையுடன் அடிபணிவதையும், தேவனின் சித்தத்திற்கு அடிபணிவதையும் உள்ளடக்கியது. நாம் மனந்திரும்பும்போது, தேவனுக்கு சேவை செய்வதற்கும் அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதற்கும் நமது ஒப்புக்கொடுத்தலை அதிகரிக்கிறோம். நாம் கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய பிரகாரமாக மறுபடியும் பிறந்திருக்கிறோம்.
மனந்திரும்புதல் என்பது மகிழ்ச்சியையும் சமாதானத்தையும் தரும் ஒரு நேர்மறையான கொள்கையாகும். “[நமது] ஆத்தும இரட்சிப்புக்கேதுவாய் மீட்பரின் வல்லமைக்கு,” அது நம்மைக் கொண்டுவருகிறது (ஏலமன் 5:11).
மக்கள் ஏன் மனந்திரும்ப வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள உதவுவதில் தைரியமாகவும் அன்பாகவும் இருங்கள். நீங்கள் கற்பிக்கும் மக்களை ஒப்புக்கொடுத்தல்களைச் செய்ய அழைப்பதன் மூலம், நீங்கள் அவர்களை மனந்திரும்ப அழைக்கிறீர்கள், மேலும் அவர்களுக்கு நம்பிக்கையை அளிக்கிறீர்கள்.
வேதப் படிப்பு
மனந்திரும்புதலை அறிவிப்பது பற்றி பின்வரும் வேதவாக்கியங்களிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்?
ஞானஸ்நானம்
இயேசு கிறிஸ்துவின் மீதான விசுவாசமும் மனந்திரும்புதலும் ஞானஸ்நான நியமத்துக்கு நம்மை தயார்படுத்துகிறது. “மனந்திரும்புதலின் முதற்கனிகள் ஞானஸ்நானம் ஆகும்” (மரோனி 8:25). தேவனிடமிருந்து அதிகாரம் பெற்ற ஒருவரால் முழுக்கு ஞானஸ்நானம் பெறும்போது, நாம் நித்திய ஜீவனுக்கான வாசலில் பிரவேசிக்கிறோம்.
நாம் ஞானஸ்நானம் பெறும்போது, நாம் தேவனுடன் ஒரு உடன்படிக்கை செய்கிறோம். இந்த உடன்படிக்கையை நாம் கடைப்பிடிக்கும்போது, பரிசுத்த ஆவியின் தோழமையை நமக்குத் தருவதாகவும், நமது பாவங்களை மன்னிப்பதாகவும், இயேசு கிறிஸ்துவின் சபையில் நமக்கு உறுப்பினர் அந்தஸ்தை அளிப்பதாகவும் தேவன் வாக்குறுதி அளிக்கிறார். (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:77, 79; மரோனி 6:4). இந்த மகிழ்ச்சியான மற்றும் நம்பிக்கையான நியமத்தின் மூலம் நாம் கர்த்தரிடம் சேர்க்கப்பட்டு ஆவிக்குரிய ரீதியில் மறுபிறவி எடுக்கிறோம்.
நீங்கள் கற்பிக்கும் மக்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பதும் அவர்களை திடப்படுத்துவதும் உங்கள் நோக்கத்தின் மையமாகும். ஞானஸ்நானத்திற்கு தகுதி பெற, அவர்கள் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:37 இல் உள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள அவர்களுக்கு உதவுங்கள்.
தோழமை படிப்பு
பின்வரும் வேத வாக்கியங்களைப் படிக்கவும்:
மேலே உள்ள வேதவாக்கியங்களைப் பற்றிய உங்கள் படிப்பின் அடிப்படையில், இரண்டு எழுதப்பட்ட பட்டியல்களை உருவாக்கவும்:
-
ஞானஸ்நானம் பெறுவதற்கான தகுதிகள்
-
ஞானஸ்நானத்தில் செய்யப்பட்ட உடன்படிக்கைகள்
இதை மற்றவர்களுக்கு எப்படிக் கற்றுக்கொடுப்பது என்று உங்கள் தோழருடன் கலந்துரையாடுங்கள்.
திடப்படுத்தலும் பரிசுத்த ஆவியின் வரமும்
ஞானஸ்நானம் இரண்டு பகுதிகளாக வருகிறது: தண்ணீரின் ஞானஸ்நானம் மற்றும் ஆவியின் ஞானஸ்நானம். நாம் தண்ணீரால் ஞானஸ்நானம் பெற்ற பிறகு, தேவனிடமிருந்து அதிகாரம் பெற்ற ஒருவர் தம் கைகளை வைப்பதன் மூலம் நாம் திடப்படுத்தப்படும்போது ஞானஸ்நானம் நிறைவடைகிறது. திடப்படுத்தல் மூலம் நாம் பரிசுத்த ஆவியின் வரத்தையும் நமது பாவங்களிலிருந்து விடுதலையையும் பெறலாம்.
ஜோசப் ஸ்மித் போதித்தார், “தண்ணீரால் ஞானஸ்நானம் பெறுவது பாதி ஞானஸ்நானம், மற்ற பாதி இல்லாமல் ஒன்றுமில்லாதது— அதாவது பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம்” (Teachings of Presidents of the Church: Joseph Smith [2007], 95).
ஆல்மா போதித்தான், “சகல மனுக்குலமும், … மறுபடியும் ஜெனிக்கவேண்டும் என்பதால் திகையாதே; ஆம், அவர்கள் தேவனால் ஜெனிப்பிக்கப்பட்டு, தங்களுடைய மாம்சமான வீழ்ந்த நிலையிலிருந்து தேவனால் மீட்கப்பட்டு, நீதியின் நிலைக்கு மாற்றப்பட்டு, அவருடைய குமாரரும் குமாரத்திகளுமாவார்கள். இவ்விதமாய் அவர்கள் புது சிருஷ்டியாகிறார்கள்” (மோசியா 27:25–26).
மனந்திரும்புபவர்களுக்கு, தண்ணீர் மற்றும் ஆவியின் ஞானஸ்நானம் ஆவிக்குரிய மறுபிறப்பாகும்.
வேதப் படிப்பு
பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவதால் கிடைக்கும் சில ஆசீர்வாதங்கள் யாவை?
-
யோவான் 14:26
-
கலாத்தியர் 5:22–25
-
Topical Guide, “Holy Ghost, Gift of”
நாம் ஏன் பரிசுத்த ஆவியின் வரத்தை விரும்ப வேண்டும்?
-
அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:1–6
இறுதிபரியந்தம் நிலைத்திருத்தல்
இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுவது வாழ்நாள் ஒப்புக்கொடுத்தலாகும். கிறிஸ்துவில் விசுவாசம் வைத்து, தினமும் மனந்திரும்பி, சுவிசேஷத்தின் அனைத்து நியமங்களையும் உடன்படிக்கைகளையும் பெற்று, அந்த உடன்படிக்கைகளைக் கைக்கொண்டு, பரிசுத்த ஆவியின் தோழமையைப் பெற, நம் வாழ்நாள் முழுவதும் தொடரும்போது இறுதிபரியந்தம் நிலைத்திருக்கிறோம். திருவிருந்தில் பங்கேற்பதன் மூலம் நாம் செய்த உடன்படிக்கைகளைப் புதுப்பிப்பதும் இதில் அடங்கும்.
கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்–யாங்சங் கிம் பட உபயம் - Havenlight.
சுவிசேஷம்—நமது பரலோக பிதாவிடம் திரும்பும் அவரின் பாதை
இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் நாம் எப்படி வாழ்கிறோம், யாராகிறோம் என்பதை மாற்ற முடியும். அதன் கொள்கைகள் நம் வாழ்வில் ஒரு முறையே நாம் அனுபவிக்கும் படிகள் மட்டுமல்ல. நாம் அவற்றை வாழ்நாள் முழுவதும் திரும்பத் திரும்பச் செய்யும்போது, அவை நம்மை தேவனிடம் நெருங்கிச் சென்று, அதிகரித்த முறையில் பலனளிக்கும் வாழ்க்கை முறையாக மாறுகின்றன. அவை சமாதானம், குணப்படுத்துதல் மற்றும் மன்னிப்பைக் கொண்டுவருகின்றன. நமது பரலோக பிதா அவருடன் நித்திய ஜீவனைப் பெற நமக்குக் கொடுத்த பாதையையும் அவை வரையறுக்கின்றன.
ஒரு ஊழியக்காரராக நீங்கள் எவ்வாறு பணியாற்றுகிறீர்கள் என்பதை இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் வழிநடத்துகிறது. இது உங்கள் முயற்சிகளையும் மையப்படுத்துகிறது. மனந்திரும்புதலுக்கு இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் பெற மக்களுக்கு உதவுங்கள் (ஆல்மா 34:15–17 ஐப் பார்க்கவும்). இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் முழுமையும், ஆசாரியத்துவத்தின் அதிகாரமும் மறுஸ்தாபிதம் செய்யப்பட்டுள்ளன என்பதைக் கற்பித்து சாட்சியளிக்கவும். ஞானஸ்நானம் பெற்று இரட்சகரின் போதனைகளின்படி வாழ மக்களை அழைக்கவும்.
இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் தேவனின் பிள்ளைகள் அனைவரையும் ஆசீர்வதிக்கிறது
இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் தேவனின் எல்லா பிள்ளைகளுக்குமானதாகும். தேவனுக்கு “அனைவரும் சமம்” என்று வேதங்கள் கற்பிக்கின்றன. “அனைவரும் தம்மிடத்தில் வரும்படியாகவும், தன் நன்மையைப் புசிக்கும்படியாகவும் அழைக்கிறார். தம்மிடம் வரும் ஒருவரையும், அவர் மறுப்பதில்லை.” (2 நேபி 26:33).
சுவிசேஷம் நம் பூலோக வாழ்வு முழுவதும் மற்றும் நித்தியம் முழுவதும் நம்மை ஆசீர்வதிக்கிறது. இயேசு கிறிஸ்துவின் போதனைகளின்படி நாம் வாழும்போது, தனி நபர்களாகவும், குடும்பங்களாகவும் நாம் மகிழ்ச்சியாக இருப்பது மிகவும் சாத்தியம். (மோசியா 2:41; “குடும்பம்: உலகிற்கு ஓர் பிரகடனம்,” ChurchofJesusChrist.org பார்க்கவும்). சுவிசேஷத்தின்படி ஜீவித்தல் நமது மகிழ்ச்சிகளை ஆழமாக்குகிறது, நமது செயல்களை உணர்த்துகிறது, மேலும் நமது உறவுகளை வளப்படுத்துகிறது.
மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்தின் சிறந்த செய்திகளில் ஒன்று, நாம் அனைவரும் தேவனின் குடும்பத்தின் ஒரு பகுதியாக இருக்கிறோம். நாம் அவருடைய ஆவி குமாரர்கள் மற்றும் குமாரத்திகள். பூமியில் நம் குடும்ப சூழ்நிலை எதுவாக இருந்தாலும், நாம் ஒவ்வொருவரும் தேவனின் குடும்பத்தின் உறுப்பினர்.
நமது செய்தியின் மற்றொரு சிறந்த பகுதி என்னவென்றால், குடும்பங்கள் நித்தியத்திற்கும் ஒன்றுபட்டிருக்க முடியும். குடும்பம் தேவனால் நியமிக்கப்பட்டது. பிற்கால தீர்க்கதரிசிகள் போதித்துள்ளனர்:
“[பரலோக பிதாவின்] மகிழ்ச்சியின் திட்டம் குடும்ப உறவுகளை கல்லறைக்கு அப்பால் தொடர உதவுகிறது. பரிசுத்த ஆலயங்களில் கிடைக்கும் பரிசுத்த நியமங்களும் உடன்படிக்கைகளும் தனிநபர்கள் தேவனின் பிரசன்னத்திற்குத் திரும்புவதையும் குடும்பங்கள் நித்தியமாக ஒன்றுபடுவதையும் சாத்தியமாக்குகின்றன.” (“குடும்பம்: உலகிற்கு ஓர் பிரகடனம்”).
பலருக்கு திருமணம் அல்லது அன்பான குடும்ப உறவுகளுத்தான வாய்ப்புகள் குறைவு. பலர் விவாகரத்து மற்றும் பிற கடினமான குடும்ப சூழ்நிலைகளை அனுபவித்திருக்கிறார்கள். இருப்பினும், நமது குடும்பச் சூழ்நிலை எதுவாக இருந்தாலும் தனித்தனியாக சுவிசேஷம் நம்மை ஆசீர்வதிக்கிறது. நாம் விசுவாசமிக்கவர்களாக இருந்தால், அன்பான குடும்பங்களின் ஆசீர்வாதங்களைப் பெற தேவன் இந்த வாழ்க்கையில் அல்லது எதிர்கால வாழ்க்கையில் நமக்கு ஒரு வழியை வழங்குவார் (மோசியா 2:41 பார்க்கவும்).
மறுஸ்தாபிதத்தின் செய்தி: விசுவாசத்தின் அடித்தளம்
நீங்கள் எங்கு சேவை செய்தாலும் அல்லது யாருக்கு கற்பித்தாலும், உங்கள் போதனையை இயேசு கிறிஸ்து மற்றும் அவரது சுவிசேஷத்தின் மறுஸ்தாபிதத்தின் மீது மையப்படுத்துங்கள். ஊழியப் பாடங்களில் உள்ள கோட்பாட்டை நீங்கள் படிக்கும்போது, நமக்கு ஒரு செய்தி இருப்பதைக் காண்பீர்கள்: இயேசுவே கிறிஸ்து, நமது இரட்சகர் மற்றும் மீட்பர். ஒரு தற்காலத் தீர்க்கதரிசி மூலம், பரலோக பிதா நமது இரட்சிப்புக்கான தமது திட்டத்தைப் பற்றிய அறிவை மறுஸ்தாபிதம் செய்துள்ளார். இந்தத் திட்டம் இயேசு கிறிஸ்துவை மையமாகக் கொண்டது. அவருடைய பாவநிவாரண பலியின் மூலம், இரட்சகர் நம் அனைவரையும் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் காப்பாற்றி பரலோக பிதாவிடம் திரும்புவதை சாத்தியமாக்குகிறார்.
நீங்கள் கற்பிக்கும் நபர்கள் பின்வருவனவற்றைப் புரிந்துகொள்ள உதவுங்கள்:
-
தேவன் பரலோகத்திலுள்ள நம்முடைய உண்மையான பிதா. அவர் நம்மை பரிபூரணமாக நேசிக்கிறார். பூமியிலுள்ள ஒவ்வொரு நபரும் தேவனின் பிள்ளை மற்றும் அவரது குடும்பத்தின் உறுப்பினர்.
-
பரலோக பிதா நமக்கு அழியாமையையும் நித்திய ஜீவனையும் பெற ஒரு திட்டத்தை வழங்கினார், அவை அவருடைய மிகப்பெரிய ஆசீர்வாதங்கள் (மோசே 1:39 பார்க்கவும்). நாம் கற்றுக்கொள்ளவும், வளரவும், அவருடைய ஆசீர்வாதங்களின் முழுமைக்காகத் தயாராகவும் பூமிக்கு வந்துள்ளோம்.
-
அவருடைய திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த வாழ்க்கையில் நம்மை வழிநடத்தவும், அவரிடம் திரும்ப உதவவும் பரலோக பிதா கட்டளைகளை வழங்கியுள்ளார் (எடுத்துக்காட்டாக, யாத்திராகமம் 20:3–17 ஐப் பார்க்கவும்).
-
இவ்வாழ்க்கையில் நாம் அனைவரும் பாவம் செய்வோம், மற்றும் மரிப்போம். நம்மீது கொண்ட பரலோக பிதாவின் அன்பினால், பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் நம்மை மீட்க தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை அனுப்பினார்.
-
நாம் மனந்திரும்பும்போது, இயேசு கிறிஸ்துவின் பாவ நிவாரண பலியின் நிமித்தமாக, நமது பாவங்களுக்காக நாம் சுத்திகரிக்கப்பட்டு ஞானஸ்நானம் பெற்று திடப்படுத்தப்பட முடியும். இது நமக்கு சமாதானம் தருகிறது மற்றும் தேவனின் பிரசன்னத்திற்குத் திரும்பவும் மகிழ்ச்சியின் முழுமையையும் பெறுவதையும் சாத்தியமாக்குகிறது.
-
இயேசுவின் உயிர்த்தெழுதலின் காரணமாக, நாம் அனைவரும் மரித்த பிறகு உயிர்த்தெழுப்பப்படுவோம். இதன் பொருள் ஒவ்வொரு நபரின் ஆவியும் சரீரமும் மீண்டும் ஒன்றிணைந்து என்றென்றும் வாழும்.
-
வேதாகம வரலாறு முழுவதும், கர்த்தர் தம்முடைய சுவிசேஷத்தை வெளிப்படுத்தி, தீர்க்கதரிசிகள் மூலம் தம்முடைய சபையை ஒழுங்கமைத்தார். மீண்டும் மீண்டும், பெரும்பாலான மக்கள் அதை நிராகரித்தனர். சுவிசேஷத்திலிருந்து விலகிச் செல்லும் ஒரு முறையும் அதை மறுஸ்தாபிதம் செய்ய வேண்டிய அவசியமும் பழைய ஏற்பாட்டு காலங்களில் தொடங்கியது.
-
இரட்சகரின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு, அவரது அப்போஸ்தலர்கள் சிறிது காலம் சபையை வழிநடத்தினர். இறுதியில், அவர்கள் இறந்துவிட்டார்கள், ஆசாரியத்துவ அதிகாரம் இழக்கப்பட்டது, இரட்சகரின் போதனைகளிலிருந்து இன்னொரு வீழ்ச்சி ஏற்பட்டது. மக்கள் கோட்பாடுகளையும் நியமங்களையும் மாற்றினர்.
-
இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் பரலோக பிதாவால் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலம் மறுஸ்தாபிதம் செய்யப்பட்டது. பரலோக பிதாவும் இயேசு கிறிஸ்துவும் 1820 இல் ஜோசப்புக்குத் தோன்றினர். பின்னர் ஜோசப் ஸ்மித் ஆசாரியத்துவ அதிகாரத்தைப் பெற்றார், பூமியில் மீண்டும் இயேசு கிறிஸ்துவின் சபையை ஒழுங்கமைக்க வழிநடத்தப்பட்டார்.
இயேசு கிறிஸ்துவின் சபை வெறும் மற்றொரு மதம் அல்ல என்பதைக் கற்பியுங்கள். அது ஒரு அமெரிக்க சபையும் அல்ல. மாறாக, இது இயேசு கிறிஸ்துவின் “சுவிசேஷத்தின் பரிபூரணத்தை” மறுஸ்தாபிதம் செய்வதாகும். (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 1:23). அது மீண்டும் ஒருபோதும் பூமியிலிருந்து எடுக்கப்படாது.
மார்மன் புஸ்தகம்: இயேசு கிறிஸ்துவின் மற்றுமொரு ஏற்பாடு, இயேசு கிறிஸ்துவையும், உலக இரட்சகராக அவரது தெய்வீகப் பணியையும் சாட்சி பகர்கிறது. தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலம் இயேசு கிறிஸ்து தனது சுவிசேஷத்தையும் சபையையும் மறுஸ்தாபிதம் செய்தார் என்பதற்கு இது ஒரு வல்லமைவாய்ந்த சாட்சியாகும். மார்மன் புஸ்தகத்தைப் படிக்கவும், அதன் செய்தியைப் பற்றி ஜெபிக்கவும் மக்களை அழைத்து உதவுங்கள்.
மரோனி 10:3–5.-ல் உள்ள குறிப்பிடத்தக்க வாக்குறுதியை நம்புங்கள். மார்மன் புஸ்தகம் தேவனின் வார்த்தையா என்று தேவனிடம் உண்மையாகவும் உண்மையான நோக்கத்துடனும் கேட்க மக்களை ஊக்குவிக்கவும். உண்மையான நோக்கத்துடன் ஜெபிப்பது என்பது பரிசுத்த ஆவியின் சாட்சியிலிருந்து வரும் பதிலின்படி செயல்பட விருப்பமுள்ளதாக இருப்பதைக் குறிக்கிறது. கிறிஸ்து தமது சபையை மறுஸ்தாபிதம் செய்துதுள்ளார் என்ற ஒரு நபரின் விசுவாசத்தின் அடித்தளமாக அந்த சாட்சி அமைகிறது. நீங்கள் கற்பிப்பவர்கள் அந்த ஆவிக்குரிய உறுதிப்பாட்டைப் பெற உதவுங்கள்.
வேதப் படிப்பு
ஊழிய பணியில் மார்மன் புஸ்தகத்தை நீங்கள் எவ்வாறு பயன்படுத்த வேண்டும்?
-
மார்மன் புஸ்தகத்துக்கு முன்னுரை, கடைசி இரண்டு பத்திகள்
-
என் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள், அத்தியாயம் 5 பார்க்கவும்.
தனிப்பட்ட படிப்பு
சமூக ஊடகங்களில் அல்லது உள்ளூர் செய்தி நிறுவனத்திற்கு மறுஸ்தாபித செய்தியைப் பற்றி ஒரு பத்தி எழுதப் போகிறீர்கள் என்று கற்பனை செய்து பாருங்கள். உங்கள் படிப்பு குறிப்பிதழில், மையச் செய்தியை விவரிக்கும் ஒரு தலைப்பை எழுதுங்கள். பின்னர் இந்த செய்தியைப் பற்றிய உங்கள் எண்ணங்களையும் உணர்வுகளையும் பதிவு செய்யுங்கள். அதை நன்றாகப் புரிந்துகொள்வது உங்கள் வாழ்க்கை முறையையும் உங்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் பார்க்கும் விதத்தையும் எவ்வாறு மாற்றியுள்ளது என்பதைச் சேர்க்கவும்.
சபையை ஸ்தாபித்து கட்டமைத்தல்
இயேசு கிறிஸ்து தம்முடைய சபையை மறுஸ்தாபிதம் செய்தபோது, அதை “ஸ்தாபிக்கவும்” “[அதை] கட்டமைக்கவும்” தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்துக்கும் மற்றவர்களுக்கும் அவர் அறிவுறுத்தினார் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 31:7; 39:13). சாட்சியங்களைப் பெற்ற மக்கள் ஞானஸ்நானம் பெற்று திடப்படுத்தப்பட்டு, தங்கள் உடன்படிக்கைகளைக் கைக்கொண்டு, ஆலயத்திற்குச் செல்லத் தயாராகி, தங்கள் தொகுதி அல்லது கிளையைப் பலப்படுத்த உதவும்போது, சபை ஸ்தாபிக்கப்பட்டு கட்டமைக்கப்படுகிறது.
ஒரு ஊழியக்காரராக, நீங்கள் இரட்சகரின் சபையை ஸ்தாபிக்கவும் கட்டமைக்கவும் உதவுகிறீர்கள். இதை நீங்கள் செய்ய பல வழிகள் உள்ளன. அன்பு, பகிர்வு மற்றும் அழைப்பு ஆகிய கொள்கைகள் மூலம் உறுப்பினர்கள் சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்ளும்போது நீங்கள் அவர்களுக்கு ஆதரவளிக்கலாம். (பொது கையேடு, 23.1 பார்க்கவும்). மக்கள் ஞானஸ்நானம் பெற்று அவர்களின் விசுவாசத்தில் வளர நீங்கள் உதவலாம். புதிய உறுப்பினர்கள் தங்கள் புதிய வாழ்க்கைக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ளவும், ஆவிக்குரிய விதமாக தொடர்ந்து வளரவும் நீங்கள் உதவலாம். திரும்பி வரும் உறுப்பினர்கள் இயேசு கிறிஸ்துவில் தங்கள் விசுவாசத்தை வலுப்படுத்தவும் நீங்கள் உதவலாம்.
புதிய மற்றும் திரும்பி வரும் உறுப்பினர்கள் தங்கள் வாழ்க்கையில் சுவிசேஷம் செயல்படுவதை அனுபவிக்கும்போது சாட்சியத்திலும் விசுவாசத்திலும் வளர்கிறார்கள். இதைச் செயல்படுத்த உதவ, அவர்கள் முக்கியமாக:
-
சபை உறுப்பினர்களாக இருப்பவர்களை நண்பர்களாக பெற வேண்டும்.
-
சபையில் ஒரு பொறுப்பு வழங்கப்பட வேண்டும்.
-
தேவனுடைய வார்த்தையால் போஷிக்கப்பட வேண்டும்.
(See Gordon B. Hinckley, “Converts and Young Men,” Ensign, May 1997, 47.)
ஊழியக்காரர்கள், உள்ளூர் தலைவர்கள் மற்றும் சபையின் பிற உறுப்பினர்கள் புதிய மற்றும் திரும்பி வரும் உறுப்பினர்களை வளர்த்து பலப்படுத்தும் வாய்ப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த சேவை “அவர்களை நல்வழியில் வைத்திருக்க” உதவுகிறது (மரோனி 6:4).
நன்மைசெய்து சுற்றித் திரியுங்கள்.
அவரது பூலோக ஊழியத்தின் போது, இரட்சகர் மற்றவர்களுக்கு சேவை செய்தார். அவர் “நன்மை செய்கிறவராகவும்” “சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பவராகவும்” சுற்றித்திரிந்தார் (அப்போஸ்தலர் 10:38; மத்தேயு 4:23). நீங்கள் அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றும்போது, நீங்கள் சேவை செய்யக்கூடிய மக்களைக் கண்டுபிடிப்பீர்கள், அவர்கள் உங்களை ஏற்றுக்கொள்வார்கள்.
சேவையின் மூலம், தேவனை நேசிக்கவும், உங்கள் அண்டை வீட்டாரை நேசிக்கவும் இரண்டு பெரிய கட்டளைகளை நீங்கள் நிறைவேற்றுகிறீர்கள் (மத்தேயு 22:36–40; 25:40; மோசியா 2:17 ஐப் பார்க்கவும்). சேவையின் மூலம், நீங்களும் மற்றவர்களும் வல்லமைவாய்ந்த, ஊக்கமளிக்கும் வகையில் ஒன்று சேரலாம்.
ஒரு ஊழியக்காரராக, நீங்கள் ஒவ்வொரு வாரமும் திட்டமிட்ட சேவையைச் செய்கிறீர்கள் (தகவல் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு ஊழியர் தரநிலைகள், 2.7 மற்றும் 7.2 ஐப் பார்க்கவும்). உங்கள் ஊழியத் தலைவரின் வழிகாட்டுதலின் கீழ், JustServe (அது அங்கீகரிக்கப்பட்ட இடத்தில்) மற்றும் சபையின் மனிதாபிமான மற்றும் பேரிடர் மீட்பு முயற்சிகள் மூலம் சமூகத்தில் சேவை செய்வதற்கான வாய்ப்புகளை நீங்கள் காணலாம்.
ஒவ்வொரு நாளும், ஜெபித்து, நன்மை செய்ய திட்டமிடப்படாத வாய்ப்புகளைத் தேடுங்கள். நீங்கள் வழங்கக்கூடிய சிறிய தயவுச் செயல்களுக்கான சந்தர்ப்பங்களை அடையாளம் காண ஆவியானவருக்குச் செவிசாய்க்கவும்.
“நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? உங்களை மறந்து இந்த மகத்தான நோக்கத்தில் முழுவதுமாக ஈடுபடுங்கள். மக்களுக்கு உதவ உங்கள் முயற்சிகளை வழங்குங்கள். … உயரமாக நில்லுங்கள், தளர்ந்த முழங்கால்களைக் கொண்டவர்களைத் தூக்குங்கள், தொங்கும் கைகளைத் தூக்கிப் பிடித்துக் கொள்ளுங்கள். இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின்படி வாழுங்கள்.” (Gordon B. Hinckley, Teachings of Presidents of the Church: Gordon B. Hinckley [2016], 209).
வேதப் படிப்பு
இரட்சகரின் வாழ்க்கையில் சேவையின் பங்கு என்ன?
-
மத்தேயு 8:1–4; 9:1–8
-
மாற்கு 1:21–28
-
யோவான் 4:46–54
அம்மோன் மற்றும் ஆரோனின் ஊழியங்களில் சேவையின் பங்கு என்ன?
உங்களை என்ன செய்ய கர்த்தர் அழைத்தார்?
வெற்றிகரமான ஊழியக்காரர்
ஒரு ஊழியக்காரராக உங்கள் வெற்றி முதன்மையாக, மனம் மாறியவர்களைக் கண்டுபிடித்து, கற்பித்து, ஞானஸ்நானம் கொடுத்து, திடப்படுத்தி, அவர்கள் கிறிஸ்துவின் உண்மையுள்ள சீஷர்களாகவும், அவருடைய சபையின் உறுப்பினர்களாகவும் மாற உதவுவதற்கான உங்கள் விருப்பம் மற்றும் ஒப்புக்கொடுத்தலால் தீர்மானிக்கப்படுகிறது (ஆல்மா 41:3 ஐப் பார்க்கவும்).
நீங்கள் எத்தனை பேருக்குக் கற்பிக்கிறீர்கள் அல்லது ஞானஸ்நானம் பெற உதவுகிறீர்கள் என்பதைப் பொறுத்து உங்கள் வெற்றி தீர்மானிக்கப்படுவதில்லை. தலைமைப் பதவிகளை வகிப்பதன் மூலமும் அது தீர்மானிக்கப்படுவதில்லை.
உங்கள் வெற்றி, மற்றவர்கள் உங்களுக்கு, உங்கள் அழைப்புகளுக்கு எப்படி பதிலளிக்கிறார்கள் அல்லது உங்கள் உண்மையான தயவின் செயல்களுக்கு எப்படிப் பதிலளிக்கிறார்கள் என்பதைப் பொறுத்தது அல்ல. சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்ளலாமா வேண்டாமா என்பதைத் தேர்வுசெய்ய மக்களுக்கு சுயாதீனம் உள்ளது. அவர்களை ஆசீர்வதிக்கும் ஒரு கற்றறிந்த தேர்வை அவர்கள் செய்ய, தெளிவாகவும் வல்லமை வாய்ந்ததாகவும் கற்பிப்பதே உங்கள் பொறுப்பு.
மத்தேயு 25:14–28-ல் உள்ள தாலந்துகளைப் பற்றிய இரட்சகரின் உவமையை நினைத்துப் பாருங்கள். கர்த்தரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எஜமான், அவனுடைய உண்மையுள்ள ஊழியர்கள் இருவரையும் அவர்களின் காணிக்கைகளின் அளவு வேறுபட்டிருந்தாலும் பாராட்டினான் (மத்தேயு 25:21, 23 ஐப் பார்க்கவும்). அவர்களுக்குக் கொடுக்கப்பட்டதை அவர்கள் பெரிதாகக் கருதியதால், “உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி” என அவர்களை அழைத்ததன் மூலம், அவன் இருவருக்கும் ஒரே வெகுமதியையும் வழங்கினான்.
தேவன் தனது சேவையில் பயன்படுத்த உங்களுக்கு தாலந்துகளையும் வரங்களையும் கொடுத்துள்ளார். உங்கள் திறமைகளும் வரங்களும் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவை. இவை அனைத்தும் முக்கியமானவை என்பதை அங்கீகரிக்கவும், குறைவாகக் காணக்கூடியவை உட்பட. உங்கள் திறமைகளையும் பரிசுகளையும் அவருக்கு அர்ப்பணிக்கும்போது, அவர் அவற்றைப் சிறப்பாக்கி, நீங்கள் வழங்குவதைக் கொண்டு அற்புதங்களைச் செய்வார்.
மற்ற ஊழியக்காரர்களுடன் உங்களை ஒப்பிட்டுப் பார்ப்பதையும், உங்கள் முயற்சிகளின் வெளிப்படை முடிவுகளை அவர்களுடைய முயற்சிகளுடன் ஒப்பிடுவதையும் தவிர்க்கவும். ஒப்பிடுவது பொதுவாக மனச்சோர்வு அல்லது பெருமை போன்ற எதிர்மறை விளைவுகளுக்கு வழிவகுக்கிறது. ஒப்பிடுவதும் பெரும்பாலும் தவறாக வழிநடத்துகிறது. கர்த்தர் விரும்புவது உங்களுடைய சொந்த சிறந்த முயற்சியைத்தான்—அதாவது “உங்கள் முழு இருதயத்தோடும், ஊக்கத்தோடும், மனதோடும், பலத்தோடும் அவரைச் சேவிக்க” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 4:2; முக்கியத்துவம் சேர்க்கப்பட்டுள்ளது).
மக்கள் இன்னும் சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் நீங்கள் வருத்தப்படலாம். சில நேரங்களில் நீங்கள் அதைரியமடையக்கூடும். வேதங்களில் உள்ள பெரிய ஊழியக்காரர்களும் தீர்க்கதரிசிகளும் கூட சில சமயங்களில் சோர்வை உணர்ந்திருக்கிறார்கள் (2 நேபி 4:17–19; ஆல்மா 26:27 ஐப் பார்க்கவும்). இதுபோன்ற சமயங்களில், கர்த்தரிடம் திரும்புவதன் மூலமும், அவர் மீது உங்கள் நம்பிக்கையை வைப்பதன் மூலமும், பலத்திற்காக ஜெபிப்பதன் மூலமும், அவர் உங்களுக்காகச் செய்த நல்ல காரியங்களை நினைவில் கொள்வதன் மூலமும் நேபியின் முன்மாதிரியைப் பின்பற்றுங்கள் (2 நேபி 4:16–35 ஐப் பார்க்கவும்).
கடினமான காலங்களில் நீங்கள் கர்த்தரிடம் திரும்பும்போது, அவர் வாக்குறுதி அளித்துள்ளார், “நான் உன்னைப் பலப்படுத்தி உனக்கு சகாயம் பண்ணுவேன்; ஆம், நான் உன்னைத் தாங்குவேன்” (ஏசாயா 41:10). கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பதன் மூலம், உங்கள் முயற்சிகள் குறித்து சமாதானமும் உறுதியையும் பெறலாம். விசுவாசம் உங்களை முன்னோக்கி நகர்த்தி, நீதியான விருப்பங்களில் தொடர உதவும்.
கிறிஸ்துவுடனான உங்கள் ஒப்புக்கொடுத்தலிலும், உங்கள் ஊழிய நோக்கத்திலும் கவனம் செலுத்துங்கள் —வெளிப்புற விளைவுகளில் அல்ல. இந்த முடிவுகள் பெரும்பாலும் உடனடியாகத் தெரிவதில்லை. அதே நேரத்தில், நீங்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் பொருட்படுத்தாமல் உங்கள் எதிர்பார்ப்புகளை அதிகமாக வைத்திருங்கள். அதிக எதிர்பார்ப்புகள் உங்கள் செயல்திறன், உங்கள் விருப்பம் மற்றும் ஆவியைப் பின்பற்றும் திறனை அதிகரிக்கும்.
கர்த்தருக்கான உங்கள் ஒப்புக்கொடுத்தலையும், வெற்றிகரமான ஊழியக்காரராக இருப்பதற்கான உங்கள் முயற்சியையும் மதிப்பிடுவதற்கான சில வழிகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.
-
இயேசு கிறிஸ்துவின் சீஷராக இருக்க ஆர்வத்துடன் நாடுங்கள், அவரைப் பற்றிக் கற்றுக்கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறுங்கள் (யோவான் 8:31; 2 நேபி 28:30 ஐப் பார்க்கவும்).
-
கிறிஸ்துவைப் போன்ற பண்புகளைத் தேடுங்கள் (2 பேதுரு 1:2–9; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 4:5–6 ஐப் பார்க்கவும்).
-
மக்களை உண்மையாக நேசித்து, ஆத்துமாக்களை கிறிஸ்துவிடம் கொண்டுவர ஒவ்வொரு நாளும் உங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுங்கள் (1 கொரிந்தியர் 13; மரோனி 7:45–48 ஐப் பார்க்கவும்).
-
இரட்சகர் மீது விசுவாசத்தை வளர்க்கும் உறுதிமொழிகளைச் செய்து அவற்றைக் கடைப்பிடிக்க மக்களை அழைத்து உதவுங்கள்.
-
வேதங்களைப் படித்து, நன்றி தெரிவிக்கவும் தெய்வீக உதவி கேட்கவும் ஊக்கமாக ஜெபிக்கவும் (யோவான் 5:39; 2 நேபி 32:3; ஏனோஸ் 1:4; ஆல்மா 37:37; கோட்பாடு மற்றும் உடன்படிக்கைகள் 26:1 ஐப் பார்க்கவும்).
-
தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியுங்கள், ஊழியர் தரநிலைகளைக் கடைப்பிடிக்கவும் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 35:24 ஐப் பார்க்கவும்).
-
எங்கு செல்ல வேண்டும், என்ன செய்ய வேண்டும், என்ன சொல்ல வேண்டும் என்பதில் ஆவியானவர் உங்களை வழிநடத்தும் வகையில் வாழுங்கள் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 18:18; 42:14 ஐப் பார்க்கவும்).
-
ஜெபத்துடன் இலக்குகளை நிர்ணயித்து, திட்டங்களை வகுத்து, அவற்றை நிறைவேற்ற உழைக்கவும் (லூக்கா 14:28; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 88:119 ஐப் பார்க்கவும்).
-
நீங்கள் பணிக்கப்பட்ட இடத்தில் தொகுதி அல்லது கிளையைக் கட்டியெழுப்பி பலப்படுத்துங்கள் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 18:5 ஐப் பார்க்கவும்).
-
மக்கள் உங்கள் செய்தியை ஏற்றுக்கொண்டாலும் இல்லாவிட்டாலும், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நன்மை செய்து அவர்களுக்கு சேவை செய்யுங்கள் (அப்போஸ்தலர் 10:38 ஐப் பார்க்கவும்).
நீங்கள் உங்களால் முடிந்ததைச் செய்த பிறகும், உங்களுக்கு இன்னும் ஏமாற்றங்கள் இருக்கலாம், ஆனால் நீங்கள் உங்களைப் பற்றி ஏமாற்றமடைய மாட்டீர்கள். உங்கள் மூலம் ஆவி செயல்படுவதை நீங்கள் உணரும்போது, கர்த்தர் மகிழ்ச்சியடைகிறார் என்பதை நீங்கள் உறுதியாக உணரலாம்.
வேதப் படிப்பு
கர்த்தருடைய ஊழியர்கள் பணியைப் பற்றி எப்படி உணருகிறார்கள்? கர்த்தருடைய ஊழியர்கள் தாங்கள் சேவை செய்பவர்களில் எவ்வாறு செல்வாக்கு ஏற்படுத்துகிறார்கள்? பணியைப் பற்றி நீங்கள் எப்படி உணருகிறீர்கள்?
தனிப்பட்ட படிப்பு
-
ஏலமன் 10:1–5 மற்றும் 3 நேபி 7:17–18 வாசிக்கவும். இந்த ஊழியக்காரர்கள் மற்றும் அவர்களின் சேவையைப் பற்றி கர்த்தர் எப்படி உணர்ந்தார்?
-
அபிநாதி மற்றும் அம்மோனின் ஊழிய முயற்சிகளைப் பற்றி சிந்தியுங்கள் (மோசியா 11–18; ஆல்மா 17–20; 23–24 ஐப் பார்க்கவும்). இரு ஊழியக்காரர்களின் முயற்சிகளின் உடனடி பலன்கள் வேறுபட்டிருந்தாலும், ஏன் அவர்கள் இருவரும் கர்த்தரால் ஏற்றுக்கொள்ளப்பட்டனர்?
-
நீங்கள் கற்றுக்கொண்டதை உங்கள் படிப்பு குறிப்பிதழில் பதிவு செய்யுங்கள்.
படிப்பு மற்றும் பயன்படுத்துவதற்கான யோசனைகள்
தனிப்பட்ட படிப்பு
-
எச்சரிக்கைக் குரலை உயர்த்துவது என்றால் என்ன என்பதைக் கவனியுங்கள் (யாக்கோபு 3:12; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 1:4; 38:41; 63:57–58; 88:81; 112:5; எசேக்கியேல் 3:17–21; 33:1–12 பார்க்கவும்). அதன் அர்த்தம் என்ன, அதை நீங்கள் எப்படிச் செய்யலாம் என்பதை உங்கள் சொந்த வார்த்தைகளில் எழுதுங்கள்.
-
ஜோசப் ஸ்மித் மற்றும் மறுஸ்தாபிதம் பற்றிய உங்கள் சாட்சியத்தை வலுப்படுத்திய உங்கள் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளைக் கவனியுங்கள். உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்.
தோழமை படிப்பு மற்றும் தோழமை பரிமாற்றம்
-
பின்வரும் சிறந்த ஊழியக்காரர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து, பட்டியலிடப்பட்டுள்ள வேதவாக்கியங்களை வாசியுங்கள். நீங்கள் படிக்கும்போது, இந்த ஊழியக்காரர் எவ்வாறு (1) தனது அழைப்பைப் புரிந்துகொண்டு அதற்கு தன்னை அர்ப்பணித்தார், (2) தனது மனப்பான்மையையும் பணிக்கான விருப்பத்தையும் வெளிப்படுத்தினார், (3) மற்றவர்கள் சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்ள உதவினார் என்பதைப் பற்றி விவாதிக்கவும்.
-
ஆல்மா (மோசியா 18)
-
அம்மோன், ஆரோன், மற்றும் மோசியாவின் மற்ற குமாரர்கள் (ஆல்மா 17–22; 23:1–6; 26)
-
நேபியும் லேகியும் (ஏலமன் 5)
-
பேதுரு (அப்போஸ்தலர் 2)
-
பவுல் (அப்போஸ்தலர் 16)
-
-
சுவிசேஷத்தின் மறுஸ்தாபிதம் பற்றிய இரண்டு பாடல்களைத் தேர்ந்தெடுக்கவும். பாடல்களை வாசியுங்கள் அல்லது பாடுங்கள். வார்த்தைகளின் அர்த்தத்தைப் பற்றி கலந்துரையாடவும்.
சேகர ஆலோசனைக்குழு, மணடல மாநாடுகள், ஊழியத் தலைமை ஆலோசனைக்குழு
-
சமீபத்தில் மதம் மாறிய இரண்டு அல்லது மூன்று பேரை தங்கள் மனம் மாறிய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள அழைக்கவும். ஊழியக்காரர்களைப் பற்றி அவர்கள் எப்படி உணர்ந்தார்கள்? ஊழியக்காரர்கள் கற்பித்ததைப் பற்றி அவர்கள் எப்படி உணர்ந்தார்கள்? ஒப்புக்கொடுத்தல்களைக் காத்துக்கொள்ள அவர்களுக்கு எது உதவியது? அவர்களின் மனமாற்றத்தில் மிகவும் வலுவாக செல்வாக்கு செலுத்தியது எது?
-
கூட்டத்திற்கு பல நாட்களுக்கு முன்பு, அத்தியாயத்தின் தொடக்கத்தில் உள்ள “இதைக் கருத்தில் கொள்ளுங்கள்” என்பதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளை சிந்திக்க பல ஊழியக்காரர்களை பணிக்கவும். ஒவ்வொரு ஊழியக்காரரிடமும், பணிக்கப்பட்ட கேள்வியில் இரண்டு முதல் மூன்று நிமிட பேச்சைத் தயாரிக்கச் சொல்லுங்கள். மாவட்ட ஆலோசனைக்குழு அல்லது மண்டல மாநாட்டின் போது, ஊழியக்காரர்களை தங்கள் பேச்சுகளை வழங்க அழைக்கவும். செய்திகளுக்குப் பிறகு, கற்றுக்கொண்டவற்றையும், அதை ஊழியப்பணியில் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதையும் விவாதிக்கவும்.
-
ஊழியக்காரர்களை நான்கு குழுக்களாகப் பிரிக்கவும். தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலம் மறுஸ்தாபிதம் செய்யப்பட்டு வெளிப்படுத்தப்பட்ட பல சத்தியங்கள், உடன்படிக்கைகள் மற்றும் நியமங்களை ஒவ்வொரு குழுவையும் முடிந்தவரை பட்டியலிடச் சொல்லுங்கள். ஒவ்வொரு குழுவும் தங்கள் பட்டியல்களைப் பகிர்ந்து கொள்ளச் சொல்லுங்கள். மறுஸ்தாபிதம் மூலம் வெளிப்படுத்தப்பட்ட எந்த சத்தியங்களும் தங்கள் வாழ்க்கையை எவ்வாறு பாதித்தன என்பதைப் பகிர்ந்து கொள்ள ஊழியக்காரர்களை அழைக்கவும்.
-
ஒரு வெற்றிகரமான ஊழியக்காரராக ஆகுவதன் அர்த்தம் என்ன என்பதை விவாதிக்கவும். குறிப்பிட்ட உதாரணங்களை கொடுப்பதற்கு ஊழியக்காரர்களை அழையுங்கள்.
ஊழியத் தலைவர்கள் மற்றும் ஊழிய ஆலோசகர்கள்
-
நேர்காணல்களின் போது அல்லது ஊழியக்கரர்களுடனான உரையாடலின் போது, உங்களுடன் பகிர்ந்து கொள்ளும்படி அவ்வப்போது அவர்களிடம் சொல்லுங்கள்:
-
இயேசு கிறிஸ்துவைப்பற்றிய அவர்களுடைய சாட்சியம்
-
மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷம் மற்றும் ஜோசப் ஸ்மித்தின் ஊழியம் பற்றிய அவர்களின் சாட்சியம்.
-
மார்மன் புஸ்தகத்தைப்பற்றிய அவர்களின் சாட்சியம்.
-
ஒரு ஊழியக்காரராக அவர்களின் நோக்கம் பற்றிய அவர்களின் எண்ணங்கள்.
-
-
ஊழியக்காரர்கள் தங்கள் பணியின் சில நோக்கங்கள் என்னவென்று உணர்கிறார்களோ அதை அவர்களின் படிப்பு குறிப்பிதழில் பதிவு செய்ய அழைக்கவும். ஒரு நேர்காணலின் போது அல்லது உரையாடலின் போது, அவர்கள் எழுதியதைப் பகிர்ந்து கொள்ளச் சொல்லுங்கள்.
-
புதிய உறுப்பினர்களுக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்புங்கள்.