“அக்டோபர் 26–நவம்பர் 1. “நான் அவர்கள் துக்கத்தைச் சந்தோஷமாக மாற்றுவேன்”: எரேமியா 31–33; 36-39; புலம்பல் 1; 3” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: பழைய ஏற்பாடு 2026 (2026)
“அக்டோபர் 26–நவம்பர் 1. ‘நான் அவர்கள் துக்கத்தைச் சந்தோஷமாக மாற்றுவேன்,” என்னைப் பின்பற்றி வாருங்கள்: பழைய ஏற்பாடு 2026
எருசலேமின் அழிவைப்பற்றி எரேமியா புலம்புகிறான் ரெம்ப்ராண்ட் வான் ரிஜ்ன்
அக்டோபர் 26–நவம்பர் 1: “நான் அவர்கள் துக்கத்தைச் சந்தோஷமாக மாற்றுவேன்”
எரேமியா 31–33; 36–39; புலம்பல்1; 3
எரேமியாவை ஒரு தீர்க்கதரிசி என்று கர்த்தர் முதன்முதலில் அழைத்தபோது, அவனுடைய ஊழியம் “பிடுங்கவும், இடிக்கவும்,” ( எரேமியா 1:10 ) என்று சொன்னார். எருசலேமில் பிடுங்கவும், இடிக்கவும் துன்மார்க்கம் மலிந்து இருந்தது. ஆனால் இது எரேமியாவின் ஊழியத்தின் ஒரு பகுதி மட்டுமே, அவன் “கட்டவும் நாட்டவும்” அழைக்கப்பட்டான் (எரேமியா 1:10). உடன்படிக்கை ஜனங்களின் கலகத்தால் எஞ்சியிருக்கும் பாழடைந்த இடிபாடுகளில் எதைக் கட்டவோ அல்லது நடவோ கூடும்? இதேபோன்று பாவமும் துன்பமும் நம் வாழ்க்கையைப் பாழாக்கிவிட்ட நிலையில், நாம் எப்படி மீண்டும் கட்டியெழுப்ப முடியும்? வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட மேசியாவாகிய “நீதியின் கிளையில்” ( எரேமியா 33:15) பதில் இருக்கிறது. அவர் அர்ப்பணிப்பின் வெளித்தோற்றம் மாத்திரமல்லாமல் முழுவதுமாய் தேவைப்படுகிற ஓர் புதிய உடன்படிக்கையைக் (எரேமியா 31:31) கொண்டுவருகிறார். அவருடைய நியாயப்பிரமாணம் “[நம்முடைய] உள்ளத்தில்” இருக்க வேண்டும், “[நம்முடைய] இருதயங்களில்” எழுதப்பட வேண்டும். கர்த்தர் “[நமது] தேவனாக” இருப்பதற்கும், நாம் “[அவருடைய] ஜனமாக” இருப்பதற்கும் உண்மையில் இதுதான் அர்த்தம்( எரேமியா 31:33 ). இது ஒரு வாழ்நாள் செயல்முறை, நாம் இன்னும் தவறுகளைச் செய்வோம், அவ்வப்போது துக்கம் அனுசரிக்க காரணம் இருக்கிறது. நாம் அவ்வாறு செய்யும்போது, “நான் அவர்களின் துக்கத்தை சந்தோஷமாக மாற்றுவேன்” (எரேமியா 31:13) என்று கர்த்தர் வாக்குத்தத்தம்பண்ணுகிறார்.
புலம்பலைப்பற்றிய மேலோட்டமான பார்வைக்கு, “Lamentations, Bookof” in the Guide to the Scriptures பார்க்கவும்.
வீட்டிலும் சபையிலும் கற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகள்
எரேமியா 31; 33
கர்த்தர் தம்முடைய உடன்படிக்கையின் ஜனத்தை சிறையிருப்பிலிருந்து வெளியே கொண்டுவருவார்.
எரேமியா 31; 33இல் இஸ்ரவேலர் சிறையிருப்பிலே தாங்கள் அனுபவித்த “புலம்பலையும் கசப்பான அழுகையையும்” (எரேமியா 31:15) கர்த்தர் அங்கீகரித்தார். இருப்பினும், அவர் ஆறுதலும் நம்பிக்கையுமான வார்த்தைகளையும் அருளினார். இந்த அதிகாரங்களை நீங்கள் வாசிக்கும்போது அவைகளை தேடவும். உங்களுக்கு என்னென்ன வாக்குத்தத்தங்கள் பொருந்தும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
எரேமியா 31:31–34; 32:37 –42
“அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்களின் தேவனாயிருப்பேன்.”
இஸ்ரவேலர் உடன்படிக்கையை முறித்திருந்தாலும், கர்த்தர் தம்முடைய ஜனங்களுடன் மீண்டும் ஒரு “புதிய” மற்றும் “நித்திய உடன்படிக்கையை” ஏற்படுத்துவார் என்று எரேமியா தீர்க்கதரிசனம் உரைத்தான் (எரேமியா 31:31; 32:40). அந்த உடன்படிக்கை என்ன? வேத வழிகாட்டியில் உள்கருத்துக்களைத் தேட எண்ணலாம் “New and Everlasting Covenant,” Gospel Library.
நீங்கள் எரேமியா 31:31–34; 32:37–42ஐ வாசிக்கும்போது சிந்திக்கவேண்டியவை:
-
நீங்கள் தேவனின் உடன்படிக்கை ஜனங்களில் ஓர் அங்கமாய் இருப்பதன் அர்த்தம் என்னவென்று சிந்தியுங்கள்.
-
அவருடைய நியாயப்பிரமாணம் உங்கள் இருதயத்தில் எழுதப்பட்டிருக்கிறது என்பதின் அர்த்தம் என்ன?
-
நீங்கள் கர்த்தருடன் உடன்படிக்கை செய்யும் போது அவர் என்ன வாக்குத்தத்தங்களைக் கொடுக்கிறார்.
-
கர்த்தருடனான உங்கள் உடன்படிக்கை உறவு உங்களை எப்படி மாற்றுகிறது.
நீங்கள் பரிசுத்த நியமங்களில் பங்குகொள்ளும்போது தேவனுக்கு என்னென்ன வாக்குறுதிகளை கொடுத்தீர்கள்? உங்கள் வாழ்க்கையில் இந்த வாக்குத்தத்தங்களை அவர் எப்படி நிறைவேற்றியிருக்கிறார்?
டேவிட் ஏ. பெட்னார், ““நீ என்னில் வாசம் செய்வாய், நான் உன்னிலிருப்பேன்; ஆகவே என்னோடு நீ சஞ்சரிப்பாய்”,” லியஹோனா, மே 2023, 123–26 ஐயும் பார்க்கவும்.
எரேமியா 36
என்னை தீமையிலிருந்து விலக்கிவிட வேதவாக்கியங்களுக்கு வல்லமை உண்டு.
எரேமியா 36:2–3இன் படி, எரேமியாவின் தீர்க்கதரிசனங்களைப் பதிவு செய்யும்படி கர்த்தர் ஏன் கட்டளையிட்டார்? எரேமியா 36இல் நீங்கள் வாசிக்கும்போது, இந்த தீர்க்கதரிசனங்களைப்பற்றி பின்வரும் ஜனங்கள் எப்படி உணர்ந்தார்கள் என்பதைக் கருத்தில் கொள்ளவும்:
-
கர்த்தர் (வசனங்கள் 1-3, 27-31 பார்க்கவும்)
-
எரேமியா (வசனங்கள் 4–7, 32 பார்க்கவும்)
-
பாருக் (வசனங்கள் 4, 8–10, 14–18 பார்க்கவும்)
-
யெகுதியும் யேயாக்கிம் ராஜாவும் (வசனங்கள் 20–26 பார்க்கவும்)
-
எல்நாத்தானும், தெலாயாவும், கெமரியாவும் (வசனங்கள் 25 பார்க்கவும்)
வேதவாக்கியங்களை பற்றி நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்று சிந்தியுங்கள். தீமையிலிருந்து விலகிச் செல்ல அவை எவ்வாறு உங்களுக்கு உதவியுள்ளன?
எரேமியா 37-39
தேவனுடைய தீர்க்கதரிசிகளைப் பின்பற்றுவதில் உறுதியாக இருங்கள்.
எரேமியா 37:1–3, 15–21; 38:1–6, 14–28இல் எரேமியாவை கர்த்தரின் உண்மையான தீர்க்கதரிசி என்று சிதேக்கியா ராஜா நம்பினார் என்பதற்கு என்ன ஆதாரம்? சிதேக்கியா நம்பவில்லை என்பதற்கு என்ன ஆதாரத்தை நீங்கள் பார்க்கிறீர்கள்? இந்த ஒப்பீட்டிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? நீங்கள் எரேமியா 39ஐப் படிக்கும்போது, சிதேக்கியாவும் அவருடைய ஜனமும் தீர்க்கதரிசியைப் பின்பற்றி, கர்த்தருடைய கட்டளைகளைக் கைக்கொண்டிருந்திருப்பார்களெனில், அது எத்தகைய வித்தியாசத்தைப் ஏற்படுத்தியிருக்கக்கூடும் என்று சிந்தித்துப் பாருங்கள். (1 நேபி 1–2இல் உள்ள லேகியின் குடும்பத்துக்கு நடந்ததை சிதேக்கியாவுக்கு நடந்ததுடன் ஒப்பிடவும்.)
எரேமியா 38:6-13; 39:15 -18
நான் நம்புகிறவற்றுக்காக என்னால் தைரியமாக நிற்க முடியும்.
எரேமியாவின் தீர்க்கதரிசனங்கள் தங்கள் படைவீரர்களின் போரிடும் ஆர்வத்தை குறைப்பதாக இராஜாவின் பிரதானிகள் உணர்ந்தார்கள். அதனால் அவர்கள் எரேமியாவை ஒரு அசுத்தமான துரவுக்குள் தள்ளினார்கள் (எரேமியா 38:1–4 பார்க்கவும்). எரேமியா 38:6–13இல், எதியோப்பியனான எபெத்மெலேக்கின் பதிலில் உங்களைக் கவர்ந்தது எது? எரேமியா 39: 15–18இல் எபெத்மெலேக்கிற்கு கர்த்தர் கொடுத்த ஆசீர்வாதத்தையும் கவனியுங்கள்.
அவனுடைய எடுத்துக்காட்டை நாம் எப்படி பின்பற்ற முடியும்?
எரேமியாவின் கூக்குரல்
புலம்பல் 1; 3
பாவத்தின் காரணமாக நாம் அனுபவிக்கும் துக்கத்திலிருந்து கர்த்தர் விடுவிக்க முடியும்.
புலம்பல் புத்தகம், எருசலேமும் அதன் ஆலயமும் அழிக்கப்பட்ட பின்னர் எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பாகும். அவை பாதுகாக்கப்படுவது ஏன் முக்கியம் என்று நினைக்கிறீர்கள்? புலம்பல் 1 மற்றும் 3 இல் உள்ள உருவகங்கள் இஸ்ரவேல் உணர்ந்த பெரும் துயரத்தைப் பற்றி புரிந்துகொள்ள உதவுவதைக் கவனியுங்கள். கிறிஸ்துவில் என்ன நம்பிக்கைச் செய்திகளை நீங்கள் காண்கிறீர்கள்? (விசேஷமாக புலம்பல் 3:20–33ஐ பார்க்கவும்; மத்தேயு 5:4; யாக்கோபு 4:8–10; ஆல்மா 36:17–20 ஐயும் பார்க்கவும்).
தலைவர் எம். ரசல் பலார்ட் சிலருக்கு நம்பிக்கையை இழக்கச் செய்யும் பல சூழ்நிலைகளைக் குறிப்பிட்டார், மேலும் அவர் நம்பிக்கையை எங்கு தேடுவது என்பது குறித்து ஆலோசனை வழங்கினார்:
“நம்மில் சிலர் விரக்தியும், ஏமாற்றமும் துயரமும் நிறைந்ததாக நம் வாழ்க்கையைக் காணலாம். உலகில் நிலவும் குழப்பங்களைச் சமாளிக்க பலர் உதவியற்றவர்களாக உணர்கிறார்கள் மற்றவர்கள், பலவீனமான விழுமியங்களும் தார்மீக தரங்களின் வீழ்ச்சிகளும் கொண்ட வேகமான பொங்கி எழும் நீரோட்டத்தில் கீழ்நோக்கி அடித்துச்செல்லப்படும் குடும்ப உறுப்பினர்களைக் குறித்து வேதனைப்படுகிறார்கள். உலகின் அக்கிரமத்தையும் கொடுமையையும் சரி செய்ய முடியாதது என்று ஏற்றுக்கொள்ள பலர் தங்களைத் தாங்களே தளர்த்தி இருக்கிறார்கள். அவர்கள் நம்பிக்கையை கைவிட்டுள்ளனர். …
“… நம்மில் சிலர் பாவத்தினாலும் மீறுதலின் காரணமாகவும் எல்லா நம்பிக்கையையும் இழந்திருக்கலாம் ஒருவர் உலகின் வழிகளில் மிகவும் ஆழமாக மூழ்கிவிடுவதால் தான் எந்த வழியையும் காணமுடியாமல் எல்லா நம்பிக்கையையும் இழந்தது போகலாம். சத்துருவின் இந்த வலையில் வீழ்ந்த அனைவருக்கும் எனது வேண்டுகோள் என்னவெனில் ஒருபோதும் கைவிடாதே என்பதாகும். எவ்வளவு மோசமாக விஷயங்கள் தோன்றினாலும், எவ்வளவு மோசமானதாக மாறிப்போனாலும், நீங்கள் எப்போதும் நம்பிக்கையை பெற்றிருக்கலாம், தயவுசெய்து என்னை நம்புங்கள். எப்பொழுதும்” (“The Joy of Hope Fulfilled,” Ensign, Nov. 1992, 31–32).
“Come, Ye Disconsolate,” Hymns, no. 115ஐயும் பார்க்கவும்.
தங்களுடைய கற்றுக்கொள்ளுதலுக்கான பொறுப்பை ஏற்க மற்றவர்களுக்கு உதவுங்கள். சில சமயங்களில் கற்பிப்பதற்கான எளிய வழி, கற்பவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்று நாம் நினைத்துவைத்திருப்பதை அவர்களிடம் சொல்வதாகும். ஆயினும் எளிய வழி எப்போதும் சிறந்த வழி ஆகிடாது. இருப்பினும், மூப்பர் டேவிட் ஏ. பெட்னார்: “நமது நோக்கம் ‘நான் அவர்களுக்கு என்ன சொல்வது?’ என்பதாக இருக்கக்கூடாது. மாறாக, நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகள் ‘நான் அவர்களை என்ன செய்ய அழைக்க முடியும்? என்பதாக இருக்கவேண்டும். அவர்கள் பதிலளிக்க விருப்பமாயிருந்தால், பரிசுத்த ஆவியானவரைத் தங்கள் வாழ்க்கையில் அழைக்கத் தொடங்கத்தக்கதாக நான் என்ன உணர்த்தப்பட்ட கேள்விகளைக் கேட்க முடியும்?’” என்று அறிவுரை கூறினார்(evening with a General Authority, Feb. 7, 2020, broadcasts.ChurchofJesusChrist.org); Teaching in the Savior’s Way, 25) ஐயும் பார்க்கவும். கற்பவர்கள் தங்கள் கற்றலுக்கான பொறுப்பை ஏற்க உதவ அநேக வழிகள் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, இந்த பாட சுருக்கத்தில் கற்பவர்கள் தேடவும், சிந்திக்கவும், பட்டியல்களை உருவாக்கவும், படங்களைப் பார்க்கவும், பொருள் பாடங்களில் பங்கேற்கவும், வரையவும், பகிர்ந்து கொள்ளவும், தாங்கள் கற்றுக்கொள்வதை செயல்படுத்தவும் அழைக்கப்படுகிறார்கள்.
பிள்ளைகளுக்கு போதிப்பதற்கான ஆலோசனைகள்
எரேமியா 31:3
பரலோக பிதாவும் இயேசு கிறிஸ்துவும் உங்களை ‘அநாதி சிநேகத்தால்’ நேசிக்கிறார்கள்.
-
எரேமியா 31:3ஐ நீங்கள் உங்கள் பிள்ளைகளுடன் படிக்கும்போது, உலோக நாணயம் போன்ற நீண்ட காலம் நீடிக்கும் பொருட்களையும் (அல்லது பொருட்களின் படங்களையும்), பழம் போன்ற நீடிக்காதவைகளையும் கண்டுபிடிக்க அவர்கள் உங்களுக்கு உதவலாம். நீங்கள் “அநாதி“ என்றால் என்ன என்பதைப் பற்றி சொல்லி, பரலோக பிதாவின் “அநாதி சிநேகத்தை“ நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள் என்பதை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளலாம். “God Is Watching Over All” (Children’s Songbook, 229) போன்ற ஒரு பாடலை நீங்கள் ஒன்றாக பாடலாம்.
எரேமியா 31:31–34; 32:38–41.
தேவன் என்னுடைய உடன்படிக்கைகளைக் கைக்கொள்ள எனக்கு உதவுவார்.
-
உங்கள் பிள்ளைகள் ஒரு காகிதத்தில் இருதயத்தை வரைந்து, தேவனுடன் உடன்படிக்கை செய்வதைப் பற்றி எரேமியா 31:31–34இலிருந்து கற்றுக்கொண்ட விஷயங்களை இருதயத்தில் எழுதுவதை விரும்பலாம். ஞானஸ்நானத்தில் அவர்கள் செய்யும் உடன்படிக்கையை நீங்கள் மறுபரிசீலனை செய்ய விரும்பலாம் (மோசியா 18:10, 13 பார்க்கவும்). மேலும் இந்த வாக்குறுதிகள் அவர்களின் இருதயங்களில் எழுதப்பட்டிருப்பதன் அர்த்தம் என்ன என்பதைப் பற்றி கலந்துரையாடவும்.
எரேமியா 36:1-4
வேதங்கள் தேவனுடைய வார்த்தைகள்.
-
எரேமியாவையும், பாருக்கையும், ராஜாவையும் பற்றி உங்கள் பிள்ளைகள் அறிந்துகொள்ள இந்த வாரச் செயல்பாட்டுப் பக்கம் உதவும் (எரேமியா 36ஐப் பார்க்கவும்). அவர்கள் எரேமியா36:4–10இல் புத்தகத்தில் எழுதுவது (வசனம் 4ஐப் பார்க்கவும்) மற்றும் ஜனங்களுக்கு வேதவசனங்களைப் படிப்பது (வசனங்கள் 8, 10ஐப் பார்க்கவும்) போன்ற வார்த்தைகளுக்கு இணையான செயல்களையும் செய்யலாம்.
-
நீங்களும் உங்கள் பிள்ளைகளும் குழந்தைகளுக்கான புத்தகத்தையும் வேத புத்தகங்களின் நகலையும் பார்த்து, இந்தப் புத்தகங்கள் எவ்வாறு வேறுபடுகின்றன என்பதைப் பற்றி பேசலாம். வேதங்களின் சிறப்பு என்ன? உங்களுக்கென்று பிரத்யேகமான சில வேதப் பகுதிகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வது ஊக்கமளிப்பதாக இருக்கலாம்.
எரேமியா 38:6-13
எது சரியானதோ அதற்காய் நான் துணை நிற்பேன்.
-
எரேமியா 38:6–13இல் உள்ள எபெத்-மெலேக்கின் கதையை உங்கள் பிள்ளைகள் கற்பனை செய்து பார்க்க உதவ, பாட சுருக்கத்தின் முடிவில் உள்ள படத்தைப் பயன்படுத்தலாம். கர்த்தருடைய தீர்க்கதரிசிக்கு உதவ எபெத்-மெலேக் தைரியமாக செய்தவற்றை சொல்லும் ஒரு வசனத்தைக் கண்டுபிடிக்க நீங்கள் அவர்களுக்கு உதவலாம். இன்று நம் தீர்க்கதரிசி தேவனால் அழைக்கப்படுகிறார் என்பதை நாம் அறிவோம் என்பதைக் காட்ட நாம் என்ன செய்யலாம்?
புலம்பல் 1:1-2, 16; 3:22–26
இரட்சகர் என் பாவங்கள் மன்னிக்கப்படுவதை சாத்தியமாக்கினார்.
-
புலம்பல் புத்தகத்தை அறிமுகப்படுத்த, இஸ்ரவேலர் மனந்திரும்பாததால், எருசலேமும் ஆலயமும் அழிக்கப்பட்டன என்பதை உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் விளக்க விரும்பலாம். அந்தச் சமயத்தில் நீங்கள் அங்கு வாழ்ந்திருந்தால் நீங்கள் எப்படி உணர்ந்திருப்பீர்கள் என்பதை நீங்கள் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளலாம் (புலம்பல் 1:1–2, 16ஐப் பார்க்கவும்). புலம்பல் 3:22–26இல் உள்ள செய்தி உங்களுக்கு எப்படி நம்பிக்கை அளித்திருக்கும்?
-
நீங்கள் செய்த தவறான தேர்வினால் வருத்தப்பட்ட நேரங்களைப் பற்றி நீங்கள் ஒருவருக்கொருவர் சொல்லலாம். இயேசு கிறிஸ்து வழங்கும் மன்னிப்பை நாம் புரிந்துகொள்ள நமக்கு உதவ புலம்பல் 3:22–26இல் என்ன கொடுக்கப்பட்டுள்ளது?
கூடுதலாக, நண்பன் பத்திரிக்கையின் இந்த மாத இதழைப் பார்க்கவும்.