“உங்கள் சரீரம் பரிசுத்தமானது,” இளைஞரின் பெலனுக்காக: தேர்வுகளை செய்வதற்கான வழிகாட்டி, (2022)
“உங்கள் சரீரம் பரிசுத்தமானது,” இளைஞரின் பெலனுக்காக
உங்கள் சரீரம் பரிசுத்தமானது.
1 கொரிந்தியர் 6:18–20
உங்கள் சரீரம் உங்கள் பரலோக பிதாவிடமிருந்து கிடைத்த ஒரு வியத்தகு பரிசு. நீங்கள் அவரைப் போல ஆக உதவும்படி அவர் அதை உங்களுக்குக் கொடுத்தார். ஒரு சரீரத்தைக் கொண்டிருப்பது உங்கள் தேர்வு சுதந்திரத்தைப் பயன்படுத்த அதிக வல்லமையை அளிக்கிறது. இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷம் உங்கள் சரீரத்தை தேவனுடைய பார்வையில் பார்க்க உதவும். மேலும் அது உங்கள் சரீரத்தை என்ன செய்வது, அதை எப்படிப் பராமரிப்பது என்பது பற்றிய உங்கள் தேர்வுகளில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது.
நித்திய சத்தியங்கள்
உங்கள் சரீரம் தேவனின் சாயலில் உள்ளது—பிரபஞ்சத்தில் மிகவும் மகிமை வாய்ந்த, மகத்தான ஜீவன். வேதம் நமது சரீரங்களை ஆவியானவர் வாசம் செய்யக்கூடிய பரிசுத்த ஆலயத்திற்கு ஒப்பிடுகிறது. நிச்சயமாக, உங்கள் சரீரம் இப்போது பரிபூரணமாக இல்லை. ஆனால் உங்கள் சரீரத்தால் நீங்கள் பெறும் அனுபவங்கள், ஒரு நாள் ஒரு பரிபூரண, உயிர்த்தெழுந்த, மகிமைப்படுத்தப்பட்ட சரீரத்தைப் பெற உங்களைத் தயார்படுத்த உதவும்.
உங்கள் ஆத்துமா உங்கள் சரீரத்தாலும், உங்கள் ஆவியாலும் ஆனது. இந்த காரணத்திற்காக, உடல் ஆரோக்கியமும் ஆவிக்குரிய ஆரோக்கியமும் நெருங்கிய தொடர்புடையவை. உங்கள் சரீரத்தைப் பராமரிப்பதற்கான கொள்கைகளைக் கற்பிக்கவும், உடல் மற்றும் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை வாக்களிக்கவும் இரட்சகர் ஞானவார்த்தையை வெளிப்படுத்தினார்.
மகிழ்ச்சியான திருமணங்களையும் நித்திய குடும்பங்களையும் உருவாக்குவதற்கான தேவனின் திட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாக பாலியல் உணர்வுகள் உள்ளன. இந்த உணர்வுகள் பாவமானவை அல்ல—அவை புனிதமானவை. பாலியல் உணர்வுகள் மிகவும் புனிதமானவை மற்றும் மிகவும் சக்திவாய்ந்தவை என்பதால், இந்த உணர்வுகளை அவர் விரும்பியபடி பயன்படுத்த உங்களை தயார்படுத்துவதற்காக தேவன் தனது கற்புடைமை நியாயப்பிரமாணத்தை உங்களுக்குக் கொடுத்துள்ளார். கற்புடைமை நியாயப்பிரமாணம், திருமணமான ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான பாலியல் உறவை மட்டுமே தேவன் அங்கீகரிக்கிறார் என்று கூறுகிறது. உலகில் பலர் தேவனின் நியாயப்பிரமாணத்தைப் புறக்கணிக்கிறார்கள் அல்லது கேலி செய்கிறார்கள், ஆனால் கர்த்தர் நம்மைத் தம்முடைய சீஷர்களாகவும், உலகத்தின் தரத்தை விட உயர்ந்த தரத்தில் வாழவும் அழைக்கிறார்.
அழைப்புகள்
உங்கள் சரீரத்தையும்—மற்றவர்களின் சரீரத்தையும்—மரியாதையுடன் நடத்துங்கள். உங்கள் உடை, சிகை அலங்காரம் மற்றும் தோற்றம் குறித்து நீங்கள் முடிவுகளை எடுக்கும்போது, உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள், “தேவனிடமிருந்து வந்த பரிசுத்தமான பரிசாக நான் என் சரீரத்தை மதிக்கிறேனா?” நாம் உண்மையில் யார் என்பதைப் பார்க்க பரலோக பிதா விரும்புகிறார்: வெறும் உடல்கள் மட்டுமல்ல, தெய்வீக இலக்கைக் கொண்ட அவரது அன்புக்குரிய பிள்ளைகளுமாய். நித்திய எதிர்காலத்தைக் கொண்ட தேவனின் பிள்ளையாக நீங்கள் இருப்பதற்குப் பதிலாக, உங்கள் சரீர உடலை ஈர்க்கும் அல்லது பொருத்தமற்ற கவனத்தை ஈர்க்கும் பாணிகளைத் தவிர்க்கவும். ஒழுக்க சுத்தம் மற்றும் தேவன் மீதான அன்பு உங்கள் தேர்வுகளை வழிநடத்தட்டும். உங்கள் பெற்றோரிடம் ஆலோசனை கேளுங்கள்.
உங்கள் சரீரத்தை வலுப்படுத்தும் விஷயங்களைச் செய்யுங்கள்—அதற்கு தீங்கு விளைவிக்கும் அல்லது சேதப்படுத்தும் எதுவும் செய்யாதீர்கள். தேவன் அளித்த பல நல்ல விஷயங்களை நன்றியுடன் அனுபவியுங்கள். ஆனால் மது, புகையிலை, காபி, தேநீர் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் மருந்துகள் மற்றும் வஸ்துக்கள் உங்கள் சரீரத்திற்கும் உங்கள் ஆத்துமாவிற்கும் ஏற்றவை அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் போன்ற பயனுள்ள வஸ்துக்கள் கூட சரியாகப் பயன்படுத்தப்படாவிட்டால் அழிவுகரமானதாக இருக்கலாம்.
பாலின மற்றும் பாலியல் உணர்வுகளை பரிசுத்தமாக வைத்திருங்கள். அவை நகைச்சுவை அல்லது பொழுதுபோக்கின் கருத்தாக இருக்கக்கூடாது. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான திருமணத்திற்கு வெளியே, மற்றொரு நபரின் உடலின் அந்தரங்க, பரிசுத்தமான பாகங்களைத் தொடுவது, அவர்கள் ஆடை அணிந்திருந்தாலும் கூட, தவறு. நீங்கள் என்ன செய்கிறீர்கள், பார்க்கிறீர்கள், படிக்கிறீர்கள், கேட்கிறீர்கள், சிந்திக்கிறீர்கள், பதிவிடுகிறீர்கள் அல்லது குறுஞ்செய்தி அனுப்புகிறீர்கள் என தேர்வு செய்யும் போது, மற்றவர்களிடமோ அல்லது உங்களிடமோ வேண்டுமென்றே காம உணர்ச்சிகளைத் தூண்டும் எதையும் தவிர்க்கவும். இதில் எந்த வடிவத்திலும் உள்ள ஆபாசப் படங்கள் அடங்கும். சூழ்நிலைகள் அல்லது நிகழ்ச்சிகள் சோதனைகளை வலுப்படுத்துவதாக நீங்கள் கண்டால், அவற்றைத் தவிர்க்கவும். அந்த சூழ்நிலைகளும் நிகழ்ச்சிகளும் என்னவென்று உங்களுக்குத் தெரியும். நீங்கள் உறுதியாக அறியவில்லை என்றால், ஆவியானவர், உங்கள் பெற்றோர் மற்றும் உங்கள் தலைவர்கள் உங்களுக்குத் தெரியப்படுத்த முடியும். உயிரை சிருஷ்டிக்கும் பரிசுத்த வல்லமையை நீங்கள் கனம் பண்ணுகிறீர்கள், மதிக்கிறீர்கள் என்பதை உங்கள் பரலோக பிதாவிடம் காட்டுங்கள்.
வாக்களிக்கப்பட்ட ஆசீர்வாதங்கள்.
உங்கள் நடத்தை, தோற்றம் மற்றும் உடை மூலம் உங்கள் சரீரத்தை மதிக்கும்போது, உங்கள் மீதும் மற்றவர்கள் மீதும் உங்களுக்கு இருக்கும் மரியாதை அதிகரிக்கும்.
ஞான வார்த்தையைக் கடைப்பிடிப்பவர்களுக்கு கர்த்தர் மிகுந்த அறிவுப் பொக்கிஷங்களை வாக்களித்துள்ளார். போதை பழக்கத்திலிருந்து விடுபட்ட ஆரோக்கியமான சரீரம், தனிப்பட்ட வெளிப்பாட்டைப் பெறுவதற்கும், தெளிவாகச் சிந்திப்பதற்கும், கர்த்தருக்கு சேவை செய்வதற்கும் உங்கள் திறனை அதிகரிக்கிறது.
கற்புடைமை நியாயப்பிரமாணத்தின்படி வாழ்வது தேவனின் அங்கீகாரத்தையும் தனிப்பட்ட ஆவிக்குரிய வல்லமையையும் கொண்டுவருகிறது. உங்களுக்குத் திருமணமாகும்போது, இந்த நியாயப்பிரமாணம் உங்கள் திருமணத்தில் அதிக அன்பு, நம்பிக்கை மற்றும் ஒற்றுமையைக் கொண்டுவரும். இந்த நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படிவது, நீங்கள் நித்தியமாக முன்னேறி, உங்கள் பரலோக பிதாவைப் போல ஆக உங்களுக்கு சாத்தியமாக்கும். நீங்கள் இயேசு கிறிஸ்துவின் சீஷராக வாழும்போது உங்கள் தன்னம்பிக்கை வளரும்.
கேள்விகளும் பதில்களும்
உடை, சிகை அலங்காரம், பச்சை குத்துதல் மற்றும் காது குத்துதல் ஆகியவற்றில் கர்த்தரின் தரநிலை என்ன? உலகத்திலிருந்து வித்தியாசமாக இருப்பதைக் குறிக்கும் போதும், உங்கள் சரீரத்தின் புனிதத்தன்மையை மதிக்க வேண்டும் என்பதே கர்த்தருடைய தரமாகும். நீங்கள் முடிவுகளை எடுக்கும்போது, குறிப்பாக உங்கள் உடலில் நீடித்த விளைவுகளை ஏற்படுத்தும் முடிவுகளை எடுக்கும்போது, இந்த சத்தியமும் ஆவியும் உங்களுக்கு வழிகாட்டியாக இருக்கட்டும். ஞானமாகவும் உண்மையாகவும் இருங்கள், உங்கள் பெற்றோர் மற்றும் தலைவர்களிடமிருந்து ஆலோசனையைப் பெறுங்கள்.
சோதனைகளையும் கெட்ட பழக்கங்களையும் நான் எவ்வாறு வெல்ல முடியும்? பரலோக பிதாவும் இயேசு கிறிஸ்துவும் உங்களுக்கு உதவ வல்லமை பெற்றுள்ளனர். ஜெபம், வேதப் படிப்பு, மற்றவர்களுக்குச் செய்யும் சேவை போன்ற அந்த வல்லமையை உங்கள் வாழ்க்கையில் அழைக்கும் விஷயங்களால் உங்கள் வாழ்க்கையை நிரப்புங்கள். இயேசு கிறிஸ்துவையும் அவருடைய சுவிசேஷத்தையும் நோக்கித் திரும்புங்கள், பலவீனங்கள் பலங்களாக மாறக்கூடும் என்பதை நீங்கள் காண்பீர்கள். தேவைக்கேற்ப பெற்றோர்கள், தலைவர்கள் மற்றும் தொழில்முறை ஆலோசகர்களின் உதவியை நாடுங்கள். அடிமைப் பழக்கத்தால் அவதிப்படுபவர்களுக்கு, சபை ஒரு அடிமைப் பழக்க மீட்புத் திட்டத்தை வழங்குகிறது. உங்கள் வாழ்க்கையின் கட்டுப்பாட்டை மீண்டும் பெற இரட்சகரின் சபை வழங்கும் ஆசீர்வாதங்கள் இவை. இதற்கு நேரம் தேவைப்படும், எனவே பொறுமையாக இருங்கள், ஒருபோதும் கைவிடாதீர்கள்.
நான் ஒரே பாலினத்தவர்களிடம் ஈர்க்கப்படுகிறேன். இந்த தரங்கள் எனக்கு எப்படி பொருந்தும்? ஒரே பாலின ஈர்ப்பை உணர்வது பாவம் அல்ல. உங்களுக்கு இந்த உணர்வுகள் இருந்து, அவற்றைப் பின்பற்றவோ அல்லது செயல்படவோ இல்லை என்றால், நீங்கள் பரலோக பிதாவின் பரிசுத்தமான கற்புடைமை நியாயப்பிரமாணத்தின்படி வாழ்கிறீர்கள். நீங்கள் தேவனின் அன்புக்குரிய பிள்ளை மற்றும் இயேசு கிறிஸ்துவின் சீஷர். நீங்கள் அனுபவிக்கும் அனைத்தையும் இரட்சகர் புரிந்துகொள்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவருடனான உங்கள் உடன்படிக்கை இணைப்பின் மூலம், தேவனின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவும், அவர் வாக்குறுதியளிக்கும் ஆசீர்வாதங்களைப் பெறவும் நீங்கள் பலத்தைக் காண்பீர்கள். அவரையும் அவருடைய சுவிசேஷத்தையும் நம்புங்கள்.
நான் துஷ்பிரயோகம் செய்யப்பட்டேன், எனக்கு வெட்கமாக இருக்கிறது. நான் பாவம் செய்த குற்றவாளியா? எந்தவொரு துஷ்பிரயோகம் அல்லது தாக்குதலுக்கும் பலியாக இருப்பது உங்களை பாவக் குற்றவாளியாக்காது. தயவுசெய்து குற்ற உணர்ச்சியோ அவமானமோ அடைய வேண்டாம். இரட்சகர் உங்களை நேசிக்கிறார். அவர் உங்களுக்கு உதவவும், உங்களைக் குணப்படுத்தவும், உங்களுக்கு அமைதியைத் தரவும் விரும்புகிறார். தொழில்முறை ஆலோசகர்கள், உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உங்கள் தலைவர்களும் உதவலாம்.
ஆதியாகமம் 1:27 (நாம் தேவ சாயலில் சிருஷ்டிக்கப்பட்டோம்); யோவான் 14:18 (இரட்சகர் ஆறுதலை வாக்களிக்கிறார்); பிலிப்பியர் 4:7 (தேவனின் சமாதானம் புரிதலைக் கடந்தது); கோட்பாடும் உடன்படிக்கைகளும் 88:15 (ஆவியும் சரீரமும்தான் ஆத்துமா); 89 (ஞான வார்த்தை); 121:45 (நற்சிந்தனைகள் தன்னம்பிக்கைக்கு வழிநடத்தும்) பார்க்கவும்.
ஆலய பரிந்துரை கேள்விகள்
அவருக்கு முன்பாக சகல காரியங்களும் “சுத்தமாகச் செய்யப்படவேண்டுமென” கர்த்தர் சொல்லியிருக்கிறார் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 42:41). உங்கள் சிந்தனையிலும் நடத்தையிலும் ஒழுக்க தூய்மைக்கு நீங்கள் முயற்சிக்கிறீர்களா? கற்புடமை நியாயப்பிரமாணத்திற்கு நீங்கள் கீழ்ப்படிகிறீர்களா?
ஞானவார்த்தையை நீங்கள் புரிந்துகொண்டு அதற்கு கீழ்ப்படிகிறீர்களா?