இளைஞர்
தேவனின் ஒளியில் நடவுங்கள்


இயேசு கிறிஸ்து ஒரு ஆட்டு மந்தையை மேய்த்தல்

நான் தாழ்ச்சியடையேன்யாங்சுங் கிம் படம் உபயம் ஹாவன்லைட்

5.

தேவனின் ஒளியில் நடவுங்கள்

கலாத்தியர் 5:25

நீங்கள் காரியங்களைத் தெளிவாகப் பார்க்கும்போது சிறந்த தேர்வுகளைச் செய்கிறீர்கள். அதனால்தான் ஒளி மிகவும் முக்கியமானது: ஒளி சரியான பாதையைப் பார்ப்பதை எளிதாக்குகிறது. நல்லது கெட்டது, சரி தவறு என்பதை நீங்கள் தெளிவாகப் பார்க்க உதவும் வகையில், பரலோக பிதா உங்களுக்குப் பரலோக ஒளியை—பரிசுத்த ஆவியின் வரத்தை—வழங்கியுள்ளார்.

நித்திய சத்தியங்கள்

பரிசுத்த ஆவியானவரை நீங்கள் ஒரு நிலையான தோழனாகப் பெறலாம். நீங்கள் சபையின் உறுப்பினராக திடப்படுத்தப்பட்டபோது, ​​“பரிசுத்த ஆவியைப் பெற” அழைக்கப்பட்டீர்கள். பரிசுத்த ஆவியை உங்கள் நிலையான தோழனாகக் கொண்டிருக்கும் வாய்ப்பு, தேவன் உங்களுக்குக் கொடுத்த மிகப்பெரிய வரங்களில் ஒன்றாகும்.

நல்ல தேர்வுகளைச் செய்வது ஆவியை உணரும் உங்கள் திறனை மேம்படுத்துகிறது. இந்த உலகில் பல நல்ல மற்றும் ஆரோக்கியமான விஷயங்கள் உள்ளன. நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்களோ என்ன குடிக்கிறீர்களோ அதனால் உங்கள் உடல் பாதிக்கப்படுவது போல, நீங்கள் என்ன படிக்கிறீர்களோ, பார்க்கிறீர்களோ மற்றும் கேட்கிறீர்களோ அது உங்கள் மனதையும் ஆத்துமாவையும் ஆழமாகப் பாதிக்கிறது.

அழைப்புகள்

ஒவ்வொரு நாளும் கர்த்தருக்காக நேரம் ஒதுக்குங்கள். அவரைப் பற்றி அறியுங்கள். அவரை எப்போதும் நினைத்திருக்கவும். உங்கள் பரலோக பிதாவிடம் ஜெபியுங்கள். பரிசுத்த வேதங்களையும், ஜீவிக்கும் தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளையும் படியுங்கள். பிறகு, நீங்கள் கற்றுக்கொண்டவற்றின்படி வாழ முயற்சி செய்யுங்கள்.

ஆவியை உயர்த்துவதையும், உணர்த்துவதையும், அழைப்பதையும் தேடுங்கள். நீங்கள் எதைப் பார்ப்பது, படிப்பது, கேட்பது அல்லது பங்கேற்பது குறித்து தேர்வுகளைச் செய்யும்போது, ​​அது உங்களை எப்படி உணர வைக்கிறது என்பதைப் பற்றி சிந்தியுங்கள். அது நல்ல எண்ணங்களை அழைக்கிறதா? பரிசுத்தமான விஷயங்களை கேலி செய்யும் அல்லது ஒழுக்கக்கேடான எதையும் விட்டு விலகி இருங்கள். வன்முறை, மது மற்றும் தீங்கு விளைவிக்கும் மருந்துகள் போன்ற உங்கள் தீர்மானத்தையோ அல்லது ஆவியின் உணர்திறனையோ மந்தமாக்கும் எதிலும் பங்கேற்காதீர்கள். ஒரு காணொளி அல்லது விளையாட்டை அணைக்க, ஒரு திரைப்படம் அல்லது நடனத்தை விட்டு வெளியேற, உங்கள் இசையை மாற்ற, அல்லது ஆவிக்கு இசைவாக இல்லாத எதையும் விட்டு விலக தைரியம் கொள்ளுங்கள்.

உயர்த்துவதற்காக சமூக ஊடகங்களைப் பயன்படுத்துங்கள். சமூக ஊடகங்கள் ஒரு வல்லமைவாய்ந்த தொடர்பு கருவியாக இருக்கலாம். நீங்கள் அதைப் பயன்படுத்தினால், ஒளி, விசுவாசம் மற்றும் சத்தியத்தின் மீது கவனம் செலுத்துங்கள். மற்றவர்கள் அனுபவிப்பதோடு உங்கள் வாழ்க்கையை ஒப்பிடாதீர்கள். உங்கள் தகுதி சமூக ஊடகங்களிலிருந்து வரவில்லை, பரலோக பெற்றோரின் பிள்ளையாக இருப்பதிலிருந்தே வருகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஆரோக்கியமான அனுபவங்களையும் உண்மையான மற்றும் நீடித்த உறவுகளையும் தேடுங்கள். உங்களுடைய தொழில்நுட்பம் மற்றும் ஊடகங்களின் பயன்பாடு, குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் நேரில் செலவிடும் நேரத்தை மாறவிடாமல் இருப்பது குறித்து கவனமாக இருங்கள். சமூக ஊடகங்களும் பிற தொழில்நுட்பங்களும் அதிக மதிப்பை வழங்காமல் உங்கள் நேரத்தை அதிகம் எடுத்துக்கொள்ளும். மெய்நிகர் உலகத்திலிருந்து சிறிது இடைவெளி எடுத்துக்கொண்டு, நிஜ வாழ்க்கையில் மக்களுடன் இணையுங்கள்.

இயேசு கிறிஸ்து ஒரு ஆட்டு மந்தையை புல்வெளியில் வழிநடத்துதல்

வாக்களிக்கப்பட்ட ஆசீர்வாதங்கள்.

உங்களுடன் பரிசுத்த ஆவியை எப்போதும் பெற்றிருக்க முடியும். இந்த வாக்குறுதி, நீங்கள் ஒவ்வொரு முறையும் திருவிருந்தில் பங்கேற்கும்போதும் செய்யும் உடன்படிக்கையின் ஒரு பகுதியாகும். பரிசுத்த ஆவியானவர் பரலோக பிதாவையும் இயேசு கிறிஸ்துவையும் பற்றி உங்களுக்குச் சாட்சி கொடுப்பார். அவர் உங்களை ஆறுதல்படுத்துவார், வழிநடத்துவார், எச்சரிப்பார், பரிசுத்தப்படுத்துவார். அவர் சத்தியத்தை அடையாளம் காணவும், உலகில் உள்ள நல்லதைக் காணவும் உங்களுக்கு உதவுவார்.

கேள்விகளும் பதில்களும்

நான் பரிசுத்த ஆவியை உணர்கிறேனா என்பதை எப்படி அறிந்து கொள்வது? ஆவியைப் பற்றி அறிந்திருக்கக் கற்றுக்கொள்வதற்கு நேரம், பயிற்சி மற்றும் பொறுமை தேவை. அவர் வெவ்வேறு மக்களிடம் வெவ்வேறு வழிகளில் பேசுகிறார். எளிய விஷயங்களைக் கவனிக்காமல் விடாதீர்கள்—ஒருவரின் சாட்சியத்தைக் கேட்ட பிறகு நீங்கள் பெறும் சமாதான உணர்வு அல்லது தவறான தேர்வு செய்த பிறகு நீங்கள் பெறும் அமைதியற்ற உணர்வு. ஆவியானவர் தொடர்பு கொள்ளும் பல்வேறு வழிகளுக்கு வேதங்களைத் தேடுங்கள், அதைப் பற்றி ஜெபிக்கவும், ஆவியானவரை உணரவும் வாய்ப்புகளைத் தேடுங்கள்.

ஆபாசப்படம் என்றால் என்ன? நான் ஏன் அதைத் தவிர்க்க வேண்டும்? ஆபாசப்படம் என்பது பாலியல் உணர்வுகளைத் தூண்டுவதற்காக வடிவமைக்கப்பட்ட படங்கள் அல்லது வார்த்தைகளின் வடிவமாகும். ஆபாசப்படம் பல வடிவங்களில் வருகிறது, அவற்றில் காணொளிகள், படங்கள், புத்தகங்கள் மற்றும் இசை ஆகியவை அடங்கும். இது நண்பர்களிடையே அனுப்பப்படும் செய்திகள் அல்லது படங்களாகவும் இருக்கலாம். ஆபாசப்படம் பரிசுத்தமான விஷயங்களை—நமது உடல் மற்றும் பாலியல் உணர்வுகளை—அவமரியாதையுடன் நடத்துகிறது. நீங்கள் அறியாமலேயே ஆபாசப்படங்களைப் பார்க்க நேரிடலாம். நீங்கள் வேண்டுமென்றே ஆபாசப்படத்தைப் பார்த்தாலும், இல்லாவிட்டாலும், உடனடியாக விலகிச் செல்லுங்கள். நீங்கள் ஒரு பெற்றோரிடமோ அல்லது நம்பகமான பெரியவரிடமோ பேச விரும்பலாம். வேண்டுமென்றே ஆபாசப்படத்தைப் பார்ப்பது பாவமானது, மேலும் அது ஆவியை உணரும் உங்கள் திறனுக்கு தீங்கு விளைவிக்கும். இது உங்கள் சுயக்கட்டுப்பாட்டை பலவீனப்படுத்துகிறது மற்றும் உங்களையும் மற்றவர்களையும் நீங்கள் பார்க்கும் விதத்தை சிதைக்கிறது. ஆபாசப்படத்தை எதிர்த்து மனந்திரும்ப இயேசு கிறிஸ்து உங்களுக்கு உதவும் வல்லமை படைத்தவர். அவரை நோக்கித் திரும்புங்கள்; இருளிலிருந்து விலகிச் செல்லுங்கள். இரட்சகர் மூலம் பலத்தையும் மன்னிப்பையும் பெற உங்கள் ஆயர் உங்களுக்கு உதவ முடியும். இயேசு கிறிஸ்துவே உங்கள் பெலன்!

சங்கீதம் 119:105 பார்க்கவும் (தேவனுடைய வார்த்தை நம் பாதையில் ஒரு வெளிச்சம் போன்றது); ஆமோஸ் 5:14 (நன்மையை நாடுங்கள்); கலாத்தியர் 5:22–23 (ஆவியின் கனிகள்); மரோனி 7:18–19 (கிறிஸ்துவின் ஒளி); கோட்பாடும் உடன்படிக்கைகளும் 6:23 (கர்த்தர் சமாதானம் பேசுகிறார்); 20:77, 79 (திருவிருந்து ஜெபங்கள்).

ஆலய பரிந்துரை கேள்வி

  • அவருக்கு முன்பாக சகல காரியங்களும் “சுத்தமாகச் செய்யப்படவேண்டுமென” கர்த்தர் சொல்லியிருக்கிறார் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 42:41). உங்கள் எண்ணங்களிலும் நடத்தையிலும் ஒழுக்க தூய்மைக்கு நீங்கள் முயற்சிக்கிறீர்களா?