“தேவனை நேசியுங்கள், உங்கள் அயலாரை நேசியுங்கள்,” இளைஞரின் பெலனுக்காக: தேர்வுகளை செய்வதற்கான வழிகாட்டி, (2022)
“தேவனை நேசியுங்கள், உங்கள் அயலாரை நேசியுங்கள்,” இளைஞரின் பெலனுக்காக
தேவனை நேசியுங்கள், உங்கள் அயலாரை நேசியுங்கள்
மத்தேயு 22:37–40
நல்ல தேர்வுகளைச் செய்ய உங்களுக்கு உதவ, தேவன் கட்டளைகளைக் கொடுக்கிறார். அவர் உங்களை நேசிப்பதால் இதைச் செய்கிறார். தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதற்கான சிறந்த காரணம், நீங்கள் அவரை நேசிப்பதே ஆகும். தேவனின் கட்டளைகளின் மையத்தில் அன்பு உள்ளது.
நித்திய சத்தியங்கள்
தேவன் உங்களை நேசிக்கிறார். அவரே உங்கள் பிதா. அவருடைய பரிபூரண அன்பு அவரை நேசிக்க உங்களுக்கு உணர்த்தும். பரலோக பிதா மீதான உங்கள் அன்பு உங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான செல்வாக்கு என்றால், பல முடிவுகள் எளிதாகிவிடும்.
இயேசு கற்பித்த அனைத்து கட்டளைகளிலும் மிகப் பெரிய இரண்டு கட்டளைகள் தேவனையும், உங்கள் அயலாரையும் நேசிப்பதாகும். உங்கள் அயலார் யார்? ஒவ்வொருவரும். வேதங்களிலும் தீர்க்கதரிசிகளாலும் கற்பிக்கப்படும் மற்ற அனைத்தும் இந்த இரண்டு கட்டளைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.
எல்லா மக்களும் உங்கள் சகோதர சகோதரிகளே—நிச்சயமாக, உங்களிடமிருந்து வேறுபட்டவர்கள் அல்லது உங்களுடன் உடன்படாதவர்கள் உட்பட. பரலோக பிதா தம்முடைய பிள்ளைகள் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும் என்று விரும்புகிறார். நீங்கள் அவருடைய பிள்ளைகளுக்கு சேவை செய்யும்போது, நீங்கள் அவருக்கு சேவை செய்கிறீர்கள்.
அழைப்புகள்
தேவனின் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் அவர் மீது அன்பு காட்டுங்கள். உதாரணமாக, திருவிருந்துக்காக உண்மையாகத் தயாராகி அதில் பங்கேற்பது உட்பட, ஓய்வு நாளைப் பரிசுத்தமாகக் கடைப்பிடிப்பதன் மூலம், வாரத்தில் ஒரு நாளை அவருக்கு அர்ப்பணிக்க நீங்கள் தயாராக இருப்பதைக் காட்டுகிறீர்கள். நீங்கள் உபவாசம் இருந்து தசமபாகங்களையும் காணிக்கைகளையும் செலுத்தும்போது, பொருள் சார்ந்த விஷயங்களை விட அவருடைய பணி உங்களுக்கு முக்கியமானது என்பதைத் தேவனுக்குக் காட்டுகிறீர்கள். நீங்கள் தேவன் மற்றும் கிறிஸ்துவின் பெயர்களை பயபக்தியுடன் பயன்படுத்தும்போது, ஒருபோதும் வீணாகவோ அல்லது சாதாரணமாகவோ பயன்படுத்தாமல், அவர்கள் உங்களுக்காகச் செய்த அனைத்திற்கும் நீங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்பதைக் காட்டுகிறீர்கள்.
ஒவ்வொருவரையும் தேவனுடைய பிள்ளைகளாக நடத்துங்கள். இயேசு கிறிஸ்துவின் சீஷராக, அனைத்து இனங்கள், மதங்கள் மற்றும் வேறு எந்தக் குழுக்களையும்—குறிப்பாக சில நேரங்களில் புண்படுத்தும் வார்த்தைகள் மற்றும் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களை, அன்பு, மரியாதை மற்றும் சேர்த்துக்கொண்டு நடத்துவதில் நீங்கள் முன்னணியில் இருக்க முடியும். தனிமையாகவோ, தனிமைப்படுத்தப்பட்டவர்களாகவோ அல்லது உதவியற்றவர்களாகவோ உணருபவர்களை அணுகவும். உங்கள் மூலம் பரலோக பிதாவின் அன்பை அவர்கள் உணர உதவுங்கள்.
உங்கள் மொழி தேவன் மற்றும் பிறர் மீதான அன்பை பிரதிபலிக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்—நீங்கள் நேரில் தொடர்பு கொண்டாலும் சரி அல்லது மெய்நிகராக இருந்தாலும் சரி. உற்சாகமளிக்கும் விஷயங்களைச் சொல்லுங்கள்—பிளவுபடுத்தும், புண்படுத்தும் அல்லது காயப்படுத்தும், நகைச்சுவையாகக் கூட இருக்கக்கூடாது. உங்கள் வார்த்தைகள் வல்லமை வாய்ந்ததாக இருக்க முடியும். அவைகள் நன்மை செய்ய வல்லமை வாய்ந்தவைகளாக இருக்கட்டும்.
தேவனின் அனைத்து பிள்ளைகளையும் நேசிப்பது வீட்டிலிருந்து தொடங்குகிறது. உங்கள் வீட்டை இரட்சகரின் அன்பை அனைவரும் உணரக்கூடிய இடமாக மாற்ற உங்கள் பங்கைச் செய்யுங்கள்.
வாக்களிக்கப்பட்ட ஆசீர்வாதங்கள்.
நீங்கள் அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து, அவருடனான உங்கள் உடன்படிக்கைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் உங்கள் அன்பை வெளிப்படுத்தும்போது, தேவனுடனான உங்கள் உறவு ஆழமாகும்.
கிறிஸ்துவைப் போன்ற சேவையின் மூலம் உங்கள் அன்பை வெளிப்படுத்தும்போது, மற்றவர்களுடனான உங்கள் உறவு ஆழமாகும். உலகை இன்னும் அன்பான இடமாக மாற்றுவதில் நீங்கள் மகிழ்ச்சியைக் காண்பீர்கள்.
கேள்விகளும் பதில்களும்
நான் எப்படி தேவனின் அன்பை உணர முடியும்? பரலோக பிதாவின் அன்பு எப்போதும் கிடைக்கும். ஜெபத்தின் மூலம் அடிக்கடி அவரிடம் பேசுங்கள். உங்கள் உணர்வுகளை அவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள், அவரிடமிருந்து வரும் எண்ணங்களைக் கேளுங்கள். வேதங்களில் அவருடைய வார்த்தைகளைப் படியுங்கள். அவர் உங்களுக்காகச் செய்த அனைத்தையும் நினைத்துப் பாருங்கள். அவருடைய ஆவி இருக்கும் இடங்களிலும் நிகழ்ச்சிகளிலும் நேரத்தைச் செலவிடுங்கள்.
என்னை மோசமாக நடத்துபவர்களையும் சேர்த்து, எல்லோரையும் நான் நேசிக்க வேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறாரா? உங்கள் எதிரிகளை நேசிக்கவும், உங்களைத் துன்புறுத்துபவர்களுக்காக ஜெபிக்கவும் கர்த்தர் உங்களிடம் எதிர்பார்க்கிறார். இருப்பினும், நீங்கள் உணர்ச்சி ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ அல்லது ஆவிக்குரிய ரீதியாகவோ தீங்கு விளைவிக்கும் சூழ்நிலையில் இருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. உங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க ஆரோக்கியமான எல்லைகளை அமைக்கவும். நீங்கள் கொடுமைப்படுத்தப்பட்டாலோ அல்லது துஷ்பிரயோகம் செய்யப்பட்டாலோ—அல்லது இது வேறு ஒருவருக்கு நடப்பது உங்களுக்குத் தெரிந்தாலோ—நம்பகமான வயதுவந்தவரிடம் பேசுங்கள்.
எதிர் பாலினத்தவர்களை நான் எப்போது, எப்படி அறிந்துகொள்ள வேண்டும்? மற்றவர்களை அறிந்து கொள்வதற்கான சிறந்த வழி உண்மையான நட்புதான். நீங்கள் இளமையாக இருக்கும்போது, பலருடன் நல்ல நட்பை வளர்த்துக் கொள்ளுங்கள். சில கலாச்சாரங்களில், இளைஞர்கள் ஆரோக்கியமான குழு நடவடிக்கைகள் மூலம் எதிர் பாலின உறுப்பினர்களை அறிந்து கொள்கிறார்கள். உங்கள் உணர்ச்சி மற்றும் ஆவிக்குரிய வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்காக, நீங்கள் முதிர்ச்சியடையும் வரை நேருக்கு நேர் நிகழ்ச்சிகளை ஒத்திவைக்க வேண்டும்—16 வயது ஒரு நல்ல வழிகாட்டு வரம்பாகும். உங்கள் பெற்றோர் மற்றும் தலைவர்களுடன் ஆலோசனை செய்யுங்கள். நீங்கள் வயதடையும்வரை பிரத்யேக உறவுகளை தள்ளி வைக்கவும். இயேசு கிறிஸ்துவுக்கு உங்கள் ஒப்புக்கொடுத்தல்களைக் காத்துக்கொள்ள உதவுபவர்களுடன் நேரத்தைச் செலவிடுங்கள்.
என் வீடு அன்பின் இடமாக இல்லாவிட்டால் நான் என்ன செய்ய முடியும்? உங்கள் இரட்சகர் உங்கள் சூழ்நிலையை அறிந்திருக்கிறார், அவர் உங்களை நேசிக்கிறார். பொறுமையாக இருங்கள், தேவனின் கட்டளைகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்கவும், உங்கள் குடும்பத்திற்கு ஒரு நல்ல முன்மாதிரியாக இருங்கள். உங்கள் தொகுதி குடும்பத்திற்குள் உறவுகளை உருவாக்குங்கள். இயேசு கிறிஸ்துவின் போதனைகளை அடிப்படையாகக் கொண்ட உங்கள் சொந்த குடும்பத்தைக் கட்ட இப்போதே தயாராகுங்கள்.
ஏசாயா 58:3–11 (உபவாசத்தின் நோக்கங்கள்); 58:13–14 (ஓய்வுநாளைக் கனம் பண்ணுவதன் ஆசீர்வாதங்கள்); மல்கியா 3:8–10 (தசமபாகம் செலுத்துவதால் கிடைக்கும் ஆசீர்வாதங்கள்); லூக்கா 6:27–28 (உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள்); 10:25–37 (என் அயலான் யார்?); யோவான் 3:16–17 (தேவன் நம்மை நேசித்தார், அதனால் அவர் தம்முடைய குமாரனை அனுப்பினார்); 14:15 (நாம் தேவனை நேசிப்பதால் கட்டளைகளைக் கடைப்பிடிக்கிறோம்.); 1 யோவான் 4:19 (தேவன் நம்மை நேசிப்பதால் நாம் அவரை நேசிக்கிறோம்.); மோசியா 2:17 (நாம் மற்றவர்களுக்கு சேவை செய்யும்போது, தேவனுக்கு சேவை செய்கிறோம்.) பார்க்கவும்.
ஆலயப் பரிந்துரை கேள்விகள்
உங்களுடைய குடும்ப அங்கத்தினர்கள் மற்றும் பிறருடன் உங்களுடைய தனிப்பட்ட மற்றும் பொது நடத்தையில் இயேசு கிறிஸ்துவின் சபையின் போதனைகளை நீங்கள் பின்பற்றுகிறீர்களா?
வீ்ட்டிலும் சபையிலும் ஓய்வுநாளை பரிசுத்தமாக ஆசரிக்கவும், உங்கள் கூட்டங்களில் பங்கேற்கவும், திருவிருந்துக்கு ஆயத்தப்படுத்தவும் தகுதியுள்ளவராக பங்கெடுக்கவும், சுவிசேஷத்தின் நியாயப்பிரமாணங்களுடனும் கட்டளைகளுடனும் இணக்கத்துடன் உங்கள் வாழ்க்கையை வாழ நீங்கள் முயற்சிக்கிறீர்களா?
நீங்கள் முழு தசமபாகம் செலுத்துபவரா?