“மனதில் வைத்திருக்கவேண்டிய எண்ணங்கள்: தீர்க்கதரிசிகளும் தீர்க்கதரிசனமும்,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: பழைய ஏற்பாடு 2026 (2026)
“தீர்க்கதரிசிகளும் தீர்க்கதரிசனமும்,” என்னைப் பின்பற்றி வாருங்கள்: பழைய ஏற்பாடு 2026
மனதில் வைத்திருக்கவேண்டிய எண்ணங்கள்
தீர்க்கதரிசிகளும் தீர்க்கதரிசனமும்
பழைய ஏற்பாட்டின் பாரம்பரிய கிறிஸ்தவப் பிரிவுகளில் கடைசி பாகம் (ஏசாயாவிலிருந்து மல்கியா வரை) “தீர்க்கதரிசிகள்” என அழைக்கப்படுகிறது. பழைய ஏற்பாட்டில் ஏறக்குறைய கால் பாகமான இப்பகுதி, தேவனின் அதிகாரம் பெற்ற ஊழியக்காரர்கள் கர்த்தரோடு பேசிய பின்னர் அவருடைய செய்தியை 900 முதல் 5௦௦ கி.மு. வரைக்குமான ஜனங்களுடன் பகிர்ந்து அவருக்காகபேசின இவர்களின் வார்த்தைகளைக் கொண்டுள்ளது.
தீர்க்கதரிசிகள் தேவ சித்தத்தைத் தெரிவிக்கிறார்கள்
பழைய ஏற்பாடு முழுவதிலும் தீர்க்கதரிசிகளும் தீர்க்கதரிசனமும் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு தரிசனங்களைக் கண்டார்கள், பரலோகத் தூதுவர்களுடன் பேசினார்கள். மோசே முகமுகமாய் தேவனுடன் பேசி, அவருடைய சித்தத்தை இஸ்ரவேல் புத்திரருக்குத் தெரிவித்தான். எலியா மற்றும் எலிசா தீர்க்கதரிசிகளின் மறக்கமுடியாத பணிகளையும் செய்திகளையும் ஒன்று மற்றும் இரண்டு இராஜாக்கள் புத்தகங்கள் விவரிக்கின்றன. மிரியாம் மற்றும் தெபொராள் போன்ற பெண் தீர்க்கதரிசிகளைப்பற்றியும், கூடவே ரெபெக்காள் அன்னாள் போன்ற ஆசீர்வதிக்கப்பட்ட பிற பெண்களைப்பற்றியும் பழைய ஏற்பாடு பேசுகிறது. முறை சார்ந்த தீர்க்கதரிசிகளால் சங்கீதங்கள் எழுதப்படாவிட்டாலும்கூட, குறிப்பாக மேசியாவின் வருகைக்காக அவர்கள் எதிர்பார்த்திருந்தபோது அவர்களும் தீர்க்கதரிசன ஆவியால் நிரப்பப்பட்டார்கள்.
பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் உறுப்பினர்களுக்கு இது எதுவுமே வியப்பானதன்று. உண்மையில், தீர்க்கதரிசிகள் சுவாரஸ்யமான வரலாற்று நபர்கள் மட்டுமல்ல, தேவனுடைய திட்டத்தின் இன்றியமையாத அங்கமாகவும் இருக்கிறார்கள் என்பதை இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷம் நமக்குப் போதிக்கிறது. சிலர் தீர்க்கதரிசிகளைப் பழைய ஏற்பாடு காலத்திற்கு மட்டும் உரித்தானவர்களாக எண்ணினாலும், நாம் இவர்களை பழைய ஏற்பாடு காலங்களுக்கும் நமக்கும் பொதுவானவர்களென பார்க்கிறோம்.
இருப்பினும், ஏசாயாவிலிருந்து அல்லது எசேக்கியேலிலிருந்து ஒரு அதிகாரத்தை வாசிப்பதற்கும், தற்போதைய சபையின் தலைவரிடமிருந்து வருகிற பொதுமாநாடு செய்தியை வாசிப்பதற்கும் வித்தியாசம் இருப்பதாக உணரலாம். பூர்வகால தீர்க்கதரிசிகள் நம்மிடம் ஏதோவொன்றை சொல்லவிருந்ததை சிலசமயங்களில் காண கடினமாயிருக்கலாம். இன்று நாம் வாழும் உலகம் அவர்கள் பிரசங்கித்து தீர்க்கதரிசனமுரைத்ததிலிருந்து மிகவும் வித்தியாசமாயிருக்கிறது அல்லவா. ஜீவிக்கிற தீர்க்கதரிசி ஒருவர் நிச்சயமாகவே நமக்கிருக்கிறார் என்பது ஒரு கேள்வியை கிளப்பக்கூடும்: பூர்வகால தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைப் படிப்பதற்கு முயற்சி அவசியம் என்றாலும் அப்படி எடுக்கப்படும் முயற்சி தகுமா?
காலங்கள் நிறைவேறுதல்-க்ரெக் ஓல்சன்
பூர்வகால தீர்க்கதரிசிகள் நமக்குச் சொல்ல சில இருக்கிறது,
பெரும்பாலாக, இன்றைய மக்கள் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளின் அடிப்படை பார்வையாளர்களல்ல. நம்முடைய இன்றைய பிற்காலத் தீர்க்கதரிசிகள் நமது உடனடியான கவலைகளுக்கு அக்கறை காட்டுவதுபோல அந்த தீர்க்கதரிசிகள் தங்களுடைய நேரத்திற்கும் இடத்திற்கும் ஏற்ப கையாளவேண்டிய உடனடி பிரச்சனைகளைக் கொண்டிருந்தார்கள்.
அதே நேரத்தில், உடனடியான கவலைகளுக்கு அப்பாலும் தீர்க்கதரிசிகளால் காணமுடியும். அவர்கள் எவ்விடத்திற்கும் நேரத்திற்கும் பொருத்தமான நித்திய சத்தியங்களைப் போதிக்கிறார்கள். வெளிப்பாடுகளைப்பெற ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக, அவர்கள் தேவகிரியையின் விஸ்தாரமான கண்ணோட்டத்தைப் பார்க்கிறார்கள். உதாரணமாக, ஏசாயா தன் காலத்திலிருந்த ஜனங்களை அவர்களுடைய பாவங்களை குறித்து எச்சரித்தான். எதிர்காலத்தில் 200 வருஷங்கள் அப்பால் வாழப்போகும் இஸ்ரவேலர்களின் விடுவிப்பை குறித்தும் எழுதினான். அதே நேரத்தில், அவன் தேவ ஜனம் யாவரும் தேடுகிற விடுவிப்பை குறித்து போதித்தான். தொலைந்துபோன இஸ்ரவேல் கோத்திரத்தார் கூடுகிற இடமாகவும், “தேசங்கள்“ “இனி யுத்தங்களை கற்றுக்கொள்ளாத“ (ஏசாயா 2:4) இடமாகவும், “கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்“ (ஏசாயா 11:9) இடமாகவும் இருக்கும் “புதிய பூமி“ (ஏசாயா 65:17) பற்றிய வாக்குத்தத்தங்களைப் போல - இன்றைக்கும் இன்னமும் நிறைவேற காத்திருக்கும் தீர்க்கதரிசங்களை அவன் எழுதினான். ஏசாயா போன்ற பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை படிப்பதினால் வருகிற சந்தோஷத்திலும் உத்வேகத்திலும் ஒரு பகுதி, அவர்கள் முன்னமே கண்ட மகிமையான நாளில் நாம் ஒரு அங்கம் வகிக்கிறோம் என்று உணர்வதால் தான்.
ஆதலால் நீங்கள் பூர்வகால தீர்க்கதரிசனங்களைப் படிக்கும்போது அவைகள் எழுதப்பட்ட சூழ்நிலைகளை அறிந்துகொள்வது உதவும். ஆயினும், அவர்களில் நீங்கள் உங்களை காணவேண்டும் அல்லது “அவர்களை [உங்களோடு] ஒப்பிடவேண்டும்.“ (1 நேபி 19:24; வசனம் 23ஐயும் பார்க்கவும்). அப்படியென்றால் பாபிலோனை ஒரு பண்டைய நகரமாக மட்டுமல்லாமல், பாவம் மற்றும் பெருமையின் அடையாளமாகவும் எடுத்துக்கொள்ளவேண்டும். எந்நேரத்திலும் எவ்விடத்திலும் இஸ்ரவேலரை தேவ ஜனம் என்று புரிந்துகொள்ளவேண்டியதாய் இருக்கிறது. அந்தப்படியே சீயோனை எருசலேம் அர்த்தம்கொண்ட மற்றொரு வார்த்தை என்பதாக மட்டும் பார்க்காமல் தேவ ஜனம் தழுவிக்கொள்கிற பிற்கால காரணமுகாந்திரமாகப் பார்க்கவேண்டும் என்றும் அது பொருள் தரக்கூடும்.
ஒரு தீர்க்கதரிசனம் பல வழிகளில் நிறைவேற்றப்படலாம் என்பதை நாம் புரிந்துகொள்வதால் வேதங்களை நம் வாழ்க்கைக்கு ஒப்பிடலாம். ஏசாயா 40:3இல் தீர்க்கதரிசனம் இதற்கு ஒரு நல்ல உதாரணம்: “கர்த்தருக்கு வழியை ஆயத்தம்பண்ணுங்கள் என்று வனாந்தரத்தில் கூப்பிடுகிற சத்தம் உண்டாயிற்று” பாபிலோனில் சிறைபிடிக்கப்பட்ட யூதர்களுக்கு, சிறைப்பிடிப்பிலிருந்து வெளியேறி மீண்டும் எருசலேமுக்கு வர கர்த்தர் ஒரு வழியை அளித்திருந்ததை இந்த அறிக்கை குறிப்பிட்டிருக்கக்கூடும். மத்தேயு, மாற்கு மற்றும் லூக்காவிற்கு இந்த தீர்க்கதரிசனம், இரட்சகரின் அநித்திய ஊழியத்திற்காக வழியை ஆயத்தப்படுத்திய யோவான் ஸ்நானனை குறித்தது. கிறிஸ்துவின் ஆயிர வருஷ ஊழியத்திற்கான ஆயத்தத்தில் இந்த தீர்க்கதரிசனம் இன்னும் பிற்காலங்களில் நிறைவேறிக்கொண்டிருக்கிறது என்று ஜோசப் ஸ்மித் வெளிப்படுத்தலைப் பெற்றார். இன்னும் நாம் புரிந்துகொள்கிற வழிகளில், பண்டைய தீர்க்கதரிசிகள் நம்முடன் பேசினார்கள். அவர்கள் அநேக விலையேறப்பெற்ற, நித்திய சத்தியங்களைப் போதித்தார்கள், பூர்வகால இஸ்ரவேலருக்கு அவைகள் பொருத்தமாயிருந்ததைப்போல நமக்கும் பொருத்தமாயிருக்கிறது.
இயேசு கிறிஸ்துவைக் குறித்து பூர்வகால தீர்க்கரிசிகள் சாட்சியம் கொடுத்தார்கள்.
ஒருவேளை, பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்களில் உங்களை காண்பதை விட அவைகளில் இயேசு கிறிஸ்துவை காண்பது மிக முக்கியமானது,. நீங்கள் அவரைத் தேடுவீர்களெனில், அவர் பெயரால் குறிப்பிடப்படாவிட்டாலும், நீங்கள் அவரைக் காண்பீர்கள். பழைய ஏற்பாட்டின் தேவன், கர்த்தராகிய யேகோவா இயேசு கிறிஸ்துதான்என்பதை மனதில் வைத்துக்கொள்ள இது உதவக்கூடும். கர்த்தர் என்ன செய்து கொண்டிருக்கிறார் அல்லது அவர் என்ன செய்வார் என்று தீர்க்கதரிசிகள் எப்போது விவரித்தலும், அவர்கள் இரட்சகரைப்பற்றிப் பேசுகிறார்கள்.
கர்த்தர் ஆபிரகாமுக்கு தோன்றுதல்–கெய்த் லார்சன்
அபிஷேகம்பண்ணப்பட்டவர், மீட்பர், தாவீதின் சந்ததியிலிருந்து வருங்கால ராஜா ஒருவர் பற்றிய குறிப்புகளையும்கூட நீங்கள் காண்பீர்கள். இவைகள் அனைத்தும் இயேசு கிறிஸ்துவைப்பற்றிய தீர்க்கதரிசனங்கள். மிக பொதுவான தன்மையில், விடுவிப்பு, மன்னிப்பு, மீட்பு மற்றும் மறுஸ்தாபிதத்தைப்பற்றி நீங்கள் வாசிப்பீர்கள். உங்கள் மனதிலும் இருதயத்திலும் இரட்சகரைக் கொண்டிருப்பதால் இந்த தீர்க்கதரிசனங்கள் இயல்பாகவே தேவ குமாரனை உங்களுக்கு சுட்டிக்காட்டும். “இயேசுவைப்பற்றின சாட்சி” (வெளிப்படுத்தின விசேஷம் 19:10) என யோவான் நமக்குச் சொல்லும் “தீர்க்கதரிசன ஆவியைக் கொண்டிருத்தல் தீர்க்கதரிசனத்தைப் புரிந்துகொள்வதற்கான சிறந்த வழி அல்லவா.