“அக்டோபர் 12-18. ‘சீயோனுக்கு மீட்பர் வருவார்’: ஏசாயா 58–66,”என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: பழைய ஏற்பாடு 2026 (2026)
“அக்டோபர் 12-18. ‘சீயோனுக்கு மீட்பர் வருவார்’”என்னைப் பின்பற்றி வாருங்கள்: பழைய ஏற்பாடு 2026
நாசரேத்தின் ஜெப ஆலயத்தில் இயேசு–க்ரெக் ஓல்சன்
அக்டோபர் 12-18: “சீயோனுக்கு மீட்பர் வருவார்”
ஏசாயா 58–66
தம்முடைய பூலோக ஊழியத்தின் ஆரம்பத்தில், தாம் வளர்ந்த கிராமமான நாசரேத்திலுள்ள ஒரு ஜெப ஆலயத்திற்கு இயேசு கிறிஸ்து வருகை தந்தார். வேதங்களிலிருந்து வாசிக்க அங்கே அவர் நின்றிருந்து, ஏசாயா புத்தகத்தைத் திறந்து, ஏசாயா 61:1–2 என இப்போது நாம் அறிகிறதை வாசித்தார். “உங்கள் காதுகள் கேட்க இந்த வேத வாக்கியம் இன்றைய தினம் நிறைவேறிற்று” என பின்னர் அவர் அறிவித்தார். “இருதயம் நருங்குண்டவர்களை குணமாக்கி” மற்றும் “சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையைப் பிரசித்தம்பண்ணுகிறவருமான” தாம் அபிஷேகம் செய்யப்பட்டவர் என்ற இரட்சகரின் மிக நேரடியான அறிவிப்புகளில் இதுவும் ஒன்றாகும். (லூக்கா 4:16–21ஐ பார்க்கவும்). உண்மையில் இந்த வேதவாக்கியம் அன்றைய தினம் நிறைவேறிற்று. ஏசாயாவின் அநேக பிற தீர்க்கதரிசனங்களைப்போல, நம் நாளில் இது தொடர்ந்து நிறைவேறிக்கொண்டிருக்கிறது. அவரிடத்தில் வருகிற இருதயம் நருங்குண்டவர்கள் அனைவரையும் இரட்சகர் தொடர்ந்து குணமாக்குகிறார். மீட்பைவேண்டி இன்னும் அநேக சிறைபிடிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள். “புதிய வானத்தையும் புதிய பூமியையும்” (ஏசாயா 65:17) கர்த்தர் உருவாக்கி “எல்லா ஜாதிகளுக்கும் முன்பாக நீதியையும் துதியையும் முளைக்கப்பண்ணும்படியான” ஒரு காலமாகிய மகிமையான எதிர்காலத்திற்காக ஆயத்தம் தேவை (ஏசாயா 61:11). ஏசாயாவைப் படிப்பதினால் நம் கண்கள் கர்த்தர் ஏற்கனவே செய்ததையும் அவர் செய்துகொண்டிருப்பதையும், அவர் இன்னமும் தம் ஜனங்களுக்கு செய்யவிருப்பதையும் காண திறக்கும்.
வீட்டிலும் சபையிலும் கற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகள்
ஏசாயா 58:3–12
உபவாசம் ஆவிக்குரிய வல்லமையைக் கட்டியெழுப்பி உதவியை நாடியிருப்போரை ஆசீர்வதிக்கிறது.
உணவு கிடைக்கும் போது ஏன் ஒருவர் வேண்டுமென்றே உணவு உண்ணாமல் இருக்கிறார்? ஏசாயா 58:3–12ஐ நீங்கள் படிக்கும்போது, உங்கள் உபவாசத்திற்கான நோக்கங்களைப் பற்றி நீங்கள் சிந்திப்பதோடு இந்தச் பிரமாணத்தைக் கர்த்தர் கொடுத்ததிற்கான காரணங்களையும் நீங்கள் சிந்திக்கலாம். சிந்திப்பதற்கான சில கேள்விகள் இதோ:
-
உபவாசம் சிலசமயங்களில் ஏன் ஆசீர்வாதமாக எண்ணப்படாமல் சுமையாக எண்ணப்படுகிறது? (ஏசாயா 58:3–5 பார்க்கவும்). இந்த அதிகாரத்தில் கர்த்தருடைய போதனைகள் உங்களுக்கான அந்த கண்ணோட்டத்தை எவ்வாறு மாற்றிப்போடுகிறது?
-
“அக்கிரமத்தின் கட்டுகளை அவிழ்க்கிறது” மற்றும் “ஒவ்வொரு நுகத்தடியையும் உடைத்துப்போட முடிகிறது” என்பதிற்கான அர்த்தம் என்ன? (ஏசாயா 58:6). உபவாசம் எவ்வாறு மற்றவர்களை ஆசீர்வதிக்கிறது? ( வசனம் 7 பார்க்கவும்).
-
ஏசாயா 58:8–12இல் விவரிக்கப்பட்டுள்ள ஆசீர்வாதங்களை உபவாசம் எவ்வாறு உங்களுக்குக் கொண்டுவந்தது?
தன்னுடைய செய்தியில் “இது நான் தேர்ந்தெடுத்த உபவாசம் அல்லவோ?” (லியஹோனா, மே 2015, 22–25) உபவாசத்தினாலும் உபவாச காணிக்கைகளினாலும் ஜனங்கள் எவ்வாறு ஆசீர்வதிக்கப்பட்டார்கள் என்பதற்கு பல்வேறு எடுத்துக்காட்டுகளைத் தலைவர் ஹென்றி பி. ஐரிங் பகிர்ந்தார். உங்கள் வாழ்க்கையில் இதைப்போன்ற ஆசீர்வாதங்களை நீங்கள் எவ்வாறு பார்த்திருக்கிறீர்கள்?
“Bless Our Fast, We Pray,” Hymns, no. 138; Topics and Questions, “Fasting and Fast Offerings,” Gospel Libraryஐ பார்க்கவும்.
நீங்கள் கற்பிக்கும் நபர்களை அறிந்து கொள்ளுங்கள். கிறிஸ்துவைப் போன்ற ஆசிரியராக இருப்பதில் நீங்கள் கற்பிக்கும் நபர்களைப்பற்றி அறிந்துகொள்வதும், அவர்களின் இருதயங்களில் என்ன இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முயற்சிப்பதும் அடங்கும். அவர்கள் எவ்வாறு சிறப்பாகக் கற்றுக்கொள்கிறார்கள் என்பதை நீங்கள் கண்டுபிடிக்கலாம். நீங்கள் கேள்விகளைக் கேட்கலாம், கவனமாகச் செவி கொடுக்கலாம், கவனிக்கலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, ஆவியானவர் மட்டுமே கொடுக்கக்கூடிய புரிதலுக்காக நீங்கள் ஜெபிக்கலாம். ஒரு நபரை நீங்கள் எவ்வளவு நன்றாக அறிந்திருக்கிறீர்களோ, அவ்வளவு சிறப்பாக இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தில் தனிப்பட்ட அர்த்தத்தையும் வல்லமையையும் கண்டறிய அவருக்கு அல்லது அவளுக்கு உதவ முடியும். ஒரு நபரின் தாகத்தை ஒருமுறை நீங்கள் புரிந்துகொண்டவுடன், இரட்சகரின் ஜீவத்தண்ணீரால் அதை எவ்வாறு தணிப்பது என்பதை ஆவியானவர் உங்களுக்குக் கற்பிக்க முடியும்” (Teaching in the Savior’s Way, 13).
ஏசாயா 58:13–14
ஓய்வுநாளில் கர்த்தரை கனம்பண்ணுவது மகிழ்ச்சியைத் தருகிறது.
ஓய்வு நாள் உங்களுக்கு மனமகிழ்ச்சியா? ஏசாயா 58: 13–14 நீங்கள் படிக்கும்போது, கர்த்தருடைய நாளில் நீங்கள் எப்படி அதிக மனமகிழ்ச்சியைக் காணலாம் என்று சிந்தியுங்கள். உதாரணமாக “[அவருடைய] பரிசுத்த நாளிலே உனக்கு இஷ்டமானதைச் செய்யாதபடி’ விலகியிருத்தல் என்பதற்கான அர்த்தம் என்ன? “கர்த்தரில் [மனமகிழ்ச்சியாயிருப்பதற்கும்]” ‘உனக்கு இஷ்டமானதைச் செய்யவதற்குமுள்ள” வித்தியாசம் என்ன?
Russell M. Nelson, “The Sabbath Is a Delight,” Liahona, May 2015, 129–32ஐ பார்க்கவும்.
ஏசாயா 59:9–21; 61:1–3; 63:7–9
இயேசு கிறிஸ்து என் இரட்சகரும் மீட்பருமானவர்.
இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தி ஊழியத்தின் பன்மடங்கு குறிப்புகள் ஏசாயா 58–66இல் உள்ளன. நீங்கள் படிக்கும்போது அவைகளைத் தேடுங்கள். குறிப்பாக, இரட்சகரை விவரிக்கப் பயன்படுத்தப்படும் தலைப்புகளையும் வார்த்தைகளையும் கவனியுங்கள். உதாரணமாக:
-
ஏசாயா 59:16–21இல் “விண்ணப்பம் பண்ணுகிறவன்“ பற்றிய விளக்கத்தில் உங்களை கவர்ந்தது என்ன? வசனங்கள் 9-15இல் விவரிக்கப்பட்டுள்ள நிலைமைகளை இரட்சகர் எவ்வாறு மேற்கொள்கிறார்?
-
இயேசு கிறிஸ்து நாசரேத்து ஜனங்களுக்கு தாமே மேசியா என்று அறிவித்தபோது, அவர் ஏசாயா 61:1–3 மேற்கோள் காட்டினார் (லூக்கா 4:16–21ஐ பார்க்கவும்; “Jesus Declares He Is the Messiah,” Gospel Library காணொளியையும் பார்க்கவும்). இந்த வசனங்களில் விவரிக்கப்பட்டுள்ள வழிகளில் இயேசு கிறிஸ்து எவ்வாறு உங்களையும் மற்றவர்களையும் ஆசீர்வதித்தார்? சாம்பலுக்குப் பதிலாக எவ்வாறு அவர் அழகை கொடுத்தார்?
3:24Jesus Declares He Is the Messiah
-
கர்த்தரின் என்ன அன்பின் இரக்கங்களை உங்களால் குறிப்பிட முடியும்? (ஏசாயா 63:7–9ஐ பார்க்கவும்).
-
ஏசாயா 58–66இல் இரட்சகருக்கான என்ன பிற குறிப்புகளை நீங்கள் காண்கிறீர்கள்?
மோசியா 3:7; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 133:46–53ஐயும் பார்க்கவும்.
வெளிச்சத்தின் ஒரு வரம்–ஈவா திமோத்தி
ஏசாயா 60; 62
“கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார்.”
ஏசாயா 60 மற்றும்62 கடைசி நாட்களில் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் எவ்வாறு உலகத்தை ஆசீர்வதிக்கும் என்பதைப்பற்றிப் போதிக்க வெளிச்சம் இருளைப்பற்றியும், கண்கள், காணுதல் பற்றியும் பேசுகிறது. இந்தக் கருத்துக்களை, குறிப்பாக ஏசாயா 60:1–5, 19–20; 62:1–2இல் தேடுங்கள். இந்த அதிகாரங்களை வாசிக்கும்போது, இருளிலிருந்து அவருடைய வெளிச்சத்திற்கு தம்முடைய பிள்ளைகளைத் தேவன் எவ்வாறு கூட்டிச்சேர்ப்பார் என சிந்தியுங்கள். இந்தப் பணியில் உங்களுடைய பங்கு என்ன?
1 நேபிi 22:3–12; 3 நேபி 18:24; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 14:9; போனி ஹெச். கார்டன், “அவர்கள் காணும்படிக்கு,” லியஹோனா, மே 2020, 78–80 ஐயும் பார்க்கவும்.
ஏசாயா 64:1–5; 65:17–25; 66
ஆயிரம் வருஷ அரசாட்சியின்போது, கிறிஸ்து பூமியை அரசாளுவார்.
“முந்தின இடுக்கண்கள் மறக்கப்பட்ட” ஒரு நாளைப் பற்றி ஏசாயா பேசினான். (ஏசாயா 65:16). இந்தத் தீர்க்கதரிசனம் பல நிறைவேற்றங்களைக் கொண்டிருந்தாலும், அதன் முழு அர்த்தத்திற்கேற்ப, இயேசு கிறிஸ்து திரும்பி வருகிற நாளாகிய அந்த நாள் இன்னும் சம்பவிக்கவில்லை. ஏசாயா 64:1–5; 65:17–25; 66இல் ஏசாயா இந்த வருங்கால நாளை விவரிக்கிறான். “களிகூரு” மற்றும் “களிகூருதல்” போன்ற சொற்களை அவன் அடிக்கடி பயன்படுத்தினான் என்பதைக் கவனியுங்கள். இரட்சகரின் திரும்பிவருதல் ஏன் உங்களுக்கு ஒரு களிகூருதலின் நாளாயிருக்கும்? அவருடைய வருகைக்காக ஆயத்தப்பட உங்களால் என்ன செய்யமுடியும்?
விசுவாச பிரமாணம் 1:10; Russell M. Nelson, “The Future of the Church: Preparing the World for the Savior’s Second Coming,” Ensign, Apr. 2020, 13–17ஐயும் பார்க்கவும்.
கூடுதலாக, லியஹோனா மற்றும் இளைஞர்களின் பெலனுக்காக பத்திரிகைகளின் இந்த மாத இதழ்களைப் பார்க்கவும்.
பிள்ளைகளுக்கு போதிப்பதற்கான ஆலோசனைகள்
ஏசாயா 58:6–11
உபவாசம் என்னையும் தேவை வேண்டியிருக்கும் மற்றவர்களையும் ஆசீர்வதிக்கிறது.
-
உங்கள் பிள்ளைகள் உபவாசம் இருக்க ஊக்குவிப்பதற்கான சிறந்த வழி என்னவெனில் அவர்கள் தயாராக இருக்கும்போது இந்த பிரமாணத்திற்கான கர்த்தருடைய நோக்கங்களைப் புரிந்துகொள்ள அவர்களுக்கு உதவுவதாகும். இந்தக் கேள்விகளுக்கான பதில்களைக் கண்டறிய ஏசாயா 58:6-11ஐ ஒன்றாகப் படிக்கவும்: நாம் ஏன் உபவாசிக்கிறோம்? நாம் எவ்வாறு உபவாசிக்கிறோம்? வேத வழிகாட்டியில் உள்ள “உபவாசம், உபவாசித்தல்” என்பதையும் நீங்கள் பார்க்கலாம்.
-
உபவாசம் இருப்பதில் உங்களுக்கு அர்த்தமுள்ள அனுபவம் இருந்தால், அதை உங்கள் பிள்ளைகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் ஏன் இந்தப் பிரமாணத்தை நமக்குக் கொடுத்தார் என்பதை ஒரு நண்பரிடம் எப்படி விளக்குவார்கள் என்றும் நீங்கள் அவர்களிடம் கேட்கலாம்.
ஏசாயா 58:13–14
ஓய்வுநாள் எனக்கு மனமகிழ்ச்சியின் நாளாக இருக்கும்.
-
ஏசாயா 58:13–14ஐப் படித்த பிறகு, வாரத்தின் நாட்களை நாட்காட்டியில் சுட்டிக்காட்டி, உங்களுடன் நாட்களைச் சொல்ல உங்கள் பிள்ளைகளை அழைக்கலாம். நீங்கள் ஓய்வுநாளுக்கு வரும்போது, அவர்களை அந்த நாளை “மனமகிழ்ச்சியின் நாளென்று“ என்று அழைக்கச் சொல்லுங்கள். ஓய்வுநாள் உங்களுக்கு ஏன் மனமகிழ்ச்சியின் நாளென்று அவர்களிடம் சொல்லுங்கள்.
-
ஓய்வுநாளில் நீங்கள் “கர்த்தருக்குள் மனமகிழ்ச்சியடைவதற்கான“ வழிகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளுங்கள். ஒருவேளை உங்கள் பிள்ளைகள் தங்கள் யோசனைகளை வரைந்து அவற்றை “ஓய்வுநாள் மனமகிழ்ச்சியின் பெட்டியில்“ வைக்கலாம். பின்னர், ஓய்வுநாளில் செய்ய வேண்டிய விஷயங்களைப் பற்றிய யோசனைகள் தேவைப்படும்போது, அவர்கள் பெட்டியிலிருந்து ஒரு யோசனையை எடுக்கலாம்.
நமது ஒளி- டேன் வில்சன்
ஏசாயா 60:1-3
இரட்சகர் எனக்கு ஒளி போன்றவர்.
-
ஏசாயா 60:1–3ஐ நீங்கள் வாசிக்கும்போது உங்கள் பிள்ளைகளை கண்களை மூடிக்கொள்ளும்படி நீங்கள் சொல்லலாம். அவர்கள் “ஒளி“ என்ற வார்த்தையைக் கேட்கும்போது கண்களைத் திறக்கவும் “இருள்“ என்ற வார்த்தையைக் கேட்கும்போது மீண்டும் கண்களை மூடிக்கொள்ளவும் சொல்லுங்கள், இயேசு கிறிஸ்துவும் அவருடைய சுவிசேஷமும் பரலோக பிதாவிடம் நாம் திரும்பிச் செல்லும் வழியைக் காண உதவும் ஒளியைப் போன்றவர் என்பதை விளக்குங்கள்.
ஏசாயா 65:17-25
இயேசு திரும்பவும் வரும்போது, அவர் சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டுவருவார்.
-
இரட்சகர் திரும்பவும் வரும்போது பூமி எப்படி இருக்கும் என்பதை ஏசாயா 65:17–25 விவரிக்கிறது. உங்கள் பிள்ளைகளுடன் இந்த வசனங்களை நீங்கள் படிக்கும்போது, ஏசாயா விவரித்த “புதிய பூமியில்” வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை அறிய அவர்களுக்கு உதவுங்கள். இது ஏன் “என்றென்றைக்கும் மகிழ்ந்து களிகூர” ஒரு காலமாக இருக்கும்? (வசனம் 18).
-
“When the Savior Comes Again” (Gospel Library) போன்ற இரண்டாம் வருகையைப் பற்றிய ஒரு பாடலை நீங்கள் ஒன்றாகப் பாடலாம். இரட்சகரின் திரும்பி வருகையைப் பற்றி நீங்கள் எப்படி எதிர்நோக்குகிறீர்கள் என்பதை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளுங்கள். அந்த நாளுக்கு ஆயத்தமாக நாம் என்ன செய்ய முடியும்?
கூடுதலாக, நண்பன் பத்திரிக்கையின் இந்த மாத இதழைப் பார்க்கவும்.