“4. இயேசு கிறிஸ்துவின் சபையில் தலைமையும் ஆலோசனைக் குழுக்களும்,” பொது கையேட்டில் இருந்து தேர்வு செய்யப்பட்டவை (2023).
“4. இயேசு கிறிஸ்துவின் சபையில் தலைமையும் ஆலோசனைக் குழுக்களும்,” பொது கையேட்டில் இருந்து தேர்வு செய்யப்பட்டவை
4.
இயேசு கிறிஸ்துவின் சபையில் தலைமையும் ஆலோசனைக் குழுக்களும்
4.0
முன்னுரை
சபையில் ஒரு தலைவராக, நீங்கள் கர்த்தரின் அதிகாரமளிக்கப்பட்ட ஊழியக்காரர்கள் மூலம் உணர்த்துதலால் அழைக்கப்பட்டீர்கள். “மனுஷனின் அழியாமையையும் நித்திய ஜீவனையும் கொண்டுவரும்,” பரலோக பிதாவின் பணியில் உதவி செய்யும் சிலாக்கியம் உங்களுக்கு உள்ளது (மோசே 1:39).
4.2
சபையில் தலைமைத்துவத்தின் கொள்கைகள்
அவருடைய பூலோகத்துக்குரிய ஊழியத்தின் போது, இரட்சகர் அவருடைய சபைக்கு தலைமைத்துவத்தின் முன்மாதிரியை ஏற்படுத்தினார். அவருடைய மைய நோக்கம் பரலோக பிதாவின் சித்தத்தைச் செய்வதும், அவருடைய சுவிசேஷத்தைப் புரிந்துகொண்டு அதன்படி வாழ மற்றவர்களுக்கு உதவுவதும் ஆகும் (யோவான் 5:30; மோசியா 15:7 பார்க்கவும்).
உங்கள் அழைப்பின் கடமைகளைக் கற்றுக்கொள்ளவும் நிறைவேற்றவும் உங்களுக்குதவ தேவனின் வழிகாட்டுதலை நாடுங்கள்.
4.2.1.
ஆவிக்குரிய ரீதியில் ஆயத்தமாகவும்
இயேசு தனது பூலோகத்துக்குரிய ஊழியத்துக்காக ஆவிக்குரிய ரீதியில் தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டார் (லூக்கா 4:1–2 பார்க்கவும்). அப்படியே, நீங்கள் ஜெபம், வேதப் படிப்பு மற்றும் அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிதல் ஆகியவற்றின் மூலம் பரலோக பிதாவிடம் நெருங்கி வந்து ஆவிக்குரிய ரீதியில் ஆயத்தமாகுங்கள்.
நீங்கள் வழிநடத்துபவர்களின் தேவைகளைப் புரிந்துகொள்ளவும், தேவன் உங்களைச் செய்ய அழைத்த பணியை எவ்வாறு நிறைவேற்றுவது என்பதைப் புரிந்துகொள்ளவும் வெளிப்பாட்டைத் நாடுங்கள்.
ஆவிக்குரிய வரங்களை நாடுபவர்களுக்கு அதை அவர்கள் மீது அருளுவதாகவும் கர்த்தர் வாக்களித்துள்ளார் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 46:8 பார்க்கவும்).
4.2.2.
தேவனின் பிள்ளைகள் அனைவருக்கும் ஊழியம் செய்யவும்
இயேசு செய்ததைப் போல நீங்கள் சேவை செய்யும் மக்களை நேசியுங்கள். அவருடைய அன்பினால் நிரப்பப்பட “இருதயத்தின் முழு ஊக்கத்தோடும்” ஜெபியுங்கள் (மரோனி 7:48).
தனிநபர்கள் தங்கள் மனமாற்றத்தை ஆழப்படுத்தவும், பரலோக பிதா மற்றும் இயேசு கிறிஸ்துவின் மீதான விசுவாசத்தை வலுப்படுத்தவும் உதவுங்கள். அவர்கள் அடுத்த நியமத்தைப் பெறும்போது உடன்படிக்கைகளைச் செய்யத் தயாராக அவர்களுக்கு உதவுங்கள். அவர்கள் செய்த உடன்படிக்கைகளைக் கைக்கொள்ளவும், மனந்திரும்புதலின் ஆசீர்வாதங்களில் பங்குபெறவும் அவர்களை ஊக்குவிக்கவும்.
4.2.3.
இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் கறிபிக்கவும்
தலைவர்கள் அனைவரும் ஆசிரியர்கள். ஒரு ஆசிரியராக இரட்சகரின் முன்மாதிரியைப் பின்பற்ற முயலுங்கள் (அத்தியாயம் 17; இரட்சகரின் வழியில் கற்பித்தல் பார்க்கவும்). உங்கள் வார்த்தைகள் மற்றும் செயல்கள் மூலம், இயேசு கிறிஸ்துவின் கோட்பாட்டையும் அவருடைய சுவிசேஷத்தின் கொள்கைகளையும் கற்பிக்கவும் (3 நேபி 11:32–33; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 42:12–14 பார்க்கவும்).
வேதங்களிலிருந்தும் பிற்கால தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளிலிருந்தும் கற்பிக்கவும் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 52:9 பார்க்கவும்).
நீங்கள் ஒரு சபைக் கூட்டம் அல்லது செயல்பாட்டிற்கு தலைமை தாங்க அழைக்கப்பட்டால் அல்லது நியமிக்கப்பட்டால், கற்பித்தல் மேம்படுத்துவதாகவும், கோட்பாட்டு ரீதியாக சரியானதாகவும் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 50:21–23 பார்க்கவும்).
4.2.4.
நீதியில் தலைமை தாங்கவும்
ஒவ்வொரு தலைமை அலுவலரும் ஆசாரியத்துவத் திறவுகோல்களை தரித்திருக்கும் ஒரு நபரின் வழிகாட்டுதலின் கீழ் பணியாற்றுகிறார் (3.4.1 பார்க்கவும்). இந்த அமைப்பு தேவனின் பணியைச் செய்வதில் பொறுப்பு மற்றும் பொறுப்புணர்வின் ஒழுங்குள்ள மற்றும் தெளிவான வழிகளை வழங்குகிறது.
ஒரு தலைமை அதிகாரி மற்றொரு நபருக்கு தலைமை தாங்குவதற்கான தற்காலிக பணியை வழங்கலாம்.
ஒரு சபை அமைப்பில், கூட்டம் அல்லது செயல்பாட்டிற்கு தலைமை தாங்கும் ஒரு தலைவர், கர்த்தரின் நோக்கங்கள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்கிறார். இதைச் செய்வதில், சுவிசேஷக் கொள்கைகள், சபைக் கொள்கைகள் மற்றும் பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலை தலைவர் பின்பற்றுகிறார்.
ஒரு அழைப்பு அல்லது தலைமை தாங்கும் பணியை ஏற்கும் நபரை மற்றவர்களை விட முக்கியமானவராகவோ அல்லது மதிப்புடையவராகவோ ஆக்குவதில்லை (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 84:109–10 பார்க்கவும்).
கர்த்தருடைய சபையில் உள்ள எந்த அமைப்பிலும் தலைமை தாங்க விரும்புவது பொருத்தமானதல்ல (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 121:34–37 பார்க்கவும்).
4.2.5.
பொறுப்பை பிரதிநிதித்துவம் அளித்து, பொறுப்புணர்வை உறுதிப்படுத்தவும்
இரட்சகர் தம் சீஷர்களுக்கு அர்த்தமுள்ள பணிகளையும் பொறுப்புகளையும் கொடுத்தார் (லூக்கா 10:1 பார்க்கவும்). அவர்கள் செய்யக் கொடுக்கப்பட்ட பணிக்கு பொறுப்பேற்க அவர்களுக்கு ஒரு வாய்ப்பையும் கொடுத்தார் (லூக்கா 9:10 பார்க்கவும்).
ஒரு தலைவராக, மற்றவர்களுக்கு பணிகளை பிரதிநிதித்துவம் அளிப்பதன் மூலம் அவர்கள் வளர நீங்கள் உதவலாம். தேவனின் பணியைச் செய்வதில் அனைத்து உறுப்பினர்களையும் ஈடுபடுத்த முயற்சி செய்யுங்கள்.
பிரதிநிதித்துவம் அளிப்பது உங்கள் சேவையை மேலும் பயனுள்ளதாக மாற்றும். உங்கள் உயர்ந்த முன்னுரிமைகளில் கவனம் செலுத்த முடியும்படியாக எதைப் பிரதிநிதித்துவப்படுத்துவது என்பது குறித்து பரிசுத்த ஆவியின் வழிகாட்டுதலைத் தேடுங்கள்.
4.2.6.
மற்றவர்களை தலைவர்களாகவும் ஆசிரியர்களாகவுமிருக்க ஆயத்தப்படுத்தவும்
சபை அழைப்புகள் அல்லது நியமிப்புகளில் யார் பணியாற்றலாம் என்பதைக் கருத்தில் கொள்ளும்போது, ஜெபத்துடன் இருங்கள். கர்த்தர் தாம் அழைப்பவர்களைத் தகுதிப்படுத்துவார் என்பதை நினைவில் வையுங்கள். மிக முக்கியமான காரியம் என்னவென்றால், அவர்கள் சேவை செய்ய தயாராக இருக்கிறார்கள், தாழ்மையுடன் தேவனின் உதவியை நாடுகிறார்கள், தகுதியுள்ளவர்களாக இருக்க முயற்சி செய்கிறார்கள்.
4.2.7.
கூட்டங்கள், பாடங்கள் மற்றும் செயல்பாடுகளை தெளிவான நோக்கங்களுடன் திட்டமிடவும்
தெளிவான நோக்கங்களைக் கொண்ட கூட்டங்கள், பாடங்கள் மற்றும் செயல்பாடுகளைத் திட்டமிடுவதில் பரிசுத்த ஆவியின் வழிகாட்டுதலைத் தேடுங்கள். இந்த நோக்கங்கள் தனிநபர்களையும் குடும்பங்களையும் பலப்படுத்த வேண்டும், அவர்களை கிறிஸ்துவிடம் நெருக்கமாக கொண்டு வர வேண்டும், மேலும் தேவனின் இரட்சிப்பு மற்றும் மேன்மையடைதலின் பணியை நிறைவேற்ற உதவ வேண்டும் (அத்தியாயங்கள் 1 மற்றும் 2 பார்க்கவும்).
4.2.8.
உங்கள் முயற்சிகளை மதிப்பீடு செய்யவும்
ஒரு தலைவராக உங்கள் பொறுப்புகளையும் ஆவிக்குரிய வளர்ச்சியையும் வழக்கமாய் மதிப்பாய்வு செய்யவும். நீங்கள் வழிநடத்துபவர்களின் வளர்ச்சியையும் கருத்தில் கொள்ளுங்கள்.
முதன்மையாக, இயேசு கிறிஸ்துவின் விசுவாசமிக்க சீடர்களாக ஆவதற்கு தேவனின் பிள்ளைகளுக்கு உதவுவதில் உங்கள் அர்ப்பணிப்பால் ஒரு தலைவராக உங்கள் வெற்றி அளவிடப்படுகிறது. ஆவியானவர் உங்கள் மூலம் செயல்படுவதை நீங்கள் உணரும்போது, உங்கள் முயற்சிகளில் கர்த்தர் மகிழ்ச்சியடைகிறார் என்பதை நீங்கள் அறியலாம்.
4.3
சபையில் ஆலோசனைக் குழுக்கள்
அவருடைய பணியைச் செய்வதில் ஒன்றாக ஆலோசனை செய்ய, கர்த்தர் தமது சபையின் தலைவர்களை அறிவுறுத்தியுள்ளார் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 41: 2–3 பார்க்கவும்). ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் தேவனுடைய பிள்ளைகளின் தேவைகளைப் புரிந்துகொண்டு, அவைகளை எப்படிச் சந்திக்க உதவுவது என்பதைத் திட்டமிடும்போது அவர்கள் வெளிப்பாட்டைப் பெறுவதற்கான வாய்ப்புகளை ஆலோசனைக் குழுக்கள் வழங்குகின்றன.
4.4
பயனுள்ள ஆலோசனைக் குழுக்களின் கொள்கைகள்
4.4.1.
ஆலோசனைக் குழுக்களின் நோக்கங்கள்
உறுப்பினர்கள் நியமங்களைப் பெறுவதற்கும் தொடர்புடைய உடன்படிக்கைகளைக் கைக்கொள்ளுவதற்கும் ஆலோசனைக் குழுக்கள் சிறப்பு முக்கியத்துவத்தைக் கொடுக்கின்றன.
4.4.2.
ஆலோசனைக் குழுக் கூட்டங்களுக்காக ஆயத்தம் செய்தல்
தலைவர்களும் ஆலோசனைக் குழுக்களும் தவறாமல் கூட எதிர்பார்க்கப்படுகிறது. ஆலோசனைக் குழுக்கள் கூட்டங்களைத் திட்டமிடுதலில் தேவனின் வழிகாட்டுதலை இந்த தலைவர்கள் நாடுகின்றனர். அவர்கள் என்ன கலந்துரையாட வேண்டும் என்பதை தீர்மானிப்பதில் ஆலோசனைக் குழுக்களின் உறுப்பினர்களிடமிருந்து உள்ளீட்டையும் நாடுகிறார்கள்.
விவாதிக்க வேண்டிய காரியங்களை சபை உறுப்பினர்களுக்கு முன்கூட்டியே தலைவர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த காரியங்களைப்பற்றிய உள்ளுணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள ஆலோசனைக் குழுக்களின் உறுப்பினர்கள் ஆயத்தமாகிறார்கள்.
4.4.3.
விவாதமும் தீர்மானங்களும்
ஒரு ஆலோசனைக் குழுவின் கூட்டத்தின் போது, தலைவர் (அல்லது தலைவர் நியமிக்கும் ஒருவர்) கருத்தில் கொள்ளப்படும் காரியத்தை விளக்குகிறார். பின்னர், தலைவர், கேள்விகளைக் கேட்டு, யோசனைகளை நாடி, அனைத்து ஆலோசனைக் குழு உறுப்பினர்களிடையே விவாதத்தை ஊக்குவிக்கிறார்.
உறுப்பினர்கள் ஆலோசனைகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள், ஒருவருக்கொருவர் மரியாதையுடன் செவிகொடுக்கிறார்கள். அவர்கள் கர்த்தருடைய சித்தத்தை அறிய முற்படுகையில், உணர்த்துதலும் ஒற்றுமையின் ஆவியும் மேலோங்க முடியும்.
பெண்கள் மற்றும் ஆண்களை உள்ளடக்கிய ஒரு ஆலோசனைக் குழுவில், தலைவர் இருவரிடமிருந்தும் உள்ளுணர்வு மற்றும் யோசனைகளை நாடுகிறார். பெண்கள் மற்றும் ஆண்கள் பெரும்பாலும் தேவையான சமநிலையை வழங்கும் வெவ்வேறு கண்ணோட்டங்களைக் கொண்டுள்ளனர்.
ஆலோசனைக் குழுவின் விவாதங்களை ஒரு தலைவர் வழிநடத்துகிறார். இருப்பினும், அவர் அல்லது அவள் பேசுவதை விட அதிகமாக செவிகொடுக்க வேண்டும்.
கலந்துரையாடலுக்குப் பிறகு, தலைவர் நடவடிக்கையின் போக்கை முடிவு செய்யலாம் அல்லது கூடுதல் தகவல் மற்றும் வழிகாட்டுதலைத் தேடும்போது முடிவை தள்ளிவைக்கலாம்.
4.4.4.
ஒற்றுமை
ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்கள் பரலோக பிதா மற்றும் இயேசு கிறிஸ்துவுடன் விருப்பத்திலும் நோக்கத்திலும் ஒன்றாக மாற முயல்கின்றனர். அவர்கள் தங்கள் விவாதங்களிலும் தீர்மானங்களிலும் ஒற்றுமைக்காக பாடுபடுகிறார்கள்.
4.4.5.
செயலும் பொறுப்பேற்றலும்
ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் தங்கள் பெரும்பாலான பணிகளை ஆலோசனைக் குழுக் கூட்டங்களுக்கு முன்னும் பின்னும் செய்கிறார்கள். கூட்டங்களின் போது, தீர்மானங்களை செயல்படுத்துவதற்கான திட்டங்களை உருவாக்குவதில் அவர்கள் உணர்த்துதலை நாடுகின்றனர். இந்த திட்டங்கள் தொடர்பான பணிகளை நிறைவேற்ற, ஆலோசனைக் குழுத் தலைவர் உறுப்பினர்களை அழைக்கிறார்.
ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் தங்கள் பணிகளைப்பற்றி அறிக்கை கொடுக்கிறார்கள். முன்னேற்றத்திற்கு பொதுவாக தொடர்ச்சியான கவனம் மற்றும் பின்தொடர்தல் பணிகள் தேவை.
4.4.6.
இரகசியத்தன்மை
தனிப்பட்ட தகவல்களை ஆலோசனைக் குழுவுடன் பகிர்ந்து கொள்ளும்போது தலைவர்கள் விவேகத்தைப் பயன்படுத்துகின்றனர். இந்தத் தகவலைப் பகிர்ந்து கொள்ள, பொதுவாக ஒரு உறுப்பினரின் அனுமதியை அவர்கள் பெறுவார்கள்.
ஆலோசனைக் குழுத் தலைவரிடமிருந்து வரும் ஒரு பணியை நிறைவேற்ற தேவைப்படும்வரை, ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் தனிப்பட்ட தகவல்களை ஆலோசனைக் குழுவுக்கு வெளியே பகிர்ந்து கொள்ளக்கூடாது.
சில காரியங்கள் முழு ஆலோசனைக் குழு முன் கொண்டு வர முடியாத அளவுக்கு உணர்திறன் கொண்டவை.