ஆசிய பிரதேச தலைமைத்துவச் செய்தி
இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் வல்லமையைப் பெறுதல்
வேதங்களில் எத்தனை பேர் இயேசு கிறிஸ்துவின் குணப்படுத்தும் வல்லமையைப் பெற்றுக்கொண்டார்கள் என்பதைப் பார்ப்பது உணர்த்துதலளிக்கிறது. தனிநபர்கள் இரட்சகரிடம் நெருங்கி வந்து அவர் மீது விசுவாசம் வைத்தபோதுமீண்டும் மீண்டும் அற்புதங்கள் நிகழ்ந்தன. மாற்கு 5:25–34-இல், பல ஆண்டுகளாக இரத்தப்போக்கு நோயால் அவதிப்பட்ட ஒரு ஸ்திரீ, இயேசுவின் ஆடையின் ஓரத்தைத் தொட்டபோது குணமடைந்தாள். இயேசு அவளிடம், “மகளே, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது” என்று கூறினார். இதேபோல், மாற்கு 10:46–52-இல், இயேசு அருகில் இருப்பதை அறிந்த ஒரு குருடன், "இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும்" என்று உரக்கக் கூப்பிட்டான். அவனுக்குப் பார்வை அளித்த பிறகு, இரட்சகர் அவனிடம் , “நீ போகலாம்; உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது ” என்றார். இயேசு கிறிஸ்துவின் குணப்படுத்தும் வல்லமையைப் பெற, அவர் மீது விசுவாசம் அவசியம் என்பதை இந்த விவரங்கள் தெளிவாகக் கற்பிக்கின்றன.
இயேசு இனிமேல் நம்மிடையில் சரீரப்பிரகாரமாக இப்பூமியில் நடப்பதில்லை. நாம் எவ்வாறு அவரிடம் நெருங்கி வந்து அவருடைய பாவநிவர்த்தியின் வல்லமையை இன்று பெற முடியும்? ஆல்மா 7:21- இல் மார்மன் புஸ்தகம் போதிப்பதென்னவெனில்,"அசுசியானதும், சுத்தமற்றதுமான எதுவும் தேவனுடைய ராஜ்யத்தினுள் ஏற்றுக்கொள்ளப்படுவதுமில்லை." பாவத்தை விட்டு விலகி மனந்திரும்புவதற்கு நாம் ஒரு மனப்பூர்வமான முடிவை எடுக்க வேண்டும் என்பதை இது நமக்கு நினைவூட்டுகிறது. மனந்திரும்புதலுக்கு மனமாற்றம் தேவை - இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுவதற்கான உண்மையான ஒரு விருப்பம். தண்ணீரால் ஞானஸ்நானம் பெறுவதன் மூலமும், பரிசுத்த ஆவியின் திடப்படுத்தலின் மூலமும், நம் சரீரங்களும் ஆத்துமாக்களும் சுத்திகரிக்கப்பட்டு பரிசுத்தப்படுத்தப்படலாம். இந்தப் பரிசுத்த உடன்படிக்கைகளைச் செய்வதன் மூலம், நமது இரட்சகருடன் நேரடியான மற்றும் தனிப்பட்ட உறவை ஏற்படுத்துகிறோம்.
நாம் கீழ்ப்படிவதாக வாக்குத்தத்தம் செய்த கட்டளைகளைக் கடைப்பிடிக்கும்போது, இந்த உடன்படிக்கை உறவு நம்மைப் பாதுகாத்து பலப்படுத்துகிறது. ஆனால் வாழ்க்கையோ சோதனைகளும் உபத்திரவங்களும் நிறைந்தது, அதனால் சில நேரங்களில் நாம் தவறுகிறோம். நாம் தவறுகளைச் செய்யும்போது, இரட்சகரின் எல்லையற்ற பாவநிவர்த்தியானது நமக்கு திரும்பிச் செல்வதற்கான வழியையும் வழங்குகிறது. யோவான் 6-ல், இயேசு ஐந்து அப்பங்களையும் இரண்டு சிறிய மீன்களையும் கொண்டு ஐயாயிரம் பேருக்கு உணவளித்தார், எல்லோரும் திருப்தியடைந்த பிறகு உணவு மீதமுமிருந்தது. அவருடைய பாவநிவர்த்தியின் வல்லமையானது உலகப்பிரகாரமான வரம்புகளைக் கடந்தது—அது எல்லையற்றது என்பதை இந்த அற்புதம் விளக்குகிறது. பின்னர் இயேசு, “என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசி நாளில் எழுப்புவேன்” என்று போதித்தார். என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது. என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவன் என்னிலே நிலைத்திருக்கிறான், நானும் அவனிலே நிலைத்திருக்கிறேன்” (யோவான் 6:54–56). அவருடைய பலியின் மூலம் அனைவரும் மன்னிப்பு, குணமடைதல், ஆவிக்குரிய புத்துணர்ச்சி மற்றும் மரணத்தை வெல்லலாம் என்று அவருடைய வார்த்தைகள் தெளிவாகக் கூறுகின்றன! ஒவ்வொரு வாரமும் நாம் திருவிருந்தில் பங்கேற்கும்போது, நாம் புதிதாகப் பரிசுத்தப்படுத்தப்பட்டு இயேசு கிறிஸ்துவிடம் நெருங்கி வருகிறோம். உடன்படிக்கைப் பாதையில் நிலைத்திருப்பதன் மூலம், அவருடைய பாவநிவர்த்தியின் வல்லமையை நாம் தொடர்ந்து பெற முடியும்.
அத்தகைய பரிசுத்த வல்லமையை நாம் பெறுவதால், மற்றவர்களை ஆசீர்வதிக்க அவ்வல்லமையைப் பயன்படுத்துவதற்கும் நாம் பொறுப்புள்ளவர்கள் ஆகிறோம். மத்தேயு 16:19-ல் இயேசு, பரலோக ராஜ்யத்தின் திறவுகோல்களைப் பூமியிலும் பரலோகத்திலும் கட்டவும் / அவிழ்க்கவும் அதிகாரம் கொடுப்பார் என்று போதித்தார். ஆசாரியத்துவ ஆசீர்வாதங்கள், ஆலய நியமங்கள் மற்றும் உயிரோடிருப்பவர்களுக்கும் மரித்தோருக்குமான பரிசுத்தப் பணியின் மூலம், ஆத்துமாக்களை தேவனிடம் நெருக்கமாகக் கொண்டுவர நாம் உதவுகிறோம். இந்த நியமங்கள் இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் வல்லமையை ஆழமான மற்றும் அர்த்தமுள்ள வழிகளில் அனுபவிக்க நமக்கு உதவுகின்றன. இந்த பரிசுத்த வல்லமையைப் பற்றி நாம் மற்றவர்களுக்குச் சாட்சியமளிக்க வேண்டும். நாம் என்ன செய்திருந்தாலும், எவ்வளவு பாரமான சுமைகளைச் சுமந்தாலும், எத்தனை முறை விழுந்திருந்தாலும், இரட்சகரிடம் வந்தால், இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் வல்லமை நம் அனைவரையும் இரட்சிக்கும்.
இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் வல்லமையைப் பெறுவது பரலோகத்திலிருந்து வரும் ஒரு அற்புதமான ஆசீர்வாதமாகும், அது நித்தியத்திற்கு வழிவகுக்கிறது. விசுவாசம், மனந்திரும்புதல், பரிசுத்த உடன்படிக்கைகள், மற்றும் நியமங்கள் மூலமான தொடர்ச்சியான புதுப்பித்தலில் இது வெளிப்படுகிறது. நாம் கிறிஸ்துவைப் பின்பற்றி, மற்றவர்களும் அவ்வாறே செய்ய உதவும்போது, அவருடைய எல்லையற்ற வல்லமை நம்மைக் குணப்படுத்துகிறது, நம்மைப் பலப்படுத்துகிறது, மேலும் நம் பரலோகப் பிதாவிடம் நம்மை வழிநடத்துகிறது. நம் அன்பான குடும்பத்தினருடன் நித்தியமாக முழுமையான மகிழ்ச்சியை நாம் சேர்ந்து அனுபவிப்போம். ■