"நமது அன்பிற்குரிய இரட்சகரின் வெற்றி", லியஹோனா, ஏப்ரல் 2026
மாதாந்தர லியஹோனா செய்தி, ஏப்ரல் 2026
நமது அன்பிற்குரிய இரட்சகரின் வெற்றி
இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற பரிசின் மகத்துவத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை. இது வேறொருவரிடமிருந்து ஒருபோதும் எதிர்பார்க்கப்படாது. அவர் "ஒரேதரம்" பாடுபட்டார்.
ஆண்டுகள் கடந்து செல்லச் செல்ல, நமது இரட்சகரின் அளவிட முடியாத பரிசாகிய இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியைப் பற்றி நான் சிந்திக்கும்போதும், படிக்கும்போதும், அதில் அளவற்ற ஆறுதலைக் கண்டடையும்போதும், நான் முன்பை விட அதிகத் தாழ்மையுள்ளவனாக மாறுகிறேன். கெத்செமனே தோட்டத்தில், சிலுவையில், மற்றும் கல்லறையில் நடந்த நிகழ்வுகளால் மனிதகுலத்தின் வருங்காலம் எப்படி மாறிப்போனது என்பதை மனித அறிவால் அளவிடவே முடியாது.
நாம் அனைவரும் மனவேதனையையும் துன்பத்தையும் சந்திக்கிறோம்.
ஒரு அப்போஸ்தலன் என்ற முறையில் எனது அழைப்பின் பேரில், நான் பல இடங்களுக்குப் பயணம் செய்துள்ளேன்; மேலும் உலகின் பல பகுதிகளில் உள்ள குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பெரியவர்களைச் சந்திக்கும் சிலாக்கியத்தையும் பெற்றுள்ளேன். வாழ்க்கையில் மிகுந்த மகிழ்ச்சியான தருணங்கள் உண்டு; ஆனால், நான் என் கண்களால் கண்டதும் என் இருதயத்தின் ஆழத்தில் உணர்ந்ததுமான ஒரு விஷயம் என்னவென்றால், மகிழ்ச்சிக்கும் சந்தோஷத்திற்கும் மேலாக, வாழ்க்கை துயரத்தையும் துன்பத்தையும் நிறைந்த தருணங்களையும் கொண்டுள்ளது.
தங்கள் வீட்டில் குழந்தைகள் தூங்கிக்கொண்டிருந்தபோது, ஒரு ஊடுருவல்காரனால் கொடூரமாகக் கொல்லப்பட்ட பெற்றோரின் நான்கு சிறு குழந்தைகளுடன் நான் அமர்ந்திருந்ததை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது அல்லது நம்பகமான ஒரு உறவினரால் சிறுமியாக இருந்தபோது துஷ்பிரயோகம் செய்யப்பட்ட ஒரு பெண்ணைச் சந்தித்ததையோ அல்லது, மிதிவண்டியிலிருந்து கீழே விழுந்து மூளையில் பலத்த காயமடைந்து, இன்னும் சில நிமிடங்களில் இறக்கவிருந்த ஒரு சிறுமியின் படுக்கையருகே அமர்ந்திருந்ததையோ; அல்லது பல ஆண்டுகளாகத் தனது கணவன் தன்னை ஏமாற்றி, ஆலய உடன்படிக்கைகளை மிக மோசமான முறையில் மீறியதை எண்ணி விம்மி அழுத ஒரு பெண்ணின் அழுகுரலைக் கேட்டதையோ என்னால் என்றும் மறக்க முடியாது.
தங்கள் வளர்ந்த பிள்ளை சுவிசேஷத்தின் சத்தியங்களை இனி நம்பப்போவதில்லை என்று முடிவு செய்து, குடும்பத்திலுள்ள மற்றவர்களின் விசுவாசத்தையும் பலவீனப்படுத்த முயன்றதைக் கண்டு, அந்தத் தம்பதியினர் அனுபவித்த வேதனையை நானும் உணர்ந்திருக்கிறேன். வாழ்க்கையில் மிகுந்த எதிர்காலம் இருந்தும் தற்கொலை செய்துகொண்ட ஒரு இளைஞனின் துயரத்தில் மூழ்கியிருந்த பெற்றோர்களையும் நண்பர்களையும் நான் சந்தித்திருக்கிறேன். பாவம் செய்துவிட்டு, அதற்காக உண்மையாகவே மனந்திரும்ப விரும்பியவர்களின் ‘தெய்வீக துக்கத்தை’ நான் உணர்ந்திருக்கிறேன்; அதேபோல், அந்தப் பாவத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் அடைந்த பேரழிவையும் நான் கண்டிருக்கிறேன்.
மனநலப் பாதிப்பால் பாதிக்கப்பட்டவர்கள் அனுபவிக்கும் மனவேதனையையும், அவர்களுக்கு உதவ வழியில்லாமல் மௌனமாகத் துயரப்படும் அவர்களைச் சார்ந்தவர்களுடைய வேதனையையும் நான் பார்த்திருக்கிறேன். இயற்கை பேரிடர்கள், வெள்ளப்பெருக்கு, புயல்கள், தீ விபத்துகள் மற்றும் நிலநடுக்கங்கள் ஆகியவற்றால் ஏற்பட்ட மிகப்பெரிய தனிப்பட்ட இழப்புகளை நான் பார்த்திருக்கிறேன். அரசியல் கொந்தளிப்புகள், போர்கள் மற்றும் அழிவுகளால் நாடுகளுக்குள் ஏற்படும் பேரிடர்களையும்; சரியானதைச் செய்ய விரும்புபவர்கள் மற்றும் அப்பாவி மக்கள் மீது எதிர்பாராத இன்னல்கள் திணிக்கப்படும்போது அவர்கள் அனுபவிக்கும் வேதனையையும் நான் கண்டிருக்கிறேன்.
கோல்பி லார்சனின் குணமாக்கும் கரங்கள் இதனை நகலெடுக்க அனுமதி இல்லை.
இரட்சகர் நமக்கு உதவி செய்கிறார்
இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியைப் பற்றி, பிரதான தலைமைத்துவத்தின் இரண்டாம் ஆலோசகராக இருந்த தலைவர் ஜேம்ஸ் இ. பாஸ்ட் (1920-2007) அவர்கள் கூறியதாவது: "காயமடைந்தவர்கள் தங்கள் சோதனைகளை எதிர்கொண்டு செயல்பட வேண்டும்; அப்போது இரட்சகர் ‘தமது ஜனங்களின் பலவீனங்களுக்கு ஏற்ப உதவுவார்’ [ஆல்மா 7:12]. அவர் நம்முடைய சுமைகளைச் சுமக்க நமக்கு உதவுவார். சில காயங்கள் மிகவும் வேதனையையும் ஆழமானவையாகவும் இருக்கின்றன; ஒரு மேலான வல்லமையின் உதவியும், மறுமையில் பரிபூரண நீதியும் இழப்பீடும் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இல்லாமல் அவற்றை ஆற்ற முடியாது. அவர் நமது வலியைப் புரிந்துகொள்கிறார், மேலும் நமது இருண்ட நேரங்களிலும்கூட நம்மோடு உடன் வருவார்".
இரட்சகரின் அன்பின் மீதும் இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தி மூலம் நமக்கு வாக்களிக்கப்பட்ட முடிவற்ற ஆசீர்வாதங்களின் மீதும் நான் மேலும் ஈர்க்கப்படுகிறேன். அளவிட முடியாத வேதனையை உண்டாக்கும் வாழ்க்கையின் கடினமான அனுபவங்களிலிருந்து அவர் நம்மை முழுமையாகக் காக்கவில்லை. ஆனால் நிரந்தரமான துன்பத்திலிருந்தும், பரலோக பிதாவிடமிருந்து பிரிந்து போகும் நிலைமையிலிருந்தும் அவர் நம்மை பாதுகாத்தார். மேலும், அவர் அனுபவித்த அனைத்தையும் உள்ளடக்கிய வேதனையின் மூலம், தேவனின் முன்னிலையில் முழுமையான ஆனந்தமும் நித்திய மகிழ்ச்சியும் அடையும் வாய்ப்பை அவர் நமக்குத் தந்தார்.
தலைவர் டாலின் எச். ஓக்ஸ் அவர்கள் நமக்கு நினைவூட்டியதாவது: " தேவன் மனிதர்களுக்குக் கொடுத்த மிக வலிமையான உதவி, ஒரு இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவை அளித்ததுதான்; நமது பாவங்களுக்காக விலையைச் செலுத்துவதற்காக துன்புற்றார், மேலும் மனந்திரும்பிய பாவங்களுக்கு மன்னிப்பை வழங்கினார். அந்த இரக்கமுள்ள மற்றும் மகிமைமிக்க பாவநிவர்த்தி, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மீதான விசுவாசம் ஏன் நற்செய்தியின் முதல் கொள்கையாக இருக்கிறது என்பதை விளக்குகிறது. ‘அவருடைய பாவநிவர்த்தி மரித்தோரின் உயிர்த்தெழுதலை சம்பவிக்கப்பண்ணுகிறது’ (ஆல்மா 42:23), மேலும் உலகத்தினுடைய பாவங்களுக்காக அவர் பாவநிவர்த்திபண்ணுவார், (ஆல்மா 34:8). நம்முடைய மனந்திரும்பிய பாவங்கள் அனைத்தையும் நீக்கி, நமது சாவுக்கேதுவான பலவீனங்களில் நமக்குத் துணையாக இருக்க நமது இரட்சகருக்கு வல்லமையை அளிக்கிறது."
டெல் பார்சன் அவர்களின் கெத்செமனேவில் ஜெபம், என்ற படைப்பிலிருந்து எடுத்த விவரம், சபைப் பயன்பாட்டிற்கு மட்டுமே நகலெடுக்கப்படலாம்.
நித்தியத்தின் முக்கிய நிகழ்வு
நான் தனிப்பட்ட முறையில் கண்ட துன்பங்களை நினைக்கும் போது—பூமியில் நடந்தோ நடக்கவிருக்கும் அனைவரின் துன்பங்களுடன் ஒப்பிட்டால் அவை அளவிட முடியாத அளவில் சிறியவையாக இருந்தாலும், மனிதகுலம் முழுவதின் பாவங்களுக்காகவும் மற்றும் வலிகளுக்காகவும், அந்தப் பரிசுத்தமான தருணங்களில், அனைத்தையும் உள்ளடக்கிய அந்தப் பெரும் வேதனையை அனுபவித்த போது, நமது இரட்சகரின் இருதயம், மனம், உடல் மற்றும் ஆத்துமாவில் ஏற்பட்ட அந்த உணர்வுகளை விவரிக்க என்னிடம் வார்த்தைகளே இல்லை.
எல்லா நித்தியத்திற்கும் மிக முக்கியமான நிகழ்வு, இயேசு எருசலேம் நகர மதில்களுக்கு வெளியே ஒலிவ மலையில் உள்ள கெத்செமனே என்னப்பட்ட இடத்திற்கு சென்றபோது தொடங்கியது’ (மத்தேயு 26:36). அவர் தமது சீஷர்களை நோக்கி: "என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது" என்று சொன்னார்(மத்தேயு 26:38).
என் பிதாவே, இந்தப்பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படிசெய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார். (மத்தேயு 26:39). அவர் சீஷர்களிடத்தில் வந்து, அவர்கள் நித்திரைபண்ணுகிறதைக் கண்டு, மீண்டும் அங்கிருந்து சென்று, இரண்டாம் முறையாக ஜெபித்தார். "என் பிதாவே, இந்தப் பாத்திரத்தில் நான் பானம்பண்ணினாலொழிய இது என்னைவிட்டு நீங்கக்கூடாதாகில், உம்முடைய சித்தத்தின்படி ஆகக்கடவது. … என்று மூன்றாந்தரமும் அந்த வார்த்தைகளையே அவர் சொல்லி ஜெபம்பண்ணினார்" (மத்தேயு 26:42, 44).
இயேசு அந்த கசப்பான பாத்திரத்திலிருந்து பருகினார்; மேலும் கெத்செமனே தோட்டத்திலும், சிலுவையின் மீதும் நமது அறிவுக்கு எட்டாத அளவை விட மேலாகத் துன்பப்பட்டார். பாவமற்றவராகிய அவர், நம்முடைய பாவங்கள் அனைத்தையும் தாமே ஏற்றுக்கொண்டார்; அதனால், நாம் அவரிடம் வந்து மனந்திரும்பும்போது, நம்முடைய பாவங்களும் சுமைகளும் நம்மிடமிருந்து நீக்கப்படுகின்றன ( 2 கொரிந்தியர் 5:21காண்க).
இயேசுவின் பாடுகள், மரணம் மற்றும் அவரது பாவநிவர்த்தி ஆகியவை நீண்ட காலமாகவே எதிர்பார்க்கப்பட்டவையாக இருந்தன. இயேசு பிறப்பதற்கு 700 ஆண்டுகளுக்கு முன்பே ஏசாயா தீர்க்கதரிசி, ‘கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்.’ (ஏசாயா 53:6) என்று தீர்க்கதரிசனம் உரைத்தார். இயேசு கிறிஸ்து தம்மை விசுவாசித்து, தங்கள் பாவங்களுக்காக மனந்திரும்பும் யாவருக்கும், ‘பாவமன்னிப்பு’ ( மத்தேயு26:28) கிடைக்கும் பொருட்டு, தம்முடைய ஜீவனைக்கொடுப்பதைப் பற்றிப் பேசினார். (மத்தேயு 20:28; 1 தீமோத்தேயு 2:6-ஐயும் காண்க) நாம் குணமடையும் பொருட்டு, அவர் ‘நமது பாவங்களுக்காகப் பாடுபட்டார்’ (1 பேதுரு 3:18) என்றும், ‘அவருடைய தழும்புகளால் நாம் குணமானோம்’ ( 1 பேதுரு 2:24காண்க) என்றும் பேதுரு விவரித்துள்ளார்." நம்முடைய பிதாவின் பிரசன்னத்துக்கு நாம் திரும்புவதற்காக, வேறு யாராலும் செய்ய முடியாததை அவர் செய்தார். அவர் ‘நமது அக்கிரமங்களினிமித்தம் நொறுக்கப்பட்டார்’ (ஏசாயா 53:5).
கெத்செமனேயின் வேதனையைத் தொடர்ந்து, அவரது துயரம் நீடித்தது—தன்னுடன் நடந்த ஒருவராலேயே காட்டிக்கொடுக்கப்பட்டது, அநீதியான ஆட்சியாளர்களுக்கு முன் கேலி செய்யப்பட்டது, கசையடிகளால் அவரது உடல் சிதைக்கப்பட்ட வலி, இரக்கமற்ற கொடிய வீரர்களால் அவரது தலையில் அழுத்தப்பட்ட முள்முடி (யோவான் 18:2–3, 12–14; மாற்கு 15:15–20காண்க),மற்றும் கொல்கொதாவை நோக்கி அவர் சென்றபோது, சிதைக்கப்பட்ட அவரது முதுகுச் சதையின் மேல் சுமத்தப்பட்ட சிலுவையின் கனமான மரம் (யோவான் 19:16–17காண்க) என அவரது பாடுகள் தொடர்ந்தன.
சிலுவையின் மீது, கெத்செமனேயில் அவர் உணர்ந்த அந்த உச்சகட்ட வேதனை மீண்டும் திரும்பியது; எந்த மனிதனாலும் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு மிகக் கடுமையான தீவிரத்துடன் இருந்தது. தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்து, தமது ஜீவனைக் கொடுப்பதற்காகத் தமது பிதாவினால் அளிக்கப்பட்ட அந்த தெய்வீகப் பணியைத் தனி ஒருவராகச் சுமந்து நிறைவேற்றினார். போர்ச்சேவகர்களாலும் ஆட்சியாளர்களாலும் அதை அவரிடமிருந்து எடுத்துக்கொள்ள முடியவில்லை (யோவான் 10:18 காண்க). பயபக்தியுடனும் மற்றும் தாழ்மையுடனும், இயேசு தமது தலையைத் தாழ்த்தி, “முடிந்தது” என்று சொன்னார் (யோவான் 19:30).
அவருடைய சாவுக்கேதுவான வாழ்க்கையின் இறுதி தருணம் நிறைவடைந்தது. அவருடைய விலைமதிப்பற்ற பரிசின் மகத்துவத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை. இது வேறொருவரிடமிருந்து ஒருபோதும் எதிர்பார்க்கப்படாது. இயேசு கிறிஸ்து “ஒரேதரம்” பாடுபட்டார் (எபிரேயர் 10:10).
அவர் உயிர்த்தெழுந்தார் !
தமது தெய்வீகப் பணியை நிறைவேற்றிய பிறகு, அவர் மனிதகுல வரலாற்றிலேயே முதன்முறையாக கல்லறையிலிருந்து எழுந்து அழியாமையை அடைந்தார் ( 1 கொரிந்தியர் 15:21–23காண்க).
கல்லறையில் இருந்த பெண்களிடம் தேவதூதர்கள் சொன்னார்கள்:
உயிரோடிருக்கிறவரை நீங்கள் மரித்தோரிடத்தில் தேடுகிறதென்ன?
அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார்" (லூக்கா 24:5–6).
தம்முடைய அப்போஸ்தலர்களிடம் அவர், “இதோ, என் கைகளையும் என் பாதங்களையும் பாருங்கள்; அது நானேதான்” என்று சொன்னார் (லூக்கா 24:39). அதன்பின்பு, "அவர் ஐந்நூறுக்கும் மேற்பட்டவர்களுக்கு ஒரேவேளையில் தரிசனமானார்" (1 கொரிந்தியர் 15:6). நேரில் கண்ட சாட்சிகள் உயிர்த்தெழுந்த இரட்சகரைக் கண்டார்கள். அவர் மரிக்கவில்லை. அவர் உயிரோடு இருக்கிறார்.
இயேசு கிறிஸ்து, பூமியில் வாழ்ந்த மற்றும் வாழப்போகும் ஒவ்வொரு நபருக்காகவும், மரணம் என்ற நித்திய அடிமைத்தனத்தின் சங்கிலிகளையும் கட்டுகளையும் உடைத்தெறிந்தார் ( 1 கொரிந்தியர் 15:22காண்க). அவர் நம்முடைய அனைவரையும் ஆட்கொள்ளும் எதிரியை வென்றார்; மரணம் என்ற எதிரி என்றென்றைக்குமாகத் தோற்கடிக்கப்பட்டது.
தலைவர் ரசல் எம். நெல்சன் (1924–2025) கூறினார்: “இயேசு கிறிஸ்து உங்கள் பாவங்களையும், உங்கள் வேதனைகளையும், உங்கள் இருதய வேதனைகளையும், உங்கள் பலவீனங்களையும் தம்மேல் எடுத்துக்கொண்டார்.” நீங்கள் அவற்றை தனியாகச் சுமக்க வேண்டியதில்லை! நீங்கள் மனந்திரும்பும்போது அவர் உங்களை மன்னிப்பார். உங்களுக்குத் தேவையானவற்றைக் கொண்டு அவர் உங்களை ஆசீர்வதிப்பார். அவர் உங்கள் காயப்பட்ட ஆத்துமாவைக் குணப்படுத்துவார். நீங்கள் உங்களை அவரோடு இணைத்துக் கொள்ளும்போது, உங்கள் சுமைகள் இலகுவாகத் தோன்றும். இயேசு கிறிஸ்துவைப், பின்பற்றுவதற்கு நீங்கள் உடன்படிக்கைகளைச் செய்து, அவற்றைக் கடைப்பிடித்தால், உங்கள் வாழ்க்கையின் வேதனையான தருணங்கள் தற்காலிகமானவை என்பதை நீங்கள் கண்டுகொள்வீர்கள். உங்கள் உபத்திரவங்கள் ‘கிறிஸ்துவின் மகிழ்ச்சியில் விழுங்கப்படும்’ [ஆல்மா 31:38]"
அவரால் நியமிக்கப்பட்ட அப்போஸ்தலர்களில், ஒருவனாக, அவர் உயிரோடு இருக்கிறார் என்பதற்கு எனக்குள் உறுதியான மற்றும் நிச்சயமான சாட்சியைக் கொண்டு ஆவிக்குரிய மற்றும் தனிப்பட்ட தருணங்களை நான் அனுபவித்திருக்கிறேன். இந்த ஈஸ்டர் காலத்தில், நாம் பாடி மகிழும்போது, “என் இரட்சகரே, எனக்காக நீர் இரத்தம் சிந்தி மரித்ததை நான் மறவாமல் இருப்பேனாக,” என்ற இந்த வார்த்தைகள் நம் மனங்களிலும் இருதயங்களிலும் மென்மையாக நிலைத்திருக்கட்டும்.
© 2026 by Intellectual Reserve, Inc அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் அச்சிடப்பட்டது. ஆங்கில அங்கீகாரம்: 6/19. மொழிபெயர்ப்பு அங்கீகாரம்: 6/19. ஏப்ரல் 2026, மாதாந்தர லியஹோனா செய்தியின் மொழிபெயர்ப்பு. Tamil. 20038 418