லியஹோனா
நம் வாழ்க்கையின் நோக்கம் மற்றும் அர்த்தம் காணுதல்
ஜனவரி 2026 லியஹோனா


ஆசிய பிரதேச தலைமைத்துவச் செய்தி

நம் வாழ்க்கையின் நோக்கம் மற்றும் அர்த்தம் காணுதல்

நாம் முந்தய வாழ்க்கையில் ஆவிக் குழந்தைகளாக இருந்தபோது, நாம் பரலோக ஆலோசனைக்குழுவில் பரலோக பிதாவின் திட்டத்தைப் பின்பற்ற முடிவு செய்தோம். இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தி அனைவருக்கும் உயிர்த்தெழுதலை அளிக்க, இரட்சகராகிய அவர் நமக்கு கொடுக்கப்பட்டார், நமது இரட்சகரும் மீட்பருமான இயேசு கிறிஸ்துவுக்கு நாம் எப்போதும் கடன்பட்டிருக்கிறோம். அநேக ஆவிக்குரிய பிள்ளைகள் சாத்தானையும் அவனது திட்டத்தையும் ஆதரித்தார்கள், அவர்கள் தேவனுடைய பிரசன்னத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். நம்முடைய நாட்களில் கூட, சாத்தான் தன்னை பின்பற்றுவோரைத் தொடர்ந்து பாவத்திற்குள் வழிநடத்துகிறான்.

ஆதாம் மற்றும் ஏவாளுக்குக் கொடுக்கப்பட்ட முதல் கட்டளை பலுகிப் பெருகி பூமியைப் நிரப்புவதே ஆகும். (ஆதியாகமம் 1:28, ஆபிரகாம் 4:28) ஒரு சரீரத்தைப் பெறுவது தேவனுடைய திட்டத்தின் ஒரு முக்கியமான பகுதியாகும், மேலும் இது நாம் முன்னேறவும், நம் வாழ்வில் அர்த்தத்தைக் கண்டறியவும் உதவுகிறது. சில சமயங்களில் குடும்பங்களை வளர்ப்பது சவாலானதாக இருக்கலாம், ஆனால் அது கற்றலுக்கும் நிறைவுக்கும் ஒரு தெய்வீக ஆதாரம் ஆகும்.

பரலோக பிதா தன்னுடைய பிள்ளைகள் அனைவரும் தங்கள் வாழ்வில் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். இரட்சிப்பின் திட்டம் மகிழ்ச்சிக்கான சரியான வழியை வழங்குகிறது. மோசே 5:11-ல், ஏவாள் மகிழ்ச்சியுடன், "எங்களுடைய மீறுதல் இல்லாமல் இருந்திருந்தால், எங்களுக்கு ஒருபோதும் சந்ததி இருந்திருக்காது; எங்களுடைய மீட்பின் சந்தோஷத்தையும், கீழ்ப்படிபவர்கள் யாவருக்கும் தேவன் கொடுக்கிற நித்திய ஜீவனையும் அறிந்திருக்க மாட்டோம்" என்று அறிவித்தாள். இன்றைய உலகில், மகிழ்ச்சி என்பது பெரும்பாலும் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் ஒரு தெளிவான கண்ணோட்டத்தைத் திறந்து காட்டுகிறது.

தொழில்நுட்பம் யாராலும் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு முன்னேறியிருக்கும்போது, பலரும் இந்த மேம்பாடுகளால் திசைதிருப்பப்பட்டதாகவே உணர்கிறார்கள். சிலர் தொழில்நுட்பத்தை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தி, குடும்பம் மற்றும் ஆவிக்குரியதன்மை போன்ற மிக முக்கியமான விஷயங்களைப் புறக்கணிக்கிறார்கள். மகிழ்ச்சி என்ற சொல் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது, ஆனால் அது தனது அர்த்தத்தை இழந்ததாகத் தெரிகிறது. பலர் செல்வம் மகிழ்ச்சியை தீர்மானிக்கிறது என்று நம்பினாலும், உண்மையான மகிழ்ச்சி என்பது அன்பு மற்றும் நீதியான வாழ்க்கை வாழ்வதிலிருந்தே வருகிறது என்பதை நாம் அறிவோம்.

சில பொருளாதாரத் தரவுகளைப் படிக்கும்போது, மக்கள், குழு நிகழச்சிகளில் ஈடுபடும்போது பெரும்பாலும் மகிழ்ச்சி அதிகரிக்கிறது என நான் வாசித்தேன். அவர்கள் ஒன்றாக உரையாடுகிறார்கள், ஒருவருக்கொருவர் உதவி செய்கிறார்கள், மற்றும் தோழமையை அனுபவிக்கிறார்கள். திருப்தியும் மன சமாதானமும் ஒருவருடைய நீதியான கவனத்தையும் மற்றவர்களை உள்ளடக்கும் விருப்பத்தையும் பொறுத்தது என்பதை நான் உணர்ந்தேன். என்னைப் பொறுத்தவரை, இது அனைவரின் பங்கேற்பும் தேவைப்படும் ஒரு "குடும்ப முயற்சி" ஆகும்.

நித்திய கண்ணோட்டத்தை வளர்த்துக்கொள்வது நம்முடைய வாழ்க்கையை மாற்றியமைத்து, நம்மை தேவனுக்கு நெருக்கமாக கொண்டுவரும். சில நேரங்களில் தனிநபர்கள் பெரும்பாலும் பூமிக்குரிய செல்வத்தை உருவாக்குவதில் அக்கறை கொள்கிறார்கள். நம் வாழ்வில், இந்த வாழ்க்கைக்கும் நம்முடைய அடுத்த வாழ்க்கைக்கும் ஆவிக்குரிய செல்வத்தை உருவாக்குவதற்கு நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டும். நித்திய கண்ணோட்டத்தை வளர்த்துக்கொள்வது நம்முடைய வாழ்க்கையை மாற்றியமைத்து, நம்மை தேவனுக்கு நெருக்கமாகக் கொண்டுவரும். பூமியில் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்காமல், பரலோகத்தில் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்க வேண்டும் என்று இரட்சகர் கற்பித்தார். (மத்தேயு 6:19–21)

என் வாழ்க்கையில், மகிழ்ச்சி என்பது பூலோக வாழ்க்கையைப் பற்றியது மட்டுமல்ல, மிக முக்கியமாக நித்திய கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பது மற்றும் மிகப் பெரிய ஒன்றோடு இணைந்திருப்பது ஆகும். மகிழ்ச்சி நம்மை கர்த்தருடைய ஆலோசனையைப் பின்பற்றுவதற்கான உயர்ந்த குறிக்கோளை நோக்கி வழிகாட்டவே என்று நான் நம்புகிறேன். நம்முடைய தீர்க்கதரிசிகள் மற்றும் கர்த்தருடைய வார்த்தைகள் மூலம், மகிழ்ச்சியின் திட்டத்தை நாம் புரிந்துகொள்ள கற்றுக்கொள்கிறோம், அதன் விளைவாக, அதிக மகிழ்ச்சியை அனுபவிக்கிறோம். நம்முடைய வாழ்க்கை இயேசு கிறிஸ்துவையும் அவருடைய போதனைகளையும் மையமாகக் கொண்டிருக்கும்போது, நம்முடைய மகிழ்ச்சி அதிகரிக்கிறது. உங்களுடைய செயல்கள் மற்றும் வாழ்க்கை முறையின் காரணமாக நீங்கள் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடியவர்களை நினைத்துப் பாருங்கள். தேவனுடைய நோக்கத்தையும் அவர் அனைவர்மீது வைத்துள்ள அன்பையும் புரிந்துகொள்ள மற்றவர்களை இயேசு கிறிஸ்துவிடம் வர நாம் ஊக்கப்படுத்த வேண்டும், உற்சாகப்படுத்த வேண்டும். தேவனுடைய மகிழ்ச்சியின் திட்டம் நம்முடைய குடும்பம், நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டாருக்கு மத்தியில் பரவுவதற்கான வழியாக நாம் இருக்கிறோம்.

இந்த வருடம் எங்கள் குடும்பத்துடன் பேங்காக் தாய்லாந்து ஆலயத்திற்குச் சென்றபோது, நம்முடைய வாழ்க்கையில் நோக்கத்தையும் சமாதானத்தையும் கண்டறிவது நம் இரட்சகருடனான நம்முடைய தொடர்புடன் சம்பந்தப்பட்டது என்ற வலிமையான புரிதலை நான் பெற்றேன். ஆலயத்தில், உண்மையான அன்பும் மகிழ்ச்சியும் எங்கள் குடும்பத்தை நித்திய நோக்கத்தைக் கண்டறிய வழிநடத்தும் என்று உணர்ந்தேன். என் குடும்பத்துடன் ஆலயத்தில் இருந்தது என் வாழ்க்கையின் மிகவும் மறக்க முடியாத மற்றும் ஆவிக்குரிய தருணங்களில் ஒன்றாகும். ஆலய நியமங்களை நாங்கள் செய்யும்போது, கர்த்தருடைய அன்பை எங்களால் உணர முடிந்தது. தலைவர் நெல்சன், "உங்களுடைய சூழ்நிலைகள் அனுமதிக்கும்போது ஆலயத்தில் தொடர்ந்து ஆராதிப்பதை விட, இரும்புத் தடியைப் பிடித்துக் கொள்வதற்கு வேறு எதுவும் உங்களுக்கு அதிகம் உதவாது" என்று கூறினார். ("பரிசுத்த ஆவியின் வரத்தில் களிகூருங்கள்," லியஹோனா, மே 2024, 122) தேவனுடைய மகிழ்ச்சியின் திட்டத்தை அடையவும், நம்முடைய ஆலய உடன்படிக்கைகளைக் காத்துக்கொள்ளவும், தேவனுடைய நித்திய ராஜ்யத்தில் நுழைய நமக்கு வழிவகுக்கும் தேவனுடைய ராஜ்யத்தைக் கட்டியெழுப்ப நாம் நம்முடைய நேரத்தையும் திறமைகளையும் பயன்படுத்த வேண்டும்.

இயேசு கிறிஸ்து இந்த உலகத்தின் மீட்பர் மற்றும் இரட்சகர் என்றும், அவர் தேவனுடைய ஒரேபேறான குமாரன் என்றும் நான் சாட்சியமளிக்கிறேன். அவர் மூலமாகவே நாம் இரட்சிக்கப்படுகிறோம். ■