லியஹோனா
என்னோடு சஞ்சரி
ஜனவரி 2026 லியஹோனா


இளைஞரின் பெலனுக்காக மாதாந்தர செய்தி, ஜனவரி 2026

என்னோடு சஞ்சரி

நீங்கள் தேவனுக்கு நெருக்கமாக இருந்தால், அவர்—எப்போதும் உங்களுடன் சஞ்சரிப்பார் என்பதை 2026 இளைஞருக்கான தலைப்பு நினைவூட்டுகிறது.

இளம் பெண்கள் பொதுத் தலைமை

இடமிருந்து வலமாக: தமாரா டபிள்யூ. ரூனியா, முதல் ஆலோசகர்; எமிலி பெல் ப்ரீமன், தலைவர்; மற்றும் ஆண்ட்ரியா முனோஸ் ஸ்பன்னாஸ், இரண்டாம் ஆலோசகர்

கவலைப்படுவது நீங்கள் மட்டும் அல்ல

நீங்கள் செய்ய முடியாது என்று நினைத்த ஒன்றை, யாராவது உங்களிடம் செய்யும்படி கேட்டிருக்கிறார்களா? ஒருவேளை நீங்கள் போதுமான வலிமையோ அல்லது அதற்கான சாமர்த்தியமோ இல்லை என்று உணர்ந்திருக்கலாம், அல்லது மற்றவர்கள் உங்களை கிண்டல் செய்து விமர்சிப்பார்கள் என்று நீங்கள் கவலைப்பட்டிருக்கலாம். நீங்கள் இதுபோல் உணர்ந்திருக்கிறீர்களானால், கவலைப்படுவது நீங்கள் மட்டும் அல்ல.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, ஏனோக்கு என்ற ஒரு மனுஷன் இருந்தான். மிகுந்த துன்மார்க்கத்தில் இருந்த மக்களுக்கு மனந்திரும்புதலை போதிக்க தேவன் ஏனோக்கை அழைத்தார்.

அதைத் தன்னால் செய்ய முடியும் என்று ஏனோக்கு நம்பவில்லை. தான் ஒரு வாலிபன், சகல ஜனங்களும் தன்னை வெறுக்கிறார்கள்; ஏனெனில் தான் “திக்குவாயன்” எனச் சொல்லி கர்த்தருக்கு முன்பாக பேசினான்.(மோசே 6:31ஐப் பார்க்கவும்).

ஆனால் தேவன் ஏனோக்கிற்கு ஒரு வாக்குத்தத்தம் கொடுத்தார். அவர் பயந்திருந்த மனுஷனிடம் இப்படிச் சொன்னார், “நீ போய் நான் உனக்குக் கட்டளையிட்டதைப்போலச் செய்”; “இதோ மலைகள் உனக்கு முன்பாக ஓடிப்போகும், ஆறுகள் தங்களுடைய பாதைகளிலிருந்து விலகிப்போகும்; நீ என்னில் வாசம் செய்வாய், நான் உன்னிலிருப்பேன்; ஆகவே என்னோடு நீ சஞ்சரிப்பாய்” (மோசே 6:32, 34).

“என்னோடு சஞ்சரி.” என்ன ஒரு எளிமையான, அழகான அழைப்பு.

ஏனோக்கு தைரியமாக ஆரம்பித்தால், தேவன் அவனோடு ஆரம்பம் முதல் இறுதி வரை இருப்பதாக அவனுக்கு வாக்குத்தத்தம் செய்தார். ஏனோக்கை வல்லவனாகவும் பெலனுள்ளவனாகவும் ஆக்கி, அவன் கற்பனை செய்யமுடியாத அளவுக்கு அவனை மேன்மையாக்க தேவன் அவனுக்கு உதவுவதாக வாக்குத்தத்தம் செய்தார்.

இரட்சகரின் பல பெயர்களில் ஒன்று “இம்மானுவேல்”, அதாவது “தேவன் நம்மோடு இருக்கிறார்” (.மத்தேயு 1:23). நம்முடனே சஞ்சரிப்பது தேவனுடைய நாமத்திலும் இயல்பிலும் உள்ளது. தேர்வு செய்வது நம்மிடம் இருக்கிறது—நாமும் அவரோடு சஞ்சரிப்போமா?

இப்போதெல்லாம், நாம் ஏனோக்கை விசுவாசமுள்ள மனுஷனாகவும், ஒரு சிறந்த தீர்க்கதரிசியாகவும், தலைவராகவும் பார்க்கிறோம். ஆனால் தீர்க்கதரிசியாக இருந்த ஏனோக்கிற்கு முன்பு, தன்னைப் பற்றி சந்தேகப்பட்டிருந்த ஒரு இளம் ஏனோக்கு இருந்தான். இருப்பினும் அவன் தேவனுடன் சஞ்சரிக்கத் தேர்ந்தெடுத்தான்.

வாழ்க்கை கடினமாக இருக்கும்போது, நீங்கள் தன்னம்பிக்கையை உணராதபோது, ஏனோக்கிற்கும் உங்களுக்கும் கர்த்தர் அளித்த வாக்குத்தத்தை நினைவில் கொள்ளுங்கள். அவர் உங்களுடன் சஞ்சரிப்பார். அவர் உங்களைத் தனியே ஒரு அடி கூட எடுத்து வைக்கவிடமாட்டார்.

இம்மானுவேல். தேவன் நம்மோடு இருக்கிறார். தேவன் உங்களோடு இருக்கிறார்!

இளம் பெண்கள் பொதுத் தலைமை

வாலிபர்கள் பொதுத் தலைமை

இடமிருந்து வலமாக: டேவிட் ஜே. வுண்டர்லி, முதல் ஆலோசகர்; டிமோத்தி எல். பார்ன்ஸ், தலைவர்; மற்றும் சீன் ஆர். டிக்சன், இரண்டாவது ஆலோசகர்

அவருடைய உதவியால், உங்களால் எல்லாவற்றையும் செய்ய முடியும்.

வாலிபர்களாகிய உங்களைப் போலவே, கர்த்தர் ஏனோக்கை முக்கியமான ஆசாரியத்துவப் பொறுப்புகளை நிறைவேற்றுமாறு கேட்டார். துன்மார்க்க ஜனங்களுக்கு மனந்திரும்புதலைப் போதிப்பதே அவனுடைய பணியாக இருந்தது. ஏனோக்கு தன் சந்தேகங்களை வெளிப்படுத்தினான். “நான் ஒரு வாலிபன்,” என்று சொன்னான். “சகல ஜனங்களும் என்னை வெறுக்கிறார்கள் … ஏனெனில் நான் திக்குவாயன்; ஆகவே நான் உமது ஊழியக்காரனா?” (மோசே 6:31).

கர்த்தர் வல்லமையுடனும் உறுதியுடனும் பதிலளித்தார். “நீ போய் நான் உனக்குக் கட்டளையிட்டதைப்போலச் செய். … உன்னுடைய வாயைத் திற, அது நிரப்பப்படும் … . இதோ, என்னுடைய ஆவி உன் மேலிருக்கிறது … ; மலைகள் உனக்கு முன்பாக ஓடிப்போகும் … ; ஆகவே என்னோடு நீ சஞ்சரிப்பாய்” (மோசே 6:32, 34).

தேவன் நமக்கு ஒரு பணியைக் கொடுக்கும்போது, நாம் அதை தனியாக எதிர்கொள்ள வேண்டியதில்லை என்பதை ஏனோக்கு கற்றுக்கொண்டான். நாம் கிறிஸ்துவுடனே உடன்படிக்கைகளைச் செய்து கைக்கொள்ளும்போது, நாம் அவருடன் சஞ்சரித்து அவருடைய வல்லமையில் பங்கு கொள்கிறோம்—நாம் அவருடைய கரங்களில் கருவிகளாக மாறுகிறோம்.

ஏனோக்கைப் போலவே, உங்களுக்கும் ஒரு முக்கிய பங்கு உண்டு: ஊழியம் செய்தல், ஆலயத்தில் சேவை செய்தல், திருவிருந்து வழங்குதல், வேதங்களைப் படித்தல், சுவிசேஷத் தரங்களை வாழுதல், மனந்திரும்புதல், ஊழியங்களுக்குத் தயாராகுதல் மற்றும் பல. இது பெரும் சவாலாக தோன்றலாம். நீங்கள் தகுதியே இல்லாததாக உணரலாம். அது பரவாயில்லை. இது தனியாகச் செய்வது பற்றியது அல்ல. இன்றே—இந்த நாளிலே ஒவ்வொரு நாளும்—தேவனுடன் சஞ்சரிக்கத் தேர்வு செய்வதையே இது குறிக்கிறது.

அவருடைய உதவியால், நீங்கள் எல்லாவற்றையும் செய்ய முடியும். அவர் உங்கள் இயல்பான திறமைக்கு அப்பாற்பட்டு பெலனளிப்பார், மன்னிப்பார், உங்களைச் செயல்படுத்துவார். அவர் உங்களை நேசிக்கிறார்! வாலிபர்கள் பொதுத் தலைமையாக, நாங்கள் உங்களை நேசிக்கிறோம். “என்னுடன் சஞ்சரி” என்ற 2026 ஆம் ஆண்டின் ஊக்கமளிக்கும் தலைப்பை உங்களுடன் சேர்ந்து கற்றுக்கொள்ள ஆவலாக இருக்கிறோம்.

இளம் பெண்கள் பொதுத் தலைமை