“திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்கள்,” லியஹோனா ஜனவரி 2026.
லியஹோனா மாதாந்தர செய்தி, ஜனவரி 2026
திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்கள்
(2 பேதுரு 1:4)
இரட்சிப்பின் திட்டத்தைப் பற்றிய அறிவு விலைமதிப்பற்ற புரிதலை அளிக்கிறது, நமது சந்தோஷங்களை வளப்படுத்துகிறது, மேலும் நமது சவால்களையும் துன்பங்களையும் சமாளிக்க நமக்கு பெலனளிக்கிறது.
கிறிஸ்து இரண்டு சீஷர்களை அழைத்தல், காரி இ. ஸ்மித்
இயேசு கிறிஸ்துவின் சீஷர்களுக்கு, “தம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும் அவருடைய திவ்விய வல்லமையானது நமக்கு தந்தருளியுள்ளது” என்று அப்போஸ்தலனாகிய பேதுரு நமக்கு நினைவூட்டுகிறார்.
“இதனால் நீங்கள் அவைகளினாலே திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும் பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.”(2 பேதுரு 1:3–4; முக்கியத்துவம் சேர்க்கப்பட்டுள்ளது).
நமது நித்திய அடையாளத்தையும் நோக்கத்தையும் வரையறுக்கும் மிக உயர்ந்ததும் விலைமதிப்பற்றதுமான சத்தியங்களையும் வாக்குத்தத்தங்களையும் பரலோக பிதாவின் திட்டம் விவரிக்கிறது.
“குடும்பம்: உலகிற்கு ஓர் பிரகடனம்” இல் விளக்கப்பட்டுள்ளபடி:
“ஆணும் பெண்ணுமான, எல்லா மனுஷரும் தேவசாயலாய் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒவ்வொருவரும் பரலோகப் பெற்றோர்களுக்கு பிரியமான ஆவிகுமாரனாகவோ அல்லது குமாரத்தியாகவோ இருப்பதால், ஒவ்வொருவருக்கும் தெய்வீகத் தன்மையும் இலக்கும் உண்டு. …
“அநித்தியத்திற்கு முந்தைய இராஜ்யத்தில், ஆவி குமாரர்களும், குமாரத்திகளும் தேவனை தங்களது நித்திய பிதாவாக அறிந்து அவரை ஆராதித்தார்கள். மேலும் அவருடைய பிள்ளைகள் மாம்ச சரீரத்தைப் பெற்று, பரிபூரணத்தை நோக்கி முன்னேறும்படி பூமியின் அனுபவத்தைப் பெற்று இறுதியாக, நித்திய ஜீவனின் சுதந்தரவாளிகளாக, தம்முடைய தெய்வீக இலக்கை அடையவும், அவரது திட்டத்தை ஏற்றுக் கொண்டார்கள்.“
தம்முடைய திட்டத்தின் கற்பனைகளையும் , தம்முடைய நேச குமாரனின் முன்மாதிரியையும் பின்பற்றி, கட்டளைகளைக் கைக்கொண்டு, முடிவுபரியந்தம் விசுவாசத்தில் நிலைநின்றால், அவர்கள் “தேவனுடைய வரங்கள் எல்லாவற்றிலும் மேலான வரமான நித்திய ஜீவனைப் பெறுவார்கள்” என்று பரலோக பிதா தம்முடைய பிள்ளைகளுக்கு வாக்குத்தத்தம் செய்கிறார்.(கோட்பாடும் உடன்படிக்கைகளும் 14:7).
தேவனுடைய பணியானது அவருடைய பிள்ளைகளின் முன்னேற்றத்தையும் மேன்மையடைதலையும் மையமாகக் கொண்டுள்ளது. அவருடைய திட்டத்தின் ஒவ்வொரு அம்சமும் அவருடைய குமாரர்களையும் குமாரத்திகளையும் ஆசீர்வதிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது, ஏனெனில் “ஆத்துமாக்களின் மதிப்பு [அவருடைய] பார்வையில் பெரிதாயிருக்கிறது” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 18:10).
பிதாவின் திட்டம்
அநித்தியத்திற்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்தில், பரலோக பிதா தம்முடைய ஆவிக் குழந்தைகளுக்கு அவர்களின் நித்திய முன்னேற்றம் மற்றும் மகிழ்ச்சிக்கான தமது திட்டத்தை வழங்கினார்.
“இவைகள் வாசம்செய்ய ஒரு பூமியை நாம் உண்டாக்குவோம்;
“அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் அவர்களுக்கு கட்டளையிட்ட சகல காரியங்களையும் அவர்கள் செய்வார்களாவென அவர்களை நாம் சோதித்துப் பார்ப்போம்;
“அவர்களுடைய ஆதி மேன்மையைக் காத்துக்கொண்டவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்; தங்களுடைய ஆதி மேன்மையை காத்துக் கொள்ளாதவர்கள் தங்களுடைய ஆதி மேன்மையை காத்துக் கொண்டவர்களின் அதே ராஜ்யத்தில் மகிமையைக் கொண்டிருக்க மாட்டார்கள்; தங்களுடைய பூலோக ஜீவியத்தைக் காத்துக் கொள்பவர்கள் என்றென்றைக்குமாக தங்களுடைய தலைகளின்மேல் மகிமையை சேர்த்துக்கொள்வார்கள்.
“கர்த்தர் சொன்னார்: நான் யாரை அனுப்புவேன்? மனுஷகுமாரனைப் போலிருந்த ஒருவர் சொன்னார், இதோ இருக்கிறேன், என்னை அனுப்பும். மற்றொருவன் பதில் கொடுத்து சொன்னான், இதோ இருக்கிறேன், என்னை அனுப்பும். அதற்கு கர்த்தர் முதலாமவரை நான் அனுப்புவேன் என்றார்.
“இரண்டாமவன் கோபம் கொண்டு அவனுடைய ஆதி மேன்மையை காத்துக் கொள்ளவில்லை; அந்த நாளில் அநேகர் அவனுக்குப் பின்சென்றார்கள்” (ஆபிரகாம் 3:24–28).
அநித்தியத்திற்கு முந்தைய ஆலோசனைக் குழுவில் ஒரே ஒரு திட்டம் மட்டுமே முன்வைக்கப்பட்டது என்பதை நினைவில் கொள்ளுங்கள்—அது பிதாவின் திட்டம். நமது பரலோக பிதா, “நாம் என்ன செய்ய வேண்டும்?” என்ற கேள்வியை எழுப்பவில்லை. அவர் யாரிடமும் கருத்துகளை நாடவில்லை; பரிந்துரைகளை கேட்கவோ முன்வைப்புகளை கோரவோ இல்லை. மாறாக, அவர் தமது திட்டத்தின் அடிப்படை கூறுகளை முன்வைத்து, “ நான் யாரை அனுப்புவேன்?” என்று கேட்டார். அவர் கேட்ட கேள்வியின் முக்கிய நோக்கம், தமது திட்டத்தின் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் நிறைவேற்ற யாரை அனுப்ப வேண்டும் என்பது குறித்து இருந்தது.
சத்துருவின் தந்திரங்களால் ஏற்பட்ட விளைவுகளும் வேதங்களில் விவரிக்கப்பட்டுள்ளன.
“ஆகவே, சாத்தான் எனக்கு விரோதமாக கலகம் செய்து, நான் மனுஷனுக்குக் கொடுத்த சுயாதீனத்தை அழிக்க, அவன் வகை தேடினான் … என்னுடைய ஒரேபேறானவரின் வல்லமையால் … , அவன் புறம்பே தள்ளப்படச் செய்தேன்;
“அவன் சாத்தானாக, … மனுஷர்களை ஏமாற்றவும், குருடர்களாக்கவும், அநேகர் என்னுடைய சத்தத்தைக் கேட்காத அளவில் அவனுடைய விருப்பத்தின்படி சிறைபிடிக்கப்பட அவர்களை நடத்த, அனைத்துப் பொய்களின் தகப்பனான பிசாசானவனாகவும் மாறினான்.” (மோசே 4: 3– 4; முக்கியத்துவம் சேர்க்கப்பட்டுள்ளது).
பூலோக வாழ்க்கைக்கு முந்தைய வாழ்வின் ஆலோசனைக்குழுவில் பங்கேற்றவர்களில் பெரும்பாலோரால் வாக்களிக்கப்பட்ட ஒரு திட்டத்தை லூசிபர் முன்வைக்கவில்லை. அவன் வாக்கெடுப்பில் தோல்வியடைந்த ஒரு அனுதாபத்துக்குரிய நபர் அல்ல. அவன் கலகம் செய்தான்!. அகந்தை, அகங்காரம், மற்றும் சுயநலமே பிதாவின் திட்டத்திற்கு எதிரான அவனது கலகத்தைத் தூண்டின.
பிதாவின் திட்டமும் இரட்சகரின் சுவிசேஷமும்
இந்தத் திட்டம், நித்திய ஜீவனின் ஆசீர்வாதங்களை எல்லா மனிதகுலத்திற்கும் கிடைக்கச் செய்யும் பிதா மற்றும் குமாரனின் கிரியைகளை விவரிக்கிறது.
தேவனின் திட்டத்தில், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ஆசீர்வாதங்களை, ஆண்களும் பெண்களும், நம்பிக்கையுடன் கடைப்பிடிக்க வேண்டிய கோட்பாடுகள், கொள்கைகள், நியமங்கள் மற்றும் உடன்படிக்கைகளை இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் உள்ளடக்குகிறது. “இந்த இயேசு கிறிஸ்து என்ற நாமத்தைத் தவிர, மனுஷன் இரட்சிக்கப்படுவதற்கு வேறு எந்த நாமமும் பரலோகத்தின் கீழ் கொடுக்கப்படவில்லை” (2 நேபி 25:20). உண்மையிலேயே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே “வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறார் [அவராலே] அல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” (யோவான் 14:6; முக்கியத்துவம் சேர்க்கப்பட்டுள்ளது).
தலைவர் ரசல் எம். நெல்சன் விளக்கினார்:
“இந்த திட்டத்திற்கு சிருஷ்டிப்பு தேவைப்பட்டது; அதற்காக வீழ்ச்சி மற்றும் பாவநிவர்த்தி இரண்டும் அவசியமாக இருந்தன. இவைதான் திட்டத்தின் மூன்று அடிப்படை கூறுகள். ஒரு பரலோக பூமியின் சிருஷ்டிப்பு தேவனிடமிருந்து வந்தது. ஆதாமின் வீழ்ச்சியால் அழிவும் மரணமும் உலகிற்கு வந்தன [2 நேபி 2:25; மோசே 6:48 ஐப் பார்க்கவும்]. இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியால் அழியாமையும் நித்திய ஜீவனுக்கான சாத்தியமும் வழங்கப்பட்டது [2 நேபி 2:21–28 பார்க்கவும்]. …
“… நாம் குறுகிய காலத்திற்கு பூமியில் வாழ்ந்து, நமது சோதனைகள் மற்றும் பாடுகளில் நிலைத்திருந்து, மகிமையுள்ள வீடு திரும்பும் பயணத்துக்கு முன்னேறி, மேலே செல்ல ஆயத்தப்படுகிறோம்.”[சங்கீதம் 116:15; ஆல்மா 42:8 ஐப் பார்க்கவும்]. “… நாம் தேவனுடைய திட்டத்தைப் புரிந்துகொண்டு, அவருடைய கட்டளைகளுக்கு நன்றியுள்ளவர்களாகவும் கீழ்ப்படிதலுள்ளவர்களாகவும் இருந்தால், [இவ்வாழ்வில் ] நமது எண்ணங்களும் செயல்களும் நிச்சயமாக அதிக நோக்கமுள்ளவையாக இருக்கும் [கோட்பாடும் உடன்படிக்கைகளும் 59:20–21 ஐப் பார்க்கவும்].”
மார்மன் புஸ்தகத்தில் இத்திட்டத்தின் தலைப்புகள்
இயேசு கிறிஸ்துவின் மற்றுமொரு ஏற்பாடான, மார்மன் புஸ்தகத்தில் பிதாவின் திட்டத்திற்கான பல்வேறு தலைப்புகளை அடையாளம் கண்டு கொள்வதன் மூலம் முக்கியமான சத்தியங்களைக் கற்றுக்கொள்கிறோம். உதாரணமாக, பின்வரும் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்புகளின் மாதிரியைக் கவனியுங்கள்:
“மாபெரும் சிருஷ்டிகரின் இரக்கத்தின் திட்டம் ” (2 நேபி 9:6).
“நம் தேவனின் திட்டம்” (2 நேபி 9:13).
“இரட்சிப்பின் திட்டம்” (யாரோம் 1:2; ஆல்மா 24:14).
“மீட்பின் திட்டம்” (ஆல்மா 12:25, 26, 30, 32, 33; 42:11, 13).
“திரும்பச் சேர்க்கும் திட்டம்” (ஆல்மா 41:2).
“மகிழ்ச்சியின் திட்டம்” (ஆல்மா 42:16).
“இரக்கத்தின் மகாதிட்டம்” (ஆல்மா 42:31).
இந்த தலைப்புகள் ஒவ்வொன்றும் பிதாவின் திட்டத்தின் விலைமதிப்பற்ற வாக்குத்தத்தங்களை இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ள உதவுகின்றன, மேலும் நமது பூலோக வாழ்க்கையின் நோக்கங்கள் மற்றும் அர்த்தத்தைப் பற்றிய நமது புரிதலை வளப்படுத்துகின்றன.
குறிப்பிடத்தக்க வகையில், மார்மன் புஸ்தகத்தில் தேவனின் திட்டத்திற்கு அடிக்கடி பயன்படுத்தப்படும் தலைப்பு இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தி மூலம் சாத்தியமான மீட்பை மையமாகக் கொண்டுள்ளது.
“இப்பொழுதும் உலக அஸ்திபார முதற்கொண்டு திட்டமிடப்பட்ட, இந்த மீட்பின் திட்டம் இல்லையெனில், மரித்தோரின் உயிர்த்தெழுதல் இல்லாமற்போயிருக்கும்; அப்படியல்லாமல் ஏற்கனவே பேசப்பட்ட, மரித்தோரின் உயிர்த்தெழுதலை சம்பவிக்கப்பண்ணுகிற, மீட்பின் திட்டம் திட்டமிடப்பட்டிருக்கிறது”, என்று ஆல்மா கூறினார்.(ஆல்மா 12:25).
“தம் ஜனத்தை மீட்க தேவகுமாரன் வருவாரென்றும், அவர்களுடைய பாவங்களை நிவர்த்தியாக்க அவர் பாடுபட்டு மரிப்பாரென்றும் அவர் மரித்தோரிலிருந்து மீண்டும் உயிர்த்தெழுவாரென்றும் அதினிமித்தம் அவர்களுடைய கிரியைகளின்படி கடைசியும், நியாயத்தீர்ப்புமான நாளிலே நியாயந்தீர்க்கப்படும்படி அவருக்கு முன்பு சகல மனுஷரும் நிற்கும்பொருட்டு உயிர்த்தெழுதல் சம்பவிக்கும் என்றும் விசுவாசியுங்கள்” என்று ஆல்மா அறிவித்தான் (ஆல்மா 33:22).
வழி ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளது
தேவனின் இரட்சிப்பு, மீட்பு, திரும்பச் சேர்த்தல், இரக்கம் மற்றும் மகிழ்ச்சிக்கான மகத்தான திட்டத்தை நாம் கருத்தில் கொள்ளும்போது, நமது ஆத்துமாக்கள் நன்றியுணர்வால் பெருக வேண்டும். இரட்சிப்பின் திட்டத்தைப் பற்றிய அறிவு விலைமதிப்பற்ற புரிதலை அளிக்கிறது, நமது சந்தோஷங்களை வளப்படுத்துகிறது, மேலும் நமது சவால்களையும் துன்பங்களையும் சமாளிக்க நமக்கு பெலனளிக்கிறது.
நாம் அவரிடமே திரும்ப வர வேண்டும் என்று பரலோக பிதா மிகவும் ஏங்குகிறார். அவர் நம்மை அழைத்து, ஆசீர்வாதங்களையே வாக்குத்தத்தம் செய்கிறார்; ஆனால் அவர் நமக்குத் தந்த நெறிப்படுத்தும் சுயாதீனத்தை ஒருபோதும் கட்டாயப்படுத்தவோ, வற்புறுத்தவோ, கட்டுப்படுத்தவோ மாட்டார். நாம் செயலில் இறங்கி, அவருடைய நேச குமாரனின் முன்மாதிரியைப் பின்பற்றி அவரிடம் திரும்பத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
எலிசபெத் தாயர்அவர் கரம் இன்னும் நீட்டினபடியே இருக்கிறது
“வழி ஆயத்தப்படுத்தப்பட்டிருக்கிறது. நாமும் பார்த்தால் நாம் என்றென்றுமாய் ஜீவிப்போம்” (ஆல்மா 37:46; முக்கியத்துவம் சேர்க்கப்பட்டுள்ளது).
பரலோக பிதாவே தம்முடைய பிள்ளைகளுக்கான பரிசுத்த திட்டத்தை உருவாக்கியவர் என்பதை நான் மகிழ்ச்சியுடன் சாட்சியளிக்கிறேன். இயேசு கிறிஸ்து நம் இரட்சகரும் மீட்பருமானவர். கர்த்தருடைய பிற்கால அப்போஸ்தலர்களில் ஒருவனாக, அவர் உண்மையிலேயே “வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறார்” என்பதற்கு நான் சாட்சியளிக்கிறேன் (யோவான் 14:6; முக்கியத்துவம் சேர்க்கப்பட்டுள்ளது).
© 2026 by Intellectual Reserve, Inc. எல்லா உரிமைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. அ.ஐ.நாட்டில் அச்சிடப்பட்டது. ஆங்கில அங்கீகாரம்: 6/19. மொழிபெயர்ப்பு அங்கீகாரம்: 6/19. மாதாந்தர லியஹோனா செய்தி, ஜனவரி 2026. Tamil. 19932 418