2025
தேவன் யாரில்லை
ஆகஸ்ட் 2025


இளைஞரின் பெலனுக்காக மாதாந்தர செய்தி, ஆகஸ்ட் 2025

தேவன் யாரில்லை

நமது பரலோக பிதாவைப் பற்றிய 5 சத்தியங்கள்

தேவன் யாரில்லை என்பதை நாம் புரிந்துகொள்ளும்போது, ​​அவர் யார் என்பதைப் பற்றி நாம் அதிகமாக கற்றுக்கொள்ளலாம்.

வண்ணம் மற்றும் வண்ணத் தூரிகை

கமிலா கிரே விளக்கப்படம்

மறுஸ்தாபிதத்தின் மிகப்பெரிய ஆசீர்வாதங்களில் ஒன்று என்னவெனில், தேவன் மீண்டுமாக தன்னையும் தனது குணாதிசயத்தையும் அன்பான பரலோக பிதாவாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால் சில நேரங்களில் தேவனைப் பற்றிய உண்மையற்ற எண்ணங்கள் அல்லது கருத்துக்கள் நமக்கு இருக்கும், இது நிகழும்போது, தேவன் யாரில்லை என்பதைப் புரிந்துகொள்வதன் மூலம் அவர் யார் என்பதைப் பற்றி நாம் அதிகமாக கற்றுக்கொள்ளலாம்.

தேவன் வெகு தொலைவில் ஒரு சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் அறிமுகமில்லாத நபர் அல்ல.

அவர் நம்முடைய பிதா, நீங்கள் கற்பனை செய்ய முடிந்த சிறந்த பூமிக்குரிய தந்தையை விடவும் அற்புதமானவர். அவருடனான நமது பூலோகத்திற்கு முந்தைய வாழ்க்கையை நாம் நினைவில் கொள்ள முடியாவிட்டாலும், அவர் நம்மைத் தனித்தனியாகவும் முழுமையாகவும் அறிந்திருக்கிறார். பரலோக பிதா மாம்சமும் எலும்புகளும் உடைய மகிமைபெற்ற சரீரத்தைக் கொண்டிருக்கிறார், நாம் அவரின் சாயலில் இருக்கிறோம்.

தேவன் எப்படிப்பட்டவர் என்பதை நீங்கள் கற்பனை செய்து பார்க்க சிரமப்பட்டால், அதற்கு ஒரு சரியான உதாரணம் இருக்கிறது: அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து. இயேசு சொன்னார், “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள் (யோவான் 14:6–7). வேறு வார்த்தைகளில் சொன்னால், பரலோக பிதா எப்படிப்பட்டவர் என்பதை நாம் அறிய விரும்பினால், இயேசு கிறிஸ்து எப்படிப்பட்டவர் என்பதைப் பற்றி நாம் அறிந்து கொள்ளலாம்! அவர்கள் நோக்கத்தில் முழுமையாக ஒன்றுபட்டுள்ளனர்.

தேவனுக்கு உங்களை விட மிக முக்கியமானது ஒன்றும் இல்லை.

நித்திய ஜீவனை நீங்கள் பெற்றுக்கொள்ள உங்களுக்கு உதவுவதே அவரது கிரியையும் மகிமையுமாகும். நீங்கள் அவருடைய #1 கவனம்! நாம் இருப்பது போல அவர் காலத்தால் கட்டுப்பட்டவர் அல்ல. எந்த நேரத்திலும் ஜெபத்தில் அவரை நாடலாம். பின்னர் பல வழிகளில் அவர் பதிலளிப்பதைக் கேளுங்கள்.

தேவன் தம்மைப் பின்பற்ற வற்புறுத்துபவரல்ல.

பன்னிரண்டு அப்போஸ்தலர் குழுமத்தின் மூப்பர் டேல் ஜி. ரென்லண்ட் ஒருமுறை கற்பித்தார், “பெற்றோராக இருப்பதில் நமது பரலோக பிதாவின் குறிக்கோள், அவருடைய பிள்ளைகள் சரியானதைச் செய்ய வைப்பதல்ல; அவருடைய பிள்ளைகள் சரியானதைச் செய்யத் தேர்ந்தெடுத்து இறுதியில் அவரைப் போல மாறுவதே.” அவர் உங்களை அழைப்பார், உங்களுக்கு ஆலோசனை வழங்குவார், உங்களுக்கு சத்தியத்தைக் கற்பிப்பார், ஆனால் அவரைப் பின்பற்றும்படி உங்களைக் கட்டாயப்படுத்தி உங்கள் சுயாதீனத்தை அகற்ற மாட்டார்.

உங்களைத் தண்டிப்பதற்காக நீங்கள் ஏதாவது தவறு செய்யும்போது உங்களை பிடிக்க முயற்சிக்கும் தேவன் அல்ல அவர்.

மாறாக, பன்னிரண்டு அப்போஸ்தலர் குழுமத்தின் மூப்பர் பாட்ரிக் கியரோன் கூறியது போல், “தேவன் உங்களை இடைவிடாமல் பின்தொடர்கிறார்,” அதாவது, நீங்கள் அவரிடம் திரும்ப உதவும் முயற்சியை அவர் ஒருபோதும் கைவிட மாட்டார். நாம் தவறு செய்யும்போது, ​​இயற்கையாகவே கடினமான விஷயங்களைச் சந்திப்போம் என்பதை அவர் அறிவார். ஆகவே, தம்முடைய குமாரனின் பாவநிவர்த்தியின் மூலம் நாம் பாவத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்டு பெலனைப் பெற அவர் ஒரு வழியை வழங்குகிறார்.

தேவன் உங்களை நேசிப்பதற்கு முன்பு நீங்கள் “போதுமானவராக“ அல்லது “பூரணராக” இருக்கவேண்டுமெனக் காத்திருக்கும் ஒருவர் இல்லை.

அவர் உங்களிடம் வைத்திருக்கும் அன்பு எல்லையற்றது. நீங்கள் குறையோடு இருக்கும் இப்பொழுதே அவர் உங்களை நேசிக்கிறார். மூப்பர் ஜெப்ரி ஆர். ஹாலண்ட், பன்னிரு அப்போஸ்தலர் குழுமத்தின் செயல் தலைவர், இந்த சத்தியத்தைப் பற்றி ஒரு வல்லமைவாய்ந்த தெளிவுபடுத்தலை வழங்குகிறார்: “’நீங்கள் இருப்பதைப் போலவே வாருங்கள்’ என்று அன்பான பிதா நம் ஒவ்வொருவரிடமும் கூறுகிறார், ஆனால் அவர் மேலும் கூறுகிறார், ‘நீங்கள் இருப்பது போல் இருக்க திட்டமிடாதீர்கள்.’ நாம் நினைத்ததை விட அதிகமாக நம்மை உருவாக்க தேவன் உறுதியாக இருக்கிறார் என்பதை நினைத்து புன்னகைக்கிறோம்” பரிபூரண அன்பு மற்றும் ஊக்கத்துடன், பரலோக பிதா நீங்கள் அவரைப் போல ஆகவும், அவரிடம் உள்ள அனைத்தையும் பெறவும், படிப்படியாக உதவ முயற்சிக்கிறார்.

தேவன் யார்

உங்கள் பரலோக பிதாவை அறிந்து கொள்வதற்கான சிறந்த வழி, அவருடன் தொடர்ந்து அனுபவங்களைப் பெறுவதே ஆகும். எவ்வாறு? வேதங்களிலிருந்தும் ஜீவிக்கும் தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளிலிருந்தும் அவரைப் பற்றியும் அவருடைய குமாரனைப் பற்றியும் கற்றுக்கொள்ளுங்கள் அவரிடம் ஜெபியுங்கள். அவரது கட்டளைகளைக் கைக்கொள்ளுங்கள். சபையிலும், ஆலயத்திலும், மற்ற பரிசுத்த இடங்களிலும் அவரை ஆராதிக்க அமைதியான, தனிப்பட்ட நேரத்தை செலவிடுங்கள். அவருடன் உடன்படிக்கைகளைச் செய்து காத்துக்கொள்ளுங்கள். அவர் யார், உங்களைப் பற்றி அவர் எப்படி உணருகிறார் என்பதை அறிய அவர் உங்களுக்கு உதவுவார்.