கையேடுகளும் அழைப்புகளும்
27. உயிரோடிருப்பவர்களுக்கான ஆலய நியமங்கள்


“27. உயிரோடிருப்பவர்களுக்கான ஆலய நியமங்கள்,” பொது கையேட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்டவை (2023).

“27. உயிரோடிருப்பவர்களுக்கான ஆலய நியமங்கள்,” பொது கையேட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்டவை

மணமகனும் மணமகளும்

27.

உயிரோடிருப்பவர்களுக்கான ஆலய நியமங்கள்

27.0

முன்னுரை

ஆலயம் கர்த்தரின் வீடு. அது நம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவை நமக்குச் சுட்டிக்காட்டுகிறது. ஆலயங்களில், நாம் பரிசுத்த நியமங்களில் பங்கேற்கிறோம் மற்றும் பரலோக பிதாவுடன் உடன்படிக்கைகளைச் செய்கிறோம், அது நம்மை அவருடனும் நமது இரட்சகருடனும் இணைக்கிறது. இந்த உடன்படிக்கைகளும் நியமங்களும் பரலோக பிதாவின் பிரசன்னத்திற்குத் திரும்பவும், நித்தியத்திற்கும் குடும்பங்களாக ஒன்றாக முத்திரையிடப்படவும் நம்மைத் தயார்படுத்துகின்றன.

ஆலய உடன்படிக்கைகள் மற்றும் நியமங்களில், “தேவதன்மையின் வல்லமை வெளிப்படுகிறது” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 84:20 ஐப் பார்க்கவும்).

ஆலய உடன்படிக்கைகள் மற்றும் நியமங்கள் பரிசுத்தமானவை. ஆலய உடன்படிக்கைகளுடன் தொடர்புடைய சின்னங்கள் ஆலயத்துக்கு வெளியே கலந்துரையாடப்படக்கூடாது. வெளியில் சொல்ல மாட்டோம் என ஆலயத்தில் நாம் வாக்களிக்கும் பரிசுத்த தகவல்களை கலந்துரையாடக் கூடாது. இருப்பினும், ஆலய உடன்படிக்கைகள் மற்றும் நியமங்களின் அடிப்படை நோக்கங்கள் மற்றும் கோட்பாடுகள் மற்றும் ஆலயத்தில் நாம் பெறும் ஆவிக்குரிய உணர்வுகள் பற்றி நாம் கலந்துரையாடலாம்.

தொகுதி மற்றும் பிணையத் தலைவர்கள், இந்த அத்தியாயத்தில் உள்ள தகவல்களை, தரிப்பித்தல் அல்லது முத்திரித்தல் நியமங்களைப் பெறத் தயாராகும் உறுப்பினர்களுடன் கலந்துரையாடுகின்றனர்.

27.1

ஆலய நியமங்களைப் பெறுதல்

27.1.1

ஆலய நியமங்களைப் பெற ஆயத்தமாதல்

ஆலய நியமங்களைப் பெறவும், ஆலய உடன்படிக்கைகளைச் செய்து கடைபிடிக்கவும் உறுப்பினர்கள் ஆவிக்குரிய ரீதியில் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஆலய நியமங்களைப் பெறுவதற்குத் தயாராவதற்குத் தங்கள் பிள்ளைகளுக்கு உதவவேண்டிய முதன்மைப் பொறுப்பு பெற்றோருக்கு உண்டு. பிணைய மற்றும் தொகுதி தலைவர்கள், ஊழியம் செய்யும் சகோதர சகோதரிகள் மற்றும் குடும்ப உறவினர்கள் இந்த பாத்திரத்தில் பெற்றோரை ஆதரிக்கின்றனர்.

temples.ChurchofJesusChrist.orgல் ஆலய நியமங்களைப் பெறுவதற்கு உறுப்பினர்கள் தயாராக உதவுவதற்கான ஆதாரங்கள் உள்ளன.

தங்கள் சொந்த தரிப்பித்தலைப் பெற அல்லது துணைவருடன் முத்திரிக்கத் தயாராகும் உறுப்பினர்கள் ஆலய ஆயத்தப் பாடத்தில் பங்கேற்க ஊக்குவிக்கப்படுகிறார்கள் (25.2.8 பார்க்கவும்).

27.1.3

உடல் குறைபாடுகள் உள்ள உறுப்பினர்கள்

உடல் குறைபாடுகள் உள்ள தகுதியான உறுப்பினர்கள் அனைத்து ஆலய நியமங்களையும் பெறலாம். இந்த உறுப்பினர்கள் தங்களுக்கு உதவக்கூடிய அதே பாலினத்தைச் சேர்ந்த தரிப்பிக்கப்பட்ட உறவினர்கள் அல்லது நண்பர்களுடன் ஆலயம் செல்ல ஊக்குவிக்கப்படுகிறார்கள். உறுப்பினர்கள் ஒரு குடும்ப உறுப்பினர் அல்லது நண்பருடன் கலந்து கொள்ள முடியாவிட்டால், என்ன ஏற்பாடுகள் செய்யலாம் என்பதைப் பார்க்க அவர்கள் முன்கூட்டியே ஆலயத்துக்கு அழைக்கலாம்.

27.1.4

மொழிபெயர்ப்பு அல்லது விளக்க உதவி

உறுப்பினர்களுக்கு மொழிபெயர்ப்பு அல்லது விளக்க உதவி தேவைப்பட்டால், அது கிடைக்குமா என்று பார்க்க முன்கூட்டியே ஆலயத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.

27.1.5

ஆலயத்துக்கு அணிய வேண்டிய ஆடை

ஒரு ஆலயத்துக்குச் செல்லும்போது, ​​உறுப்பினர்கள் அவர்கள் பொதுவாக திருவிருந்து கூட்டத்திற்கு அணியும் ஆடைகளை அணிய வேண்டும்.

ஆலய திருமணம் அல்லது முத்திரிக்கப்படுவதற்கு அணிய வேண்டிய ஆடை பற்றிய தகவலுக்கு 27.3.2.6 ஐப் பார்க்கவும்.

இதைப் பற்றிய தகவலுக்கு 38.5ஐப் பார்க்கவும்:

  • தரிப்பித்தல் மற்றும் முத்திரித்தல் நியமங்களின் போது அணிய வேண்டிய ஆடைகள்.

  • சம்பிரதாயமான ஆலய ஆடைகள் மற்றும் வஸ்திரங்களைப் பெறுதல், அணிதல் மற்றும் பராமரித்தல்.

27.1.6

குழந்தை பராமரிப்பு

குழந்தைகள் ஆலய வளாகத்தில் இருந்தால் பெரியவர்களின் மேற்பார்வை இருக்க வேண்டும். ஆலய பணியாளர்கள் பின்வரும் சூழ்நிலைகளில் மட்டுமே குழந்தைகளைக் கண்காணிக்க முடியும்:

  • அவர்கள் பெற்றோருடன் முத்திரிக்கப்பட்டால்

  • அவர்கள் உயிரோடிருக்கும் உடன்பிறப்புகள், வளர்ப்பு சகோதரர்கள் அல்லது ஒன்றுவிட்ட உடன்பிறந்தவர்கள் தங்கள் பெற்றோருடன் முத்திரிக்கப்படுவதை அவர்கள் கவனித்தால்

27.1.7

ஆலய நியமங்களைப் பெற்ற பிறகு உறுப்பினர்களுடன் சந்திப்பு

ஆலய நியமங்களைப் பெற்ற பிறகு உறுப்பினர்களுக்கு அடிக்கடி கேள்விகள் எழுகின்றன. தரிப்பிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள், ஆயர், மற்ற தொகுதி தலைவர்கள் மற்றும் ஊழியம் செய்யும் சகோதர சகோதரிகள் உறுப்பினர்களை சந்தித்து அவர்களின் ஆலய அனுபவத்தைப் பற்றி கலந்துரையாடலாம்.

temples.ChurchofJesusChrist.orgல் கேள்விகளுக்கு பதிலளிக்க உதவும் ஆதாரங்கள் உள்ளன

27.2

தரிப்பி்த்தல்

தரிப்பித்தல் என்ற சொல்லுக்கு “ஒரு வரம்” என்பது பொருள். ஆலய தரிப்பித்தல் என்பது தேவனின் வரம், இதன் மூலம் அவர் தனது குழந்தைகளை ஆசீர்வதிக்கிறார். ஆலய தரிப்பித்தல் மூலம் உறுப்பினர்கள் பெறும் சில வரங்களில் அடங்குவன:

  • கர்த்தரின் நோக்கங்கள் மற்றும் போதனைகள் பற்றிய அதிக அறிவு.

  • பரலோக பிதா தம் பிள்ளைகள் செய்ய விரும்புகிற அனைத்தையும் செய்ய வல்லமை.

  • கர்த்தருக்கும், அவர்களது குடும்பங்களுக்கும், மற்றவர்களுக்கும் சேவை செய்யும்போது தெய்வீக வழிகாட்டுதல்.

  • அதிகரித்த நம்பிக்கை, ஆறுதல் மற்றும் சமாதானம்.

இந்த ஆசீர்வாதங்களின் நிறைவேற்றம் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்துக்கு உண்மையாக இருப்பதைப் பொறுத்தது.

தரிப்பித்தல் இரண்டு பகுதிகளாக பெறப்படுகிறது. முதல் பகுதியில், ஒரு நபர் ஆயத்தம் எனப்படும் முன்பகுதி நியமத்தைப் பெறுகிறார். ஆயத்தம் கழுவுதல் மற்றும் அபிஷேகம் என்றும் அழைக்கப்படுகிறது (யாத்திராகமம் 29:4-9 ஐப் பார்க்கவும்). இது நபரின் தெய்வீக பாரம்பரியம் மற்றும் திறன் தொடர்பான சிறப்பு ஆசீர்வாதங்களை உள்ளடக்கியது.

ஆயத்தத்தின் போது, உறுப்பினர் ஆலய வஸ்திரம் அணிய அதிகாரமளிக்கப்படுகிறார். இந்த வஸ்திரம் தேவனுடனான அவரது தனிப்பட்ட உறவையும் ஆலயத்தில் செய்யப்பட்ட உடன்படிக்கைகளுக்குக் கீழ்ப்படிவதற்கான அர்ப்பணிப்பையும் குறிக்கிறது. உறுப்பினர்கள் தங்கள் உடன்படிக்கைகளுக்கு உண்மையுள்ளவர்களாகவும், தங்கள் வாழ்நாள் முழுவதும் வஸ்திரங்களை சரியாக அணியும்போதும், அது ஒரு பாதுகாப்பாகவும் செயல்படுகிறது. வஸ்திரம் அணிவது மற்றும் பராமரிப்பது பற்றிய தகவலுக்கு, 38.5.5 ஐப் பார்க்கவும்.

தரிப்பித்தலின் இரண்டாம் பகுதியில், சிருஷ்டிப்பு, ஆதாம் மற்றும் ஏவாளின் வீழ்ச்சி, இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தி, மதமாறுபாடு மற்றும் மறுஸ்தாபிதம் உள்ளிட்ட இரட்சிப்பின் திட்டம் கற்பிக்கப்படுகிறது. கர்த்தருடைய பிரசன்னத்திற்கு எப்படித் திரும்புவது என்பது பற்றிய அறிவுரைகளையும் உறுப்பினர்கள் பெறுகிறார்கள்.

தரிப்பித்தலில், பின்வரும் பரிசுத்த உடன்படிக்கைகளைச் செய்ய உறுப்பினர்கள் அழைக்கப்படுகிறார்கள்:

  • கீழ்ப்படிதல் நியாயப்பிரமாணத்தை கைக்கொள்ளவும் மற்றும் பரலோக பிதாவின் கட்டளைகளைக் கடைப்பிடிக்கவும் முயற்சி செய்யுங்கள்.

  • தியாக நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படியுங்கள், அதாவது கர்த்தரின் பணியை ஆதரிக்க தியாகம் செய்வது மற்றும் நொறுங்குண்ட இருதயத்துடனும் நருங்குண்ட ஆவியுடனும் மனந்திரும்புதல்.

  • இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படியுங்கள், இது அவர் பூமியில் இருந்தபோது போதித்த உயர்ந்த நியாயப்பிரமாணமாகும்.

  • கற்புடைமை நியாயப்பிரமாணத்தை கடைபிடிக்கவும், அதாவது ஒரு உறுப்பினர் நியாயப்பிரமாணத்தின்படி நியாயமாகவும் சட்டப்பூர்வமாகவும் திருமணம் செய்துகொண்ட நபருடன் மட்டுமே உடலுறவு கொள்கிறார்.

  • பரிசுத்தப்படுத்தல் நியாயப்பிரமாணத்தை கடைபிடியுங்கள், அதாவது உறுப்பினர்கள் தங்கள் நேரத்தையும், தாலந்துகளையும், கர்த்தர் ஆசீர்வதித்த அனைத்தையும் பூமியில் இயேசு கிறிஸ்துவின் சபையை கட்டியெழுப்ப அர்ப்பணிக்கிறார்கள்.

பதிலுக்கு, ஆலய உடன்படிக்கைகளுக்கு உண்மையாக இருப்பவர்கள் “உன்னத்திலிருந்து வல்லமையால் தரிப்பிக்கப்படுவார்கள்” என பரலோக பிதா வாக்களிக்கிறார் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 38:32, 38; லூக்கா 24:49; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 43:16 பார்க்கவும்)

27.2.1

யார் தரிப்பித்தல் பெறலாம்

சபையின் அனைத்து பொறுப்பேற்கும் வயதுவந்த உறுப்பினர்களும் தங்கள் சொந்த தரிப்பித்தலுக்குத் தயாராகவும் பெறவும் அழைக்கப்படுகிறார்கள். உறுப்பினர்கள் தரிப்பித்தல் பெறுவதற்கு முன் அனைத்து முன்நிபந்தனை நியமங்களும் நிறைவேற்றப்பட்டு பதிவு செய்யப்பட வேண்டும் (26.3.1 பார்க்கவும்).

27.2.1.1

புதிதாக ஞானஸ்நானம் பெற்றவர்கள்

தகுதியான வயதுவந்த புதிய உறுப்பினர்கள், அவர்கள் திடப்படுத்தப்பட்ட நாளிலிருந்து குறைந்தது ஒரு வருடத்திலாவது அவர்களின் தரிப்பித்தலைப் பெறலாம்.

27.2.1.2

தரிப்பித்தல் பெறாத துணைவரைக் கொண்ட உறுப்பினர்கள்

பின்வரும் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால், தகுதியான உறுப்பினர் அவரது துணைவர் தரிப்பிக்கப்படாவிட்டாலும் தன் தரிப்பித்தலைப் பெறலாம்.

  • தரிப்பிக்கப்படாத துணைவர் தனது சம்மதத்தை அளிக்கிறார்.

  • உறுப்பினர், ஆயர் மற்றும் பிணையத் தலைவர் ஆகியோர் ஆலய உடன்படிக்கைகளுடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொறுப்பு திருமணத்திற்கு இடையூறாக இருக்காது என்று நம்புகிறார்கள்.

துணைவர் சபையில் உறுப்பினராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த நிபந்தனைகள் பொருந்தும்.

27.2.1.3

அறிவுசார் குறைபாடுகள் உள்ள உறுப்பினர்கள்

அறிவுசார் குறைபாடுகள் உள்ள உறுப்பினர்கள் தங்கள் சொந்த தரிப்பித்தலைப் பெறலாம்:

  • அவர்கள் அனைத்து முன்நிபந்தனை நியமங்களையும் பெற்றுள்ளனர் (26.3.1 பார்க்கவும்).

  • உடன்படிக்கைகளைப் புரிந்துகொள்வதற்கும், உருவாக்குவதற்கும், அவற்றைக் கடைபிடிப்பதற்கும் அவர்களுக்கு அறிவுசார் திறன் உள்ளது.

ஆயர் உறுப்பினர் மற்றும் பொருந்தக்கூடிய இடங்களில் அவரது பெற்றோருடன் ஆலோசனை செய்கிறார். அவர் ஆவியின் வழிநடத்துதலையும் நாடுகிறார். அவர் பிணையத் தலைவருடன் ஆலோசனை செய்யலாம்.

27.2.2

தரி்ப்பித்தலை எப்போது பெறுவது என்பதை தீர்மானித்தல்

தரிப்பித்தல் பெறுவதற்கான முடிவெடுத்தல் தனிப்பட்டது மற்றும் ஜெபத்துடன் செய்யப்பட வேண்டும். தரிப்பித்தல், அதைப் பெறத் தயாராகும் அனைவருக்கும் வல்லமை மற்றும் வெளிப்பாட்டின் ஆசீர்வாதமாகும். பின்வரும் நிபந்தனைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் போது உறுப்பினர்கள் தங்கள் சொந்த தரிப்பித்தலைப் பெறத் தேர்வு செய்யலாம்:

  • அவர்களுக்கு குறைந்தபட்சம் 18 வயது இருக்க வேண்டும்.

  • அவர்கள் உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி அல்லது அதற்கு இணையான படிப்பை முடித்திருக்கிறார்கள் அல்லது படிக்கவில்லை.

  • அவர்கள் திடப்படுத்தலுக்குப் பிறகு ஒரு முழு வருடம் கடந்துவிட்டது.

  • அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் பரிசுத்த ஆலய உடன்படிக்கைகளைப் பெறவும் மதிக்கவும் வாஞ்சிக்கிறார்கள்.

ஊழிய அழைப்பைப் பெற்ற அல்லது ஆலயத்தில் முத்திரிக்கப்பட தயாராகும் உறுப்பினர்கள் தரிப்பித்தலைப் பெற வேண்டும்.

ஒரு உறுப்பினருக்கு தரிப்பித்தலைப் பெறுவதற்கான ஆலயப் பரிந்துரையை வழங்குவதற்கு முன், ஆயரும் பிணையத் தலைவரும் அந்த நபர் பரிசுத்த ஆலய உடன்படிக்கைகளைப் புரிந்துகொள்வதற்குத் தயாராக இருப்பதாக உணர வேண்டும். இந்த தகுதி ஒவ்வொரு நபருக்கும் தனித்தனியாக தீர்மானிக்கப்படுகிறது.

27.2.3

தரிப்பித்தலுக்கு திட்டமிடுதல் மற்றும் நேரத்தை திட்டமிடல்

27.2.3.1

உயிரோடிருப்பவர்களின் நியமங்களுக்கான பரிந்துரையைப் பெறுதல்

ஒரு உறுப்பினர் ஆலயத்துக்குள் பிரவேசிப்பதற்கும், தரிப்பித்தலைப் பெறுவதற்கும் உயிரோடிருப்பவர்களுக்கான நியமங்களுக்கான பரிந்துரையைப் பெற வேண்டும். இந்த பரிந்துரைகள் பற்றிய தகவலுக்கு, 26.5.1 ஐப் பார்க்கவும்.

27.2.3.2

ஆலயத்தைத் தொடர்பு கொள்ளுதல்

தரிப்பித்தல் பெறத் திட்டமிடும் உறுப்பினர்கள், நியமத்துக்கு நேரம் திட்டமிட முன்கூட்டியே ஆலயத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும்.

27.2.3.3

தரிப்பித்தல் பெறும் உறுப்பினர்களுக்கான உடன்செல்வோர்

தங்களுடைய சொந்த தரிப்பித்தலைப் பெறும் உறுப்பினர்கள், அதே பாலினத்தைச் சேர்ந்த தரிப்பித்தல் பெற்ற ஒருவரை உடன் செல்பவராகச் செயல்பட அழைக்கலாம் மற்றும் தரிப்பித்தல் அமர்வின் போது அவர்களுக்கு உதவலாம். உடன் செல்பவருக்கு தற்போதைய ஆலய பரிந்துரை இருக்க வேண்டும். தேவைப்பட்டால் ஆலயம் ஒரு உடன் செல்பவரை அனுப்பலாம்.

27.3

கணவனும் மனைவியும் முத்திரிக்கப்படல்

ஒரு ஆலய முத்திரித்தல் ஒரு கணவன் மற்றும் மனைவியை இக்காலம் மற்றும் நித்தியத்துக்கும் ஒன்றாக இணைக்கிறது. அவர்கள் ஆலயத்தில் செய்யும் உடன்படிக்கைகளுக்கு உண்மையாக இருந்தால் இந்த ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள். இந்த நியமத்தின் மூலம், அவர்களின் குழந்தைகளும் அவர்களின் நித்திய குடும்பத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம்.

ஆலயத் தலைவர்கள் உறுப்பினர்களை திருமணம் செய்து ஆலயத்தில் முத்திரிக்கத் தயாராகும்படி ஊக்குவிக்கிறார்கள். ஆலய திருமணங்கள் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படாத இடங்களில், அங்கீகரிக்கப்பட்ட சபைத் தலைவர்கள் அல்லது மற்றவர்கள் சமூக திருமணங்களைச் செய்யலாம், அதைத் தொடர்ந்து ஆலயத்தில் முத்திரிக்கப்படுகிறார்கள் (38.3 பார்க்கவும்). ஆலயத் திருமணமானது பெற்றோர் அல்லது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் ஆலய சடங்கில் கலந்து கொள்ள முடியாத காரணத்தால் ஒதுக்கப்பட்டதாக உணரும் போது இந்த முறை பின்பற்றப்படலாம்.

27.3.1

ஆலயத்தில் யார் முத்திரிக்கப்படலாம்

சபையின் அனைத்து பொறுப்பேற்கும் திருமணமாகாத உறுப்பினர்களும் ஆலயத்தில் முத்திரிப்பதற்குத் தயாராக அழைக்கப்படுகிறார்கள். சமுதாயத் திருமணம் செய்து கொண்டவர்கள், அவர்கள் ஆயத்தப்பட்டவுடன் ஆலயத்தில் தற்காலம் மற்றும் நித்தியத்திற்கு முத்திரிக்கப்பட ஊக்குவிக்கப்படுகிறார்கள். முத்திரிக்கப்படுவதற்கு முன், உறுப்பினர்கள் தரிப்பித்தல் பண்ணப்பட வேண்டும் (27.2 பார்க்கவும்).

ஆலயத்தில் முத்திரிக்கப்படும் தம்பதிகள் (1) முத்திரிக்கப்படுவதற்கு முன் சமுதாய திருமணம் செய்திருக்க வேண்டும் அல்லது (2) திருமணம் செய்து அதே ஆலய சடங்கில் முத்திரிக்கப்பட்டிருக்க வேண்டும். 27.3.2 பார்க்கவும்.

27.3.1.2

அறிவுசார் குறைபாடுகள் உள்ள உறுப்பினர்கள்

அறிவுசார் குறைபாடுகள் உள்ள உறுப்பினர்கள் தங்கள் துணைவர், வருங்காலக் கணவர் அல்லது வருங்கால மனைவியுடன் முத்திரிக்கப்படலாம்:

  • தரிப்பித்தல் உட்பட அனைத்து முன்நிபந்தனை நியமங்களையும் அவர்கள் பெற்றுள்ளனர் (27.2.1.3 பார்க்கவும்).

  • உடன்படிக்கைகளைப் புரிந்துகொள்வதற்கும், உருவாக்குவதற்கும், அவற்றைக் கடைப்பிடிப்பதற்கும் அவர்களுக்கு அறிவுசார் திறன் உள்ளது.

ஆயர் உறுப்பினர் மற்றும் அவரது துணைவர், வருங்கால கணவர் அல்லது வருங்கால மனைவியுடன் ஆலோசனை செய்கிறார். அவர் ஆவியின் வழிநடத்துதலையும் நாடுகிறார். அவர் பிணையத் தலைவருடன் ஆலோசனை செய்யலாம்.

27.3.2

ஒரு ஆலயத் திருமணம் அல்லது முத்திரிக்க திட்டமிடுதல் மற்றும் நேரம் குறித்தல்

27.3.2.1

உயிரோடிருப்பவர்களின் நியமங்களுக்கான பரிந்துரையைப் பெறுதல்

ஒரு உறுப்பினர் தனது துணைவருடன் முத்திரிப்பதற்கான உயிரோடிருப்பவர்களின் நியமங்களுக்கான பரிந்துரையைப் பெற வேண்டும். இந்த பரிந்துரைகள் பற்றிய தகவலுக்கு, 26.3 ஐப் பார்க்கவும்.

27.3.2.2

ஆலயத்தைத் தொடர்பு கொள்ளுதல்

திருமணம் செய்யவோ அல்லது துணைவருடன் முத்திரிக்கவோ திட்டமிடும் உறுப்பினர்கள், நியமத்துக்கு நேரம் குறிப்பதற்கு முன்கூட்டியே ஆலயத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.

27.3.2.3

திருமண சான்றிதழ் பெறுதல்

திருமணம் செய்வதற்கு முன், ஒரு தம்பதி திருமணம் நடைபெறும் இடத்தில் செல்லுபடியாகிற சட்டப்பூர்வ திருமண சான்றிதழ் பெற வேண்டும். தம்பதிகள் இருவரும் ஒரே சடங்கின் போது திருமணம் செய்து முத்திரிக்க திட்டமிட்டால், அவர்கள் ஆலயத்தில் செல்லுபடியாகும் திருமண சான்றிதழ் கொண்டு வர வேண்டும்.

சமுதாய திருமணத்திற்குப் பிறகு முத்திரிக்கப்படும் தம்பதிகள் ஆலயத்துக்கு திருமண சான்றிதழ் கொண்டு வரத் தேவையில்லை. அதற்கு பதிலாக, பதிவேடு சரிபார்ப்பு செயல்முறையின் ஒரு பகுதியாக அவர்கள் தங்கள் சமுதாய திருமணத்தின் தேதி மற்றும் இருப்பிடத்தை வழங்குகிறார்கள்.

27.3.2.4

மணமகன் மற்றும் மணமகளுடன் வருபவர்கள்

மணப்பெண்ணுக்கு ஆடை மாற்றும் அறையில் உதவிக்காக ஒரு தரிப்பிக்கப்பட்ட சகோதரி உடன் வரலாம். ஒரு தரிப்பிக்கப்பட்ட சகோதரர் மணமகனுக்கும் அதையே செய்யலாம். உடன் செல்பவருக்கு தற்போதைய ஆலய பரிந்துரை இருக்க வேண்டும். தேவைப்பட்டால் ஆலயம் ஒரு உடன் செல்பவரை அனுப்பலாம்.

27.3.2.5

ஆலய திருமணம் அல்லது முத்திரித்தலை நிறைவேற்றுபவர் யார்

ஒரு ஆலய திருமணம் அல்லது முத்திரித்தல் வழக்கமாக தம்பதியர் திருமணம் செய்து கொள்ளும் அல்லது முத்திரிக்கப்படும் ஆலயத்திற்கு நியமிக்கப்பட்ட ஒரு முத்திரிப்பவரால் நிறைவேற்றப்படுகிறது. ஒரு குடும்ப உறுப்பினர் அல்லது அறிமுகமானவர் முத்திரிக்கும் அதிகாரத்தை வைத்திருந்தால், தம்பதியினர் திருமணம் செய்துகொள்ளும் அல்லது முத்திரிக்கப்படும் ஆலயத்துக்கு அழைக்கப்பட்டால், அவர்கள் அவரை திருமணம் அல்லது முத்திரித்தலை நிறைவேற்ற அழைக்கலாம்.

27.3.2.6

ஒரு ஆலய திருமணம் அல்லது முத்திரிக்கப்பட பொருத்தமான ஆடை

மணமகளின் ஆடை ஆலயத்தில் அணியும் மணமகளின் ஆடை வெண்மையாகவும், வடிவமைப்பு மற்றும் துணிகளில் அடக்கமாகவும், விரிவான அலங்காரங்கள் இல்லாததாகவும் இருக்க வேண்டும். அது ஆலய வஸ்திரத்தையும் மறைக்க வேண்டும். மெல்லிய துணி மற்றொரு துணியால் உட்புறம் தைக்கப்பட வேண்டும்.

ஆலயத்தில் அணியும் மற்ற ஆடைகளுடன் ஒத்துப்போக, மணமகளின் ஆடை நீண்ட கை அல்லது முக்கால் கைகளைக் கொண்டிருக்க வேண்டும். முத்திரிக்கும் சடங்கிற்காக உடைகள் ஊசி குத்தப்பட்டிருக்காவிட்டால் அல்லது அகற்றப்படாவிட்டாலோ ஆடைகளுக்கு இணைப்புத் துணிகள் இருக்கக் கூடாது.

ஆலயம் தேவைப்பட்டாலோ அல்லது விரும்பினாலோ ஒரு ஆடையை வழங்கலாம்.

மணமகன் ஆடை மணமகன் திருமணம் அல்லது முத்திரிப்பின் போது சாதாரண ஆலய ஆடைகளை அணிகிறார் (38.5.1 மற்றும் 38.5.2 பார்க்கவும்).

விருந்தினர்களின் ஆடை திருமணம் அல்லது முத்திரிக்கும் சடங்கில் கலந்துகொள்பவர்கள், ஒரு திருவிருந்து கூட்டத்திற்கு அணிவதைப் போன்ற ஆடைகளை அணிய வேண்டும். தரிப்பித்தல் அமர்வில் இருந்து நேரடியாக முத்திரித்தல் செய்வதற்கு வரும் உறுப்பினர்கள் சம்பிரதாயமான ஆலய ஆடைகளை அணியலாம்.

பூக்கள் திருமணம் அல்லது முத்திரிக்கும் போது தம்பதிகளும் அவர்களது விருந்தினர்களும் பூக்களை அணியக்கூடாது.

27.3.2.7

ஆலய திருமணம் அல்லது முத்திரித்த பிறகு மோதிரங்களை மாற்றிக் கொள்வது

மோதிரம் மாற்றுவது ஆலய முத்திரித்தல் சடங்கில் ஒரு பகுதி இல்லை. இருப்பினும், முத்திரிக்கும் அறையில் சடங்கிற்குப் பிறகு தம்பதிகள் மோதிரங்களை பரிமாறிக் கொள்ளலாம். தம்பதிகள் ஆலயத்திலோ அல்லது ஆலய வளாகத்திலோ வேறு எந்த நேரத்திலும், இடத்திலும் மோதிரங்களை மாற்றிக் கொள்ளக் கூடாது.

ஒரே சடங்கில் திருமணமாகி முத்திரிக்கப்பட்ட தம்பதிகள், ஆலய திருமணத்தில் கலந்து கொள்ள முடியாத குடும்ப உறுப்பினர்களும் சேர்ந்து கொள்ளத்தக்கதாக பின்னர் மோதிரங்களை மாற்றிக் கொள்ளலாம். மாற்றுதல் ஆலய திருமணம் அல்லது முத்திரிக்கும் சடங்கின் எந்தப் பகுதியையும் பிரதிபலிக்கக் கூடாது. திருமணமான பிறகு அல்லது ஆலயத்தில் முத்திரிக்கப்பட்ட பிறகு தம்பதிகள் சத்தியம் செய்துகொள்ளக்கூடாது.

ஆலயத்தில் முத்திரிக்கப்படுவதற்கு முன் சமுதாய திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் தங்கள் சமுதாய விழா, ஆலய முத்திரித்தல் அல்லது இரண்டு விழாக்களிலும் மோதிரங்களை மாற்றிக் கொள்ளலாம்.

27.3.4

ஆலய திருமணம் அல்லது முத்திரிப்பதில் யார் கலந்து கொள்ளலாம்

தம்பதிகள் ஆலய திருமணம் அல்லது முத்திரிக்கப்படுவதற்கு நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களை மட்டுமே அழைக்க வேண்டும். பொறுப்பேற்கும் உறுப்பினர்கள் தரிப்பிக்கப்பட்டிருக்க வேண்டும் மற்றும் தற்போதைய ஆலய பரிந்துரையில் கலந்து கொள்ள வேண்டும்.

அறிவுசார் குறைபாடுகள் காரணமாக ஞானஸ்நானம் பெறாத அல்லது தரிப்பித்தல் பெறாத ஒருவருக்கு ஆலய திருமணத்தையோ அல்லது அவரது உயிருடன் இருக்கும் உடன்பிறப்புகளுடன் முத்திரிக்கப்படுவதையோ பார்க்க பிணையத் தலைவர் அங்கீகரிக்கலாம். அவர் கண்டிப்பாக:

  • குறைந்தது 18 வயதாக இருக்க வேண்டும்.

  • சடங்கின்போது பயபக்தியுடன் இருக்க வேண்டும்.

முத்திரிக்கப்படுவதை பார்க்க அந்த நபருக்கு அதிகாரம் உள்ளது என்று பிணையத் தலைவர் கடிதம் எழுதுகிறார். இந்தக் கடிதம் ஆலயத்தில் கொடுக்கப்படுகிறது.

27.4

உயிரோடிருக்கும் குழந்தைகளை பெற்றோருடன் முத்திரித்தல்

ஒரு ஆலயத்தில் ஒரு கணவனுடன் தாய் முத்திரிக்கப்பட்ட பிறகு பிறக்கும் குழந்தைகள் அந்த முத்திரிப்பின் உடன்படிக்கையில் பிறக்கின்றனர். பெற்றோருடன் முத்திரிக்கும் நியமத்தை அவர்கள் பெற வேண்டிய அவசியமில்லை.

உடன்படிக்கையில் பிறக்காத குழந்தைகள் தங்கள் பிறப்பு அல்லது வளர்ப்பு பெற்றோருடன் முத்திரிக்கப்படுவதன் மூலம் நித்திய குடும்பத்தின் ஒரு பகுதியாக மாறலாம். உடன்படிக்கையில் பிறந்தவர்களைப் போலவே இந்த குழந்தைகளும் அதே ஆசீர்வாதங்களுக்கு தகுதியானவர்கள்.

27.4.2

ஆலயத்தைத் தொடர்பு கொள்ளுதல்

தங்கள் குழந்தைகளை தங்களுடன் முத்திரிக்க விரும்பும் தம்பதிகள் அல்லது இறந்த பெற்றோருடன் முத்திரிக்க விரும்பும் குழந்தைகள், நியமத்தை திட்டமிடுவதற்கு முன்கூட்டியே ஆலயத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும்.