2.
அவர் உங்களுடன் தொடர்புகொள்ள விரும்புகிறார்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 8:2–3
பதின்ம வயதுடைய ஜோசப் ஸ்மித் ஜெபித்தபோது, பரலோக பிதாவும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவும் அவருக்குப் பதிலளித்தபோது சுவிசேஷத்தின் மறுஸ்தாபிதம் தொடங்கியது. தேவன் தமது சபையை ஜீவிக்கும் தீர்க்கதரிசிகள் மூலம் தொடர்ந்து வழிநடத்துகிறார். அவர் பரிசுத்த ஆவியின் மூலமாக, தம்முடைய பிள்ளையாகிய உங்களுடன் பேசவும் விரும்புகிறார். பரிசுத்த ஆவியானவர் உங்களிடம் எவ்வாறு பேசுகிறார் என்பதை அடையாளம் காணக் கற்றுக்கொள்வது, நீங்கள் பெறக்கூடிய மிகவும் மதிப்புமிக்க திறன்களில் ஒன்றாகும்.
நித்திய சத்தியங்கள்
ஆவியானவர் உங்களை பரலோக பிதாவிடமும் இயேசு கிறிஸ்துவிடமும் வழிநடத்துகிறார். இது பரிசுத்த ஆவியின் ஒரு முக்கிய பங்கு. நீங்கள் அவருடைய பாவநிவர்த்தியின் ஆசீர்வாதங்களைப் பெற, மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றவும் அவர் உங்களுக்கு உணர்த்துவார். நீங்கள் மனந்திரும்பும்போது, ஆவியானவர் உங்களைச் சுத்திகரித்து, உங்களை மாற்ற உதவுகிறார்.
பரிசுத்த ஆவியானவர் உங்கள் மனதுடனும் இருதயத்துடனும் பேசுகிறார். ஆவியானவரிடமிருந்து வரும் செய்திகள் பல வழிகளில் உங்கள் மனதிற்கு வரலாம்—உணர்த்தப்பட்ட எண்ணங்கள், எச்சரிக்கைகள், தெளிவான புரிதல் மற்றும் ஆவிக்குரிய நினைவுகள் மூலம். ஆறுதல், நம்பிக்கை, சமாதானம், அன்பு, மகிழ்ச்சி, தாழ்மை, நன்றியுணர்வு மற்றும் பொறுமை போன்ற உற்சாகமான உணர்வுகள் மூலம் பரிசுத்த ஆவியானவர் உங்கள் இருதயத்துடன் பேச முடியும்.
அழைப்புகள்
“பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.” நீங்கள் கிறிஸ்துவின் சபையின் உறுப்பினராக திடப்படுத்தப்பட்டபோது இந்த வார்த்தைகள் பேசப்பட்டன. நீங்கள் பரிசுத்த ஆவியை எவ்வாறு பெறுகிறீர்கள்? இயேசு கிறிஸ்துவின் போதனைகளுக்குக் கீழ்ப்படிவதன் மூலம். அவரே உங்கள் பெலன். அவரைப் பின்பற்றுவது பரிசுத்த ஆவியை உங்கள் வாழ்க்கையில் அழைக்கிறது.
உங்கள் பரலோக பிதாவை ஜெபத்தில் தேடுங்கள். அவரிடத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றுங்கள். அவர் உங்களுக்குக் கொடுத்த பல அற்புதமான ஆசீர்வாதங்களுக்காக அவருக்கு நன்றி செலுத்துங்கள். உங்கள் சந்தோஷங்கள், கவலைகள் மற்றும் கேள்விகளை அவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அமைதியாக இருந்து அவருடைய பதில்களைக் கேளுங்கள், அவை அமைதி உணர்வுகளாகவோ, உங்கள் மனதில் சிந்தனைகளாகவோ அல்லது ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணங்களாகவோ வரக்கூடும்.
வேதங்களில் தேவனுடைய சத்தத்தைக் கேளுங்கள். வேதங்கள் உங்களுக்கு தேவனுடைய வார்த்தைகளாயிருக்கிறது! அவருடைய குரலைக் கண்டுபிடித்து அவருடைய அன்பை உணர அவற்றிலிருந்து தினமும் கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் வாசிக்கும்போது, அவர் உங்களுக்கு என்ன கற்பிக்கக்கூடும் என்று சிந்தித்துப் பாருங்கள், வரும் எண்ணங்களை எழுதுங்கள். உங்கள் வாழ்நாள் முழுவதும் வேதங்களை—குறிப்பாக மார்மன் புஸ்தகத்தைப்—படிப்பதை தினசரி பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
நீங்கள் பெறும் ஆவிக்குரிய எண்ணங்களின்படி செயல்படவும். ஒருவரை ஆசீர்வதிக்கும் ஏதாவது ஒரு செயலைச் செய்ய வேண்டும் என்ற சிந்தனை அல்லது எண்ணம் உங்களுக்கு இருந்தால், அதைச் செய்யுங்கள்! எல்லா நல்ல விஷயங்களும் தேவனிடமிருந்து வருகின்றன. அவரிடமிருந்து வரும் எண்ணங்களை நீங்கள் பின்பற்றுவீர்கள் என அவர் உங்களை நம்பலாம் என்பதை உங்கள் பரலோக பிதாவுக்குக் காட்டுங்கள்.
வாக்களிக்கப்பட்ட ஆசீர்வாதங்கள்.
பரிசுத்த ஆவியானவர் உங்களை ஆறுதல்படுத்தி வழிநடத்துவார். அவர் தேற்றரவாளன் என்று அறியப்படுகிறார். சோதனைக் காலங்களில் அவர் உங்களை ஆதரிப்பார். என்ன சொல்ல வேண்டும் அல்லது என்ன செய்ய வேண்டும் என்பதை அறிய அவர் உங்களுக்கு உதவுவார். அவருடைய செல்வாக்கின் மூலம், உண்மைக்கும் பொய்க்கும் உள்ள வித்தியாசத்தை உங்களால் அறிய முடியும். மற்றவர்களிடமும் உங்களிடமும் உள்ள நல்லதைக் கண்டறிய அவர் உங்களுக்கு உதவ முடியும். ஆவியானவர் உங்களுக்கு ஆபத்தைப் பற்றியும் எச்சரிக்கலாம். அவர் உங்களை இயேசு கிறிஸ்துவை நோக்கியும் பாவத்திலிருந்து விலக்கியும் வழிநடத்துவார்.
நீங்கள் ஆவிக்குரிய வரங்களைப் பெறலாம். தேவன் தம்முடைய ஆவியின் மூலம் தம்முடைய பிள்ளைகளுக்குக் கொடுக்கும் பல வரங்கள் உள்ளன. வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள சிலவற்றில் வெளிப்படுத்தல், இயேசு கிறிஸ்துவை நம்புதல், கற்பித்தல், பகுத்தறிதல் மற்றும் ஞானம் ஆகியவை அடங்கும். பரலோக பிதாவிடம் அவர் உங்களுக்குக் கொடுத்த ஆவிக்குரிய வரங்களைப் பற்றியும், அவற்றை நீங்கள் எவ்வாறு விருத்தி செய்யலாம், மற்றவர்களை ஆசீர்வதிக்க அவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று அவர் விரும்புகிறார் என்பதைப் பற்றியும் கேட்க ஜெபியுங்கள்.
கேள்விகளும் பதில்களும்
மற்றவர்களுக்கு என்னை விட சிறந்த ஆவிக்குரிய அனுபவங்கள் இருப்பது ஏன்? எல்லா ஆவிக்குரிய அனுபவங்களும் அற்புதமாகவோ அல்லது வியத்தகு முறையிலோ இருப்பதில்லை. பெரும்பாலான நேரங்களில், தேவன் நம் மனதிற்கு எண்ணங்கள் மூலமாகவோ அல்லது நம் இருதயங்களில் மென்மையான உணர்வுகள் மூலமாகவோ நம்மிடம் பேசுகிறார். இவை அமைதியான, மெல்லிய குரலின் அமைதியான கிசுகிசுக்கள். நீங்கள் ஆவியை உணர்ந்து கொண்டிருக்கலாம், ஆனால் அதை இன்னும் அடையாளம் காணாமல் இருக்கலாம். தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள். தொடர்ந்து தேவனுடைய வார்த்தையைப் படியுங்கள். காலம் மற்றும் பயிற்சியின் மூலம், நீங்கள் பல்வேறு வழிகளில் ஆவியை அடையாளம் காணக் கற்றுக்கொள்வீர்கள்.
1 ராஜாக்கள் 19:11–12 பார்க்கவும் (தேவன் அமைதியான, மெல்லிய குரலில் பேசுகிறார்.); யோவான் 15:26 (ஆவி கிறிஸ்துவைக் குறித்து சாட்சியமளிக்கிறது); மரோனி 10:3–5 (ஆவியினால் உண்மையை அறியவும்); கோட்பாடும் உடன்படிக்கைகளும் 11:12–13 (ஆவி நன்மை செய்ய வழிநடத்துகிறது); 45:57 (ஆவியை உங்கள் வழிகாட்டியாக எடுத்துக் கொள்ளுங்கள்.); 46:8–26 (ஆவிக்குரிய வரங்கள்).
ஆலய பரிந்துரை கேள்விகள்
-
நித்திய பிதாவாகிய தேவன், அவருடைய குமாரன் இயேசு கிறிஸ்து மற்றும் பரிசுத்த ஆவியில் உங்களுக்கு விசுவாசமும் சாட்சியமுமுண்டா?