“மனதில் வைக்க வேண்டிய எண்ணங்கள்: பழைய ஏற்பாட்டை வாசித்தல்,”என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: பழைய ஏற்பாடு 2026 (2026)
“பழைய ஏற்பாட்டை வாசித்தல்,”என்னைப் பின்பற்றி வாருங்கள்: 2026
மனதில் வைக்க வேண்டிய எண்ணங்கள்
பழைய ஏற்பாட்டை வாசித்தல்
நேபி தனது சகோதரர்களை கர்த்தரை நம்பும்படி உணர்த்த விரும்பியபோது, அவன் மோசேயைப் பற்றிய கதைகளையும் ஏசாயாவின் போதனைகளையும் பகிர்ந்து கொண்டான். அப்போஸ்தலனாகிய பவுல், தேவனுடைய வாக்குறுதிகளில் விசுவாசம் வைக்க ஆரம்பகால கிறிஸ்தவர்களை ஊக்குவிக்க விரும்பியபோது, நோவா, ஆபிரகாம், சாராள், ராகாப் மற்றும் மற்றவர்களின் விசுவாசத்தைப் பற்றி அவர்களுக்கு நினைப்பூட்டினான். மேலும் இயேசு கிறிஸ்து யூதர்களின் தலைவர்களிடம் “வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்” என்று கூறியபோது, “அவைகள் என்னைக் குறித்து சாட்சி கொடுக்கின்றன” (யோவான் 5:39) என்று விளக்கி, அவர் பேசிக்கொண்டிருந்த வேதவாக்கியங்களை நாம் பழைய ஏற்பாடு என்று அழைக்கிறோம்.
வேறு வார்த்தைகளில் எனில், நீங்கள் பழைய ஏற்பாட்டை வாசிக்கும்போது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தேவனுடைய ஜனத்துக்கு உணர்த்தி, ஆறுதல் அளித்து, உற்சாகப்படுத்திய வார்த்தைகளை நீங்கள் படிக்கிறீர்கள்.
ஆனால் நீண்ட காலத்திற்கு முன்பு எழுதப்பட்ட ஒன்று உங்களுக்கு உண்மையில் இன்றைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண உதவுமா? ஆம், முடியும்! குறிப்பாக பழைய ஏற்பாடு உண்மையில் யாரைப் பற்றியது என்பதை நீங்கள் நினைவில் வைத்திருந்தால்.
இயேசு கிறிஸ்துவின் ஒரு ஏற்பாடு
நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் எதிர்கொள்ளும் சவால்கள் எதுவாக இருந்தாலும், பதில் எப்போதும் இயேசு கிறிஸ்துவே. எனவே பழைய ஏற்பாட்டில் பதில்களைக் கண்டுபிடிக்க, அவரைத் தேடுங்கள். அது எப்போதுமே எளிதாயிருக்காது. நீங்கள் பொறுமையாக சிந்தித்து ஆவிக்குரிய வழிகாட்டுதலைப் பெற வேண்டியிருக்கலாம். “நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார், … அவரது நாமம் சமாதானப்பிரபு என்னப்படும்” என ஏசாயா அறிவித்ததுபோல, (ஏசாயா 9:6) சில சமயங்களில் அவரைப்பற்றிய குறிப்புக்கள் மிக நேரிடையாகத் தோன்றுகிறது. மற்ற இடங்களில், இரட்சகர் மிகவும் நுட்பமாக, அடையாளங்கள் மற்றும் ஒப்பீடுகள் மூலம் குறிப்பிடப்படுகிறார்—உதாரணமாக, மிருக ஜீவன்களின் பலிகளைப்பற்றிய விவரிப்புகள் மூலம் அல்லது பஞ்சத்திலிருந்து யோசேப்பு தனது சகோதரர்களை மன்னித்து காப்பாற்றிய விவரத்தின் மூலம்.
உலகுக்கு ஒளி–ஸ்காட் சம்னர்
நீங்கள் பழைய ஏற்பாட்டைப் படிக்கும்போது இரட்சகர் மீது அதிக விசுவாசத்தை நாடினால், நீங்கள் அதைக் காண்பீர்கள். ஒருவேளை இது இந்த ஆண்டு உங்கள் படிப்பின் இலக்காக இருக்கலாம். இயேசு கிறிஸ்துவுடன் உங்களை நெருக்கமாக கொண்டுவரும் பாகங்கள், கதைகள் மற்றும் தீர்க்கதரிசனங்களைக் கண்டுபிடித்து கவனம் செலுத்த பரிசுத்த ஆவியானவர் வழிநடத்துமாறு ஜெபியுங்கள்.
தெய்வீகமாக பாதுகாக்கப்பட்டது
பழைய ஏற்பாடு மனுக்குலத்தின் முழுமையான மற்றும் துல்லியமான வரலாற்றை கொடுக்கிறது என்று எதிர்பார்க்க வேண்டாம். ஆதிகால எழுத்தாளர்கள் மற்றும் தொகுப்பாளர்கள் உருவாக்க முயற்சிப்பது அதுவல்ல. தேவனைப்பற்றியும்— அவருடைய பிள்ளைகளுக்கான அவருடைய திட்டத்தைப்பற்றியும், அவருடைய உடன்படிக்கை ஜனமாக இருப்பதன் அர்த்தம் மற்றும் நம்முடைய உடன்படிக்கைகளுக்கு ஏற்ப நாம் வாழாதபோது மீட்பை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதைப்பற்றியும், சிலவற்றைக் கற்பிப்பதே அவர்களின் பெரிய அக்கறை. சில சமயங்களில் வரலாற்று நிகழ்வுகளை அவர்கள் புரிந்துகொண்டபடியே தொடர்புபடுத்துவதன் மூலம் பெரிய தீர்க்கதரிசிகளின் வாழ்க்கையின் கதைகள் உட்பட அதைச் செய்தார்கள். ஆதியாகமம் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு, யோசுவா, நியாயாதிபதிகள் மற்றும் 1 மற்றும் 2 இராஜாக்கள் போன்ற புத்தகங்களும் அப்படியே. ஆனால் மற்ற பழைய ஏற்பாட்டு எழுத்தாளர்கள் வரலாற்று ரீதியாக எழுதுவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. மாறாக, கவிதை, இலக்கியம் போன்ற கலைப் படைப்புகள் மூலம் கற்பித்தனர். சங்கீதங்களும் நீதிமொழிகளும் இந்த வகைக்கு பொருந்துகின்றன. பின்பு ஏசாயா மற்றும் மல்கியா தீர்க்கதரிசிகளின் விலைமதிப்பற்ற வார்த்தைகள் உள்ளன, அவர்கள் தேவனுடைய வார்த்தையை பண்டைய இஸ்ரவேலிடம் பேசினார்கள், வேதாகமத்தின் அதிசயம் மூலம் இன்றும் நம்மிடம் பேசுகிறார்கள்.
இந்த தீர்க்கதரிசிகள், கவிஞர்கள் மற்றும் தொகுப்பாளர்கள் அனைவரும் அவர்களின் வார்த்தைகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு உலகெங்கிலும் உள்ள மக்களால் வாசிக்கப்படும் என்று அறிந்தனரா? நமக்குத் தெரியாது. ஆனால் சரியாக இதுதான் நடந்தது என்று நாம் ஆச்சரியப்படுகிறோம். நாடுகள் உயர்ந்தன, வீழ்ந்தன, நகரங்கள் கைப்பற்றப்பட்டன, ராஜாக்கள் வாழ்ந்து இறந்தார்கள்; ஆனால் பழைய ஏற்பாடு தலைமுறை தலைமுறையாக, எழுத்தாளர் முதல் எழுத்தாளர் வரை, மொழிபெயர்ப்பிலிருந்து மொழிபெயர்ப்பு வரை அனைத்தையும் விஞ்சியது. நிச்சயமாக சில விஷயங்கள் காணாமற்போயின அல்லது மாற்றியமைக்கப்பட்டன, ஆனாலும் எப்படியோ அதிகமானவை அதிசயமாக பாதுகாக்கப்பட்டன.
பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசி–ஜூடித் ஏ. மெர் (விளக்கம்)
இந்த ஆண்டு பழைய ஏற்பாட்டை நீங்கள் வாசிக்கும்போது மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இவை. தேவன் இந்த பண்டைய எழுத்துக்களைப் பாதுகாத்தார், ஏனென்றால் அவர் உங்களையும் நீங்கள் என்ன அனுபவிக்கிறீர்கள் என்பதையும் அறிகிறார். இந்த வார்த்தைகளில் அவர் உங்களுக்காக ஒரு ஆவிக்குரிய செய்தியை ஆயத்தப்படுத்தியிருக்கிறார், அது உங்களை அவரிடம் நெருங்கி வந்து அவருடைய திட்டத்திலும் அவருடைய அன்பான குமாரனிடத்திலும் உங்கள் விசுவாசத்தை வளர்க்கும். ஒருவேளை உங்களுக்குத் தெரிந்த ஒருவரை ஆசீர்வதிக்கும் ஒரு பாகத்துக்கு அல்லது ஒரு உள்ளுணர்வுக்கு, ஒரு நண்பர், குடும்ப அங்கத்தினர் அல்லது சக பரிசுத்தவான் ஆகியோருடன் நீங்கள் பகிர்ந்து கொள்ளக்கூடிய செய்திக்கு அவர் உங்களை அழைத்துச் செல்வார். அநேக சாத்தியங்கள் உள்ளன. அதைப்பற்றி சிந்திப்பது உற்சாகமில்லையா?
நேபி சொன்னான், “என் ஆத்துமா வேதவாக்கியங்களில் களிகூருகிறது” (2 நேபி 4:15). நேபி வாசித்த அதே வார்த்தைகளில் பலவற்றை நீங்கள் வாசிக்கும்போது,— இப்போது நாம் பழைய ஏற்பாடு என்று அழைக்கிற அதையே நீங்கள் உணருவீர்கள்.
பழைய ஏற்பாட்டு புத்தகங்கள்
பழைய ஏற்பாட்டின் பெரும்பாலான கிறிஸ்தவ பதிப்புகளில், புத்தகங்கள் முதலில் ஒரு தொகுப்பில் தொகுக்கப்பட்டபோது அவை எவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்டன என்பதிலிருந்து வித்தியாசமாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. ஆகவே, எபிரேய வேதாகமம், புத்தகங்களை நியாயப்பிரமாணம், தீர்க்கதரிசிகள் மற்றும் எழுத்துக்கள் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கும்போது, பெரும்பாலான கிறிஸ்தவ வேதாகமங்கள் புத்தகங்களை நான்கு பிரிவுகளாக ஒழுங்குபடுத்துகின்றன: நியாயப்பிரமாணம் (ஆதியாகமம்–உபாகமம்), வரலாறு (யோசுவா– எஸ்தர்), கவிதை புத்தகங்கள் (யோபு– சாலொமோனின் பாடல்கள் ), மற்றும் தீர்க்கதரிசிகள் (ஏசாயா– மல்கியா).
இந்த பிரிவுகள் ஏன் முக்கியமானவைகளாய் இருக்கின்றன? ஏனென்றால், நீங்கள் படிப்பது என்ன வகையான புத்தகம் என அறிந்துகொள்வது, எப்படி அதைப் படிப்பதென்பதைப் புரிந்துகொள்ள உதவும்.
“நியாயப்பிரமாணம்” அல்லது பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து புத்தகங்களைப் படிக்கத் தொடங்கும்போது நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று இதோ. பாரம்பரியமாக மோசேக்கு உரிமைப்பட்ட இந்த புத்தகங்கள், காலப்போக்கில் ஏராளமான எழுத்தாளர்கள் மற்றும் தொகுப்பாளர்களின் கைகளில் கடந்து சென்றிருக்கலாம். மேலும், பல நூற்றாண்டுகளாக, வேதாகமத்திலிருந்து “தெளிவானதும் விலையேறப்பெற்றதுமான அனேக பகுதிகள்” எடுக்கப்பட்டதை நாம் அறிவோம்.(1 நேபி 13:23–26 பார்க்கவும்). இருப்பினும், மோசேயின் புத்தகங்கள் தேவனின் உணர்த்தப்பட்ட வார்த்தையாகும்—அவை மனிதர்களின் மூலம் கடத்தப்பட்ட தேவனின் எந்த பணியையும் போலவே இருந்தாலும்—அவை மனித குறைபாடுகளுக்கு உட்பட்டவை (மோசே 1:41; விசுவாசப் பிரமாணங்கள் 1:8 பார்க்கவும்). அவன் தொகுக்க உதவிய பரிசுத்த மார்மன் புஸ்தக பதிவைக் குறிப்பிடும் மரோனியின் வார்த்தைகள் இங்கே உதவியாக இருக்கும்: “குறைகள் இருப்பின் அவைகள் மனுஷர்களின் தவறுகளாகவேஇருக்கின்றன ஆகையால், தேவனுடைய காரியங்களைக் கண்டனம் பண்ணாதிருப்பீர்களாக” (மார்மன் புஸ்தகத்தின் தலைப்புப் பக்கம்). வேறு வார்த்தைகளில் எனில், வேதப் புத்தகம் தேவனின் வார்த்தையாக இருக்க மனித பிழையிலிருந்து விடுபட வேண்டியதில்லை.