லியஹோனா
என் குடும்பம் எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது
மார்ச் 2026 லியஹோனா


ஆசிய பிரதேச தலைமைத்துவச் செய்தி

என் குடும்பம் எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது

ஒரு நாள் நான் வீட்டிற்குச் செல்லும் வழியில், என் கவனத்தைக் கவர்ந்த ஒரு ஆங்கில அடையாளத்தைப் பார்த்தேன் அதில், "Family என்ற சொல்லுக்கு அர்த்தம் Father And Mother I Love You." (தந்தையே தாயே நான் உங்களை நேசிக்கிறேன்) என்று எழுதப்பட்டிருந்தது. இந்த அடையாளம் எனக்குச் சில உத்வேகத்தைக் கொடுத்தது. இது "குடும்பம்" என்ற வார்த்தையின் அமைப்பை விளக்குவது போன்றிருந்தது. ஒரு குடும்பத்தில் பெற்றோரும் பிள்ளைகளும் மட்டுமில்லை, அதனினும் மிக முக்கியமாக “அன்பு” அவசியமான செயலும் அடங்கியுள்ளது. இது இந்த எளிய சொல்லை வித்தியாசமாக மாற்றி, ஒரு குடும்பத்திற்கு தேவையான ஊக்கத்தையும் நம்பிக்கையையும் நிரப்புகிறது.

நம் அன்பான பரலோக பிதா தமது பிள்ளைகளுக்கு வழங்கிய அனைத்துப் பரிசுகளிலும், மகத்தான பரிசு நித்திய ஜீவன் ஆகும். பிதாவாகிய தேவன் மற்றும் அவருடைய நேச குமாரனின் பிரசன்னத்தில் குடும்பங்களாக என்றென்றும் வாழ்வது அந்த பரிசு ஆகும். தேவனின் ராஜ்யங்களில் உயர்ந்த ராஜ்யமான சிலஸ்டியல் ராஜ்யத்தில் மட்டுமே குடும்ப வாழ்க்கையின் அன்பான பிணைப்புகள் தொடரும். அன்பான குடும்பங்களில் வாழும் மகிழ்ச்சியை நாம் அனைவரும் நம்புகிறோம். நம் அன்புக்குரிய குடும்ப உறுப்பினரின் அன்பான பாசத்தை மீண்டும் ஒரு நாள் உணர்வோம் என்றும், அவரை மீண்டும் கட்டியணைக்க ஏங்குவோம் என்றும் நாம் அனைவரும் நம்புகிறோம்.

நம் அன்பான பரலோக பிதா நம் இருதயங்களை அறிந்திருக்கிறார். அவருடைய நோக்கம் நமக்கு மகிழ்ச்சியைத் தருவதே. குடும்ப பிணைப்புகளின் மகிழ்ச்சியை என்றென்றும் சாத்தியமாக்க அவர் தம் குமாரனை பரிசாகக் கொடுத்தார். இரட்சகர் மரணத்தின் கட்டுகளை உடைத்ததால், நாம் உயிர்த்தெழுவோம். அவர் நம் பாவங்களுக்காக பாவநிவர்த்தி செய்ததால், நம் விசுவாசம் மற்றும் மனந்திரும்புதல் மூலம், நாம் பரலோக ராஜ்யத்திற்குத் தகுதியுள்ளவர்களாக ஆக முடியும், அங்கு குடும்பங்கள் என்றென்றும் அன்பில் பிணைக்கப்படுகின்றன.

மூப்பர் ஹென்றி பி. ஐரிங் இவ்வாறு கூறினார்: "பன்னிரு அப்போஸ்தலர்கள் குழுமத்தின் ஒரு உறுப்பினர் ஒருமுறை எனக்குக் கொடுத்த வாக்குறுதியை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். எங்கள் விரிந்த குடும்பத்தில் சிலர் செய்த தெரிவுகளின் காரணமாக, வரும் உலகில் நாங்கள் ஒன்றாக இருக்க முடியுமா என்று நான் சந்தேகப்பட்டதாக அவரிடம் கூறினேன். எனக்கு நினைவிருக்கிறபடி, அவர் சொன்னார், "நீங்கள் தவறான பிரச்சனையைப் பற்றி கவலைப்படுகிறீர்கள். நீ சிலஸ்டியல் ராஜ்யத்துக்கு தகுதியாக வாழ். குடும்ப ஏற்பாடுகள் நீ கற்பனை செய்வதைவிட மிக அற்புதமாக இருக்கும்.“

தலைவர் ஹரோல்ட் பி. லீ நம் அனைவரையும் நம் வீடுகளில் அதிக அன்பு, வலிமை மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டிருக்க ஊக்குவித்தார். அவர், “உங்கள் குடும்பப் பிணைப்புகளைப் பலப்படுத்துங்கள், உங்கள் பிள்ளைகள் மீது கவனம் வையுங்கள். . . இந்த பிரச்சினைகள் மற்றும் குழப்பங்கள் நிறைந்த காலத்தில் பிள்ளைகளுக்குத் தேவையான நங்கூரமாக (ஆதாரமாக) இருக்கும் பலமான இடமாக வீட்டை உருவாக்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அப்போது அன்பு பெருகும், உங்கள் மகிழ்ச்சி அதிகரிக்கும்.” குடும்ப ஜெபங்களைச் செய்ய வேண்டும் என்றும், சபை அழைப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார். குடும்ப உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் மரியாதை காட்ட வேண்டும். பெற்றோர் சண்டையிடக்கூடாது, மேலும் தவறான புரிதல்கள் விவேகத்துடன் ஒன்றாக விவாதிக்கப்பட வேண்டும். குடும்பத்தில் மற்றவர்களுக்கு உதவ ஒவ்வொருவரும் தினமும் தியாகங்கள் செய்ய முயற்சி செய்ய வேண்டும்.

தலைவர் ஹரோல்ட் பி. லீ கூறினார்: தேவனின் அன்பு என்பது கேட்டவுடன் உடனே கிடைக்கக்கூடிய ஒன்று அல்ல. தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்; தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்? என்று யோவான் கூறினார். நீங்கள் தேவனை நேசித்துவிட்டு, உங்களுடன் பழகும் உங்கள் சகோதரனை வெறுக்க முடியாது. தான் ஒரு ஆவிக்குரிய மாமனிதன் என்று நினைக்கும் எந்தவொரு மனிதனும், அவன் மனைவியையும் சொந்தப் பிள்ளைகளையும் கவனிக்காமல் விட்டு, தன் வீடு ஒழுங்கீனமாக இருந்தால், அந்த மனிதன் தேவனின் அன்பை வளர்க்கும் பாதையில் நடப்பவன் அல்ல.”

உலகிற்கு ஓர் பிரகடனம்" உங்கள் குடும்பத்தைப் பலப்படுத்தவும், ஒற்றுமையாக்கவும் உதவும். ஆரம்ப வகுப்பு பிள்ளைகளுக்குக் கொடுக்கப்பட்ட ஆலோசனைகள் பின்வருமாறு

  • நீங்கள் உங்கள் உதவி தேவையாயிருக்கும் ஒரு நித்திய குடும்பத்தின் அங்கம்.

  • உங்கள் குடும்பத்துக்கு நீங்கள் மகிழ்ச்சி, தயை, மற்றும் அன்பை கொண்டு வர முடியும்.

  • நீங்கள் ஒருவருக்கொருவர் செவிகொடுக்கலாம், ஒன்றாக வேலை செய்யலாம் மற்றும் விளையாடலாம், மன்னிக்கலாம் மற்றும் ஒருவருக்கொருவர் உதவலாம்.

  • நீங்கள் உங்கள் குடும்பத்துடன் வேதங்களைப் படிக்கலாம்.

  • நீங்கள் ஜெபிப்பதன் மூலமும், கட்டளைகளைக் கடைப்பிடிப்பதன் மூலமும் உங்கள் குடும்பத்திற்கு ஒரு நல்ல உதாரணமாக இருக்க முடியும்.

நீங்கள் சிலஸ்டியல் ராஜ்யத்திற்குத் தகுதியானவர்களாக வாழும்போது, "குடும்ப ஏற்பாடுகள் நீங்கள் கற்பனை செய்வதை விடவும் மிகவும் அற்புதமானதாக இருக்கும்" என்ற தீர்க்கதரிசன வாக்குறுதி உங்களுடையதாக இருக்கும் என்று நான் சாட்சியமளிக்கிறேன். ■

குறிப்புகள்

  1. கோ&உ 14:7

  2. 2 நேபி 2:25

  3. See also Henry B. Eyring, “A Home Where the Spirit of the Lord Dwells,” Liahona, May 2019, 22–25.

  4. Teachings of the Prophets: Harold B. Lee [2011], 131

  5. 1 யோவான் 4:20

  6. Teachings of the Prophets: Harold B. Lee, 130-131

  7. எரின் சாண்டர்சன் மற்றும் ஜீன் பிங்ஹம், லியஹோனா, அக். 2014, பிள்ளைகள் பிரிவு

  8. ஹென்றி பி. ஐரிங், "கர்த்தரின் ஆவி தங்குகிற வீடு," 25