லியஹோனா
என்னுடைய உடன்படிக்கைகள் கடினமான காலங்களில் என்னை நிலைநிறுத்த உதவுகின்றன
பெப்ருவரி 2026 லியஹோனா


ஆசிய பிரதேச தலைமைத்துவச் செய்தி

என்னுடைய உடன்படிக்கைகள் கடினமான காலங்களில் என்னை நிலைநிறுத்த உதவுகின்றன

ஞானஸ்நானத்திற்கு பிறகு நாம் திடப்படுத்துதலையும் பரிசுத்த ஆவியின் வரத்தையும் பெற்றுகொள்கிறோம். பரிசுத்த ஆவியானவர் ஆறுதலைத் தருகிறார் மற்றும் வாழ்க்கையின் சவால்களின் இடையே நம்மை வழிநடத்துகிறார். பரிசுத்த ஆவியானவருடனான நம் தொடர்பைத் தொடங்குவதற்கு, தேவனின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிவதன் மூலம், வேத வாக்கியங்களைப் படித்து தியானிக்க அமைதியான நேரத்தை ஒதுக்குவதன் மூலம், மேலும் அமர்ந்த மெல்லிய சத்தத்தைக் கேட்பதன் மூலமும் நம்மை நாமே சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

என்னுடைய முதலாவது குழந்தை பிறந்த முதல் சில மாதங்களில், இரவில் எங்கள் குழந்தையை கவனித்துக் கொள்ள என்னுடைய மனைவிக்கு உதவியாய் இருந்து நான் சோர்ந்து போனேன். நான் சில நாட்கள் வேத வாசிப்பைத் தவிர்க்கத் தொடங்கினேன். என்னுடைய வாழ்க்கை ஒழுங்கில்லாமல் இருந்ததை உணர்ந்தேன் மேலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நான் அறிந்திருந்தேன். மார்மன் புஸ்தகத்தை வேதபாட முதிர் வகுப்பின் கையேட்டுடன் இணைத்து படித்திட ஒவ்வொரு காலையும் ஒரு மணி நேரம் முன்னரே எழுந்திருக்க நான் முடிவு செய்தேன். என்னுடைய பாரங்களை சுமக்கும்படியான மிகுந்த ஆவிக்குரிய பலனை நான் கண்டுகொண்டேன். நான் ஆவியானவரின் தோழமையின் மூலம் அதிக மகிழ்ச்சியையும் சமாதானத்தையும் உணர்ந்தேன்.

கடந்த வருடம், எனது மனைவி ஒரு அச்சுறுத்தும் செய்தியை பெற்றார். அவரது தாய் மற்றும் தந்தை இருவரும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டனர். சில மாதங்களுக்குப் பின்னர், என் சொந்த தந்தை அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார், என் மனைவிக்கு புற்றுநோயாக இருந்திருக்க வாய்ப்புள்ள இரண்டு மார்பக நீர்க்கட்டிகள் கண்டறியப்பட்டன. அதிர்ஷ்டவசமாக, அறுவை சிகிச்சைக்குப் பிறகு முடிவுகள் புற்றுநோயைக் காட்டவில்லை. பின்னர், எங்கள் மகளுக்கு குடல் அழற்சி ஏற்பட்டது. இவை அனைத்தும் ஆறு மாதங்களுக்குள் நிகழ்ந்தன, மேலும் அவர்களில் யாருக்கும் இதற்கு முன்னர் அறுவை சிகிச்சை செய்யப்படவில்லை. இந்த நேரத்தை ஒட்டித்தான் அதிக பயணங்களும் நேரமும் தேவைப்படும் சபையின் ஒரு புதிய அழைப்பை நான் பெற்றுக் கொண்டேன், மேலும் என்னுடைய புதிய வேலை அநேக இரவுகளில் என்னுடைய வேலையின் நிறைவு நேரத்தைத் தாமதமாக்கியது.

இந்த சவால்களை சமாளிக்க, இரட்சகர் மட்டுமே எனக்கு உதவ முடியும் என்று எனக்குத் தெரிந்திருந்தது. வேதங்களைப் படிப்பதன் மூலமும், என் பயணத்தின் போது பொது மாநாட்டு பேச்சுகளைக் கேட்பதன் மூலமும், ஆலயத்தில் வழிபாடு செய்வதன் மூலமும் நான் அவரிடம் கிட்டிச் சேர முயற்சித்தேன். நான் கவலையால் விழுங்கப் படாமல், சிலஸ்டியலாக சிந்தித்து, ஆலயத்தில் நான் செய்த உடன்படிக்கைகளின் வல்லமையை நம்பியிருப்பதைத் தேர்ந்தெடுத்தேன். இது எனக்கு சமாதானத்தைக் கொண்டு வந்தது. இரட்சகர் வாக்குத்தத்தம் செய்திருக்கிறார், “சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன். என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன், உலகம் கொடுக்கிற பிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக” [யோவான் 14:27].

இந்த அனுபவங்கள் என்னை இரட்சகரிடம் கிட்டிச் சேரச் செய்தன. பரிசுத்த நியமங்கள் மூலம் நான் செய்த உடன்படிக்கைகள் பரலோக பிதாவுடனும் இயேசு கிறிஸ்துவுடனும் எனது பிணைப்பை பலப்படுத்தியுள்ளன. நான் உண்மையாக நம்புகிறேன் “...அதிலுள்ள நியமங்களில் தேவபக்திக்குரிய வல்லமை வெளிப்படுத்தப்படுகிறது” (கோ&உ 84:20). ஆலயத்தில் நாம் உடன்படிக்கைகளைச் செய்யும்போது, நமக்காகவும் நம் குடும்பங்களுக்காகவும் பரலோகத்திலிருந்து வல்லமையைப் பெறலாம். ஏலமனின் போதனையை நாம் நம்பலாம்: “...தேவகுமாரனாகிய கிறிஸ்து என்கிற நம் மீட்பராகிய கன்மலையின்மேல் நீங்கள் உங்கள் அஸ்திபாரத்தை கட்டவேண்டுமென்று நினைவில்கொள்ளுங்கள், பிசாசு தன் பலத்த காற்றுகளையும், ஆம், சூறாவளியில் தன் அம்புகளையும் அனுப்பி, ஆம், அவன் சகல கல்மழையாலும், அவனுடைய பலத்த புயலாலும் உங்களை அடிக்கும்போது, அது உங்களை பொல்லாத துரவிற்கும், நித்திய துன்பத்திற்கும் இழுத்துச் செல்ல வல்லமையற்றுப்போகும். ஏனெனில் நீங்கள் கட்டப்பட்டிருக்கிற கன்மலை மெய்யான அஸ்திபாரமாயிருக்கிறது. அந்த அஸ்திபாரத்தின்மேல் மனுஷர் கட்டினால் அவர்கள் விழுந்துபோவதில்லை” (ஏலமன் 5:12).

உடன்படிக்கைகளை செய்வதன் மூலமும் கடைப்பிடிப்பதன் மூலமும் இரட்சகரின் மேல் ஒரு உறுதியான அஸ்திபாரத்தை நாம் கட்டும்போது, சோதனைகள் வரும்போது நாம் மன அமைதியைப் பெறலாம், மேலும் எதிர்கால சவால்களுக்கு தயாராக இருக்கலாம். ஞானஸ்நானத்திற்குப் பிறகு நாம் கூடுதல் உடன்படிக்கைகளைச் செய்யும்போது—ஆசாரியத்துவ நியமனம், தரிப்பித்தல் மற்றும் முத்திரித்தல் உட்பட—தேவனுடனான நெருங்கிய உறவால் நாம் ஆசீர்வதிக்கப்படுகிறோம். ஒவ்வொரு நியமமும் நாம் வாழ்வில் கொண்டு வரும் ஆசீர்வாதங்களுக்கு நாம் உரிமை பெற்றவர்களாய் இருக்கின்றோம். தேவனின் பிரசன்னத்தில் நாம் முழு நம்பிக்கையைப் பெறும் வரை, நமது விசுவாசம் மேலும் மேலும் வலுவடையும். ஒவ்வொரு எண்ணத்திலும் நாம் அவரை நோக்கிப் பார்க்கும்போது “சந்தேகப்படமாட்டோம், பயப்படமாட்டோம்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 6:36).

இயேசு கிறிஸ்துவே நம் இரட்சகர் மேலும் அவர் ஜீவிக்கிறார் என்று நான் சாட்சி பகர்கிறேன். நம்முடைய தேவைகளை அவர் அறிந்திருக்கிறார், உடன்படிக்கைகளை செய்து கடைப்பிடிப்பவர்கள் உலகத்தின் நிச்சயமற்ற தன்மையிலிருந்தும் பயத்திலிருந்தும் பாதுகாக்கப்படுவார்கள் என்று வாக்குக் கொடுத்திருக்கிறார். நாம் எப்போதும் அவருடைய சமாதானத்தை நம்முடன் வைத்திருக்க முடியும் மற்றும் வாழ்க்கையில் அனைத்து சவால்களையும் நம்பிக்கையுடன் கடந்து செல்ல முடியும். ■