2025
நித்தியத்தின் இலக்கை விடாமல் பற்றிக்கொள்ளுதல்
டிசம்பர் 2025 லியஹோனா


ஆசிய பிரதேச தலைமைத்துவச் செய்தி

நித்தியத்தின் இலக்கை விடாமல் பற்றிக்கொள்ளுதல்

“விசுவாசத்தில் ஒன்றிணைந்திருக்கும் குடும்பங்கள் சோதனைகளை எதிர்கொண்டாலும்,கர்த்தர் அவர்களை எப்போதும் முன்னோக்கி வழிநடத்துகிறார்.”

கம்போடியா பல துயரகரமான உள்நாட்டுப் போர்களைச் சந்தித்துள்ளது.சண்டைகள் முடிந்த உடனேயே நான் பிறந்து விட்டேன். வாழ்க்கை மிகவும் கடினமாக இருந்ததோடு, எட்டு குழந்தைகளை வளர்க்கப் போராடிய என் பெற்றோருக்கு பெரும்பாலும் உணவு கூட தட்டுப்பாடாக இருந்தது. அத்தகைய சூழ்நிலைகளில், என் எதிர்காலம் எவ்வாறு அமையும் என பலமுறை நான் வியந்திருக்கிறேன்.

1998 ஆம் ஆண்டு, நான் பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசுகிறிஸ்து சபையில் சேர்ந்தபோது என் வாழ்க்கை மாறியது. உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடிப்பதற்கு ஒரு வருடம் முன்பு நான் ஞானஸ்நானம் பெற்றேன். கல்லூரியில் சேர பண வசதி இல்லாததால், முழுநேர ஊழியம் செய்யத் தேர்ந்தெடுத்தேன். ஊழியத்தின் போது, என் ஆவிக்குரிய கண்கள் திறக்கப்பட்டன. தேவனுடைய பிள்ளைகளுக்கான நித்தியத் திட்டத்தையும், எனக்கென ஒரு நித்திய குடும்பத்தை உருவாக்க நான் எவ்வாறு தயாராக முடியும் என்பதையும் புரிந்துகொண்டேன்.

மறுஸ்தாபிக்கப்பட்ட சுவிசேஷத்தின் ஆவிக்குரிய சத்தியங்களானது, நான் ஒருநாள் ஆலயத்தில் திருமணம் செய்து, என் மனைவியுடனும் பிள்ளைகளுடனும் நித்தியத்திற்கும் முத்திரையிடப்படுவேன் என்ற நிச்சயத்தை அளித்தன. எங்கள் குடும்பம் ஒன்றாக சபைக்கு செல்வதையும், ஒன்றாக கீர்த்தனைகள் பாடுவதையும், சுவிசேஷத்தை ஆர்வத்துடன் ஒன்றாகக் கற்பதையும் நான் கற்பனை செய்து பார்த்தேன். ஒருநாள் என் பிள்ளைகளை ஊழியத்திற்கு அனுப்பி, பின்னர் அவர்கள் பரிசுத்த ஆலயங்களில் முத்திரையிடப்பட்ட குடும்பங்களை அமைக்கும் நாளையும் நான் கற்பனை செய்தேன். எங்கள் குடும்பத்திற்காக நான் கண்ட அந்த காட்சி எவ்வளவு அழகானது! இத்தகைய நித்திய தரிசனம் ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.

2005 ஆம் ஆண்டு ஹாங்காங் சீன ஆலயத்தில் ஒரு அழகான ஸ்திரீயோடு நித்தியத்திற்கும் முத்திரையிடப்பட்டபோது, என் கனவு நிறைவேறத் தொடங்கியது. அப்போதிருந்து, நித்தியத்தின் பாதை தெளிவாகிவிட்டது. கர்த்தர் எங்களுக்கு உற்சாகமான ஐந்து மகன்களைக் கொடுத்து ஆசீர்வதித்திருக்கிறார்.

நித்திய தரிசனம் எவ்வளவு அழகானதாயிருந்தாலும், அதை நோக்கிச் செல்லும் பயணம் எளிதல்ல. பிணையத் தலைவராகவும், தொழிற்சாலை மேலாளராகவும், சுறுசுறுப்பான ஐந்து மகன்களின் தந்தையாகவும் இருக்கும் பொறுப்புகளை சமநிலைப்படுத்துவது பல நேரங்களில் மிகக் கடினமாகிறது. எங்கள் மகன்கள்—எப்போதும் ஓடிக்கொண்டும், ஏறிக்கொண்டும், மல்யுத்தம் செய்து கொண்டும் இருப்பார்கள். அவர்கள் அடிக்கடி பொருட்களை உடைத்துவிடுவார்கள், உணவை சிந்துவார்கள், வீட்டையே தலைகீழாக்குவார்கள். ஒருநாள், நானும் என் மனைவியும் வேலைப்பளுவில் மூழ்கியிருந்தபோது, அவர்கள் சமையலறை கழிவுநீர்த் தொட்டியை அடைத்து, நீரை வழியவிட்டு, ஓடுகள் வேயப்பட்ட தரையில் சோப்பைக் கரைத்து, வழுக்கி விளையாடத் தொடங்கினர். பின்னர் பெருமையுடன், ‘நாங்கள் ஒரு நீச்சல்குளம் கட்டுகிறோம்!’ என்று மகிழ்ச்சியோடு அறிவித்தார்கள்.

குடும்பமாக வேதம் படிப்பது எளிதான காரியம் அல்ல;ஏனெனில் எங்கள் மகன்கள் ஒருவரை ஒருவர் கிண்டலடித்து,எங்கள் பொறுமையை சோதிக்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் நான் மேடையில் அமர்ந்திருக்கும்போது, என் மனைவி சபையாரிடமிருந்து பிள்ளைகளை கவனிப்பார்.அவர்களோ நீண்ட இருக்கைகளின் கீழ் ஊர்ந்து செல்வதும், பிறர் கால்களை இழுப்பதும், சில நேரங்களில் சத்தமாகக் கூப்பிடுவதும் இல்லையெனில் அழுவதும் அவர்களின் வழக்கம். இதனால் என் மனைவி அடிக்கடி சோர்ந்துபோய், அவமானத்தில் தடுமாறி விடுவாள்.ஒருநாள் அவள் எனக்குச் சொன்னாள்: “நான் ஆவியை உணரவும், ஏதாவது கற்றுக்கொள்ளவும் விரும்புகிறேன். ஆனால் சபைக்கு வரும்போது பெரும்பாலும் எதையுமே கற்றுக்கொள்ளாமல், பிள்ளைகளினால் விரக்தியடைகிறேன்.சில நேரங்களில் நாம் எதற்காக தொடர்ந்து வருகிறோம் என்று ஆச்சரியமாக இருக்கிறது. ”

இதுபோன்ற தருணங்களில், லேகியின் வனாந்தரப் பயணத்தை நான் நினைத்துப் பார்க்கிறேன். அவர்களுக்கு ஏராளமான பாடுகள் இருந்தன, ஆனால் கர்த்தர் வாக்குத்தத்தம் பண்ணினதென்னவெனில், “நான் வனாந்தரத்தில் உங்களுக்கு ஒளியாயிருப்பேன் . . . ஆகையால், என் கட்டளைகளைக் கைக்கொள்ளும் அளவில், நீங்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்தை நோக்கி நடத்திச் செல்லப்படுவீர்கள்;” விசுவாசத்தில் ஒன்றிணைந்திருக்கும் குடும்பங்கள் சோதனைகளை எதிர்கொண்டாலும், கர்த்தர் அவர்களை எப்போதும் முன்னோக்கி வழிநடத்துகிறார்.

பென்யமீன் ராஜா பெற்றோருக்கு ஆலோசனை கூறியதென்னவெனில் “சத்தியமும் தெளிந்த புத்தியுமான பாதைகளிலே நடக்க [உங்கள் பிள்ளைகளுக்கு] போதிப்பீர்கள்.ஒருவரோடொருவர் அன்புகூரவும், ஒருவருக்கொருவர் சேவை செய்யவும் போதிப்பீர்கள். ” “ஒளியிலும் சத்தியத்திலும் உங்கள் பிள்ளைகளை வளர்த்துவர” நான் உங்களுக்கு கட்டளையிட்டேன்.குடும்ப வாழ்க்கை சமாளிக்க முடியாததாக தோன்றும்போது இப்போதனைகள் நம்மை தாங்குகின்றன.

ஒரு நாள் என் மூத்த மகன் பிணைய மாநாட்டில் பேசியபோது விடாமுயற்சியின் ஆசீர்வாதங்கள் தெளிவாகின. அவன் சொன்னான், “ஒரு ஆசாரியத்துவத்தைத் தரித்தவனாக, என் அப்பாவைப் போலவே, மற்றவர்களை ஆசீர்வதிக்க என் ஆசாரியத்துவத்தைப் பயன்படுத்துவேன். ” என் கண்கள் ஆனந்தக் கண்ணீரால் நிரம்பின. கடினமாக இருந்தாலும் கூட, நாம் ஏன் தொடர்ந்து முன்னேறி செல்கிறோம் என்பதை நான் புரிந்துகொண்டேன். இன்று அவன் மாட்ரிட் தெற்கு ஸ்பெயின் ஊழியத்தில் விசுவாசத்தோடு ஊழியம் செய்கிறான். அவனது இளைய சகோதரர்கள் ஒவ்வொரு வாரமும் திருவிருந்தை ஆயத்தம் செய்து வழங்குகிறார்கள்.எங்கள் இரண்டாவது மகன் விரைவில் ஊழியத்திற்குச் செல்ல ஆயத்தமாகி வருகிறான்.

தலைவர் ரசல் எம். நெல்சன் கூறினார், “நமது குடும்பமே இவ்வாழ்க்கையின் மிகச்சிறந்த பணியும் சந்தோஷத்தின் மையமும். நாம் ‘சிங்காசனங்களையும், ராஜ்யங்களையும், துரைத்தனங்களையும், . . . அதிகாரங்களையும், ஆட்சிகளையும், . . . . மேன்மையையும் மகிமையையும் சுதந்தரிக்கும்போது,’ நித்தியம் முழுவதும் அது அப்படியே இருக்கும்.” இந்த வாக்களிப்பு என் குடும்பத்தை தொடர்ந்து கற்பிப்பதற்கும், சபைக்கும் ஆலயத்திற்கும் வழிநடத்துவதற்கும் எனக்கு பெலனை அளிக்கிறது.

எங்கள் குழந்தைகள் சத்தம்போட்டுக்கொண்டும் துருதுருவென்றும் இருந்தபோதிலும்,என் மனைவியும் நானும், வாரந்தோறும் சபைக்கு தொடர்ந்து சென்றோம். சுவிசேஷத்தை எங்கள் இல்லத்தின் மையமாக வைத்திருக்க முயன்றதாலே, இன்று அந்த முயற்சிகளின் கனிகளை என் கண்களில் காண்கிறேன்.திருவிருந்தை தகுதியுடன் வழங்கும் என் மகன்களிலும், மகிழ்ச்சியுடனும் விசுவாசத்துடனும் ஊழியம் செய்கிற மகனிலும், சாட்சியங்களில் வளர்ந்து வரும் எங்கள் இளம் பிள்ளைகளிலும் அதை காண்கிறேன். ஒவ்வொரு தியாகமும், ஒவ்வொரு சோர்வூட்டும் ஞாயிறும், ஒவ்வொரு குடும்ப வேதாகமப் படிப்பும் மதிப்புக்குரியது என்பதை கர்த்தர் எனக்குக் காட்டியுள்ளார். ஏனெனில், அவருடைய சுவிசேஷம் உண்மையிலேயே குடும்பங்களை ஆசீர்வதிக்கிறது.

குடும்பங்கள் சபையில் ஒன்றுகூடி ஆராதிக்கும்போது அவர்கள், ஆவியை தங்கள் வீட்டிற்குள் வரவழைப்பதோடு, தங்கள் ஒற்றுமையை பெலப்படுத்தி, கிறிஸ்துவிடம் நெருங்கி வளர்கிறார்கள் என்பதை நான் அறிவேன். கர்த்தர் அதிகமான அன்பையும், சமாதானத்தையும், பாதுகாப்பையும் வாக்களிக்கிறார். அவர்களின் உடன்படிக்கைகள் புதுப்பிக்கப்படுகின்றன; பிள்ளைகள் விசுவாசத்தில் வளர்க்கப்படுகிறார்கள். இப்போதும் நித்தியத்திலும் அவர்கள் பெறும் ஆசீர்வாதங்கள் உறுதியாகின்றன.. நாம் நம் குடும்பத்தில் தொடர்ந்து சுவிசேஷத்தைத் தழுவும்போது, கர்த்தர் நம் முயற்சிகளை ஆசீர்வதிப்பார். "திராட்சைத் தோட்டத்தின் எஜமானும் ஊழியக்காரர்களுடனே சேர்ந்து பணிபுரிந்தது" போல, இரட்சகரும் நம் போராட்டங்களினூடே ,நம்மை நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் நித்திய இலக்கை நோக்கி வழிநடத்துவார். ■

குறிப்புகள்

  1. நேபி 17:13

  2. மோசியா 4:15

  3. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 93:40

  4. President Russel M. Nelson, “Set in Order Thy House,” Conference Report, October 2001

  5. யாக்கோபு 5:72