ஆசிய பிரதேச தலைமைத்துவச் செய்தி
பரிசுத்த உடன்படிக்கைளை செய்துகொள்வதிலிருந்தும் கைக்கொள்வதிலிருந்தும் ஆசீர்வாதங்கள் வருகின்றன
“தேவன் தம்முடன் உடன்படிக்கை செய்பவர்கள் மீதும், அவருக்கும் அவரது பிள்ளைகளுக்கும் சேவை செய்யத் தேர்ந்தெடுப்பவர்கள் மீதும், அவரைப் போலாக முயற்சிப்பவர்கள் மீதும் விசேஷித்த அன்பு வைத்திருக்கிறார்”
உடன்படிக்கைகளின் நீடித்த வல்லமை
எட்டு வயது சிறுவனாக, என் ஞானஸ்நானத்திற்கு காத்திருக்கும் சிலிர்ப்பை நான் தெளிவாக நினைவில் வைத்திருக்கிறேன். எனக்கு மிகுந்த எதிர்பார்ப்புகள் இருந்தன, நான் ஒரு மகத்தான மற்றும் உடனடி உணர்வை உணருவேன் என்று உண்மையிலேயே நம்பினேன். அந்த தெளிவான தனித்துவமான உணர்வு வராதபோது, நான் கொஞ்சம் குழப்பமடைந்தேன். உடனடி ஆசீர்வாதங்களை எதிர்பார்த்தேன் என்று நினைக்கிறேன்; ஒரு உடனடி மாற்றத்தை. 50 ஆண்டுகளுக்கு முன்பு நான் செய்த ஞானஸ்நானத்தையும் அதன் பின்னர் வெளிப்பட்ட அனைத்தையும் நினைத்துப் பார்க்கும்போது, இப்போது நான் அதை மிகத் தெளிவாகப் புரிந்துகொள்கிறேன்.
ஞானஸ்நான உடன்படிக்கைக்குள் நுழைந்த அனுபவம், அன்றிலிருந்து நான் கர்த்தருடன் செய்துகொண்ட பல உடன்படிக்கைகளுடன் சேர்ந்து, என் வாழ்க்கையின் மிகப்பெரிய ஆசீர்வாதங்களின் அடிப்படையாக இருந்து வருகிறது. இது உடனடியான பெரும் உணர்வு அல்லது மாற்றத்தைப் பற்றியது அல்ல, மாறாக என் வாழ்க்கையில் அமைதியாகவும் சீராகவும் வெளிப்பட்ட ஆழ்ந்த வல்லமையைப் பற்றியது. ஒரு தருணத்திலிருந்தல்ல, மாறாக எண்ணற்ற உடன்படிக்கை செய்தல் மற்றும் உடன்படிக்கையைக் கடைப்பிடித்தல் மூலம் நான் ஒவ்வொரு முறையும் கர்த்தர் மீது என் நம்பிக்கையை வெளிப்படுத்திய எளிய உண்மையுள்ள தேர்வுகளிலிருந்து எனக்கு வந்த மகத்தான வல்லமையையும் ஆசீர்வாதங்களையும் இப்போது நான் உண்மையிலேயே உணர்கிறேன்.
உடன்படிக்கைகள் ஒரு கூட்டாண்மை: நாம் கர்த்தருடன் ஒரு உடன்படிக்கை செய்யும்போது, நாம் ஒரு பரிசுத்தமான உறவுக்குள் நுழைகிறோம். விசுவாசத்தைப் பிரயோகிப்பதற்கும், அவருடைய கற்பனைகளுக்குக் கீழ்ப்படிய முயற்சிப்பதற்கும், நீதியான தேர்வுகளைச் செய்ய கருத்தாய் முயற்சி செய்வதற்கும் நாம் உறுதியளிக்கிறோம். அதற்கு ஈடாக, வாழ்க்கையின் அனைத்து சூழ்நிலைகளிலும் அவருடைய அன்பான வழிகாட்டுதல், பெலம் மற்றும் ஆதரவை உணர நாம் ஆசீர்வதிக்கப்படுகிறோம். தேவனுடனான ஒரு உடன்படிக்கை உறவு, “... அவர் நம்மை ஆசீர்வதிக்கவும் மாற்றவும் இடங்கொடுக்கிறது..... நம் வாழ்வில் தேவனை மேலோங்க அனுமதித்தால், அந்த உடன்படிக்கை நம்மை அவருக்கு நெருக்கமாகவும், மிக நெருக்கமாகவும் வழிநடத்தும்.” என்று தலைவர் ரசல் எம். நெல்சன் போதித்தார்.(“நித்திய உடன்படிக்கை,” லியஹோனா அக்டோபர் 2022)
படிப்படியான மாற்றம்: உடன்படிக்கைகளிலிருந்து வரும் வளர்ச்சியும் மாற்றமும் பெரும்பாலும் சுத்திகரிப்பு செயல்முறையாகும். ஒரு நதி ஒரு பள்ளத்தாக்கை செதுக்குவது போல, தொடர்ச்சியான முயற்சியும் பரிசுத்த ஆவியால் வழிநடத்தப்பட விரும்பும் இருதயமும் படிப்படியாக கர்த்தர் நம்மை யாராக இருக்க விரும்புகிறார் என்பதை வடிவமைக்கிறது. இந்த மாற்றம் நாளுக்கு நாள் நுட்பமானதாக தோன்றலாம், ஆனால் பல ஆண்டுகளிலும் தசாப்தங்களிலும் மறுக்க முடியாததாகிவிடும். எனது ஞானஸ்நானத்திற்குப் பிறகு நான் உடனடியாக வித்தியாசமாக உணர்ந்திருக்க மாட்டேன், ஆனால் அந்த உடன்படிக்கையின் காரணமாக நான் செய்த தேர்வுகள், நாளுக்கு நாள், என் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கு வழிவகுத்தன.
ஆவிக்குரிய முதிர்ச்சி: உடனடி மாற்றத்தை எதிர்பார்க்கும் 8 வயது குழந்தையிலிருந்து, ஆழ்ந்த நீண்டகால ஆசீர்வாதங்களை அங்கீகரிக்கும் வயது வந்தவனாக எனது பயணம் வளர்ந்து வரும் ஆவிக்குரிய முதிர்ச்சியை பிரதிபலிக்கிறது. நம் வாழ்வில் கர்த்தரின் கரத்தை நுணுக்கமான வழிகளில் பகுத்தறிய காலம் மற்றும் அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்ளலாம். நமது உடன்படிக்கைகளில் வேரூன்றியிருக்கும் சிறிய விசுவாசச் செயல்கள் எவ்வாறு குறிப்பிடத்தக்க விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்பதை நாம் பார்க்கத் தொடங்கு வோம்.
உடன்படிக்கையைக் கைக்கொள்வதின் மிகுதியான ஆசீர்வாதங்கள்
எனது ஞானஸ்நானத்திற்குப் பிறகு நான் செய்த ஒவ்வொரு உடன்படிக்கையும், ஆசீர்வாதங்கள், அறிவு மற்றும் ஆவிக்குரிய வல்லமையின் ஒட்டுமொத்த இருப்பில் சேர்த்துள்ளது. இது ஒரு உடன்படிக்கை மட்டுமல்ல, என் வாழ்க்கையில் பரலோகத்தின் மதகுகளை உண்மையிலேயே திறந்த உடன்படிக்கையைக் கைக்கொள்ளும் முறை. எனது உடன்படிக்கைகளைப் பற்றி நான் சிந்திக்கும்போது, கர்த்தருடைய மென்மையான இரக்கங்கள் எனக்கு:
-
ஊழியப் பணியைத் தேர்ந்தெடுக்க, ஆலய திருமணம் செய்து, குழந்தைகளைப் பெறுதலுக்கு தைரியம்;
-
என்னுடைய தொழில் தோல்வியை எதிர்கொண்டாலும் தொடர்ந்து முயற்சி செய்ய விசுவாசம்;
-
என் குழந்தைகள் பாதை மாறி சென்றாலும் அவர்கள் மீது நிபந்தனையற்ற அன்பு;
-
என்னை ஏமாற்றிய ஒரு வணிக கூட்டாளியை மன்னிக்க வலிமை;
-
எனது பலவீனங்கள் இருந்தபோதிலும் தொடர்ந்து மனந்திரும்ப அனுமதிக்கும் இரட்சகரின் பாவநிவாரண பலியின் மூலம் மன்னிப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை; மற்றும்
-
என் பெற்றோரின் மரணத்தை ஏற்றுக்கொள்ள சமாதானம் கொடுப்பதைக் காண்கிறேன்.
"மேலும் தன் தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுபவர்களின் ஆசீர்வாதமானதும், மகிழ்ச்சியானதுமான நிலையை நீங்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டுமென நான் விரும்புகிறேன். ஏனெனில் இதோ, ஆவிக்குரியதும் லௌகீகமானதுமான சகல காரியங்களிலும் அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்; அவர்கள் முடிவுபரியந்தமும் உண்மையுள்ளவர்களாய் நிலைத்திருப்பார்களெனில் முடிவற்ற மகிழ்ச்சியுள்ள நிலையிலே தேவனோடு வாசம் செய்யும்படி பரலோகத்திற்குள் எடுத்துக்கொள்ளப்படுவார்கள்." என்று பென்யமீன் ராஜா கற்பித்தார். (மோசியா 2:41)
இன்னும் எனக்குப் புரியாத விஷயங்கள் ஏராளமாக இருந்தாலும், தேவன் தம்முடன் உடன்படிக்கை செய்பவர்கள் மீதும், அவருக்கும் அவருடைய பிள்ளைகளுக்கும் தினமும் சேவை செய்யத் தேர்ந்தெடுப்பவர்கள் மீதும், அவரைப் போலாக முயற்சிப்பவர்கள் மீதும் ஒரு விசேஷித்த அன்பு வைத்திருக்கிறார் என்பதை நான் உறுதியாக அறிவேன். என் ஞானமுள்ள பெற்றோருக்கும், ஞானஸ்நானத் தண்ணீரில் இறங்கிய அவர்களின் நீதியான முன்மாதிரிக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன், அது நான் பின்பற்ற ஒரு பாதையை அமைத்தது. இந்த உடன்படிக்கைகள் மற்றும் அவற்றைக் கடைப்பிடிக்க முயற்சிப்பதில் இருந்து என் வாழ்க்கையில் நான் கண்ட உணரக்கூடிய ஆசீர்வாதங்கள் காரணமாக, கர்த்தர் ஜீவிக்கிறார் என்பதையும் உருக்கமான இரக்கங்களுடன் என்னை நேசிக்கிறார் என்பதையும் நான் அறிவேன். என் இருதயம் அவரைப் பற்றியிருக்கிறது, அவருடைய தெய்வீக முன்மாதிரியைப் பின்பற்றி ஒவ்வொரு நாளும் விசுவாசத்தில் செயல்பட நான் தேர்வு செய்கிறேன். ■