2025
உடன்படிக்கைகள், வல்லமை மற்றும் வாக்குறுதிகள்
அக்டோபர் 2025 லியஹோனா


“உடன்படிக்கைகள், வல்லமை மற்றும் வாக்குறுதிகள்,” லியஹோனா, அக். 2025.”

லியஹோனா மாதாந்தர செய்தி, அக்டோபர் 2025

உடன்படிக்கைகள், வல்லமை மற்றும் வாக்குறுதிகள்

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன்பு விசுவாசிகளுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட வல்லமை மற்றும் பாதுகாப்பிற்கு ஆலயம் மையமாக உள்ளது.

கர்த்லாந்து ஆலயத்துக்கு முன்னால் ஜோசப் ஸ்மித் நிற்பதன் விளக்கப்படம்.

டான் பர் வரைந்த ஜோசப் ஸ்மித்தின் விளக்கப்படம்

மே 1833 இல், எனது நான்காவது கொள்ளுத்தாத்தா அஷேல் பெரியும் சில நண்பர்களும் வடக்கு நியூயார்க்கிலிருந்து ஒஹாயோவின் கர்த்லாந்துக்கு பயணம் செய்தனர். அவர்கள் புதிதாக மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபையின் உறுப்பினர்கள் அல்ல, ஆனால் அவர்கள் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்தை சந்திக்க விரும்பினர். கர்த்லாந்து ஆலயத்தைக் கட்டுவது பற்றி கலந்துரையாட நடைபெற்ற முதல் ஆலோசனைக் குழுவில் கலந்துகொள்ள அவர்கள் சரியான நேரத்தில் வந்தார்கள்.

ஆலோசனைக்குழுவைத் தொடங்கிய பிறகு, ஆலயம் கட்டும் விவகாரத்தை தீர்க்கதரிசி முன்வைத்தார். பின்னர் அவர் அங்கு கூடியிருந்தவர்களை இவ்வளவு பெரிய முயற்சி தொடர்பான தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த அழைத்தார். இதுபோன்ற பணியைச் சமாளிக்க சபை மிகவும் ஏழ்மையானது என்று பெரும்பாலானோர் பதிலளித்தனர். அவர்கள் ஒரு சிறிய, குறைந்த செலவாகக்கூடிய கட்டிடத்தைக் கட்ட முன்மொழிந்தனர்.

அதைத் தொடர்ந்து நடந்த கலந்துரையாடலின் போது, தாத்தா பெரியும் அவரது நண்பர்களும் ஒன்றுகூடி, தங்கள் பணத்தை எடுத்து, எண்ணிப் பார்த்தனர். அவர்கள் திரும்பிச் செல்வதற்குப் பணம் செலுத்தவும், மற்றும் ஆலய கட்டுமானப் பணிகளுக்குப் பங்களிக்கவும் போதுமான பணம் அவர்களிடம் இருந்ததா? சில நிமிடங்களுக்குப் பிறகு, என் தாத்தா ஜோசப் ஸ்மித்தை அணுகி, ஐந்து டாலர் தங்க நாணயத்தை எடுத்து, அதை தீர்க்கதரிசியிடம் வழங்கினார். (இன்று அத்தகைய நாணயம் நூற்றுக்கணக்கான டாலர்கள் மதிப்புடையதாக இருக்கும்!)

ஜோசப் ஆலோசனைக் குழுவின் முன் நின்று நாணயத்தை உயர்த்திப் பிடித்தார். பின்னர், உற்சாகமாகப் பேசுகையில், "பணி தொடங்கிவிட்டது என்றும், [கர்த்தருடைய] வீடு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவால் வழங்கப்பட்ட மாதிரியின்படி கட்டப்படும்" என்றும் கூறினார்.

பெரி குடும்பம் விரைவில் கர்த்லாந்தில் உள்ள சபையில் சேர்ந்தது, சில ஆண்டுகளுக்குப் பிறகு நாவூ ஆலயத்தில் அவர்களின் ஆலய ஆசீர்வாதங்களைப் பெற்று, பின்னர் சமவெளிகளைக் கடந்து யூட்டாவுக்குச் சென்றனர்.

1836 ஆம் ஆண்டு கர்த்லாந்து ஆலயம் பிரதிஷ்டை செய்யப்பட்ட நேரத்தில், அதன் பிரதிஷ்டையில் கலந்து கொள்ள விரும்பிய அனைத்து பிற்காலப் பரிசுத்தவான்களையும் உள்ளடக்க முடியாத அளவுக்கு அது மிகவும் சிறியதாக இருந்தது. சபை வளர வளர, வெளிப்புறத்தில் கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டிய பரிசுத்தவான்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. தலைவர் ஜேம்ஸ் ஈ. பாஸ்ட் (1920–2007) நான் இளைஞனாக இருந்தபோது எனது பிணையத் தலைவராகவும், 2007 இல் பொது அதிகாரியாக அழைக்கப்பட்டபோது வழிகாட்டியாகவும் பணியாற்றிய , சபையின் இரண்டாவது ஆலயம் குறித்து இந்தக் கருத்தை வெளியிட்டார்:

“1846 ஆம் ஆண்டு நாவூ ஆலயம் கட்டி முடிக்கப்படுவதற்கு முன்பு, ஜோசப் மற்றும் பிற சபைத் தலைவர்கள் பேசுவதைக் கேட்க, பரிசுத்தவான்கள் வெளிப்புறத்தில், பெரும்பாலும் ஆலயத்துக்கு அருகில் கூடுவார்கள். சில சமயங்களில் ஆயிரக்கணக்கானோர் அந்தக் கூட்டங்களில் கலந்து கொண்டனர்”—சில சமயங்களில் மோசமான வானிலையிலும் கூட.

“[மூப்பர்] ஜார்ஜ் ஏ. ஸ்மித் தனது நகைச்சுவையான முறையில், ‘தீர்க்கதரிசி ஜோசப்பின் நாட்களில் … [சபை] வெளிப்புறத்தில் சிறப்பாக செழித்தது’ என்று குறிப்பிட்டார்.”

நமது நாளில், பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை வெளியில், வீட்டுக்குள் மற்றும் உலகம் முழுவதும் செழித்து வருவதற்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அந்த செழிப்பில், "வழங்கப்பட்ட முறையின்படி" முன்பில்லாத வேகத்தில் ஆலயங்களைக் கட்டுவதும் அடங்கும்—இந்த முறை எப்போதும் ஆசீர்வாதங்கள், பிரதிஷ்டை, நம்பிக்கை மற்றும் தியாகத்தை உள்ளடக்கியது.

கர்த்லாந்து ஆலயத்தின் படவிளக்கம்

ஒரு மகிமையின் ஒளி—கர்த்லாந்து ஆலயம்–க்ளென் எஸ். ஹாப்கின்சன், பிரதி எடுக்கக்கூடாது.

ஏன் இத்தனை ஆலயங்கள்?

"வடக்கு மற்றும் தென் அமெரிக்கா, பசிபிக் தீவுகள், ஐரோப்பா மற்றும் பிற இடங்களில் ஆலயங்கள் நிறைந்திருக்கும் என்று நமது முன்னோர்கள் தீர்க்கதரிசனம் கூறியுள்ளனர்" என்று தலைவர் எஸ்றா டாப்ட் பென்சன் (1899–1994) பல தசாப்தங்களுக்கு முன்பு கூறினார். "இந்த மீட்புப் பணி செய்யப்பட வேண்டிய அளவில் செய்யப்பட வேண்டுமென்றால், நூற்றுக்கணக்கான ஆலயங்கள் தேவைப்படும்."

தலைவர் ரசல் எம். நெல்சன் கூறுகையில், “கர்த்தர் நமக்கு அவ்வாறு செய்யும்படி அறிவுறுத்தியதால், இன்று நாம் முன்பில்லாத வேகத்தில் ஆலயங்களைக் கட்டி வருகிறோம். ஆலயத்தின் ஆசீர்வாதங்கள் இஸ்ரவேலை திரையின் இருபுறமும் ஒன்று சேர்க்க உதவுகின்றன. இந்த ஆசீர்வாதங்கள், கர்த்தருடைய இரண்டாம் வருகைக்கு உலகை ஆயத்தப் படுத்த உதவும் ஒரு ஜனத்தை தயார்படுத்தவும் உதவுகின்றன!

கர்த்லாந்து ஆலயத்திற்கான தனது பிரதிஷ்டை ஜெபத்தில், ஜோசப் ஸ்மித், “கர்த்தருடைய வீட்டின் வாசலில் பிரவேசிக்கும் அனைத்து மக்களும் உமது வல்லமையை உணரட்டும்” என்று ஜெபித்தார்.. …

"பரிசுத்த பிதாவே, உம்முடைய ஊழியக்காரர்கள் உமது வல்லமையால் ஆயுதம் ஏந்தி இந்த வீட்டிலிருந்து புறப்படவும், உமது நாமம் அவர்கள்மேல் இருக்கவும், உமது மகிமை அவர்களைச் சுற்றி இருக்கவும், உமது தேவதூதர்கள் அவர்களைக் கட்டுப்படுத்தவும் உம்மை நாங்கள் வேண்டிக்கொள்கிறோம்" (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 109:13, 22; முக்கியத்துவம் சேர்க்கப்பட்டது; மேலும் வசனம் 23 காண்க

அந்த வசனங்களை நான் படிக்கும்போது, பிற்காலம் பற்றிய நேபியின் தரிசனத்தை நான் எண்ணிப்பார்க்கிறேன். அந்தப்படியே, நேபியாகிய நான், ஆட்டுக்குட்டியானவரின் சபையின் பரிசுத்தவான்கள் மீதும், பூமியின் பரப்பின் மீதும், சிதறடிக்கப்பட்டிருந்த கர்த்தருடைய உடன்படிக்கையின் ஜனத்தின் மீதும் தேவ ஆட்டுக்குட்டியானவரின் வல்லமை, இறங்கக் கண்டேன்; அவர்கள் நீதியினாலும் மகா மகிமையிலிருக்கிற தேவனுடைய வல்லமையினாலும் ஆயுதந்தரித்திருந்தார்கள்.(1 நேபி 14:14; முக்கியத்துவம் சேர்க்கப்பட்டுள்ளது).

நேபியின் தீர்க்கதரிசன நிறைவேறுதலில் பிற்கால ஆலயங்கள் ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றன என்றும், இரண்டாம் வருகைக்கு முன் விசுவாசிகளுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட பாதுகாப்பு மற்றும் வல்லமைக்கு மையமாக உள்ளன என்றும் நான் நம்புகிறேன்.

பல வருடங்களுக்கு முன்பு, நான் ஒரு பல்கலைக்கழக தொகுதியின் ஆயராக பணியாற்றியபோது, என் தொகுதியில் ஒரு இளம் பெண்ணால் நான் குறிப்பாக ஈர்க்கப்பட்டேன். அவள் இன்னும் என்னை ஈர்க்கிறாள். நீங்கள் அவரை தலைவர் எமிலி பெல் ப்ரீமேன், இளம் பெண்கள் பொதுத் தலைவர் என்று அறிவீர்கள். சமீபத்திய பொது மாநாட்டு உரையில், ஆலயத்தின் மூலம், இயேசு கிறிஸ்து நம்மை உயர்ந்த ஆவிக்குரிய தளத்திற்கு உயர்த்துகிறார் என்று அவர் கற்பித்தார்.

"நான் அவருடைய வீட்டின் வாசலைக் கடக்கும் ஒவ்வொரு முறையும், அவருடன் ஆழமான உடன்படிக்கை உறவை அனுபவிக்கிறேன்," என்று தலைவர் ப்ரீமேன் கூறினார். “நான் அவரது ஆவியால்பரிசுத்தப்படுத்தப்பட்டு, தரிப்பிக்கப்பட்டு அவரது வல்லமையுடன் பணிக் கப்பட்டேன் அவரது ராஜ்யத்தைக் கட்ட.”

வாக்களிக்கப்பட்ட வல்லமை

ஆலய உடன்படிக்கைகள் மூலம் கிடைக்கும் இயேசு கிறிஸ்துவின் வல்லமை பற்றி தலைவர் நெல்சன் அடிக்கடி பேசியுள்ளார். "இரட்சகருடன் உங்களை இணைத்துக்கொள்வது என்பது அவருடைய பலத்தையும் மீட்கும் வல்லமையையும் நீங்கள் பெறவேண்டும் என்தைக் குறிக்கிறது" என்று அவர் கூறினார். தலைவர் நெல்சன் மேலும் கற்பித்தார்:

“நாம் நமது ஆலய உடன்படிக்கைகளைக் கடைப்பிடிக்கும்போது, கர்த்தரின் பலப்படுத்தும் வல்லமையை நாம் அதிகமாகப் பெறுகிறோம். ஆலயத்தில், உலகின் தொல்லைகளிலிருந்து நாம் பாதுகாப்பைப் பெறுகிறோம்."

“[இரட்சகரின்] அத்தியாவசிய நியமங்கள் பரிசுத்த ஆசாரியத்துவ உடன்படிக்கைகள் மூலம் நம்மை அவருடன் பிணைக்கின்றன. பின்னர், நமது உடன்படிக்கைகளை நாம் கைக்கொள்ளும்போது, அவருடைய சுகப்படுத்தலுடனும் வல்லமையை பலப்படுத்துவதுடனும் அவர் நம்மைத் தரிப்பிக்கிறார். மேலும், வரும் நாட்களில் அவருடைய வல்லமை நமக்கு எவ்வளவு தேவைப்படும்."

"நமது மக்களுக்கு இப்போதும், இனிவரும் நாட்களிலும் தேவைப்படும் ஒழுக்க மற்றும் ஆவிக்குரிய வல்லமை பிதாவாகிய தேவன் மற்றும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமையாகும். அவர்களுடன் உடன்படிக்கைகளைச் செய்து அவற்றைக் காத்துக்கொள்வதன் மூலம் நாம் அவர்களின் வல்லமையை பெறுகிறோம்.

சகோதர சகோதரிகளே, பரலோக வல்லமை முக்கியமானது, ஏனென்றால் நாம் மிகவும் பொல்லாத உலகில் வாழ்கிறோம். அந்த வல்லமை இல்லாமல், நாம் "அவர் வரும் நாளைச் சகிக்க" அல்லது "அவர் வெளிப்படுகையில் நிலைத்திருக்க" முடியாது (மல்கியா 3:2). அந்த நாள் எப்போது வரும் என்று நமக்குத் தெரியாது, ஆனால் அவருடைய வருகைக்கு "வழியை ஆயத்தப்படுத்த" அவருடைய தூதர் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளார் (மல்கியா 3:1). இதற்கிடையில், உலகம் அந்த நாளை நோக்கி அமைதியாக நகர்ந்து கொண்டிருக்கவில்லை.

நமக்கு உதவ விசுவாசிகளுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட வல்லமை நமக்குத் தேவை:

  • தேவன் நம் வாழ்வில் ஜெயம் பெறட்டும்.

  • மனந்திரும்பி கர்த்தரிடம் நெருங்கி வாருங்கள்

  • ஆசீர்வதியுங்கள், ஆறுதல்படுத்துங்கள், வழிநடத்துங்கள், ஊழியம் செய்யுங்கள்.

  • "நமது பாடுகள், சோதனைகள் மற்றும் மனவேதனைகளை சிறப்பாகத் தாங்கிக் கொள்ளுங்கள்"மோசியா 3 :19

  • உடன்படிக்கைப் பாதையில் நாம் நடக்கும்போது, கிறிஸ்துவில் சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் காணுங்கள்.

  • "அக்கினியின் நாளுக்கும்" "துன்மார்க்கரின் பேரழிவுக்கும்" (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 109:46) எதிராக தயாராகுங்கள்.

  • கர்த்தருடைய இரண்டாம் வருகைக்கு முன் அவருடைய பணியை நிறைவேற்றுங்கள்.

டக்சன் அரிசோனா ஆலயம்

ஜேம்ஸ் விட்னி யங் பிடித்த டக்சன் அரிசோனா ஆலய குவிமாடத்தின் புகைப்படம்.

இரட்சிப்பின் காவலாளிகள்

பரலோக பிதாவின் கிரியையும் மகிமையும் “மனுஷனின் அழியாமையையும் நித்திய ஜீவனையும் கொண்டுவருவது” (மோசே 1:39). ஒவ்வொரு ஆலயமும் தேவனின் இரட்சிப்பின் திட்டத்தின் பூமிக்குரிய காவலாளியாக நிற்கிறது, அந்த பணியிலும் மகிமையிலும் இரட்சகரின் மையப் பங்கைச் சுட்டிக்காட்டுகிறது.

அவருடைய வல்லமையால் ஆயுதம் தரித்து, உடன்படிக்கையைக் கைக்கொள்ளும் ஒவ்வொரு ஆணும் பெண்ணும்—திருமணமானவர்களோ இல்லையோ—ஆலய உடன்படிக்கைகளை உண்மையாகக் கடைப்பிடிப்பவர்கள், இம்மையிலும் வரவிருக்கும் வாழ்க்கையிலும் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.

தலைவர் நெல்சன் வாக்களித்தார்: "நாம் ஒவ்வொருவரும் அடைய முயல்கிற முடிவு, கர்த்தரின் வீட்டில் வல்லமையோடு தரிப்பிக்கப்படவும், குடும்பங்களாக முத்திரிக்கப்படவும், நித்திய ஜீவனாகிய தேவனின் மிகப் பெரிய வரத்துக்கு நம்மை தகுதிப்படுத்துகிற, ஆலயத்தில் செய்யப்படுகிற உடன்படிக்கைகளுக்கு விசுவாசமாக இருப்பதுவுமே. ஆலய நியமங்களும் நீங்கள் அங்கு செய்கிற உடன்படிக்கைகளும், உங்கள் வாழ்க்கையையும், உங்கள் திருமணத்தையும் குடும்பத்தையும், சத்துருவின் தாக்குதல்களை எதிர்க்கிற உங்கள் திறமைகளையும் பெலப்படுத்த, முக்கியமானவைகளாக இருக்கின்றன. உங்கள் ஆலய ஆராதனையும், உங்கள் முன்னோருக்காக நீங்கள் செய்கிற சேவையும் உங்களை அதிக தனிப்பட்ட வெளிப்படுத்தலுடனும், சமாதானத்துடனும் உங்களை ஆசீர்வதித்து, உடன்படிக்கையின் பாதையில் இருக்க உங்கள் ஒப்புக்கொடுத்தலை பலப்படுத்தும்.”

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனாக, இந்தக் காரியங்கள் உண்மை என்று நான் சாட்சியமளிக்கிறேன்.