“உங்களுடைய சுவிசேஷப் பயணத்தில் மகிழ்ச்சியைக் காணுங்கள்,” லியஹோனா, ஜூலை 2025.
லியஹோனா மாதாந்திர செய்தி, ஜூலை 2025
உங்களுடைய சுவிசேஷப் பயணத்தில் மகிழ்ச்சியைக் காணுங்கள்
கர்த்தருடைய கட்டளைகளைக் கைக்கொள்வதன் மூலம் அவர் மீதான நம்முடைய அன்பைக் காண்பிப்பதன் இறுதி விளைவு மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் கொண்டுவரும் ஆசீர்வாதங்கள் ஆகும்.
மகிழ்ச்சியான தாய்லாந்து சபை உறுப்பினர்களின் புகைப்படம், கிறிஸ்டினா ஸ்மித்
சில ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பானில் ஊழியத் தலைவராக நான் சேவை செய்தபோது, எங்கள் ஊழியத்தின் தொலைதூர மூலைகளில் ஒன்றில் ஒரு கிராமப்புற நகரத்தில் ஒரு வார இறுதி மாநாட்டில் கலந்துகொண்டேன். ஒரு வருடத்திற்கு முன்பு சபையில் சேர்ந்து, ஆலய சிபாரிசு பெற நாடுகின்ற ஒரு மனிதருடன் ஒரு நேர்காணலை நடத்த சேகரத் தலைவர் எனக்கு ஏற்பாடு செய்திருந்தார். அவர் ஞானஸ்நானம் பெற்று ஓராண்டு நிறைவுரும் அதே நாளிலோ அல்லது அந்நாளை ஒட்டியோ தன்னுடைய சொந்த தரிப்பித்தலைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்து இருந்தார்.
எங்கள் உரையாடலின் போது, இந்த புதிய உறுப்பினர் அவர் ஞானஸ்நானம் பெற்ற அந்த வருடத்தில் அவர் அடைந்த ஏராளமான ஆசீர்வாதங்களுக்காக எவ்வளவு ஆழ்ந்த நன்றியுள்ளவராக இருந்தார் என்று விவரித்தார். வாராந்திர திருவிருந்துமேலும் மற்ற கூட்டங்களிலும் கலந்துகொள்வதை அவர் அனுபவித்து மகிழ்ந்தார். அவர் தனது கிளையின் நிகழ்ச்சிகளிலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். என்னைப் பொறுத்தவரை, அவர் தனது சுவிசேஷ நோக்கத்தைப் புரிந்துகொண்டதன் விளைவாக ஒரு உடன்படிக்கையின் நம்பிக்கையை வெளிப்படுத்தினார், அவருடன் ஒருங்கிணைந்த பகுதியாக இப்போது அது இருந்தது. அவர் கிறிஸ்துவின் ஒரு மனமாறிய சீஷராக இருந்தார், அவர் ஒரு பலத்த இருதய மாற்றத்தை அனுபவித்தார் (பார்க்கவும் மோசியா 5:2).
மீதமிருந்த எங்களின் உரையாடலும் ஒரு நம்பிக்கையான தொனியைப் பின்பற்றியது. அவருடைய ஆலய அனுபவத்தின் ஒரு பகுதியாக இருக்கப்போகும் நியமங்களையும் உடன்படிக்கைகளையும் பற்றி உரையாடினோம். ஆலய சிபாரிசு பெறுவதோடு சம்பந்தப்பட்ட வழக்கமான கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் அவர் உறுதியாக பதிலளித்தார்.
நேர்காணலைத் தொடர்ந்து, அத்தகைய சிறந்த மனிதரை சந்தித்ததற்கு நான் எவ்வளவு நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்று சேகரத் தலைவரிடம் கருத்துத் தெரிவித்ததை நான் நினைவு கூர்கிறேன். ஊழியக்காரர்களும் உறுப்பினர்களும் அத்தகைய திறமையும் பண்பாற்றலும் கொண்ட ஒருவரைக் கண்டுபிடித்து, ஆவிக்குரிய ரீதியில் அவரை போஷித்திருந்ததைக் கண்டு நான் எவ்வளவு பிரமித்தேன் என்பதை அவரிடம் கூறினேன்.
ஒரு வருடத்திற்கு முன்பு, இந்த மனிதர் ஊழியக்காரர்களிடமிருந்து பாடங்களைப் பெறவும், சபைக்குச் செல்லவும் தொடங்கியபோது, அவர் வீடற்றவராகவும், மிகவும் கடினமான மற்றும் நம்பிக்கையற்ற சூழ்நிலையிலும் இருந்ததாக சேகரத் தலைவர் பகிர்ந்த போது, நான் திகைத்துப் போனேன். ஒரு சில மாதங்களில், இந்த சகோதரரின் சுவிசேஷக் கற்றலும், மனமாற்றமும், அவரை ஆவிக்குரிய மற்றும் உலகக் காரியங்களில் சுயசார்புடைய பாதைக்கு கொண்டு சென்றதையும், அவருக்கு ஒரு நோக்கத்தையும் மகிழ்ச்சியின் உணர்வையும் அளித்ததையும் சேகரத் தலைவர் விவரித்தார்.
சுவிசேஷம் அவருடைய வாழ்க்கையின் நோக்கத்தைப் பற்றிய தெளிவான புரிதலை அவருக்குக் கொடுத்தது. தெளிவான மற்றும் விலைமதிப்பற்ற சுவிசேஷ சத்தியங்கள் அநித்தியத்தைப் பற்றிய முக்கியமான கேள்விகளுக்கு பதில்களைக் கொண்டுவந்தன, “தேவன் நமது பரலோக பிதா, நாம் அவருடைய பிள்ளைகள்” என்ற அறிவுடன் தொடங்கின. … “தேவன் நம்மை தனிப்பட்ட முறையில் அறிந்திருக்கிறார், நம்மை நேசிக்கிறார்.” அவரது திட்டத்தில், “பரலோக பிதா … அவருடைய பிரசன்னத்திற்குத் திரும்புவதற்கு நமக்கு உதவ பல பரிசுகளையும் வழிகாட்டிகளையும் வழங்கினார்.”
இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் மூலமாக எல்லா தேவனுடைய பிள்ளைகளுக்கும் சமமாக கிடைக்கக்கூடிய ஆசீர்வாதம் இந்த மனிதருக்கும் இருந்தது.
வாழ்க்கையின் நோக்கம்
தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாக இயேசு கிறிஸ்து தம்முடைய சுவிசேஷத்தை மறுஸ்தாபித்ததால், “வாழ்க்கையின் நோக்கத்தைப் பற்றிய புரிதல் நமக்கு இருக்கிறது, நாம் யார் என்பதைப் பற்றிய புரிதல் நமக்கு இருக்கிறது” என்று தலைவர் எம். ரசல் பல்லார்ட் (1928-2023) அறிவித்தார். சபைக்கான தன்னுடைய இறுதி சாட்சியில், பன்னிரு அப்போஸ்தலர் குழுமத்தின் அப்போதைய செயல் தலைவரான தலைவர் பல்லார்ட் சொன்னார்:
“தேவன் யார் என்று நமக்குத் தெரியும்; இரட்சகர் யார் என்பதை நாம் அறிவோம், ஏனென்றால் சிறுவனாக இருந்தபோது மரங்களின் தோப்புக்குள் சென்ற ஜோசப், உண்மையில் தனது பாவங்களுக்கு மன்னிப்பைத் தேடி சென்றார். …
“நான் வியப்படைகிறேன், உங்களில் பலரைப்போல, வாழ்க்கையில் நமது நோக்கம், நாம் ஏன் இங்கு இருக்கிறோம், நம் அன்றாட வாழ்வில் என்ன செய்ய முயற்சிக்க வேண்டும் மற்றும் சாதிக்க வேண்டும் என்பதைப் பற்றி நாம் அறிந்திருப்பதால் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.”
பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் உறுப்பினர்களுக்கு, அந்த அறிவு தேவனின் இரட்சிப்பின் “பரிபூரண திட்டத்தைப்” பற்றிய புரிதலை உள்ளடக்கியுள்ளது. “மகா மகிழ்ச்சியின் திட்டம்,” “மீட்பின் திட்டம்,” மற்றும் “இரக்கத்தின் திட்டம்” (ஆல்மா 42:8, 11, 15) என்றும் அறியப்படும், இது “வாழ்க்கையிலிருந்து மர்மத்தையும், நமது எதிர்காலத்தின் நிச்சயமற்ற தன்மையையும் நீக்குகிறது.” அந்தத் திட்டத்திற்கு இன்றியமையாதது, வாழ்வின் நோக்கத்தின் மையமான “கிறிஸ்துவின் கோட்பாடு“ ஆகும்.
நம்மிடம் சுவிசேஷம் இருப்பதால், நாம் தேவனின் பிள்ளைகள் என்பதை அறிவோம், சோதிக்கப்படுவதற்கும், மெருகூட்டப்படுவதற்கும், “ஆட்டுக்குட்டியானவரின் ஜெயம் மற்றும் மகிமையின் மூலமாக மரித்தவர்களின் உயிர்த்தெழுதலில் … கொண்டுவரப்பட” ஆயத்தமாக்கப்படுவதற்கும் பூமிக்கு அனுப்பப்பட்டவர்கள் என்பதை நாம் அறிவோம் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 76:39). நாம் கட்டளைகளை அறிந்திருக்கிறோம், “தீமையினின்று, நன்மையை அறியும் பொருட்டுப் போதுமான அளவு“ உபதேசிக்கப்பட்டிருக்கிறோம் (2 நேபி 2:5). நாம் பூமியில் அன்பு செலுத்தவும் சேவை செய்யவும் இருக்கிறோம் என்பதை நாம் அறிவோம். உலகத்தை ஜெயிக்கவும், அவ்வாறே செய்ய மற்றவர்களுக்கு உதவவும் இரட்சகர் அவருடைய இரண்டாம் வருகைக்கான ஆயத்தமாக நம்மை அழைத்திருக்கிறார் என்பதை நாம் அறிவோம் (பார்க்கவும் யோவான் 16:33; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 64:2).
நாம் அவரில் கவனம் செலுத்தும்போது, ஜோசப் ஸ்மித்தால் உரைக்கப்பட்ட “நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் ஆரவார சத்தம்“ கடினமான நாட்களில் நம்மை பலப்படுத்தி, நமது வாழ்க்கைக்கும் மற்றவர்களின் வாழ்க்கைக்கும் அர்த்தத்தையும் நோக்கத்தையும் கொண்டுவரும்.
முழங்கால்கள் யாவும் முடங்கும்,டான் வில்சன் நகலெடுக்கப்படலாகாது
கீழ்ப்படிதல், ஆசீர்வாதங்கள், மகிழ்ச்சி
நமது தெரிவுகளுக்கு நாம் பொறுப்பேற்கத்தக்கதாக தேவன் நமக்கு ஒழுக்க சுயாதீனத்தைக் கொடுத்திருக்கிறார் (பார்க்கவும் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 101:78; 2 நேபி 2:16). “எல்லாவற்றிலும் எதிர்ப்பு“ என்பதன் ஒரு பகுதியாக (2 நேபி 2:11), நமது சுயாதீனத்தைத் தவறாகப் பயன்படுத்தும்படி நம்மைச் சோதிக்க சாத்தான் அனுமதிக்கப்படுகிறான்.
“ஆகவே, பூமியின் குடிகள் மேல் வரப்போகிற அழிவை அறிந்திருந்து, கர்த்தராகிய நான் எனது ஊழியக்காரனாகிய ஜோசப் ஸ்மித் இளையவனை அழைத்து, பரலோகத்திலிருந்து அவனோடு பேசி, கட்டளைகளை அவனுக்குக் கொடுத்தேன்(கோட்பாடும் உடன்படிக்கைகளும் 1:17). கர்த்தர் தம்முடைய கட்டளைகளையும் சித்தத்தையும் அவருடைய தீர்க்கதரிசிகளுக்கு வெளிப்படுத்தும் அந்த மாதிரி நமது நாளில் தலைவர் ரசல் எம்.நெல்சனுடன் தொடர்கிறது - அதே காரணத்திற்காக. தேவன் இந்த வாழ்க்கையில் நம்மை மகிழ்ச்சிக்கும், அடுத்த வாழ்க்கையில் சிலஸ்டியல் மகிமைக்கும் வழிநடத்த விரும்புகிறார்.
தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிதல் அவர் மீதுள்ள நமது பயபக்தியிலிருந்தும் அன்பிலிருந்தும் வர வேண்டும். தேவனிடத்தில் அன்புகூருவதே “முதலாம் பிரதான கற்பனை” என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே அறிவித்தார் (பார்க்கவும் மத்தேயு 22:37-38). “நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்.” (யோவான் 14:15) என்று அறிவித்த போது இயேசு மேலும் ஆழமான சிந்தனையை வழங்கினார்.
கர்த்தரை நேசிப்பதற்கும் அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்வதற்கும் ஒரு வெகுமதி உண்டு. இந்த ஊழியக்காலத்தில் அவர் விவரித்தார்,”சகல ஆசீர்வாதங்களும் முன்னறிவிக்கப்பட்டதின்மேல் … , திரும்பப்பெற முடியாதபடி ஒரு நியாயப்பிரமாணம் கட்டளையிடப்பட்டது,—
“தேவனிடமிருந்து எந்த ஆசீர்வாதத்தையும் நாம் பெறும்போது, அது முன்னறிவிக்கப்பட்ட அந்த நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்படிதலாலேயாகும்.”(கோட்பாடும் உடன்படிக்கைகளும் 130:20–21).
இவ்வாறு, கர்த்தருடைய கட்டளைகளைக் கைக்கொள்வதன் மூலம் அவர் மீதான நம்முடைய அன்பைக் காண்பிப்பதன் இறுதி விளைவு மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் கொண்டுவரும் ஆசீர்வாதங்கள் ஆகும்.
மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷம் மற்றும் நவீன வெளிப்பாட்டின் உருப்பெருக்கியின் மூலம் வாழ்க்கையைப் பார்ப்பது நமக்கு தெளிவைத் தருகிறது. நமது தெய்வீக தோற்றம் மற்றும் விதியைப் பற்றிய தெளிவான கண்ணோட்டத்துடன் “[நமது] பூலோக வாழ்க்கையை அது இருக்க வேண்டியபடி சிறந்ததாக மாற்றும் அதே விஷயங்கள் நித்தியம் முழுவதும் [நமது] வாழ்க்கையை அது சிறப்பாக இருக்க வேண்டிய விதமாக சிறந்ததாக மாற்றும்! “ என்பதை நாம் அறிவோம்.
முடிவுரை
நான் தொடங்கிய இடத்திலிருந்து முடிக்கிறேன், பல ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பானில் புதியதாக உறுப்பினரான ஒருவருடனான எனது அனுபவத்தை நினைவு கூர்கிறேன். அவரது விடாமுயற்சி மற்றும் ஊழியக்காரர்கள் மற்றும் உறுப்பினர்களின் விடாமுயற்சியின் மூலம், அவர் இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்தைக் கண்டார். சுவிசேஷத்தைக் கண்டுபிடித்ததினால், அவர் தனது நோக்கத்தையும் கண்டுபிடித்தார், அது அவரது பார்வையை விரிவுபடுத்தியது. மகா மகிழ்ச்சியின் திட்டத்தையும் அவர் கண்டார். அத்திட்டத்தின் சுவிசேஷ உடன்படிக்கைகளுக்குக் கீழ்ப்படிதல் அவருக்கு ஆசீர்வாதங்களையும் மகிழ்ச்சியையும் கொண்டுவந்தது, உலக ரீதியாகவும் ஆவிக்குரிய ரீதியாகவும் அவரை உயர்த்தியது.
இயேசு கிறிஸ்துவின் சபையில் உறுப்பினராக வழிவகுத்த அவரது பயணம் அவரை இயேசு கிறிஸ்துவின் சாட்சியாக மாற அனுமதித்தது. மூப்பர் பேட்ரிக் கியரோன், பன்னிரு அப்போஸ்தலர் குழுமம், தொடர்ந்து வரும் மகிழ்ச்சியை விவரித்தார்:
“பரலோக பிதாவின் ஒவ்வொரு பிள்ளைகளுக்குமான அவரது அன்பான திட்டத்தினாலும், மீட்பு தரும் நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையினாலும் அவரது ஊழியத்தினாலும், நாம் பூமியில் மிகவும் மகிழ்ச்சியான மக்களாக இருக்க முடியும், இருக்கவும் வேண்டும்! ஓயாத தொந்தரவுகள் நிறைந்த இந்த உலக வாழ்க்கையின் புயல்கள் நம்மீது தாக்கும்போதும், கிறிஸ்துவின் மீதான நமது நம்பிக்கையினாலும், அழகான மகிழ்ச்சியின் திட்டத்தில் நமது சொந்த இடத்தைப் பற்றிய நம்முடைய புரிதலினாலும், வளர்ந்து நிலைத்திருக்கும் மகிழ்ச்சியையும் உள் அமைதியையும் நம்மால் விளைவிக்க முடியும்.”
இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்திற்கும், அதில் ஆழமாக பொதிந்துள்ள மகா மகிழ்ச்சியின் திட்டத்திற்கும், எனது நன்றியையும், சாட்சியத்தையும் நான் சமர்ப்பிக்கிறேன். சுவிசேஷத்தின் கனிகளைப் புசிக்கவும், நித்திய ஜீவனை நோக்கிப் பயணிக்கும்போது இந்த வாழ்க்கையில் அதிகமான மகிழ்ச்சியை உணரவும் நான் உங்களை அழைக்கிறேன்.
© 2025 by Intellectual Reserve, Inc. எல்லா உரிமைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. அ.ஐ.நாட்டில் அச்சிடப்பட்டது. ஆங்கில அங்கீகாரம்: 6/19. மொழிபெயர்ப்பு அங்கீகாரம்: 6/19. மாதாந்திர லியஹோனா செய்தி , ஜூலை 2025.மொழிபெயர்ப்பு. Tamil. 19601 418