“இயேசு கிறிஸ்து: ஈஸ்டரின் நம்பிக்கையும் வாக்குத்தத்தமும்,” லியஹோனா, ஏப்ரல் 2025.
லியஹோனா மாதாந்திர செய்தி, ஏப்ரல் 2025
இயேசு கிறிஸ்து:: ஈஸ்டரின் நம்பிக்கையும் வாக்குத்தத்தமும்
ஈஸ்டரின் நம்பிக்கை மற்றும் வாக்குத்தத்தத்தின் மூலம், இரட்சகர் நம் இருதயங்களின் ஏக்கங்களை நிறைவேற்றுகிறார் மற்றும் நம் ஆத்துமாக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார்.
விளக்கப்படங்கள்- மைக்கேல் டன்போர்ட்
இந்தச் செய்தியைப் படிக்கும்போது அமைதியான ஒரு தருணத்தையும் ஆவிக்குரிய இருப்பிடத்தையும் உருவாக்குங்கள்.
பெரும்பாலும், நம் உலகம் சத்தம், போலித்தனம் மற்றும் பெருமையின் இரைச்சல் நிறைந்ததாக இருக்கிறது. ஆனால் நாம் திறந்த மனதுடனும், நேர்மையாகவும், தேவனுக்கும் நமக்கும் இடமளிக்கக்கூடியவர்களாக இருக்கும்போது, இயேசு கிறிஸ்துவில் ஈஸ்டரின் நம்பிக்கையும் வாக்குத்தத்தமும் உண்மையானதாக மாறுகின்றன. அத்தகைய தருணங்களில், நாம் மன்றாடுகிறோம்:
“எனது குடும்ப உறுப்பினர், என் நண்பர், என் அன்புக்குரியவரை நான் எப்படி மீண்டும் பார்க்க முடியும்?”
“‘நான் என்னைத்தான் தேர்வு செய்கிறேன்’ என்ற மிக விரைவான உறவுகளின் உலகில், நான் எங்கு சமாதானம், நம்பிக்கை, மேலும் தேவனுடனும் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 107:19 பார்க்கவும்), என்னைச் சுற்றியுள்ளவர்கள் மற்றும் என்னுடனான ஐக்கியத்தை காணவும் உணரவும் செய்கிறேன்?”
“நான் நேசிக்கக்கூடிய ஒருவர் இருக்கிறாரா—யார் என்னை உண்மையில் நேசிப்பார்? ஒரு தேவதை கதையாக இல்லாமல், மரணத்தின் கயிறுகளை விட வலுவான பிணைப்புகளுடன், உண்மையிலேயே மகிழ்ச்சியாக, உடன்படிக்கையின் உறவுகள் வளர்ந்து, நிலைத்திருக்க முடியுமா?”
“அதிக வலியும், துன்பமும், அநியாயமும் இருக்கும் இடத்தில், இயேசு கிறிஸ்துவிலும், அவருடைய மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்திலும் மற்றும் சபையிலும் நான் எவ்வாறு சமாதானம் ஒற்றுமை மற்றும் புரிதலுக்கு பங்களிக்க முடியும்?”
இந்த ஈஸ்டர் காலத்தில், நான் இயேசு கிறிஸ்துவைப் பற்றியும் அவருடைய வாக்குத்தத்தம் மற்றும் நம்பிக்கையைப் பற்றியும் என் சாட்சியத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்.
உடன்படிக்கைக்கு சொந்தமாவதன் வாக்குத்தத்தமும் நோக்கமும்
தேவன், பரலோகத்தில் உள்ள நமது நித்திய பிதா; அவருடைய நேசகுமாரனாகிய இயேசு கிறிஸ்து; மற்றும் பரிசுத்த ஆவியானவர் தனிப்பட்ட முறையில் நமக்கு நெருக்கமானவர்கள். அவர்களின் எல்லையற்ற மற்றும் நித்திய ஒளி, மனதுருக்கம், மீட்கும் அன்பு ஆகியவை சிருஷ்டிப்பின் நோக்கத்திலும் உயிர்வாழ்தலின் அமைப்பிலும் பின்னிப்பிணைந்துள்ளன (ஆல்மா 30:44; மோசே 6:62-63 பார்க்கவும்).
நம் பூலோக வாழ்விற்கு முன்பு பரலோகத்தில் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில், “அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப்பாடி, தேவபுத்திரர்(தேவபுத்திரிகள்) எல்லாரும் கெம்பீரித்தார்களே?” (யோபு 38:7). நாம் தேர்வை தேர்ந்தெடுத்தோம். இப்போது நாம் விசுவாசத்தில் நடக்கிறோம். நம் சொந்த அனுபவத்தின் மூலம், உலக வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மைகள், தைரியமிழக்கச் செய்தல் மற்றும் சவால்களுக்கு மத்தியில் தேவனின் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட அழகு, தெளிவு, மகிழ்ச்சி மற்றும் நோக்கம் ஆகியவற்றைக் கண்டறிகிறோம்.
இன்றைய நிச்சயமற்ற நிலையில் நாம் தனியாக அலைந்து திரிய வேண்டியதில்லை. நாம் பரலோகத்தோடு உறவாடலாம் , குடும்பத்திலும் வீட்டாரோடும் பரிசுத்தவான்களின் சமூகத்தில் விசுவாசத்தையும் சொந்தமாதலையும் வளர்த்து, தேவனுடைய கட்டளைகளுக்கு மனப்பூர்வமாகவும் மகிழ்ச்சியுடனும் கீழ்ப்படிவதன் மூலம் நம்முடைய உண்மையான, சுதந்திரமான, மிகவும் நம்பத்தகுந்த, சந்தோஷமுடையவர்களாக மாறலாம். பாவநிவர்த்தி—பாவ-நிவர்த்தி—இயேசு கிறிஸ்துவிலும் அவர் மூலமுமே உடன்படிக்கைக்குச் சொந்தமாதலை கொண்டு வருகிறது.
இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை மற்றும் ஊழியத்தின் நம்பிக்கை
ஒவ்வொரு நாளும், ஈஸ்டர் நாளின் நம்பிக்கையும் வாக்குத்தத்தமும், இயேசு கிறிஸ்து தனது பூலோக பரிபூரண ஊழியத்தின் போது பகிர்ந்து கொண்ட ஆசீர்வாதங்களையும் போதனைகளையும் உள்ளடக்குகிறது. ஆதியிலே முன்னரே நியமிக்கப்பட்டபடி, இயேசு கிறிஸ்து தேவனுடைய ஒரே பேறான குமாரனாகப் பிறந்தார் (யாக்கோபு 4:5; ஆல்மா 12:33–34; மோசே 5:7, 9 பார்க்கவும்). அவர் தன் இளவயதில், “ஞானத்திலும், வளர்த்தியிலும் தேவகிருபையிலும் மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்” (லூக்கா 2:52). இயேசு கிறிஸ்து தம்முடைய பிதாவின் சித்தத்தை மட்டுமே செய்ய முயன்று, பாவங்களை மன்னித்தார், பலவீனங்களைக் குணப்படுத்தினார், இறந்தவர்களை எழுப்பினார், நோயுற்றவர்களுக்கும் தனிமையில் இருந்தவர்களுக்கும் ஆறுதல் கூறினார்.
ஒருமுறை, 40 நாட்கள் உபவாசம் இருந்த பிறகு, அவர் சாட்சியம் அளித்தார், “கர்த்தருடைய ஆவியானவர் என் மேலிருக்கிறார், தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார், இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும் என்னை அனுப்பினார்”.(லூக்கா 4:18;ஏசாயா 61:1ஐயும் பார்க்கவும்).
அவர்கள் நாம் ஒவ்வொருவருமே.
கடைசி இராப்போஜனத்திற்கு பிறகு, இயேசு கிறிஸ்து தனது சீஷர்களுடைய கால்களைக் கழுவினார்.(யோவான் 13:4–8 பார்க்கவும்). பழைய மற்றும் புதிய உலகங்கள் இரண்டிலும், “ஜீவ தண்ணீர்” மற்றும் “ஜீவ அப்பமாகிய” அவரே திருவிருந்தை ஏற்படுத்தினார். பரிசுத்த திருவிருந்து நியமத்தில், நாம் நம்மோடு எப்போதும் அவரது ஆவியை பெற்றிருக்கும் படியாக, நாம் பிதாவை அழைத்து, இயேசு கிறிஸ்துவின் நாமத்தை நாம் தரித்துக்கொள்ளவும், எப்போதும் அவரை நினைவுகூரவும், அவரது கட்டளைகளைக் கைக்கொள்ளவும், நம்மோடு பரிசுத்த ஆவியை எப்போதும் கொண்டிருக்கவும் உடன்படிக்கை செய்கிறோம் லூக்கா 22:19–20; 3 நேபி 18:7, 10–11 பார்க்கவும்).
கெத்செமனே தோட்டத்தில், நம்மை மீட்கவும், நமக்காக பாவ நிவர்த்தி செய்யவும் மனிதன் அனுபவிக்க முடியாத பாடுகளை விட இயேசு அதிகம் பாடனுபவித்தார். ஒவ்வொரு துளையிலிருந்தும் இரத்தம் கசிந்தது. நாம் மனந்திரும்பினால் நாம் துன்பப்படக்கூடாது என்பதற்காக அவர் சகல மனுஷர்களின் வேதனையையும் அனுபவித்தார். (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 18:11; 19:16 பார்க்கவும்).
இயேசு கிறிஸ்து பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்டு, பரியாசம் பண்ணப்பட்டு சாட்டையால் அடிக்கப்பட்டார், மேலும் அவரது தாழ்மையான சிரசின் மேல் முள் கிரீடம் திணிக்கப்பட்டது (மத்தேயு 27:26, 29; மாற்கு 15:15, 17, 20, 31; லூக்கா 22:63; யோவான் 19:1–2ஐப் பார்க்கவும்). “நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார் … அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்” (ஏசாயா 53:5). நம்மை தம்மிடம் இழுக்கும்படியாக அவர் “சிலுவையின் மேல் உயர்த்தப்பட்டார்” (3 நேபி 27:14–15 பார்க்கவும்). இந்த நிலையில், சிலுவையிலும் கூட, இயேசு கிறிஸ்து மன்னித்தார் (லூக்கா 23:34 பார்க்கவும்). அவர் தனது தாயை கவனித்துக்கொள்ளும்படி யோவானிடம் கேட்டார் (see யோவான் 19:26–27 பார்க்கவும்). அவர் கைவிடப்பட்டதாக உணர்ந்தார் (மத்தேயு 27:46; மாற்கு 15:34 பார்க்கவும்). வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார் (see யோவான் 19:28 பார்க்கவும்). அனைத்தும் நிறைவேறியபோது , அவரே தமது “ஜீவனை விட்டார்” (லூக்கா 23:46; மேலும் யோவான் 10:17–18 பார்க்கவும்).
நம்முடைய சுகவீனங்களிலும், பெலவீனங்களிலும், தனிமையிலும், தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலும் , கஷ்டங்களிலும் நமக்கு எப்படி உதவுவது என்று இயேசு கிறிஸ்து அறிந்திருக்கிறார் (ஆல்மா 7:12 பார்க்கவும்). அத்தகைய துன்பங்கள் பெரும்பாலும் பிறரின் தேர்வுகளின் விளைவாகவே வரும். நம்முடைய களிகூர்தலிலும் நன்றியறிதலிலும் நம்மோடு எப்படி சந்தோஷமடைவது என்றும் நம் மகிழ்ச்சி நிறைந்திருக்கும் போது நம்முடன் எப்படி ஆனந்தக் கண்ணீர் விடுவதெனவும் அவர் அறிந்திருக்கிறார். மென்மையாக அவர் நம்மைத் தம் பெயரால், தம் குரலால், அவருடைய மந்தைக்குள் அழைக்கிறார். அவர் எங்கெங்குமுள்ள ஒவ்வொருவரையும் அழைக்கிறார். நித்திய கண்ணோட்டத்தின் மூலம் பூலோக வாழ்க்கையைப் பார்க்கவும் புரிந்துகொள்ளவும் அவர் நம்மை அழைக்கிறார். நாம் நேர்மையாக நடந்து, நமது உடன்படிக்கைகளை கைக்கொள்ளும்போது, சகலமும் நமது நன்மைக்கு ஏதுவாக நடக்கும் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 90:24; ரோமர் 8:28 பார்க்கவும்).
அவருடைய நேரத்திலும் வழியிலும், மறுஸ்தாபிதம் வருகிறது—காரியங்கள் எப்படி இருந்தன என்பதற்கு மட்டுமல்ல, அவை என்னவாகும் என்பதற்கும் கூட. உண்மையாகவே, இயேசு கிறிஸ்து நம்மை அடிமைத்தனம் மற்றும் பாவத்திலிருந்து, மரணம் மற்றும் நரகத்திலிருந்து விடுவித்து, விசுவாசம் மற்றும் மனந்திரும்புதல் மூலம், நாம் நினைத்ததைவிட அதிகமாக மாற உதவி செய்து, நம் தெய்வீக அடையாளத்தை நிறைவேற்ற உதவுகிறார். .
விடுதலையின் வாக்குத்தத்தம்
இயேசு கிறிஸ்துவின் நிமித்தம், மரணம் முடிவல்ல. ஈஸ்டரில் நாம் அறிவிக்கிறோம்:
தம் பிதாவிடமிருந்து பெற்ற கட்டளையினாலும் வல்லமையினாலும், இயேசு தம் ஜீவனைக் கொடுத்து மீண்டும் பெற்றுக்கொள்ள முடியும் (யோவான் 10:17 பார்க்கவும்). அவருடைய சரீரம் கல்லறையில் கிடந்த போது, இயேசு கிறிஸ்து ஆவி உலகத்திற்குள் ஊழியம் செய்து, ஒழுங்கமைத்து, “மரணக் கட்டுகளிலிருந்து அவர்களின் மீட்பை” அறிவித்தார்.(கோட்பாடும் உடன்படிக்கைகளும் 138:16).
மூன்றாம் நாள் காலையில், அவர் கல்லறையிலிருந்து எழுந்தார். அவர் மரியாளிடம் பேசினார். அவர் எம்மாவுக்கு செல்லும் வழியில் இரண்டு சீஷர்களுக்கும், அவருடைய அப்போஸ்தலர்கள் மற்றும் பிறருக்கும் தோன்றினார். (மத்தேயு 28; மாற்கு 16; லூக்கா 24; யோவான் 20 பார்க்கவும் )
அழகான சாட்சியத்தில், கப்பலின் மறுபக்கத்தில் வலைகளை வீசும்படி அவர் தம் சீஷர்களை அழைத்தார்; இந்த முறை, மீண்டும் மீன்கள் நிறைந்து இருந்தாலும், வலைகள் கிழியவில்லை.(யோவான் 21:6–11; லூக்கா 5:3–7 பார்க்கவும்). அவர் சீஷர்களுக்கு உணவளித்தார் மற்றும் பேதுருவிடம் மூன்று முறை தனது ஆடுகளையும் ஆட்டுக்குட்டிகளையும் மேய்க்குமாறு கெஞ்சினார்.(யோவான் 21:12–17 பார்க்கவும்). அவர் பரலோகத்திற்கு ஏறினார், அவருடைய அப்போதைய சீஷர்களும் இப்போது நாம் அனைவரும் ஈஸ்டர் நாளின் மகிமையான செய்திகளையும் அவருடைய சுவிசேஷத்தையும் ஒவ்வொரு தேசத்துடனும், இனத்தாருடனும், மக்களுடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அறிவித்தார் (மத்தேயு 28:19-20; மாற்கு 16:15 பார்க்கவும்).
இயேசு கிறிஸ்து நமது நல்ல மேய்ப்பரும் தேவ ஆட்டுக்குட்டியும் ஆவார். அவர் தனது ஆடுகளுக்காக தனது ஜீவனைக் கொடுத்தார், மேலும் தனது ஜீவனைக் கொடுக்கிறார். தோட்டத்திலும் சிலுவையிலும் அவர் தாங்கவொண்ணாததைச் சுமந்து நமக்காக பாவநிவர்த்தி செய்தார். இக்காலத்திலும் நித்தியத்திலும், “மரணமானது நித்தியத்திற்குச் செல்லும் பாதையை எவ்வாறு திறக்கிறது” என்பதை அவர் நமக்கு மாதிரியாகக் காட்டுகிறார்.
கிறிஸ்துவின் பாவநிவர்த்தி மற்றும் உயிர்த்தெழுதலின் வல்லமையின் மூலம், நமது உடல்களும் ஆவிகளும் சரீர உயிர்த்தெழுதலில் மீண்டும் இணைக்கப்படும். முகரூபம், உடல் அமைப்பு, மேலும் அங்கம் அங்கமாக சேர்க்கப்பட்டு நாம் மகிமையுள்ளவர்களாக இருப்போம். நம் தலை முடிகள் கூட சேர்க்கப்படும். நீண்ட கால நோய்கள், வியாதி , உடல் விபத்து, மன இயலாமை போன்றவற்றில் இருந்து விடுபடுவோம். கிறிஸ்துவின் பாவநிவர்த்தியானது எல்லாவிதமான ஆவிக்குரிய பிரிவையும் ஆவிக்குரிய மரணத்தையும் மேற்கொள்ள நம்மை ஆசீர்வதிக்க முடியும். மனந்திரும்புதலின் நிபந்தனையின் பேரில், நாம் ஒவ்வொரு பாவத்திலிருந்தும் துக்கத்திலிருந்தும் விடுபட்டு, அன்பு மற்றும் மகிழ்ச்சியின் நித்திய முழுமைக்கு திறக்கப்படுகிறோம். தூய, சுத்தமான, சுதந்திரமான நிலையில், நம் மிகவும் மதிப்புக்குரிய குடும்ப உறவுகளுடன் நம் பிதாவாகிய தேவனும் இயேசு கிறிஸ்துவும் இருக்கிற மகிமையான, சிலஸ்டியல் சமூகத்துக்கு திரும்பலாம்.
நம் அன்புக்குரியவர்களை மீண்டும் சந்திப்போம். நாம் நேசிப்பவர்களுடன் நாம் மீண்டும் இணைந்தால், ஒருவரையொருவர் நித்திய கண்ணோட்டத்துடன்—மிகுந்த நேசம், புரிதல் மற்றும் இரக்கத்துடன் பார்ப்போம். இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியானது நமக்கு முக்கியமானதை நினைவில் வைத்துக் கொள்ளவும், தேவையற்றதை மறக்கவும் உதவுகிறது. நமது இரட்சகரையும் உறவுகளையும் அதிக விசுவாசத்துடனும் நன்றியுடனும் பார்ப்பது சமாதானத்தைக் கொண்டுவருகிறது, பாரங்களை நீக்குகிறது, இருதயங்களை ஒப்புரவாக்குகிறது, இக்காலத்திலும் நித்தியத்திலும் குடும்பங்களை ஒன்றிணைக்கிறது.
ஏராளம் மற்றும் சந்தோஷத்தின் நம்பிக்கை
இயேசு கிறிஸ்துவில் ஈஸ்டர் என்பது பரலோகத்தின் ஜன்னல்கள் திறப்பதும், திராட்சைக்கொடியின் பழங்கள் பெருகுவதும் மற்றும் நிலங்கள் மகிழ்ச்சிகரமாக மாறுவதையும் உள்ளடக்கியது. இயேசு கிறிஸ்துவில் ஈஸ்டர் என்பது விதவைகள், அனாதைகள், பசியோடிருப்போர், ஆதரவற்றோர், பயப்படுபவர்கள், துஷ்பிரயோகம் செய்யப்பட்டவர்கள் அல்லது அப்பாவித்தனமாக தீங்கு விளைவிக்கும் வழியில் சிக்கியவர்கள் ஆகியோருக்கு ஆறுதலளிப்பதும் அவர்களை கவனித்துக்கொள்வதுமாகும். ஒவ்வொருவரையும் கவனத்தில் கொண்டு, இயேசு கிறிஸ்து தாம் செய்ததைப் போல அன்புடனும் இரக்கத்துடனும் பார்க்கவும் ஊழியம் செய்யவும் நம்மை அழைக்கிறார்.
அனைத்து நற்காரியங்களிலும் , இயேசு கிறிஸ்து அபரிதமாக மீட்டெடுக்கிறார்.(யோவான் 10:10; ஆல்மா 40:20-24 பார்க்கவும்). “பூமி நிரம்பியிருக்கிறது ,போதுமானதும் உபரியும் உள்ளது” என்று அவர் உறுதியளிக்கிறார். (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 104:17). சகலத்தையும் அவர் மறுஸ்தாபிதம் செய்ததில் அவருடைய சுவிசேஷத்தின் முழுமை, அவருடைய ஆசாரியத்துவ அதிகாரம் மற்றும் வல்லமை, மேலும் அவருடைய சபையில் காணப்படும் பரிசுத்த நியமங்கள் மற்றும் உடன்படிக்கைகள், அவருடைய பெயரில் அழைக்கப்படும், பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையும் அடங்கும்.
இயேசு கிறிஸ்துவின் ஈஸ்டரில் பல இடங்களில் தேவ பிள்ளைகளை நெருங்கி வரும் கர்த்தரின் அநேக பரிசுத்த ஆலயங்களும் அடங்கும், “சீயோன் பர்வதத்தில் இரட்சகர்கள்” என்ற கோட்பாட்டை நம் இருதயங்களுக்குள் கொண்டு வருகிறது (ஒபதியா 1:21 பார்க்கவும்), மரித்த அன்புக்குரியவர்களுக்குத் தேவையானதையும் விரும்புவதையும், நித்தியத்தில் அவர்களால் தங்களுக்காகப் பெற முடியாததையும் பூமியில் வழங்குவதற்காக கர்த்தர் ஒரு பரிசுத்தமான, தன்னலமற்ற வழியை அளிக்கிறார்.
என்னுடைய நம்பிக்கையும், வாக்குத்தத்தமும், சாட்சியமமும் இதுதான். நமது பிதாவாகிய தேவன், நமது இரட்சகரும் மீட்பருமான இயேசு கிறிஸ்து, மற்றும் பரிசுத்த ஆவியானவர் குறித்து நான் சாட்சியளிக்கிறேன். ஈஸ்டரிலும் மற்றும் ஒவ்வொரு நாளும், நித்திய நம்பிக்கையையும் வாக்குத்தத்தத்தையும் தேவனின் மகிழ்ச்சியின் தெய்வீக திட்டத்தில் கண்டு உடன்படிக்கை பாதையில் தெய்வீக மாற்றமான அழிவிலிருந்து அழியாமை மற்றும் நித்திய ஜீவனையும் காணலாம். ஒவ்வொரு நாளும் இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் நிச்சயமானது நமது சுமைகளை அகற்றி, மற்றவர்களின் துக்கங்களில் ஆறுதல் அளிக்கவும், அவருடைய முழு சந்தோஷத்தைப் பெற நமது ஆத்துமாக்களை விடுவிக்கவும் உதவுகிறது.
ஈஸ்டரின் நம்பிக்கை மற்றும் வாக்குத்தத்தத்தின் மூலம், இரட்சகர் நம் இருதயங்களின் ஏக்கங்களை நிறைவேற்றுகிறார் மற்றும் நம் ஆத்துமாக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார்.
© 2025 by Intellectual Reserve, Inc. எல்லா உரிமைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. அ.ஐ.நாட்டில் அச்சிடப்பட்டது. ஆங்கில அங்கீகாரம்: 6/19. மொழிபெயர்ப்பு அங்கீகாரம்: 6/19. Monthly Liahona Message, April 2025. மொழிபெயர்ப்பு. Language 19612 418