2024
கர்த்தருடைய மகத்தான பணி மற்றும் நம்முடைய மகத்தான வாய்ப்பு
ஜூலை 2024


“கர்த்தருடைய மகத்தான பணி மற்றும் நம்முடைய மகத்தான வாய்ப்பு,” லியஹோனா, ஜூலை 2024.

லியஹோனா மாதாந்திர செய்தி, ஜூலை 2024

கர்த்தருடைய மகத்தான பணி மற்றும் நம்முடைய மகத்தான வாய்ப்பு

நாம் நேசிக்கும்போதும், பகிர்ந்துகொள்ளும்போதும், அழைக்கும்போதும், ஒவ்வொரு விலையேறப்பெற்ற ஆத்துமாவும் கர்த்தரிடம் வர உதவுவதற்காக நாம் அவருடன் உழைக்கிறோம்.

ஓரு வீதியில்  நடந்து செல்லும் இரண்டு பெண்கள் உரையாடுதல்.

இந்தக் கடைசி, மகத்தான ஊழியக்காலத்திலே ஒவ்வொரு தீர்க்கதரிசியும் பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்ள அதன் அங்கத்தினர்களுக்குப் போதித்துள்ளனர். என் வாழ்நாளில், பல உதாரணங்கள் நினைவுக்கு வருகின்றன:

தலைவர் டேவிட் ஓ. மெக்கே (1873–1970), என் இளமைப் பருவத்தின் தீர்க்கதரிசி, “ஒவ்வொரு அங்கத்தினரும் ஒரு ஊழியக்காரன்”, என்று அறிவித்தார்.

தலைவர் ஸ்பென்சர் டபுள்யு. கிம்பல் (1895-1985),“இன்னும் அதிகமான இடங்களுக்கும் மக்களுக்கும் சுவிசேஷத்தை எடுத்துச் செல்லும் நாள் இங்கே, இப்பொழுது வந்துவிட்டது,” என்றும் மற்றவர்களுடன் சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்வதில் “நாம் முன்னேறும் வேகத்தைத் துரிதப்படுத்த வேண்டும்” என்றும் போதித்தார்.

தலைவர் கார்டன் பி. ஹிங்க்லி (1910-2008) “கற்பிக்கப்பட வேண்டியவர்களைக் கண்டுபிடிக்க உதவுவதில் நம்முடைய பணி மகத்தானது, நம்முடைய பொறுப்பு மிகப்பெரியது” என்று கூறினார். அனைத்து சிருஷ்டிகளுக்கும் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி நம் மீது கர்த்தர் ஆணையிட்டுள்ளார். இதற்கு [நமது] மிகச் சிறந்த முயற்சிகள் தேவைப்படும்.”

தலைவர் ரசல் எம். நெல்சன் “ஊழியப்பணி மாபெரும் இஸ்ரவேலின் கூடுகையில் அவசியமான ஒரு பகுதியாகும்” என போதித்துள்ளார். “அந்தக் கூடுகையே இன்று பூமியில் நடக்கும் மிக முக்கியமான பணி. வேறு எதுவும் பெரிய அளவில் ஒப்பிட முடியாது. முக்கியத்துவம் என்று வேறு எதையும் ஒப்பிட முடியாது. கர்த்தருடைய ஊழியக்காரர்கள்—அவருடைய சீஷர்கள்—இன்று உலகத்தில் மிகப்பெரிய சவால்களில்,மிகப்பெரிய நோக்கத்தில், மகத்தான பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.”

பிரிட்டிஷ் ஊழியத்தில் ஒரு இளம் ஊழியக்காரனாக இருந்தபோது இதைப்பற்றி நானே தெரிந்துகொண்டேன். இன்று நான் அதில் மேலும் அதிக உறுதியாய் இருக்கிறேன். பிறரிடம் நம்முடைய அன்பை வெளிப்படுத்துவதன் மூலமும், நம்முடைய நம்பிக்கைகளை பகிர்ந்து கொள்ளுவதன் மூலமும், நம்முடன் சேர்ந்து இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் மகிழ்ச்சியை அனுபவிக்க அழைப்பதன் மூலமும், அவர்கள் கிறிஸ்துவண்டை வர உதவிட, வாய்ப்புகள் எல்லா இடங்களிலும் இருக்கின்றன என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஒரு அப்போஸ்தலனாக சாட்சியளிக்கிறேன்.

பணி முன்னோக்கி நகருகிறது.

2004-ல் என்னுடைய சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள் முதலாம் பதிப்பு அறிமுகப்படுத்தப்பட்ட போதும், மேலும் 2023-ல் இரண்டாம் பதிப்பு வெளியிடப்பட்ட போதும், நான் சபை ஊழியத்துறையில் நியமிக்கப்பட்ட பணியை பெறும் சிலாக்கியம் எனக்குக் கிடைத்தது. ஊழியப்பணியை என்னுடைய சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள் ஆழமான முறையில் ஆசீர்வதித்து இருக்கிறது என்று நான் நம்புகிறேன்.

புதிய என்னுடைய சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள் கையேடு, நாம் 2004 வரை கற்றுகொண்ட அனைத்தையும், பிரதான தலைமை மற்றும் பன்னிருவர் குழும அங்கத்தினரின் உணர்த்துதலான வழி காட்டுதலையும், சுவிசேஷத்தைப் பகிர இந்த நவீன யுகத்திற்குத் தேவையான மாற்றங்களையும் உள்ளடக்கியது. இந்த மாற்றங்களில் சில குறிப்பிடத்தக்க வெற்றியை விளைவித்துள்ளன.

“அன்பு காட்டுதல், பகிர்தல், அழைத்தல்” என்னும் கொள்கைகளின் மூலம், எளிமையாகவும், சாதாரணமாகவும், இயல்பாகவும் சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்ளுவது ராஜ்ஜியத்தைப் பெரிதளவில் ஆசீர்வதிக்கின்றது என்பதை நாம் கண்டறிந்துள்ளோம். இயேசு கிறிஸ்து பூமியில் வாழ்ந்த நாட்களில் இவ்விதமாகவே சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொண்டார். அவருடைய வாழ்க்கையையும் அவருடைய அன்பையும் அவர் பகிர்ந்து அனைவரையும் தம்மண்டை வர அழைத்தார் (மத்தேயு 11:28 பார்க்கவும்). அவர் செய்ததைப் போன்று, அன்பு செலுத்துவதும், பகிர்ந்து கொள்ளுவதும், அழைப்பதும் சபையின் அங்கத்தினர் ஒவ்வொருவருக்கும் ஒரு சிறப்பான ஆசீர்வாதமும் பொறுப்புமாகும்.

அன்புடன் தொடங்குங்கள்

கெத்செமனே தோட்டத்திலும், சிலுவையிலும், இயேசு கிறிஸ்து உலகத்தின் பாவங்களைத் தம்மீது ஏற்றுக்கொண்டார், மேலும் அனைத்து துக்கங்களையும் “எல்லா வகையான வலிகளையும் துன்பங்களையும் சோதனைகளையும்” அனுபவித்தார். (ஆல்மா 7:11). இது “[அவரை], … சகலத்திற்கும் மேலானவரை, வலியின் காரணமாக நடுங்கவும், இரத்தம் ஒவ்வொரு துவாரத்திலிருந்தும் கசியும் அளவும்” பாடுபட வைத்தது (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 19:18). அவருடைய பாவநிவர்த்தி மற்றும் உயிர்த்தெழுதலின் மூலமாக, இயேசு கிறிஸ்து இரட்சிப்பையும் மேன்மையடைதலையும் அனைவருக்கும் சாத்தியமாக்கினார்.

இரட்சகரிடம் திரும்பி அவர் நமக்காக செய்த அனைத்தையும் ஆராய்ந்து பார்ப்பது அவர்மேல் அன்பு நிறைந்த ஒரு இருதயத்தை நம்மில் உருவாக்குகின்றது. பின்பு அவர் நம்முடைய இருதயத்தை மற்றவர்களுக்கு நேராகத் திருப்பி, நாம் அவர்களை நேசிக்கவும் (யோவான் 13:34–35 பார்க்கவும்) அவருடைய சுவிசேஷத்தை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் ( மத்தேயு 28:19; மாற்கு 16:15 பார்க்கவும்) நமக்குக் கட்டளை இடுகிறார். அம்மோனின் அன்பு மற்றும் சேவையின் காரணமாக லாமோனி ராஜா சுவிசேஷத்தைப் பெறுவதற்குத் தன் இருதயத்தைத் திறந்தது போல, நம்மைச் சுற்றியுள்ளவர்கள் நாம் அவர்களை உண்மையாக நேசிக்கிறோம், கவனித்துக்கொள்கிறோம் என்று உணர்ந்தால், அவர்கள் நம் செய்திகளுக்குத் தங்கள் இருதயங்களைத் திறப்பார்கள். (ஆல்மா 17-19 பார்க்கவும்)

நாம் சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்ளும்போது, அன்புடன் தொடங்குவோம். நாம் மற்றவர்களை அன்புடன் அணுகும்போது—அவர்கள் நமது சகோதர சகோதரிகள் மற்றும் நமது பரலோக பிதாவின் அன்பான பிள்ளைகள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளும்போது—நாம் உண்மை என்று அறிந்ததைப் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்புகள் திறக்கப்படும்.

ஆர்வத்துடன் ஈடுபட்டு பகிருங்கள்

தலைவர் எம். ரசல் பல்லார்ட் (1928-2023) -ஐ விட, சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்வதில் அதிக அர்ப்பணிப்புள்ளவர்கள் யாரும் இல்லை. அவரது இறுதி பொது மாநாட்டு உரையில், “இந்த உலகில் உள்ள அனைவரும் அறியக்கூடிய மிக மகிமையான மற்றும் அற்புதமான விஷயங்களில் ஒன்று, நமது பரலோக பிதாவும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் இந்த பிற்காலத்திலே தங்களை வெளிப்படுத்தியிருக்கிறார்கள், மேலும் ஜோசப் [ஸ்மித் ] இயேசு கிறிஸ்துவின் நித்திய சுவிசேஷத்தின் முழுமையை மீட்டெடுக்க உயர்த்தப்பட்டுள்ளார்” என்று அவர் சாட்சியளித்தார்.

அவரது வாழ்நாள் முழுவதும், மற்றும் உலகின் பெரும்பாலான பகுதிகளில், தலைவர் பல்லார்ட் இந்த விலையேறப்பெற்ற செய்தியை அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் ஆர்வத்துடன் ஈடுபட்டார். நாமும் அவ்வாறே செய்ய வேண்டும் என்று அவர் ஊக்குவித்தார். “ஒரு நல்ல அயலானாக இருப்பதன் மூலமும், அக்கறை மற்றும் அன்பு காட்டுதல் மூலமும்” நாம் சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்கிறோம் என்று அவர் போதித்தார். அவ்வாறு செய்வதன் மூலம், நாம் “நம்முடைய சொந்த வாழக்கையில் சுவிசேஷத்தை ஒளிரச்செய்கிறோம், மேலும் … சுவிசேஷத்தினால் வழங்க இயலும் ஆசீர்வாதங்களை [மற்றவர்களுக்குப்] பரவச் செய்கிறோம்.” மேலும் “[நமக்கு]த் தெரிந்த மற்றும் நம்புகிற மேலும் நாம் உணர்கிறவற்றைக் குறித்து நாம் சாட்சியளிக்கிறோம்.” தலைவர் பல்லார்ட் கற்பித்தார், “ஒரு தூய்மையான சாட்சி … பரிசுத்த ஆவியின் வல்லமையால் எடுத்துச் செல்லப்பட்டு பெற்றுக் கொள்ளுவதற்காக திறந்திருக்கும் மற்றவர்களின் இருதயங்களுக்குள் கொண்டு சேர்க்க முடியும்.”

இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்தை பகிர்ந்து கொள்வதே தலைவர் பல்லார்டினுடைய இருதயத்தின் மிகப்பெரிய வாஞ்சையாக இருந்தது. நாமும் —அவரைப் போலவே— பேச்சிலும் செயலிலும், சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்வதில் ஆவலாய் ஈடுபட முடியும். நம் மத்தியில் யார் சுவிசேஷத்தின் வெளிச்சத்தைத் தேடிக்கொண்டும் ஆனால் எங்கு கண்டு பிடிக்க முடியும் என்று தெரியாமலும் இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாது. (கோட்பாடுகளும் உடன்படிக்கைகளும் 123:12 பார்க்கவும்)

இரு ஆண்கள் படிகளில் ஏறிச்செல்கிறார்கள்

இதயப்பூர்வமான அழைப்புகளை கொடுங்கள்.

கிறிஸ்துவண்டை வந்து சேர பிறருக்கு உதவுவதில், இரட்சகரும் அவருடைய சுவிசேஷமும் கொண்டு வரும் மகிழ்ச்சியை அனுபவிக்க நாம் அவர்களை அழைக்கிறோம். அவர்களை ஒரு நிகழ்ச்சிக்கு வரவைக்கவும், மார்மன் புஸ்தகத்தைப் படிக்கவும் அல்லது ஊழியக்காரரை சந்திக்கவும் நாம் அழைப்பதன் மூலம் இதைச் செய்யலாம். மேலும் நம்முடன் சேர்ந்து திருவிருந்துக் கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி ஒரு இருதயப்பூர்வமான அழைப்பை நாம் அவர்களுக்கு கொடுக்கலாம்.

“தேவனை ஆராதிக்கவும் இயேசு கிறிஸ்துவையும் அவருடைய பாவநிவர்த்தியையும் நினைவு கொள்ளவும்” நாம் ஒவ்வொரு வாரமும் திருவிருந்துக் கூட்டத்தில் பங்கு கொள்கிறோம். இது ஜனங்கள் ஆவியானவரை உணரவும், இரட்சகரிடத்தில் நெருங்கி வரவும், அவர்மீதுள்ள விசுவாசத்தை பலப்படுத்திக் கொள்ளவும் உகந்த நேரம்.

நாம் அன்பு காட்டுவதற்கும், பகிர்ந்து கொள்ளுவதற்கும், அழைப்பதற்கும் வழிகளைத் தேடும்பொது, நம்முடைய திட்டங்களிலும், முயற்சிகளிலும் ஜனங்களை திருவிருந்துக் கூட்டத்தில் பங்கு கொள்ள உதவுவது கண்டிப்பாக அடங்கியிருக்க வேண்டும். அவர்கள் நம்முடைய அழைப்பை ஏற்று திருவிருந்துக் கூட்டத்தில் பங்கு கொள்ளும்போது, அவர்கள் ஞானஸ்நானம் மற்றும் மனமாற்றதுக்கான பாதையிலே தொடர்ந்து செல்லும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. நாம் மற்றவர்களை திருவிருந்துக் கூட்டத்தில் கலந்து கொள்ள அழைத்து, அவ்வாறு செய்வதனால் அவர்கள் பெற்றுக் கொள்ளக்கூடிய ஆசீர்வாதங்களை அடையாளம் காண அவர்களுக்கு உதவும்போது பெரிய வெற்றி வரும் என்று நான் என் முழு இருதயத்துடன் நம்புகிறேன்.

கர்த்தர் நம்மை வழி நடத்துவார்

நாம் அன்பு காட்டும் போதும், பகிர்ந்துகொள்ளும் போதும் மற்றும் அழைக்கும் போதும் என்னென்ன வெற்றிகளும் சவால்களும் வரும் என்று ஒருபோதும் நமக்குத் தெரியாது. மோசியாவின் குமாரர்கள் “நகரம் விட்டு நகரம் போய், ஒரு தொழுகை ஸ்தலத்தைவிட்டு மற்றொன்றுக்குப் போய், … லாமானியருக்குள்ளே, அவர்கள் மத்தியில் தேவ வசனத்தைப் பிரசங்கிக்கவும், போதிக்கவும் இப்படியாக அவர்கள் மகா ஜெயத்தைப் பெறத் துவங்கினார்கள்.” அவர்களின் முயற்சிகளின் மூலம், “ஆயிரக்கணக்கானோர் கர்த்தரைப் பற்றிய ஞானத்திற்குக் கொண்டுவரப்பட்டனர்”, “மேலும் பலர்” “மனம்மாறி பின்வாங்கிப் போகாதிருந்தார்கள்” (ஆல்மா 23:4–6)

இது எப்போதும் நம் அனுபவமாக இருக்காது என்றாலும், ஒவ்வொரு ஆத்துமாவும் அவருக்கு விலையேறப்பெற்றது என்பதால், நம்முடன் இணைந்து பணிபுரிவதாக கர்த்தர் வாக்குத்தத்தம் செய்துள்ளார். நாம் கர்த்தர் மீது நம்பிக்கை வைத்து அவருடைய பணியில் ஈடுபடும்போது, மற்றவர்களிடம் அன்புகூருவதன் மூலமும், நம்முடைய வாழ்க்கையையும் சாட்சிகளையும் அவர்களிடம் பகிர்ந்துகொள்வதன் மூலமும், மேலும் அவரைப் பின்பற்ற அவர்களை அழைப்பதன் மூலமும், நாம் அவருடைய சுவிசேஷத்தை அவர்களுடன் பகிர்ந்து கொள்ள அவர் நம்மை வழி நடத்துவார்.

ஆத்துமாக்களை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் கொண்டு வரும் அவருடைய மகத்தான பணியிலே அவருக்கு உதவும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளும்போது “[நம்] சந்தோஷம் மிகப் பெரிதாயிருக்கும்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 18:15)

குறிப்பு

  1. Teachings of Presidents of the Church: David O. McKay (2003), xxii.

  2. Teachings of Presidents of the Church: Spencer W. Kimball (2006), 261262.

  3. கார்டன் பி. ஹிங்க்லி, “Find the Lambs, Feed the Sheep,” லியஹோனா, July 1999, 121. இச் செய்தி பிப்ரவரி 21, 1999 அன்று, சால்ட் லேக் டாபர்னக்கிளில் இருந்து ஒரு செயற்கைகோள் ஒளிபரப்பின் போது வழங்கப்பட்டது.

  4. Russell M. Nelson, “The Everlasting Covenant,” Liahona, Oct. 2022, 9.

  5. M. Russell Ballard, “Praise to the Man,” Liahona, Nov. 2023, 74.

  6. M. Russell Ballard, “The Essential Role of Member Missionary Work,” Liahona, May 2003, 40.

  7. M. Russell Ballard, “Remember What Matters Most,” Liahona, May 2023, 107.

  8. என்னுடைய சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்: இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்வதற்கான வழிகாட்டி (2023), 88.

  9. என்னுடைய சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள், 172.