“பரலோக பிதா உங்களிடம் பேச விரும்புகிறார்,”லியஹோனா, மார்ச் 2025.
லியஹோனா மாதாந்தர செய்தி, மார்ச் 2025
பரலோக பிதா உங்களிடம் பேச விரும்புகிறார்.
பரலோக பிதாவிலும் அவருடைய நேச குமாரன் மீதும் நீங்கள் வைத்திருக்கும் விசுவாசமானது, திரையை விலக்கி பிதாவின் குரலைக் கேட்பதற்கு உதவுவதாக.
தேவனின் குமாரரும் குமாரத்திகளுமாகிய நாம், நம் பரலோக வீட்டிற்கு வெகு தொலைவிலுள்ள பூமியை ஒன்றாக பகிர்ந்து கொள்கிறோம். இது நமது பூலோக வாழ்க்கை, நம் உடலைப் பெறுவதற்கும், தீமைக்குப் பதிலாக நன்மையை தேர்ந்தெடுப்பதற்கும், “நன்மையை ஆதாயப்படுத்த அறியும்படியாக அவர்கள் கசப்பை ருசிக்கிறார்கள்” (மோசே 6:55), நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவிலும் அவரது பரிசுத்த பாவநிவர்த்தியிலும் விசுவாசத்தை வளர்ப்பதற்கும் பிதாவின் மகிழ்ச்சியின் திட்டத்தை ஏற்றுக்கொள்வதற்குமான காலம் இது. நம்முடைய பரலோக பிதாவைப் போல ஆவதற்கே நாம் இங்கே இருக்கிறோம்.
நம் அநித்தியத்துக்கு முந்தைய வாழ்க்கையைப் பற்றிய நினைவு இல்லாமல், சில சமயங்களில், நாம் விட்டு வந்த உலகத்திற்காக தனிமையை உணர்கிறோம். நம் பிதா அவருடன் இணைந்திருக்கவும், அவரிடமிருந்து வழிகாட்டுதல், வழிநடத்துதல் மற்றும் ஆறுதல் ஆகியவற்றைப் பெறவும் நமக்கு ஆவிக்குரிய வரத்தை அளித்துள்ளார். இந்த வரத்தை நாம் நன்கு அறிவோம்; அது ஜெபம் என்று அழைக்கப்படுகிறது.
உங்கள் பரலோக பிதாவிடம் ஜெபியுங்கள்.
ஆதாம் மற்றும் ஏவாளுக்கும் அவர்களைப் பின்தொடர்ந்து வந்த அனைவருக்கும், ஒரு தூதன் அறிவுறுத்தியது என்னவென்றால், “நீ மனந்திரும்பி என்றென்றைக்குமாக குமாரனின் நாமத்தில் தேவனை தொழுது கொள்வாயாக” (மோசே 5:8).
இயேசு போதித்ததாவது: “கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்” (மத்தேயு 7:7). “நீயோ ஜெபம்பண்ணும்போது, … அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு” (மத்தேயு 6:6). “நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக”(மத்தேயு 6:9).
இயேசு தம் பிதாவிடம் தொடர்ந்து ஜெபித்தார். “அவர் ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இராமுழுவதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்”(லூக்கா 6:12). “மேலும் … அவர் ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறினார்”(மாற்கு 6:46). “பின்பு கெத்சமனே என்னப்பட்ட இடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: நான் ஜெபம்பண்ணுமளவும் இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொன்னார்” (மாற்கு 14:32). ஆயினும், சிலுவையில் அறையப்பட்டபோது, இயேசு அவரை சிலுவையில் அறைந்த போர்ச்சேவகர்களுக்காக ஜெபித்தார்: “பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” என்றார் (லூக்கா 23:34).
“எப்போதும் ஜெபியுங்கள்” என்று வேதங்கள் நமக்கு ஆலோசனை வழங்குகின்றன.(லூக்கா 21:36; 2 நேபி 32:9; 3 நேபி 18:15,; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 10:5; 19:38; 20:33; 31:12). “உன் எல்லா செயல்களிலும் கர்த்தரிடத்தில் ஆலோசி, அவர் உன்னை நன்மையாக நடத்துவார்” ஆல்மா 37:37). மேலும், நம் பிதா நமக்காகச் செய்யும் அனைத்தையும் உணர்ந்து, “[நம்] முழு ஆத்துமா பெற்றிருக்கக்கூடிய வல்லமையாலே சகல நன்றியையும் துதியையும் செலுத்துகிறோம்” (மோசியா 2:20).
தலைவர் ரசல் எம். நெல்சன் விளக்கினார்: “ஒவ்வொரு புதிய காலைப் பொழுதும் தேவனின் வரம் என்பதை உணர்ந்துகொள்வதில் இருந்து ஆவிக்குரிய சுயமதிப்பு தொடங்குகிறது. … அவர் ஒவ்வொரு நாளும் நம்மைப் பாதுகாத்து, ஒரு கணத்திலிருந்து இன்னொரு கணம்வரை நம்மை ஆதரிக்கிறார் (மோசியா 2:21 பார்க்கவும்).”
நேபி கூறினான், “ஜெபிக்கும்படி மனுஷனுக்குப் போதிக்கும் ஆவியானவருக்கு நீங்கள் செவிகொடுப்பீர்களெனில், நீங்கள் ஜெபிக்கவேண்டுமென்பதைத் தெரிந்துகொள்வீர்கள். ஏனெனில் அசுத்த ஆவி ஜெபிக்கும்படி மனுஷனுக்குப் போதிப்பதில்லை, ஆனால் அவன் ஜெபிக்கக்கூடாதெனப் போதிக்கிறது” (2 Nephi 32:8).
விளக்கம் யவீருவின் குமாரத்தியை கிறிஸ்து எழுப்புதல் , -கிரெக் கே. ஓல்சன்
நமது இரட்சகரின் முன்மாதிரி மற்றும் பல நூற்றாண்டுகளாக தூதர்கள் மற்றும் தீர்க்கதரிசிகளின் ஆலோசனையுடன், நமது ஆசீர்வாதங்களுக்காக நன்றியை தெரிவிக்க தினமும் ஜெபிப்பதையும், ஒரு ஜெபத்தை இருதயத்தில் தொடர்ந்து வைத்திருக்கவேண்டும் என்பதையும் தெளிவாக அறிகிறோம். நம் பிதாவுடன் தொடர்பு கொள்ள வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது.
ஆனால் அதைவிட மகிமையானது, பரலோகத்திலுள்ள நம்முடைய பிதா நம்முடைய ஜெபங்களுக்குப் பதிலளிக்கிறார். இந்த நிலையில்லா உலகில் ஒரு சிந்தனைக்குரிய கேள்வி என்னவென்றால், நம் பிதாவிடமிருந்து வரும் பதில்கள், வழிகாட்டுதல் மற்றும் ஆறுதல் ஆகியவற்றை எவ்வாறு சிறப்பாகப் புரிந்துகொண்டு பெற்றுக்கொள்வது?
நம் பிதா நம்மிடம் பேசுகிறார் என்பதை எனது ஏழு தசாப்தங்களுக்கும் மேலான வாழ்க்கையின் மூலம் நான் அறிவேன். நாம் தனியாக இல்லை. நாம் இரட்சகரைப் பின்பற்ற முற்படுகையில் பரலோக வாசிகள் நம்மைக் கவனித்து, நமக்கு உதவுகிறார்கள்.
நம்முடைய ஜெபங்களுக்குப் பதில்களைப் பெறுவது என்பது, நம்முடைய பரலோக பிதாவின் மீதும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மீதும் நாம் வைத்திருக்கும் விசுவாசத்தில் தொடங்குகிறது. “பயப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு” என்று இயேசு கூறினார் (மாற்கு 5:36). நாம் அவரை நம்புகிறோம், கட்டளைகளைக் கடைப்பிடிக்க நம்மால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம், எல்லாவற்றிலும் அவருடைய கரத்தைத் தேடுகிறோம். “சகல காரியங்களிலும் அவரது ஈடுபாட்டை அறிக்கையிடாதவர்களையும் அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாதவர்களையும் தவிர,…தேவனை மனுஷன் நிந்திக்க எதையும் செய்யமுடியாது” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 59:21).
நம் வாழ்வில் தேவனின் கரம் இருக்கிறது என்பதால், நம் உலகில் இருக்கும் தீய அல்லது பயங்கரமான துயரங்களை அவர் ஏற்படுத்துகிறார் என்று அர்த்தமல்ல. இருப்பினும், உங்கள் கஷ்டம் மற்றும் நியாயமற்ற காலங்களில், அவர் உங்களுக்கு ஆதரவாக நிற்பார், உங்கள் திறன்களை பெலப்படுத்துவார், உங்களுக்கு ஆறுதல் அளிப்பார், மேலும் “அவர் உன் உபத்திரவங்களை, உனது ஆதாயத்திற்கென மாற்றுவார்”, என்பதே அதன் அர்த்தமாகும்.(2 நேபி 2:2).
அவர் குரலைக் கேளுங்கள்
நாம் அவர் மீது விசுவாசம் வைத்து, அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கும்போது, இயல்பாகவே அவருடைய குரலை நன்றாகக் கேட்க கற்றுக்கொள்கிறோம்.
செப்டம்பர் 1993 இல், பொது அதிகாரியாக எனது முதலாம் ஆண்டில், தலைவர் ஜேம்ஸ் ஈ. பாஸ்ட் (1920-2007), அப்போது பன்னிரு அப்போஸ்தலர்களின் குழுமத்தின் உறுப்பினராக இருந்தவர், பிரிகாம் யங் பல்கலைக்கழக ஆராதனையில் கலந்துகொள்ள என்னையும் என் மனைவி கேத்தியையும் அழைத்திருந்தார். 1993 ஆம் ஆண்டு, திறன்பேசிகள், சமூக ஊடகங்கள் மற்றும் இணையம் பரவலாகக் கிடைப்பதற்கு முன்பு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
“ஆவியின் குரல்” என்று தலைப்பிடப்பட்ட அவரது செய்தியில், “உங்கள் தலைமுறையில் நீங்கள் எப்படி வாழ வேண்டும், உங்கள் ஆர்வங்களை எவ்வாறு திருப்திப்படுத்துவது, எப்படி அனைத்தையும் பெறுவது என்று பல குரல்களால் நீங்கள் தாக்கப்படுவீர்கள்” என்று தலைவர் பாஸ்ட் எச்சரித்தார். உங்கள் விரல் நுனியில் ஐநூறு தொலைக்காட்சி அலைவரிசைகள் வரை இருக்கும். அனைத்து வகையான மென்பொருள், ஊடாடும் கணினி இணக்கிகள், தரவுத்தளங்கள் மற்றும் அறிவிப்பு பலகைகள் இருக்கும்; மேசைப்பதிப்பு, செயற்கைக்கோள் வாங்கிகள் மற்றும் தகவல் தொடர்பு பிணையம் ஆகியவை உங்களைத் தகவல்களால் திணறடிக்கும். நீங்கள் செவிசாய்க்கக் கற்றுக்கொள்ள வேண்டிய குரல் ஆவியானவரின் குரல் மட்டுமே.”
தலைவர் பாய்ட் கே. பாக்கர் (1924–2015), பன்னிரு அப்போஸ்தலர்களின் குழுமத்தின் தலைவர், ஜான் பர்ரோஸ் என்ற ஒரு இயற்கை ஆர்வலரின் அனுபவத்தை விவரிக்கும் போது, அவர் கூட்ட நெரிசலில் பூங்காவில் நண்பர்களுடன் நடந்து சென்றபோது உணர்ந்த, ஆவியானவரின் அமைதியான, மெல்லிய குரலைப் பற்றி கற்பித்தார். பின்வருபவை தலைவர் பாக்கரின் வார்த்தைகள்:
“நகர வாழ்க்கையின் இரைச்சல்களைக் கடந்து [திரு. பர்ரோஸ்] ஒரு பறவையின் பாடலைக் கேட்டார்.
“அவர் நின்று கேட்டார்! அவருடன் இருந்தவர்கள் அதைக் கேட்கவில்லை. சுற்றிலும் பார்த்தார். அதை வேறு யாரும் கவனிக்கவில்லை.
“எல்லோரும் மிகவும் அழகான ஒன்றை இழந்து விடுவார்களே என்பது அவரைத் தொந்தரவு செய்தது.
அவர் தனது பாக்கெட்டிலிருந்து ஒரு நாணயத்தை எடுத்து காற்றில் சுண்டி” விட்டார். அது பறவையின் பாடலை விட சத்தமாக இல்லாமல் ஒரு ஒலியுடன் நடைபாதையைத் தாக்கியது. அனைவரும் திரும்பினர்; அவர்களால் அதை கேட்க முடிந்தது!
“நகர போக்குவரத்தின் அனைத்து ஒலிகளிலிருந்தும் பறவையின் பாடலைப் பிரித்தறிவது கடினம்தான். இருந்தாலும் உங்களால் கேட்க முடியும். நீங்கள் அதைக் கேட்க உங்களைப் பயிற்றுவித்தால் அதை நீங்கள் தெளிவாகக் கேட்கலாம்.
தலைவர் பாக்கரின் பரிசுத்த ஆவியின் போதனைகள் 1979 இல் நிகழ்ந்தன, அந்த நேரத்தில் வாழ்க்கை மிகவும் அமைதியாக இருந்தது மற்றும் உலகின் சத்தம் இப்போது இருப்பதை விட மிகவும் அடக்கமாக இருந்தது.
தலைவர் நெல்சன் கற்பித்தார், “நீங்கள் ஆவியானவரின் மெல்லிய சத்தத்தை விட சமூக ஊடகங்களின் ஊட்டங்களுக்கு அதிக கவனம் செலுத்துகிறீர்கள் என்றால், நீங்கள் உங்களை ஆவிக்குரிய ஆபத்தில் ஆழ்த்துகிறீர்கள்.”
தலைவர் ஃபாஸ்ட் கூறினார், “நாம் ஆவியானவரின் சத்தத்திற்கு செவிசாய்க்க வேண்டுமானால், நாமும் நம் காதுகளைத் திறந்து, விசுவாசத்தின் கண்ணை குரலின் திசைக்குத் திருப்பி, பரத்தை நோக்கி உறுதியோடு பார்க்க வேண்டும்.“
ஆவியானவரின் இந்த குரலானது நமது அறிவு மற்றும் உணர்வுகள் இரண்டிற்கும் வருகிறது. “உன்மேல் வரப்போகிறதும், உன் இருதயத்தில் தங்கப்போகிறதுமான பரிசுத்த ஆவியால் உன் மனதிலும் உன் இருதயத்திலும் நான் உனக்குக் கூறுவேன்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 8:2). உங்கள் மனசாட்சிக்கு செவிசாயுங்கள்—வெளிப்பாடு பெரும்பாலான நேரம் அங்குதான் தொடங்குகிறது.
பெப்ருவரி 2024 இல், பிலிப்பைன்ஸின் மார்கினா நகரத்தில் உள்ள பெண்கள் இல்ல சிறுவர்களின் நகர வளாகத்திற்கு மூப்பர் ஆன்டர்சன் சென்றபோது, அவர்கள் தேவனுடைய பிள்ளைகள் என்று இளம் பிள்ளைகளுக்கு கற்பித்தார்: “அவர் உங்களை நேசிக்கிறார். மேலும் நீங்கள் அவரிடம் முறையிடலாம். அவர் உங்கள் ஜெபங்களைக் கேட்பார்.”
விசுவாசமுள்ள இருதயத்தோடு ஜெபியுங்கள்
பதில்களையும் மனப்பதிவுகளையும் கட்டாயப்படுத்த முடியாது. நாம் ஜெபித்துவிட்டு, விசுவாசமுள்ள இருதயத்தோடு காத்திருக்க வேண்டும். சில பதில்கள் இந்த வாழ்க்கையில் வராது, ஆனாலும் நீதிமான்களுக்கு, கர்த்தர் எப்போதும் தம்முடைய சமாதானத்தை அனுப்புவார் (யோவான் 14:27 ஐப் பார்க்கவும்). நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு உதவ ஜெபிக்கும்போது பதில்கள் அடிக்கடி வரும். சில நேரங்களில், “கட்டளையின்மேல் கட்டளையும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும் வரும்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 98:12).
எதிர்பாராத நேரங்களிலும், எதிர்பாராத இடங்களிலும் பரலோகத்தின் குரல் நம்மிடம் வரலாம், ஆனாலும் நம்முடைய பெரும்பாலான குறிப்பிடத்தக்க வாய்ப்புகளை அமைதியான இடங்களிலும் பரிசுத்த ஸ்தலங்களிலும் நாம் காண்கிறோம். எனது அமைதியான அதிகாலை ஜெபங்களிலும் ஆழ்ந்து தியானிக்கும்போதும், நான் அசாதாரண ஆசீர்வாதங்களைக் காண்கிறேன். தினசரி, தனிப்பட்ட விதத்தில், இடைவிடாமல் வேதங்களை வாசிப்பது, சில சமயங்களில் வழக்கமான அதே நேரங்களில், ஆவியானவரின் குரலை மற்ற நேரங்களில் நெருப்பைப் போல நம் இருதயங்களுக்குள் கொண்டுவருகிறது.
சில சமயங்களில், குறிப்பாக நாம் என்ன படிக்கிறோம் என்பதிலிருந்து மனப்பதிவுகள் வரும், மற்ற நேரங்களில், நாம் என்ன தியானிக்கிறோமோ அதிலிருந்து நமது மிகவும் வித்தியாசமான கவலைக்கான பதிலைக் கொண்டுவருகிறது. மூப்பர் ராபர்ட் டி. ஹேல்ஸ் சொன்ன வார்த்தைகளை நினைவில் கொள்ள வேண்டும்: “நாம் தேவனிடம் பேச விரும்பும்போது, நாம் ஜெபிக்கிறோம். அவர் நம்மிடம் பேச வேண்டும் என்று நாம் விரும்பும்போது, நாம் வேதங்களைத் தேடுகிறோம்.”
நம்மைச் சுற்றி உலகின் சத்தம் மற்றும் கவனச்சிதறல்கள் சுழன்றுகொண்டிருக்கும் வேளையில், கர்த்தர் தனது தீர்க்கதரிசியை இன்னும் அதிகமான ஆலயங்களைக் கட்டும்படியாக வழிநடத்தியிருக்கிறார். கர்த்தரின் இந்த பரிசுத்த ஆலயங்களில், நமது சவால்களை வெளியில் விட்டுவிட்டு, நமது ஜெபங்கள் மற்றும் கவலைகளுடன் நுழையும்போது, நித்தியத்தின் சத்தியங்கள் நமக்குக் கற்பிக்கப்படுகின்றன.
ஒரு வருடத்திற்கு முன்பு, தலைவர் நெல்சன் நமக்கு இந்த பிரசித்தமான வாக்குத்தத்தத்தை அளித்தார்: “என் அன்பான சகோதர சகோதரிகளே, இதோ என் வாக்குத்தத்தம். உங்கள் சூழ்நிலைகள் அனுமதிக்கும் அளவுக்குத் தவறாமல் ஆலயத்தில் வழிபடுவதைக் காட்டிலும் அதிகமாக இருப்புக்கோலை உறுதியாகப் பற்றிக்கொள்ள வேறு எதுவும் உங்களுக்கு உதவாது. உலகின் இருள் மூடுபனிகளை நீங்கள் சந்திக்கும் போது எதுவும் அதிகம் உங்களைப் பாதுகாக்காது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மற்றும் அவருடைய பாவநிவர்த்தி பற்றிய உங்கள் சாட்சியத்தை வேறு எதுவும் வலுப்படுத்தாது அல்லது தேவனின் மகத்தான திட்டத்தை அதிகம் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவாது. வலியின் போது எதுவும் உங்கள் ஆவியை அதிகம் அமைதிப்படுத்தாது. எதுவும் பரலோகங்களை அதிகம் திறக்காது. எதுவும்!”
ஒவ்வொரு பொது மாநாடும் கூடுதலான ஏராளமான ஆசீர்வாதங்களைக் கொண்டுவருகிறது. வரும் ஏப்ரல் மாதத்தில், மீண்டும் ஒருமுறை, கர்த்தரின் குரலைக் கேட்க, பொது மாநாட்டில் சந்திப்போம். நாம் ஜெபித்து ஆயத்தமாக பொது மாநாட்டிற்கு வருகிறோம். நம் ஒவ்வொருவருக்கும், அழுத்தும் கவலைகளும் ஆர்வமுள்ள கேள்விகளும் உள்ளன. நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவில் நம்முடைய விசுவாசத்தைப் புதுப்பிக்கவும், சோதனையை எதிர்க்கும் திறனைப் பெலப்படுத்தவும் வருகிறோம். நாம் உன்னதத்திலிருந்து கற்பிக்கப்பட வருகிறோம். பொது மாநாட்டின் அமர்வுகளுக்கு நீங்கள் ஜெபித்து ஆயத்தமாக வரும்போது, உங்கள் கவலைகளுக்கான பதில்களை நீங்கள் உணருவீர்கள், மேலும் “பரலோகத்தின் கரம்” உங்கள் மீது இருப்பதை நீங்கள் அறிவீர்கள் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.
உங்கள் பரலோக பிதா உங்களிடம் பேசுகிறார் என்று நம்புங்கள். அவர் பேசுகிறார்! பரலோக பிதாவிலும் அவருடைய நேச குமாரன் மீதும் நீங்கள் வைத்திருக்கும் விசுவாசம், திரையை விலக்கி பிதாவின் குரலைப் பெற்றுக்கொள்ள உங்களுக்கு உதவுவதாக. அவர் இருக்கிறார், வார்த்தைகளால் சொல்ல இயலாத அளவிற்கு உங்களை நேசிக்கிறார் என்று நான் சாட்சியமளிக்கிறேன்.
© 2025 by Intellectual Reserve, Inc. எல்லா உரிமைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. அ.ஐ.நாட்டில் அச்சிடப்பட்டது. ஆங்கில அங்கீகாரம்: 6/19. மொழிபெயர்ப்பு அங்கீகாரம்: 6/19. Translation of மாதாந்தர லியஹோனா செய்தி, மார்ச் 2025. Tamil. 19605 418