2025
“நான் அவர்களை குணமாக்குவேன்”
பெப்ருவரி 2025


“நான் அவர்களை குணமாக்குவேன்,” லியஹோனா, பெப்ருவரி 2025.

லியஹோனா மாதாந்தர செய்தி, பெப்ருவரி 2025

நான் அவர்களைகுணமாக்குவேன்

மீட்பரின் குணப்படுத்துதலின் ஊழியம், உயிர்த்தெழுதலில் நம் ஒவ்வொருவருக்கும் கிடைக்கப்போகும் நிரந்தர உடல் மற்றும் மன ரீதியான குணப்படுத்துதலின் தெய்வீக முன்னோட்டம் மற்றும் வாக்குத்தத்தமாகும்.

இயேசு ஒரு ஸ்திரீயை ஆறுதல்படுத்தும் வேதாகம காணொளி உருவம்

ஒரு விமானியாக எனது தொழில்சார்ந்த வாழ்க்கையில் நான் செய்த சில தொலைதூர விமான பயணங்கள் எனக்கு இன்னும் தெளிவாக நினைவில் உள்ளன.

அவைகளில் ஒன்றில், நான் ஜெர்மனியில் காலை 11:00 மணிக்கு புறப்பட்டு, அதே நாளில் மதியம் 1:00 மணிக்கு கலிபோர்னியாவைத் தொடுவேன். உள்நாட்டு புறப்பாடு மற்றும் வருகை நேரங்களை ஒப்பிடுகையில், அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் வட அமெரிக்க கண்டத்தின் குறுக்கே ஒரு விமானம் இரண்டு மணிநேரம் மட்டுமே எடுத்ததா என்று தோன்றலாம். போயிங் 747 வேகமாக இருந்தது, ஆனால் அவ்வளவு வேகமாக இல்லை! உண்மையில், 5,600 மைல்கள் (9,000 கிமீ) பயணிக்க, காற்றைப் பொறுத்து சுமார் 11 மணிநேரம் ஆனது.

நாங்கள் மேற்குநோக்கி பறந்ததால், எங்கள் விமான பயணத்தின் போது சூரியன் ஒருபோதும் மறைந்ததில்லை. ஜெர்மனியில் இருந்து கலிபோர்னியா வரை பகல் வெளிச்சத்தை அனுபவித்தோம்.

மேகங்களுக்கு மேலே சூரிய அஸ்தமனம்

இருப்பினும், ஜெர்மனிக்குத் திரும்புவது முற்றிலும் மாறுபட்ட கதையாய் இருந்தது. முன் பிற்பகலில் நாங்கள் புறப்பட்டபோதும், நாங்கள் கிழக்கு நோக்கிப் பறந்தபோது, ​​சூரிய அஸ்தமனம் வழக்கத்தை விட விரைவாக வந்தது, அதை நாங்கள் அறிவதற்கு முன்பே, இரவு எங்களுக்கு வந்து விடும்.

இந்த நீண்டநேர விமானப் பயணங்களின் போது, ​​இந்தப் பூமியின் அழகையும், தேவனின் படைப்பின் ஒழுங்கையும் எண்ணிப் பார்க்கையில், என் ஆத்துமா அடிக்கடி பிரமிப்பினால் நிறைந்துவிடும். கும்மிருட்டில் இரவில் பறக்கும் போது கூட, சூரியன் மீண்டும் உதயமாகும் என்றும், பிரகாசமான ஒளி திரும்பி வந்து, எங்கள் பயணம் முடியுமுன் ஒரு புதிய நாளுக்கான அரவணைப்பையும் வாழ்க்கையையும் கொண்டு வரும் என்பதையும் நான் உறுதியாக அறிந்திருந்தேன். எனது விமான பயணத்தின் சூழ்நிலைகள், சூரியன் மெதுவாக அல்லது விரைவாக மறைவது போல் காட்டியிருக்கலாம், ஆனால் சூரியன் வானில் நிலையானதாகவும், உறுதியாகவும், நம்பகத்தக்கதாகவும் இருப்பதை நான் அறிந்திருந்தேன்.

மேகங்களுக்கு மேலே சந்திரன்

தேவனைப் பற்றி கூட நான் அப்படித்தான் உணர்கிறேன். தேவனின் ஞானம் மற்றும் அவரது படைப்புகள் அனைத்திற்கான நோக்கத்தின் ஆழமாக வேரூன்றியிருப்பதால், நம் பூலோக வாழ்வைப் பற்றி நான் நினைக்கும் போது சந்தோஷம் நிறைந்த நம்பிக்கையையும் நீடித்த சமாதானத்தையும் என்னால் உணர முடிகிறது. நாம் தேவனின் பிள்ளைகள். அவர் நம்மை நேசிக்கிறார். அவர் நம் சூழ்நிலைகளை அறிந்திருக்கிறார். அவர் நமக்கு உதவ ஆயத்தமாயிருக்கிறார். நம்மைச் சுற்றியுள்ள மற்ற விஷயங்கள் நிலையற்றதாகவும் கணிக்க முடியாததாகவும் தோன்றினாலும், இந்த சத்தியங்கள் மாறாது.

நம் சமாதானத்தை அச்சுறுத்தும் இருள், துக்கம் மற்றும் நிச்சயமற்ற தருணங்களை நாம் அனைவரும் அனுபவிக்கிறோம். சத்தியம் மற்றும் ஒளியின் நம்பகமான மற்றும் உண்மையான ஆதாரத்திற்காக நான் எவ்வளவு நன்றியுள்ளவனாக இருக்கிறேன் ( கோட்பாடும் உடன்படிக்கைகளும் 88:6–11 பார்க்கவும்). இயேசு கிறிஸ்துவே உலகத்தின் ஒளியும் ஜீவனுமாயிருக்கிறார். அவராலும் அவரது பாவ நிவாரண பலியினாலும் ,நமக்கு எதிர்காலத்தின் மீது நம்பிக்கையும், நமது பயணத்தின் இருண்ட நாட்களை பிரகாசமாக்க தெய்வீக ஒளியைப் பெற வாய்ப்பும், பாவம் மற்றும் மரணத்தின் மீதான இறுதி ஜெயமும் உள்ளது.

“அவர் உலகத்தை நேசிக்கிறார்”

இயேசு கிறிஸ்துவே பூமியில் நடந்த ஒரே பரிபூரண மனிதர். அவரது பரிபூரண வாழ்க்கையின் காரணமாக, அவர் நீதிக்கு கடன்பட்டிருக்கவில்லை. அவர் நம் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகவும், தேவனுடைய பிள்ளைகள் அனைவருக்கும் கூட்டாகவும், அழியாமை மற்றும் நித்திய வாழ்வுக்கான கதவைத் திறக்கும்பொருட்டு நம்மீது வைத்த அன்பின் காரணமாக,தமது ஜீவனைக் கொடுத்தார்.

சாத்தான் நம்மை எதை நம்பவைத்தாலும், நம்மை மீட்கும் இரட்சகரின் திறனுக்கு அப்பால் நாம் யாரும் இல்லை. மன்னிப்பின் கிருபையிலிருந்து நாம் யாரும் தகுதியற்றவர்கள் ஆக்கப்படவில்லை. நம்மில் எவரும் “அவருடைய அன்பின் கரங்களால் எப்பொழுதும் நித்தியமாய் சூழப்பட்டிருப்பதற்கு அப்பால் இல்லை”.(2 நேபி 1:15).

இயேசு கிறிஸ்துவினுடைய பாவநிவர்த்தியின் சாத்தியப்படுத்தும் மற்றும் மீட்கும் வல்லமையிலிருந்தே எல்லாவற்றிலும் மேலான வரங்கள் வருகிறது. கெத்சமனே மற்றும் கொல்கொதாவின் மேல் இரட்சகர் பாடனுபவித்ததால், எல்லா பெலவீனங்களிலிருந்தும் நம்மை எப்படி இரட்சிப்பது எவ்வாறு உதவுவது என்று அவருக்குத் தெரியும் (ஆல்மா 7:12 ஐப் பார்க்கவும்).

“அவர் உலகத்தின் நன்மைக்கு ஏதுவானவையே அல்லாமல், எந்தக் காரியத்தையும் செய்யார். எல்லா மனிதரையும் தம்மிடம் கொண்டுவர தன் சொந்த ஜீவனைக் கொடுக்குமளவுக்கு அவர் இந்த உலகத்தை நேசித்தார்.” (2 நேபி 26:24).

இயேசு கிறிஸ்துவே நம் பெலன்!

அவர் கரம் நீட்டுகிறார்.

அவர் மறுஸ்தாபிதம் செய்கிறார்.

அவர் விடுவிக்கிறார்,

இரட்சகர் [அனைத்து மனிதகுலத்திற்காகவும் பாவநிவர்த்தி செய்தபோது], அவரைப் பின்தொடர்பவர்கள் அவருடைய குணப்படுத்துதல், பலப்படுத்துதல் மற்றும் மீட்கும் வல்லமையை பெற்றுக்கொள்ளும்பொருட்டு ஒரு வழியைத் திறந்தார் என்று தலைவர் ரசல் எம். நெல்சன் கூறினார்.

அந்த வல்லமையானது, சூரியனைப் போல எப்போதும் இருக்கிறது. அது ஒருபோதும் மங்காது. இரட்சகரின் காலடிகளைப் பின்பற்ற தெரிந்தெடுப்பது , நிழலில் இருந்து வெளியேறி சூரிய ஒளிக்குள் செல்வது போன்றது, அங்கு நாம், தேவனின் ஒளி, சுகம் மற்றும் அன்பின் ஆசீர்வாதங்களைப் பெறலாம். இயேசு கிறிஸ்து மற்றும் அவருடைய தெய்வீக அன்பை நம்பி, நம்மை உயர்த்தவும் பலப்படுத்தவும் நித்தியத்திற்கும் முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை நாம் எடுத்ததற்காக ஒரு நாள், திரும்பிப் பார்த்து, நன்றியுணர்வுடன் நிறைந்திருப்போம் என்பதை நான் அறிவேன்.

“என்னண்டை திரும்புங்கள்”

இரட்சகர் சிலுவையில் அறையப்பட்டதைத் தொடர்ந்து, மூன்று நாட்கள் மிகுந்த காரிருளில் கழித்த மக்களைப் பற்றி மார்மன் புஸ்தகம் கூறுகிறது. அவர்களைச் சுற்றியுள்ள உலக இருளானது, பாவத்தின் காரணமாக நாம் அனைவரும் அனுபவிக்கும் ஆவிக்குரிய இருளையே குறித்தது. அப்போது இருளில் இருந்து தம் ஒளிக்கு அழைக்கும் கிறிஸ்துவின் குரலை மக்கள் கேட்டார்கள்.

“நீங்கள் இப்பொழுதாவது என்னிடத்தில் திரும்பி, உங்கள் பாவங்களிலிருந்து மனந்திரும்பி, நான் உங்களை குணப்படுத்தும்படியாக மனமாறமாட்டீர்களோ? (3 நேபி 9:13).

“நீங்கள் நொறுங்குண்ட இருதயத்தையும், நருங்குண்ட ஆவியையும் எனக்கு பலியாக செலுத்துங்கள்.” (3 நேபி 9:20).

“மனந்திரும்பி இருதயத்தின் முழுநோக்கத்தோடு என்னிடம் திரும்புங்கள்”.(3 நேபி 10:6).

இன்று நாம் இருளில் தொலைந்து போவதைக் காணும்போது இரட்சகர் அதே அழைப்பை நமக்கும் கொடுக்கிறார். ஒவ்வொரு சூரிய உதயமும் ஒரு புதிய நாளின் தொடக்கத்தைக் குறிப்பது போல, ஒவ்வொரு முறையும் நாம் மனந்திரும்பும்போது, ​​நாம் ஒரு புதிய தொடக்கத்தைப் பெறுகிறோம், பிரகாசமான புதிய தொடக்கத்தைப் பெறுகிறோம்.

ஆனால் இது எளிதானது என்று அர்த்தமல்ல. மனந்திரும்புதல் என்பது மாற்றம், மாற்றம் விரைவாக நடக்காது. சந்தோஷமாக இருந்தாலும், மனந்திரும்புதல் “தேவனுக்கேற்ற துக்கத்தை” உண்டாக்குகிறது.(2 கொரிந்தியர் 7:10). நம் தவறுகளை ஒப்புக்கொள்வதும், அறிக்கைசெய்வதும் ,தேவனிடமிருந்தும், நாம் தீங்கு செய்தவர்களிடமிருந்தும் மன்னிப்பு கேட்பதும் இதற்கு அவசியம். எல்லாவற்றிற்கும் மேலாக, “சர்வ வல்ல கர்த்தருடைய ஆவியானவரை” நாம் தேடுவது அவசியமாகிறது, அதனால் நாம் “நம்முடைய இருதயங்களில் … ஒரு பலத்த மாற்றத்தை …அனுபவிப்போம், பொல்லாப்பை இனிச் செய்ய மனமில்லாதவர்களாய், நன்மையையே தொடர்ந்து செய்வோம்.” (மோசியா 5:2).

அந்த வகையான மாற்றம் ஒரு நீண்ட பயணமாகும், ஆனால் நீங்கள் முதல் அடியை எடுத்து வைத்தவுடன், “உங்கள் இரட்சிப்பின் நாள்” தொடங்குகிறது, மேலும் “உடனடியாக பெரிய மீட்பின் திட்டம் உங்களிடம் கொண்டு வரப்படும்”.(ஆல்மா 34:31).

நம்முடைய மனமார்ந்த மனந்திரும்புதலின் மூலம், தேவன் நம் பாவங்களை மன்னிப்பதாகவும் இனி அவற்றை நினைவில் கொள்ளமாட்டார் எனவும் வாக்குத்தத்தம் செய்கிறார். நம்முடைய பாவங்களை மறப்பதில் சிரமப்படும்போது , ​​மன்னிப்பதாக கர்த்தர் கொடுத்த வாக்குத்தத்தத்தில் நம்பிக்கை வைத்து மற்றவர்களையும் நம்மையும் மன்னிக்க கற்றுக்கொள்வோம்.

“நாம் தவறுகள் மற்றும் பாவங்களைச் செய்யும்போது நமது ஆவிகள் சேதமடைகின்றன” என்று தலைவர் பாய்ட் கே. பாக்கர் (1924–2015) கற்பித்தார். “ஆனால் நமது அழிவுக்கேதுவான உடல்களைப் போலல்லாமல், நமது மனந்திரும்பும் செயல்முறை நிறைவாகும்போது , இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியினிமித்தம் எந்த வடுவும் இருப்பதில்லை.”

ஒரு குருடனை கிறிஸ்து குணமாக்குதல் ஓவியம்

குருடனை கிறிஸ்து குணமாக்குதல், கார்ல் ஹெய்ன்ரிச் பிளாக்

“அவர்களை இங்கே கொண்டுவாருங்கள்”

இரட்சகரே தலைமை வைத்தியர். அவரது குணமாக்கும் வல்லமையின் மிக அழகான விளக்கங்களில் ஒன்று மார்மன் புஸ்தகத்தில், பூர்வீக அமெரிக்காவில் அவரது தனிப்பட்ட ஊழிய விவரத்தில் காணப்படுகிறது:

“உங்களிடையே வியாதியஸ்தர் எவரேனும் உண்டா?” அவர் கேட்டார். ”அவர்களை இங்கே கொண்டுவாருங்கள். உங்களிடையே முடவர், குருடர், சப்பாணி, ஊனர், குஷ்டரோகி, சூம்பின உறுப்புடையர், செவிடர், எந்த விதத்திலும் உபத்திரவப்பட்டவர் எவரேனும் உண்டா? அவர்களை இங்கே கொண்டுவாருங்கள் நான் அவர்களை குணப்படுத்துவேன், ஏனெனில் நான் உங்கள்மேல் மனதுருக்கமாயிருக்கிறேன், என் உள்ளம் இரக்கத்தால் நிரம்பியிருக்கிறது. …

“திரளானோர் அனைவரும் ஒரே மனதாய்த் தங்கள் வியாதியஸ்தரோடும் தங்கள் உபத்திரவப்பட்டோருடனும், தங்கள் முடவர்களுடனும், தங்கள் குருடர்களுடனும், தங்கள் ஊமையோருடனும், எந்த விதத்திலும் உபத்திரவப்பட்ட அனைவருடனும் போனார்கள். அவர், அவர்கள் தம்மிடத்தில் அழைத்துவரப்பட்டபோது, அவர்கள் ஒவ்வொருவரையும் சுகப்படுத்தினார்.”(3 நேபி 17:7, 9).

இரட்சகர் “எந்த விதத்திலும் உபத்திரவப்பட்டர்களை” உயிர்த்தெழுதலுக்கு முன்னும் பின்னும், குணப்படுத்திய ஒவ்வொரு தருணமும், அது நம் ஆத்துமாக்களைக் குணப்படுத்துவதற்கான அவரது மகத்தான வல்லமைக்கு சாட்சியமாக இருந்தது. ஒவ்வொரு அற்புத குணப்படுத்துதலும் உயிர்த்தெழுதலில் நம் ஒவ்வொருவருக்கும் கிடைக்கப்போகும் நிரந்தர உடல் மற்றும் மன ரீதியான குணப்படுத்துதலின் ஒரு முன்னோட்டம் மற்றும் வாக்குத்தத்தமாகும். அதுவே “கர்த்தர் முழுமையாக குணப்படுத்தும் நிகழ்வாயிருக்கும்.”

இவ்வாழ்வில் குணமடைய ஏறெடுக்கும் ஜெபங்கள், எப்போதும் நாம் நம்பும் விதத்தில் பதிலளிக்கப்படுவதில்லை என்பது உண்மைதான், ஆனால் அவை ஒருபோதும் புறக்கணிக்கப்படுவதில்லை. இரவின் இருள் எப்பொழுதும் சரியான நேரத்தில் மகிமையான சூரிய உதயத்திற்கு வழிவிடுவது போல, குணமடைவதற்கான நேரமும் வரும்.

தலைவர் நெல்சன் சாட்சியமளித்தபடி: “நம் விசுவாசம் ஒருபோதும் போற்றப்படாமல் இருக்காது. எல்லா ஞானமும் உள்ள பரலோக பிதாவின் கண்ணோட்டம் நம்முடையதை விட மிகவும் பரந்தது என்பதை நான் அறிவேன். நம்முடைய பூலோக பிரச்சனைகள் மற்றும் வலிகளை நாம் அறிந்திருக்கும் அதே வேளையில், நமது நித்திய வளர்ச்சி மற்றும் திறனை அவர் அறிந்திருக்கிறார். அவருடைய சித்தத்தை அறிந்து, பொறுமையோடும் தைரியத்தோடும் அதற்கு நம்மைச் சமர்ப்பிக்க ஜெபித்தால், பரத்திலிருந்து சுகம் அவருடைய சொந்த வழியிலும் நேரத்திலும் கொடுக்கப்படும்.”

சமீபத்தில் என் மனைவி ஹாரியட்டும் நானும் எங்கள் ஜெபங்களில் ஒரு தனிப்பட்ட நம்பிக்கையையும் நாங்கள் நேசிக்கும் சிலரின் சார்பாக மன்றாடுவதையும் சேர்த்தோம். அவர்களின் நோய்களைக் குணப்படுத்த அவர்களின் சுகாதாரக் குழுவுக்கு சிறப்புத் திறன் வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் ஜெபம் செய்தோம். உடனடி குணமாகுதல் அல்லது சுகமாதல் நடைபெறாவிட்டாலும், இரட்சகரின் குணப்படுத்தும் வல்லமை அவர்களுக்கு ஆறுதலையும் அமைதியையும் தரக்கூடும் என்பதற்காக அதை இணைக்க ஏவப்பட்டோம். இரட்சகரின் மீட்கும் வல்லமையின் மூலம் குணமடைவது, நாம் பெறக்கூடிய எந்தவொரு பூமிக்குரிய குணப்படுத்துதலை காட்டிலும் நமக்கு உணர்வுபூர்வமான, ஆவிக்குரிய மற்றும் உடல் ஆரோக்கியத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இயேசு கிறிஸ்துவே இவ்வாழ்விலும் நித்தியத்திற்கும் குணமளிப்பவர்.

என் சகோதர சகோதரிகளே, அன்பான நண்பர்களே, உங்கள் காயங்களைக் குணப்படுத்தவும், உங்களைப் பாவத்திலிருந்து கழுவவும், வரவிருக்கும் சோதனைகளுக்கு உங்களைப் பலப்படுத்தவும், நம்பிக்கை, ஞானம் மற்றும் அவருடைய சமாதானத்தை தந்து ஆசீர்வதிக்கவும் நம் இரட்சகரின் இரக்கம் போதுமானது என்று நான் சாட்சியமளிக்கிறேன். அவருடைய அன்பு, ஒளி மற்றும் சுகம் ஆகியவற்றிலிருந்து நாம் வெகு தொலைவில் இருப்பதாக சிலகாலம் உணர்ந்தாலும், அவருடைய வல்லமை எப்போதும் உள்ளது—அது நிலையானது மற்றும் நம்பத்தக்கது.

இயேசு கிறிஸ்து நமக்காகச் செய்த அனைத்திற்கும் நம்முடைய பிரமிப்பின் உணர்வையும் ஆழ்ந்த நன்றியுணர்வையும் நாம் ஒருபோதும் இழக்கவே கூடாது என்று நான் ஜெபிக்கிறேன். நீங்கள் பரிபூரணமாக நேசிக்கப்படுகிறீர்கள் என்பதை தயவுகூர்ந்து அறிந்து கொள்ளுங்கள், மேலும் நித்திய வாக்குத்தத்தத்தை நினைவில் கொள்ளுங்கள்.

“தேவன் தம்முடைய குமாரன் இயேசு கிறிஸ்துவினால் உண்டான சந்தோஷத்தின் மூலம் உங்கள் சுமைகள் இலகுவாகும்படி அருளுவாராக.” (ஆல்மா 33:23).

குறிப்புகள்

  1. Russell M. Nelson, “The Power of Spiritual Momentum,” Liahona, May 2022, 100.

  2. See Dieter F. Uchtdorf, “You Can Do It Now!,” Liahona, Nov. 2013, 57.

  3. Boyd K. Packer, “The Plan of Happiness,” Liahona, May 2015, 28

  4. Russell M. Nelson, “Jesus Christ—the Master Healer,” Liahona, Nov. 2005, 87.

  5. Russell M. Nelson, “Jesus Christ—the Master Healer,” 86.