2025
மிகுந்த அன்பும் மகிழ்ச்சியுமான நற்செய்தி
ஜனவரி 2025


மிகுந்த அன்பும் மகிழ்ச்சியுமான நற்செய்தி, லியஹோனா, ஜனவரி 2025.

லியஹோனா மாதாந்தர செய்தி, ஜனவரி 2025

மிகுந்த அன்பும் மகிழ்ச்சியுமான நற்செய்தி

மறுஸ்தாபிதத்தின் ஆசீர்வாதங்கள் நமது இருதயங்களை உற்சாகப்படுத்தி, தேவனுடைய மிகுந்த அன்புக்காக நன்றியுணர்வால் நம்மை நிரப்ப வேண்டும்.

சூரிய அஸ்தமனத்தில் மரோனி தூதனின் சிலை

இயேசு கிறிஸ்து ஜீவித்து, இந்த பிற்காலத்தில் அவருடைய சுவிசேஷத்தையும் சபையையும் மீட்டெடுத்தார் என்பதே அனைவருக்கும் நம்பிக்கையையும் சமாதானத்தையும் தரும் எங்களது செய்தி.

“இவைகள் மனுக்குலத்திற்கு எவ்வளவு விவரிக்க முடியாத மகிமையுள்ளவைகள்!“ என்று தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் அறிவித்தார். “உண்மையில் அவை எல்லா மக்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியின் செய்தியாகக் கருதப்படலாம்; மேலும், பூமி முழுவதையும் நிரப்பி, ஒவ்வொருவருடைய காதுகளிலும் ஒலிக்கும்போது அவர்களின் இருதயங்களை மகிழ்ச்சியடையச் செய்யும் நற்செய்தியாகவும் கருதப்படலாம்.

இரட்சகரின் பூலோக ஊழியத்தைத் தொடர்ந்து பல நூற்றாண்டுகளாக, தேவனின் பிள்ளைகள் அவரைத் தேடினார்கள், அதிக ஒளி மற்றும் சத்தியத்திற்காக ஏங்கினார்கள். இப்போது இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் மற்றும் நடந்துகொண்டிருக்கும் மறுஸ்தாபிதம் பற்றிய நற்செய்தி எல்லா மக்களையும் ஆசீர்வதித்து, இயேசு கிறிஸ்து “ராஜாதி ராஜாவாக ஆட்சி செய்ய, கர்த்தாதி கர்த்தாவாக ஆளுகை செய்ய”திரும்பும் நாளுக்காக உலகத்தை ஆயத்தப்படுத்துகிறது. இது பரலோகத்திலிருக்கிற நமது பிதாவுக்கும் நமது இரட்சகருக்கும் நம்மீது இருக்கும் முடிவில்லாத அன்பின் ஆழமான வெளிப்பாடாகும். இந்த உண்மைகளை உலகம் முழுவதற்கும் அறிவிப்பதில் என் வாழ்நாளைக் கழிக்க முடியும் என்பதால் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

சாத்தியமில்லாததும் குறிப்பிடத்தக்கதும்

மரங்கள் நிறைந்த ஒரு தோப்பில் மனித குடும்பத்திற்கு ஒரு புதிய நாள் விடிந்தது, அங்கு பிதாவாகிய தேவனும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவும் தோன்றி எந்த சபையில் சேர வேண்டும் என்று இளம் ஜோசப்பின் ஜெபத்திற்கு பதிலளிக்கும் விதமாக ஜோசப் ஸ்மித்திடம் பேசினர் ( ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:14–20) பார்க்கவும். எந்த சபையிலும் சேர வேண்டாம் என்று இயேசு கிறிஸ்து ஜோசப்பிடம் கூறினார். அவருடைய சுவிசேஷத்தின் முழுமை எதிர்காலத்தில் ஜோசப்புக்கு வெளிப்படுத்தப்படும் என்று அவர் வாக்குறுதி அளித்தார்.

இப்படிப்பட்ட ஒரு முக்கியமான வேலைக்கு ஜோசப் அழைக்கப்பட வாய்ப்பில்லை என்று நிறைய பேருக்குத் தோன்றியது, அவர்கள் சொன்னது சரிதான். அவர் ஒரு அறியப்படாத நகரத்தின் ஒரு சிறிய பண்ணையிலிருந்து வந்த படிக்காத, முக்கியத்துவமற்ற சிறுவன். அவருடைய நாட்களில் இரட்சகரைக் குறித்து சிலர் சொன்னது போல, “நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா?” (யோவான் 1:46), நியூயார்க், பல்மைராவில் படிக்காத 14 வயது சிறுவனிடமிருந்து என்ன நன்மை வரக்கூடும் என்று பலர் ஆச்சரியப்பட்டனர். ஆனால் ஜோசப் மூலமாக—அவர் எவ்வளவு சாத்தியமற்றதாகத் தோன்றினாலும்—பரலோக பிதாவும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் உண்மையிலேயே குறிப்பிடத்தக்கதை நிறைவேற்றுவார்கள். நமது அற்பமும் தாழ்மையுமான வழியில், கர்த்தரின் பணிக்கு அர்த்தமுள்ள வழிகளில் நாமும் பங்களிக்க முடியும் என்ற நம்பிக்கையை இது நமக்குத் தர வேண்டும்.

குறிப்பிட்ட நேரத்தில் கர்த்தர் ஜோசப்பை அழைத்து “பரலோகத்திலிருந்து அவரோடு பேசி, அவருக்குக் கட்டளைகளைக் கொடுத்தார்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 1:17). பரலோக பிதாவின் அன்பான திட்டம் மற்றும் இயேசு கிறிஸ்துவின் மீட்கும் அன்பு மற்றும் அவரது பாவநிவாரண பலியின் வல்லமை ஆகியவற்றைப் பற்றிய நமது புரிதலுக்கு புதிய வெளிச்சத்தைக் கொண்டுவரும் விலைமதிப்பற்ற வெளிப்படுத்தல்களையும் இன்றியமையாத கோட்பாட்டையும் ஜோசப் பெற்றார். குறிப்பிடத்தக்க வகையில், போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் பிற பகுதிகளில் கணிசமான முன்னேற்றங்கள் நடந்த துல்லியமான தருணத்தில் அவருடைய பிள்ளைகளை மேலும் மேலும் ஆசீர்வதிக்கும் பொருட்டு தேவனுடைய ஒளி பிரகாசிக்க உதவும் இந்த நற்செய்தியும் வந்தது.

மரோனி தங்கத் தகடுகளை ஜோசப் ஸ்மித்திடம் கொடுத்தல்

The Angel Moroni Delivering the Plates to Joseph Smith, by C. C. A. Christensen

தேவனுடைய அன்புக்கு வல்லமையான சாட்சி

ஜோசப் ஸ்மித்துக்கு மரோனி தூதனின் தோற்றம் மறுஸ்தாபிதத்திற்கும் தேவனுடைய அன்பின் வல்லமை வாய்ந்த சான்றுக்கும் அவசியமாக இருந்தது. அருகில் புதைக்கப்பட்டுள்ள தங்கத் தகடுகளில் எழுதப்பட்ட ஒரு பதிவைப் பற்றி மரோனி ஜோசப்பிடம் கூறினார் ( ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:33–34) பார்க்க. இறுதியில், அந்த பதிவை மார்மன் புஸ்தகமாக மாற்ற ஜோசப்புக்கு “உன்னதத்திலிருந்து வரும் வல்லமை” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:8) கொடுக்கப்படும், இது வேதாகமத்துடன் நிற்கிறது மற்றும் இயேசு கிறிஸ்துவின் மற்றொரு ஏற்பாடாக இருக்கிறது.

மார்மன் புஸ்தகம் முழுவதிலும், கிறிஸ்துவுக்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, அவருடைய வருகையை அறிந்து, முன்னறிவித்து அதற்காக ஏங்கிய ஜனங்களைப்பற்றி நாம் வாசிக்கிறோம். உயிர்த்தெழுந்த இரட்சகரின் தனிப்பட்ட தோற்றம் மற்றும் நேபியர்கள் மத்தியில் ஊழியம் பற்றிய அசாதாரண விவரத்தையும் நாம் காண்கிறோம், அப்போது அவர் அனைவரையும் தன்னிடம் வரவும், அவரது விலாவில் உள்ள அடையாளத்தையும், அவரது கைகளிலும் கால்களிலும் உள்ள ஆணிகளின் தடங்களையும் உணரவும் அழைத்தார் .( 3 நேபி 11:14–15)பார்க்கவும். வியாதியஸ்தர், சப்பாணி, குருடர்—“எந்த விதத்திலும் உபத்திரவப்பட்டவர் அனைவரையும்”—அவர் சுகப்படுத்தினார், பின்னர் சிறு பிள்ளைகளை ஆசீர்வதித்து அவர்களுக்காக ஜெபித்தார் ( 3 நேபி 17:7–9, 21)பார்க்கவும். இந்த பரிசுத்த பதிவிலிருந்து இரட்சகரின் அன்பு மற்றும் இரக்கத்தைப்பற்றி நாம் அதிகம் கற்றுக்கொள்கிறோம்.

மார்மன் புஸ்தகம் “இயேசுவே கிறிஸ்து” என சாட்சி பகர்கிறது. மார்மன் புஸ்தகத்தின் உறுதிப்பாடுகள் பரலோகத்திலுள்ள நமது பிதாவும் நமது இரட்சகரும் நாம் கற்பனை செய்ய முடியாத எதையும் விட நம்மை நேசிக்கிறார்கள் என்பதை மீண்டும் மீண்டும் நமக்கு நினைவூட்டுகிறது.

ஆசாரியத்துவம் மற்றும் சபையின் ஆசீர்வாதங்கள்

மறுஸ்தாபிதம் ஜோசப் ஸ்மித்துக்கு மற்ற பரலோக தூதர்களின் தோற்றத்துடன் தொடர்ந்தது. “உயிர்த்தெழுப்பப்பட்ட யோவான் ஸ்நானன் பாவமன்னிப்புக்கென்று மூழ்குவதன் மூலம் ஞானஸ்நானம் கொடுக்கும் அதிகாரத்தை மறுஸ்தாபிதம் செய்தார். முதல் பன்னிரு அப்போஸ்தலர்களில் மூவரான பேதுரு, யாக்கோபு, யோவான், அப்போஸ்தலத்துவத்தையும், ஆசாரியத்துவ அதிகாரத்தின் திறவுகோல்களையும் மறுஸ்தாபிதம் செய்தார்கள். மரணத்தைக் கடந்த நித்திய உறவுகளில் குடும்பங்களை என்றென்றும் ஒன்றாக இணைக்க, அதிகாரத்தை மறுஸ்தாபிதம் செய்த எலியா உள்ளிட்ட பிறரும் வந்தனர்.”

ஏப்ரல் 6, 1830 அன்று, இயேசு கிறிஸ்து தீர்க்கதரிசி ஜோசப் மூலம் புதிய ஏற்பாடு காலங்களில் அவர் ஒழுங்கமைத்த சபையின் மாதிரியான ஒரு சபையை நிறுவினார் ( விசுவாசப் பிரமாணங்கள் 1:6பார்க்கவும்), “அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகளென்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல், அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்; (எபேசியர் 2:20). பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட ஆசாரியத்துவ வல்லமையின் ஆசீர்வாதங்களை அதைப் பெற தங்களை ஆயத்தப்படுத்தும் தேவனின் பிள்ளைகள் அனைவருக்கும் கிடைக்கச் செய்கிறது.

தலைவர் ரசல் எம்.நெல்சன் நமக்குப் போதித்தபடி, பரலோக பிதாவிடமும் நமது இரட்சகரிடமும் நாம் திரும்பும்போது அன்றாட மனந்திரும்புதலில் நாம் மகிழ்ச்சியைக் காணலாம். தாழ்வாக உணரும் எவரும், குறைவுற்றவர்களாக அல்லது ஒதுக்கப் பட்டவர்களாக உணரும் அனைவரும்: கிறிஸ்துவிடமும் அவரது சபையிடமும் வர அழைக்கப்படுகிறார்கள். சபை என்பது பரிபூரணமானவர்களுக்கான மடம் அல்ல, மாறாக நோயாளிகளுக்கான மருத்துவமனை. பன்னிரு அப்போஸ்தலர் குழுமத்தின் மூப்பர் டியட்டர் எப். உக்டர்ப், “நாம் சபைக்கு வருவது நமது பிரச்சனைகளை மறைக்க அல்ல, ஆனால் அவற்றை குணமாக்க” என்று நமக்கு நினைவூட்டுகிறார்.

சபையில் நாம் நம்மை வெளிப்புறமாக திருப்புவதற்கும், மற்றவர்களுக்கு அன்புடன் சேவை செய்வதற்கும், கிறிஸ்துவின் நற்குணத்தின் மிகுதியுடன் நமது சொந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் கிடைக்கும் வாய்ப்புகளில் மகிழ்ச்சியைக் காண்கிறோம். நாம் “கிறிஸ்துவின் சபையின் ஜனங்களோடே எண்ணப்படலாம்” மற்றும் “தேவனுடைய நல்வசனத்தினால் நினைவுகூரப்பட்டு போஷிக்கப்படலாம்” (மரோனி 6:4). என்ன ஒரு மகத்தான ஆசீர்வாதம்!

மிகுந்த மகிழ்ச்சிக்கான ஒரு காரணம்

தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் ஒருமுறை அறிவித்தார், “இப்பொழுது, நாம் பெற்ற சுவிசேஷத்தில் நாம் எதைக் கேட்கிறோம்? சந்தோஷத்தின் குரலை! வானத்திலிருந்து இரக்கத்தின் குரலை, பூமியிலிருந்து சத்தியத்தின் குரலை; மரித்தவர்களுக்காக நற்செய்தியின் குரலை; ஜீவிப்பவர்களுக்கும் மரித்தவர்களுக்கும் சந்தோஷத்தின் குரலை; மகா சந்தோஷத்தின் நற்செய்திகளை.(கோட்பாடும் உடன்படிக்கைகளும் 128:19).

இந்த நற்செய்தி வந்திருக்கிறது, ஏனென்றால் பரலோக பிதாவும் அவரது நேச குமாரனாகிய இயேசு கிறிஸ்துவும், நம்மை நேசிக்கிறார்கள், அவர்கள் வாழும் வகையான வாழ்க்கையை நாம் என்றென்றும் கொண்டிருக்கும்படி, வேறு எதையும்விட அதிகமாக நம்மை அவர்களின் பிரசன்னத்திற்குள் மீண்டும் வரவேற்பதையே விரும்புகிறார்கள். நம் அனைவருக்கும் இதை ஒரு மகத்தான சாத்தியமாக்குவதற்கு தேவையான அனைத்தையும் அவர்கள் செய்திருக்கிறார்கள் என்பதை மறுஸ்தாபிதம் வெளிப்படுத்துகிறது நமது நித்திய பயணத்தில், நாம் சோதனைகளையும் கஷ்டங்களையும் அனுபவிப்போம், ஆனால் “இம்மையிலும் மறுமையிலும் [நாம்] சந்தோஷமாயிருக்கவே [நாம்] இருக்கிறோம்” (2நேபி 2:25) தீர்க்கதரிசி ஜோசப் இதை மற்றவர்களை விட நன்றாக அறிந்திருந்தார்.

ஜோசப் அடிக்கடி எதிர்ப்பையும் துன்புறுத்தலையும் எதிர்கொண்டார், ஆனாலும் அவர் தனது “சொந்த உற்சாகமான மனோபாவத்தை” வைத்திருந்தார் (ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:28). அவர் மகிழ்ச்சியாகவும், உறுதியாகவும், மீண்டெழுபவராகவும் இருந்தார், அவருக்கு வழங்கப்பட்ட அசாதாரண வேலையை அவர் செய்து முடித்தார். தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்தை விசுவாசித்து, ஆதரித்து, பின்பற்றி, சபையைக் கட்டுவதற்கு தங்களை அர்ப்பணித்த அனைத்து ஆரம்பகால பரிசுத்தவான்களுக்கும் நான் அஞ்சலி செலுத்துகிறேன். அவர்களுக்கு நாம் மரியைதை மற்றும் நன்றிக் கடன்பட்டிருக்கிறோம்.

சபையின் ஆரம்ப நாட்கள் மேடுபள்ளமாக இருந்தது, இன்றும் மேடுபள்ளமாக இருக்கலாம். ஆனால் மறுஸ்தாபிதம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த சபையின் தலைவராக இயேசு கிறிஸ்து இருப்பதால், ஜீவிக்கிற தீர்க்கதரிசிகள் தொடர்ந்து நம்மை வழிநடத்துவார்கள். கர்த்தருடனான நித்திய உடன்படிக்கைகளின் ஆசீர்வாதங்கள் நம்மை அவருடனும் திரையின் இருபுறமும் உள்ள நமது அன்புக்குரியவர்களுடனும் பிணைக்கும்படி கர்த்தரின் வீடுகள் தொடர்ந்து கட்டப்படும் ( மத்தேயு 16:19பார்க்கவும்). அவரது ஆடுகளை மேய்க்கவும் அவரது சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்ளவும் இரட்சகரின் கட்டளையை நாம் பின்பற்றும்போது தேவன் மற்றும் இயேசு கிறிஸ்துவின் அன்பு உலகம் முழுவதற்கும் விரிவடையும். மறுஸ்தாபிதத்தின் சத்தியங்கள் ஜோசப்பின் நாட்களில் கற்பனையும் செய்து பார்த்திருக்க முடியாத வழிகளிலும் இடங்களுக்கும் செல்வதை நாம் காண்போம்.

தீர்க்கதரிசி ஜோசப் செய்ததைப் போல, இந்த விலைமதிப்பற்ற சத்தியங்களை நாம் தழுவி வாழும்போது நாம் பெலனையும் மிகுந்த மகிழ்ச்சியையும் காணலாம் ஜோசப் தன் நாளில் பரிசுத்தவான்களுக்கு விடுத்த அழைப்பு இன்றும் நம்முடன் தொடர்கிறது: “ஒரு மகத்தான காரணத்திற்காக நாம் போகக்கூடாதே? முன்னோக்கிச் செல்ல, பின்னோக்கியல்ல. துணிவுகொள்ளுங்கள்… ,ஜெயத்தை நோத்தி! உங்கள் இருதயங்கள் களிகூர்வதாக, மிகுந்த சந்தோஷப்படுவீர்களாக .”(கோட்பாடும் உடன்படிக்கைகளும் 128:22).

மறுஸ்தாபிதம் கொண்டுவரும் அன்பு மற்றும் மகிழ்ச்சியின் நற்செய்தி நம் வாழ்க்கையை ஆசீர்வதித்து வழிநடத்தட்டும் - இப்போதும் எப்போதும்.

குறிப்புகள்

  1. Teachings of Presidents of the Church: Joseph Smith (2007), 152.

  2. ஜீவிக்கும் கிறிஸ்து: அப்போஸ்தலர்களின் சாட்சியம்,” சுவிசேஷ நூலகம்.

  3. Saints: The Story of the Church of Jesus Christ in the Latter Days, vol. 1, The Standard of Truth, 1815–1846 (2018), 16 பார்க்கவும்.

  4. மார்மன் புஸ்தகத்தின் தலைப்புப் பக்கம்

  5. The Restoration of the Fulness of the Gospel of Jesus Christ: A Bicentennial Proclamation to the World,” Gospel Library.

  6. See Russell M. Nelson, “The Power of Spiritual Momentum,” Liahona, May 2022, 98.

  7. Dieter F. Uchtdorf, “On Being Genuine,” Liahona, May 2015, 83.