“இயேசு கிறிஸ்துவே ‘ஜீவனுள்ள’, ‘நன்மையான,’ ‘மேலும் சிறப்பான நம்பிக்கையின் ஆதாரம்,’”லியஹோனா, டிசம். 2024.
லியஹோனா மாதாந்திர செய்தி, டிசம்பர் 2024
இயேசு கிறிஸ்துவே “ஜீவனுள்ள,” “நன்மையான,” “மேலும் சிறப்பான நம்பிக்கையின்” ஆதாரம்.
பெத்லகேமில் குழந்தை பிறந்ததைக் கொண்டாடும் விசேஷமான காலத்தில், இயேசு கிறிஸ்து நம் இரட்சகராகவும் மீட்பராகவும் உலகிற்கு வந்தார் என்பதை எப்போதும் நினைவில் கொள்வோம்.
கிறிஸ்து பிறப்பு,-ஷார்லோட் ஆண்ட்ரஸ்
அப்போஸ்தலனாகிய பேதுரு மற்றும் மார்மன் புஸ்தகக தீர்க்கதரிசிகளான யாக்கோபு மற்றும் மரோனி ஆகியோர் ஆவியின் கொடையான கிறிஸ்துவில் உள்ள நம்பிக்கையை அறிவுறுத்தும் வகையில் ஒரேமாதிரியான வழிகளில் வலியுறுத்துகின்றனர்.
உதாரணமாக ,பேதுரு சொன்னதாவது,“நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக; அவர், மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே,(ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெனிப்பித்தார்.” (1 பேதுரு 1:3; முக்கியத்துவம் சேர்க்கப்பட்டது ). “நம்பிக்கை” என்பதை விவரிக்க, “ஜீவனுள்ள” என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதைக் கவனியுங்கள்.
யாக்கோபு உரைத்ததாவது,“ஆதலால், பிரியமான சகோதரரே, அவரின் ஒரேபேறான குமாரனாகிய கிறிஸ்துவினுடைய பாவநிவர்த்தியின் மூலம் அவரில் ஒப்புரவாகுங்கள். அப்பொழுது நீங்கள் கிறிஸ்துவிலே இருக்கிற உயிர்த்தெழுதலின் வல்லமையின்படியே உயிர்த்தெழுதலைப் பெறலாம். நீங்கள் விசுவாசத்தைப் பெற்றிருப்பதால், மாம்சத்திலே தன்னையே அவர் வெளிப்படுத்துவதற்கு முன்னமே அவரில் இருக்கிற மகிமையின்நன்மையான நம்பிக்கையைப் பெற்று, தேவனுக்குக் கிறிஸ்துவின் முதற்-கனிகளாக அர்ப்பணிக்கப்படுவீர்களாக.”(யாக்கோபு 4:11; முக்கியத்துவம் சேர்க்கப்பட்டது ). “நம்பிக்கை” என்பதை விவரிக்க, “நன்மை” என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதைக் கவனியுங்கள்.
மேலும் மரோனி கூறினார் , “மனுஷனுக்கு மிக அதிகமான நம்பிக்கை உண்டாயிருக்கும் பொருட்டு, என் பிதாவினுடைய வாசஸ்தலங்களுக்குள்ளே மனுஷனுக்கான ஒரு வீட்டை ஆயத்தப்படுத்தினேன் என்று நீர் சொன்னதை நினைவுகூருகிறேன்; ஆதலால் மனுஷன் நம்ப வேண்டும்; இல்லாவிடில் அவன் நீர் ஆயத்தம்பண்ணின இடத்தில் சுதந்திரத்தைப் பெற முடியாது.” (ஏத்தேர்-12:32; முக்கியத்துவம் சேர்க்கப்பட்டது ). “நம்பிக்கை” என்பதை விவரிக்க, “மேலும் சிறப்பான” என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதைக் கவனியுங்கள்.
கிறிஸ்துவில் நம்பிக்கை என்பது என்ன?
ஆவியின் கொடையான கிறிஸ்துவில் உள்ள நம்பிக்கை , “பரிசுத்த மேசியாவின் நற்கிரியைகள், இரக்கம் மற்றும் கிருபை” (2 நேபி 2:8) மூலம் நித்திய வாழ்வின் மகிழ்ச்சியான எதிர்பார்ப்பு மற்றும் நீதியின் வாக்குறுதியளிக்கப்பட்ட ஆசீர்வாதங்களுக்கான வலுவான விருப்பமாகும். இந்த வசனங்களில் உள்ள “ஜீவனுள்ள,” “நன்மையான,” “மேலும் சிறப்பான”என்ற பெயரடைகள், இயேசு கிறிஸ்துவிலுள்ள விசுவாசத்தின் மூலம் உயிர்த்தெழுதல் நித்திய வாழ்வின் எப்போதும் விரிவடையும் மற்றும் துடிப்பான உத்தரவாதத்தை பரிந்துரைக்கின்றன.
தீர்க்கதரிசி மார்மன் விளக்கினான்:
“எனக்குப் பிரியமான சகோதரரே, மறுபடியும் நான் உங்களிடத்தில் நம்பிக்கையைக் குறித்து பேசுகிறேன். “நீங்கள் நம்பிக்கை இல்லாமல் விசுவாசத்தைப் பெறுவதெப்படி?
“நீங்கள் எதை நம்புவீர்கள்? இதோ கிறிஸ்துவின் பாவநிவர்த்தி மற்றும் நித்திய ஜீவனுக்கேதுவாய் எழும்பும்படியான அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையின் மூலம், நீங்கள் நம்பிக்கையைப் பெற்றிருப்பீர்கள், என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். வாக்குத்தத்தத்தின்படியே அவரில் உள்ள உங்களின் விசுவாசத்தினிமித்தம் ஆகும்.
“ஆதலால் ஒரு மனுஷனுக்கு விசுவாசமிருந்தால் அவன் நம்பிக்கை உடையவனாய் இருக்க வேண்டும். ஏனெனில் விசுவாசமில்லாமல் எந்த நம்பிக்கையும் இருக்க முடியாது” (மரோனி 7:40–42).
பிதாவின் மகிழ்ச்சியின் திட்டம்
நித்திய பிதாவாகிய தேவன் ஜீவிக்கிறார் என்ற ஞானத்திலிருந்தே, ஜீவனுள்ளதும்,நன்மையானதும் மற்றும் மேலும் சிறப்பானதுமான கிறிஸ்துவின் நம்பிக்கை தொடங்குகிறது. அவர் நம்முடைய பிதா , நாம் அவருடைய ஆவியின் பிள்ளைகள். நாம் உண்மையாகவே தேவனின் ஆவிக்குமாரர்களும் குமாரத்திகளாகவும் இருக்கிறோம், மேலும் அவரிடமிருந்து தெய்வீக குணாதிசயங்களைப் பெற்றுள்ளோம்.
பிதாவே மகிழ்ச்சியின் திட்டத்தின் சிருஷ்டிகராயிருக்கிறார்.( ஆபிரகாம் 3:22–28ஐப் பார்க்கவும்). தேவனின் ஆவிக்குமாரர்கள் மற்றும் குமாரத்திகள் என்ற முறையில், “அவருடைய பிள்ளைகள் மாமிச சரீரத்தைப் பெற்று, பூமிக்குரிய அனுபவத்தைப் பெற்று பூரணத்துவத்தை நோக்கி முன்னேறி, முடிவில் தங்கள் உன்னத முடிவான நித்திய வாழ்வின் வாரிசுகளாக உணரக்கூடிய அவருடைய திட்டத்தை ஏற்றுக்கொண்டோம்.” வேதங்களில், நாம் கற்றுக்கொள்கிறோம்: “பிதாவுக்கு மனிதனைப் போலவே மாமிசமும் எலும்புகளும் உண்டு; அவ்வண்ணமே குமாரனுக்கும்.” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 130:22). எனவே, நமது உன்னதமான முடிவை நோக்கி முன்னேறும் செயல்பாட்டில் மாமிச உடல்களைப் பெறுவது அவசியமானதாகும்.
நாம் இரட்டை மனிதர்கள். நமது ஆவிகள், நமது நித்திய பங்கானது, ஆசைகள் மற்றும் பசிக்கு உட்பட்ட உலக ஜீவியத்துக்கு ஏதுவான மாமிச உடல்களை கொண்டுள்ளன. பரலோக பிதாவின் மகிழ்ச்சியின் திட்டம், தம் பிள்ளைகளை வழிநடத்தவும், நீடித்த மகிழ்ச்சியை அவர்கள் அனுபவிக்க உதவவும், உயிர்த்தெழுந்த மேன்மையடைந்த சரீரத்துடன் அவருடைய வீட்டுக்கு பாதுகாப்பாக திரும்ப கொணடுவருவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
குழந்தையாகிய கிறிஸ்து, ஷார்லோட் ஆண்ட்ரஸ்
பிதாவின் திட்டத்தில் இயேசு கிறிஸ்துவின் மீட்பின் பங்கு
இயேசு கிறிஸ்து நித்திய பிதாவின் ஒரே பேறான குமாரன். அவருடைய பிதாவின் சித்தத்தை செய்யவே அவர் உலகத்திற்கு வந்தார். (3 நேபி 27:13ஐப் பார்க்கவும்). இயேசு கிறிஸ்து மனுக்குலத்தின் இரட்சிப்புக்காக எல்லாவற்றிலும் அவருடைய தனிப்பட்ட பிரதிநிதியாக இருக்க பிதாவினால் அபிஷேகம் செய்யப்பட்டவர். அவர் மரணம் மற்றும் பாவம் இரண்டையும் வென்றதால், அவர் நம்முடைய இரட்சகரும் மீட்பருமானவர்.
மேசியாவின் இரட்சிப்பின் கிரியையைப் பற்றி ஆல்மா கிதியோன் மக்களுக்கு தீர்க்கதரிசனம் கூறினான்:
“அவர் ஜனங்களுடைய வேதனைகளையும், நோய்களையும் தம் மேல் ஏற்றுக்கொள்வார் என்ற வார்த்தை நிறைவேறும்படியாய் அவர் போய் சகலவித துன்பங்களையும், உபத்திரவங்களையும், சோதனைகளையும் அனுபவிப்பார்.
“தம்முடைய ஜனத்தைக் கட்டியிருக்கிற மரணக்கட்டுக்களை அவிழ்க்கும்பொருட்டு அவர் மரணத்தை தம்மீது ஏற்றுக்கொள்வார்; தம் ஜனத்தினுடைய பெலவீனங்களுக்குத் தக்கதாய், அவர்களுக்கு மாம்சத்தின் பிரகாரமாய், ஒத்தாசை புரிவதெப்படி என்று தாம் அறிந்துகொள்ளும்படிக்கும் மாம்சத்தின்படி தாம் உருக்கமான இரக்கத்தினால் நிறைக்கப்படும்படிக்கும், அவர்களுடைய பெலவீனங்களைத் தம்மேல் ஏற்றுக்கொள்வார்.”
“ஆவியானவர் சகலவற்றையும் அறிகிறார், இருப்பினும் தேவ குமாரன் தம் ஜனத்தினுடைய பாவங்களை தம்மேல் ஏற்றுக்கொள்ளும்படிக்கும், தமது விடுதலையாக்கும் வல்லமையால் அவர்களுடைய மீறுதல்களை நீக்கும்படிக்கும், மாம்சத்தின் பிரகாரமாய் பாடனுபவிக்கிறார்.”(ஆல்மா 7:11–13)
சுவிசேஷத்தின் முதல் கொள்கை, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மீதான விசுவாசமாகும். உண்மையான விசுவாசம் இரட்சகரிலும் இரட்சகர் மீதும் கவனம் செலுத்தவும்,அவர்மீது நம்பிக்கை வைத்து, மரணத்திலிருந்தும், பாவத்திலிருந்தும் காப்பாற்றவும், நம்மைச் சுத்திகரிப்பதற்கும், நம்முடைய வலிமைக்கு அப்பாற்பட்ட வல்லமையுடன் நம்மை ஆசீர்வதிப்பதற்கும் அவருடைய வல்லமையில் முழு நம்பிக்கை வைக்க உதவுகிறது.
மார்மன் சாட்சியளித்தான்,“இயேசு கிறிஸ்துவினால் வந்த மனுஷனுடைய மீட்பினிமித்தம், அவர்கள் கர்த்தருடைய சமுகத்தினுள் மறுபடியும் கொண்டுவரப்படுகிறார்கள்; ஆம், இதினிமித்தமே சகல மனுஷரும் மீட்கப்படுகிறார்கள். ஏனெனில் கிறிஸ்துவின் மரணம் உயிர்த்தெழுதலைக் கொண்டுவருகிறது. அது நித்திய நித்திரையிலிருந்து மீட்பைக் கொண்டு வருகிறது. எக்காளம் தொனிக்கும்போது அந்த நித்திரையிலிருந்து சகல மனுஷரும் தேவ வல்லமையினால் விழித்துக்கொள்வார்கள்; பெரியவர்களும் சிறியவர்களும் வந்து, உலகப்பிரகார மரணமாகிய இந்த மரணத்தின் நித்திய கட்டிலிருந்து மீட்கப்பட்டு, அவிழ்க்கப்பட்டோராய் அவருடைய நியாயவிசாரணைக் கூண்டுக்கு முன்பாக சகலமானோரும் நிற்பார்கள். (மார்மன் 9:13).
மரணத்தின் கட்டுகளை அறுத்தவர் இந்த இரட்சகரே என்று நான் சாட்சியளிக்கிறேன். அவர் உயிர்த்தெழுந்தார், அவர் ஜீவிக்கிறார், மேலும் இயேசு கிறிஸ்துவே ஜீவனுள்ள,நன்மையான, மேலும் சிறப்பான நம்பிக்கையின் ஆதாரம்.
ஆத்துமாவுக்கு ஓர் நங்கூரம்
“ஆகவே, தேவனில் விசுவாசிக்கிறவன் எவனும், தேவனுடைய வலது பாரிசத்தில் ஆம், ஒரு மேன்மையான உலகத்தை நிச்சயமாய் நம்பியிருப்பான் அந்த நம்பிக்கையோ விசுவாசத்தினால் வந்து மனுஷ ஆத்துமாக்களுக்கு ஒரு நங்கூரம் ஆகிறது,. அது அவர்களை உறுதியுள்ளவர்களாயும், அசைவில்லாதவர்களாயும், நற்கிரியைகளில் எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருக்கப்பண்ணி, தேவனை மகிமைப்படுத்தும்படியாக அவர்களை நடத்திச் செல்லுகிறது.” (ஏத்தேர்-12:4; முக்கியத்துவம் சேர்க்கப்பட்டது).
பெத்லகேமில் குழந்தை பிறந்ததைக் கொண்டாடும் விசேஷமான காலத்தில், இயேசு கிறிஸ்து நம் இரட்சகராகவும் மீட்பராகவும் உலகிற்கு வந்தார் என்பதை எப்போதும் நினைவில் கொள்வோம். ஜீவன், ஒளி, புதுப்பித்தல், அன்பு, சமாதானம் , முன்னோக்கு, மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கை ஆகிய விலைமதிப்பற்ற ஆவிக்குரிய கொடைகளை அவர் நமக்கு வழங்குகிறார்.
பண்டைய மற்றும் தற்கால தீர்க்கதரிசிகளின் பாவநிவர்த்தி மற்றும் நேரடியான உயிர்த்தெழுதல் பற்றிய போதனைகள் மற்றும் சாட்சியங்களைப் படிப்பதன் மூலம், ஆவிக்குரிய கொடையான இரட்சகரின் மீதுள்ள நம்பிக்கையை சரியான முறையில் தேட நான் உங்களை அழைக்கிறேன். நீங்கள் அவ்வாறு செய்யும்போது, மீட்பரின் தெய்வீக வல்லமையைப் பற்றிய உங்கள் சாட்சி பலப்படும் என்றும், அவருக்கான உங்கள் மனமாற்றம் ஆழமடையும் என்றும், அவரைப் பற்றிய ஒரு பராக்கிரமமான சாட்சியாக நிற்க உங்கள் விருப்பமும் உறுதியும் அதிகரிக்கும். நீங்கள் உங்கள் ஆத்துமாவிற்கு ஒரு நங்கூரத்துடன் ஜீவனுள்ள,நன்மையான மேலும் சிறப்பான நம்பிக்கையுடனும் ஆசீர்வதிக்கப்படுவீர்கள் என்று நான் உறுதியளிக்கிறேன்.
இயேசு கிறிஸ்து ஜீவிக்கும் தேவனுடைய குமாரன் என்று காலங்காலமாக அவரைப் பற்றி சாட்சியமளிக்கும் அப்போஸ்தலர்களுடன் நான் மகிழ்ச்சியுடன் என் சாட்சியை கூறுகிறேன். அவர் மகிமைப்படுத்தப்பட்ட, உண்மையான மாம்சமும் எலும்பும் கொண்ட பரிபூரண சரீரமுடைய நம் உயிர்த்தெழுந்த மீட்பர். மீட்பு மற்றும் தேவனுடன் ஒப்புரவாகுதலின் மூலமாக, எல்லா மனித குலத்திற்கும் கர்த்தர் சாத்தியமாக்கியதால், “கிறிஸ்துவில் அனைவரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்” என்ற ஆவிக்குரிய உறுதியையும், ஜீவனுள்ள , நன்மையான, மேலும் சிறப்பான நம்பிக்கையையும் நாம் பெறலாம்.(1 கொரிந்தியர் -15:22).
© 2024 by Intellectual Reserve, Inc. எல்லா உரிமைகளும் பாதுகாக்கப்பட்டுள்ளன. அ.ஐ.நாட்டில் அச்சிடப்பட்டது. ஆங்கில அங்கீகாரம்: 6/19. மொழிபெயர்ப்பு அங்கீகாரம்: 6/19. மாதாந்திர லியஹோனா செய்தி, டிசம்பர் 2024. மொழிபெயர்ப்பு. Tamil. 19296 418