2023
இயேசு கிறிஸ்து சபையின் அமைப்பு
அக்டோபர் 2023


“இயேசு கிறிஸ்து சபையின் அமைப்பு,”லியஹோனா,அக். 2023.

லியஹோனா மாதாந்தர செய்தி, அக்டோபர் 2023.

இயேசு கிறிஸ்து சபையின் அமைப்பு

இயேசு கிறிஸ்துவின் சித்திரம்

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து -டெல் பார்சன்

இயேசு கிறிஸ்து பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் தலைவராக இருக்கிறார். அவர் புதிய ஏற்பாட்டு காலத்தில் செய்தது போல் இன்றும் சபையை வழிநடத்த தீர்க்கதரிசிகளுக்கும் அப்போஸ்தலர்களுக்கும் உணர்த்துகிறார். அவர்களுக்கு மற்ற சபை தலைவர்கள் உதவுகிறார்கள்.

பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை இரட்சகரின் சபை. இது “அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகளென்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டதாயிருக்கிறது; அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்”(எபேசியர் 2:20). அவர் அஸ்திபாரத்தின் மிக முக்கியமான பகுதியாக இருக்கிறார் என்பதே இதன் பொருள். அவர் தலைவர்களாகத் தேர்ந்தெடுத்த தீர்க்கதரிசிகள் மற்றும் அப்போஸ்தலர்களின் மூலம் சபையை வழிநடத்துகிறார்.

பிரதான தலைமை

பிரதான தலைமை

சபையின் தலைவர் இன்று பூமியில் கர்த்தரின் தீர்க்கதரிசி. மூத்த அப்போஸ்தலராக முழு சபையையும் வழிநடத்த வெளிப்பாட்டைப் பெறும் பூமியில் உள்ள ஒரே நபர் தீர்க்கதரிசி. தனக்கு ஆலோசகர்களாக பணியாற்ற எந்த இரண்டு அப்போஸ்தலர்களை அழைக்க வேண்டும் என்பதை அறிய தேவன் அவருக்கு உணர்த்துகிறார். அவர்கள் பிரதான தலைமை ஆகிறார்கள். அவர்கள் மூவரும் ஞானதிருஷ்டிக்காரர்கள், வெளிப்படுத்துபவர்கள், மற்றும் தீர்க்கதரிசிகள்.

பன்னிரு அப்போஸ்தலர் குழுமம்

பன்னிரு அப்போஸ்தலர்களின் குழுமத்தின் உறுப்பினர்களும் தீர்க்கதரிசிகள், ஞானதிருஷ்டிக்காரர்கள், மற்றும் வெளிப்படுத்துபவர்கள். அவர்கள் இயேசு கிறிஸ்துவின் விசேஷித்த சாட்சிகளாக அழைக்கப்படுகிறார்கள். கிறிஸ்துவைப் பற்றி போதிக்கவும் சாட்சியமளிக்கவும் அவர்கள் உலகம் முழுவதும் பயணம் செய்கிறார்கள். (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 107:23, 33 பார்க்கவும்.)

எழுபதின்மர் குழுமம்

எழுபதின்மரும் இயேசு கிறிஸ்துவின் சாட்சிகளாக இருக்க அழைக்கப்படுகிறார்கள் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 107:25 பார்க்கவும்). அவர்கள் உலகம் முழுவதும் சபையைக் கட்டவும், பன்னிரு அப்போஸ்தலர் குழுமத்திற்கு உதவியாக சுவிசேஷத்தைப் போதிக்கவும் உதவுகிறார்கள்.

தலைவர்கள் ஒன்றாக ஆலோசனை செய்தல்

புகைப்படம் — மச்சிகோ ஹோரி

உள்ளூர் தலைவர்கள்

உங்கள் பிணைய அல்லது சேகர தலைமை, ஆயர் அல்லது கிளைத் தலைமை, மூப்பர்கள் குழுமம் மற்றும் ஒத்தாசை சங்கத் தலைமைப் பொறுப்புகளும் கர்த்தரால் அழைக்கப்படுகின்றன. அவர்கள் உங்களுக்கு சுவிசேஷத்தைப் போதிக்கவும் அதின்படி வாழவும் உதவுவார்கள். இந்த அழைப்புகளில் சிலவற்றைப் பற்றி மார்ச் 2022 சுவிசேஷ அடிப்படைகள் “சபை அழைப்புகளில் சேவை செய்தல்” கட்டுரையிலிருந்து அறிந்து கொள்ளலாம்.