சுயசார்பு நம்மைப் பலப்படுத்துகிறது, லியஹோனா,ஆகஸ்டு 2023
லியஹோனா மாதாந்தர செய்தி, ஆகஸ்டு 2023
சுயசார்பு நம்மைப் பலப்படுத்துகிறது
சுயசார்புடன் இருப்பதென்பது நம்முடைய மற்றும் நமது குடும்பத்தின் தேவைகளை நாம் கவனித்துக்கொள்ள முடியும் என்பதாகும். நாம் சுயசார்புடன் இருக்கும்போது, கர்த்தருக்கு சேவை செய்யவும், மற்றவர்களைக் கவனித்துக் கொள்ளவும் முடியும். ஆனால் சுயசார்பு என்பது நமது சவால்களை நாம் தனியாக எதிர்கொள்ள வேண்டும் என்று அர்த்தமல்ல. நமக்குத் தேவைப்படும்போது நண்பர்கள், குடும்பத்தினர், தொகுதி அல்லது கிளை உறுப்பினர்கள் மற்றும் நிபுணர்களிடம் உதவி கேட்கலாம்.
சுய-சார்பு கொள்கைகள்
சுயசார்பானவராக ஆக கல்வி, கீழ்ப்படிதல் மற்றும் கடின உழைப்பு தேவை. நம்மைக் கவனித்துக் கொள்ள நம்மால் முடிந்த அனைத்தையும் செய்யலாம், தேவைப்படும்போது மற்றவர்களிடம் உதவி கேட்கலாம். எவ்வாறாயினும், உண்மையிலேயே சுயசார்புடன் இருக்க, நாம் இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைக்க கற்றுக்கொள்ள வேண்டும். பின்பு, நமக்கு உதவி செய்ய நாம் உழைக்கும்போது, அவர் நம்மைப் பலப்படுத்துவார்.
ஆவிக்குரிய சுயசார்பு
இயேசு கிறிஸ்துவில் சாட்சியை வலுப்படுத்த முயற்சிப்பதின் மூலம் நமது ஆவிக்குரிய சுயசார்பை உருவாக்க முடியும். நாம் ஜெபிக்கும்போதும், வேதங்களைப் படிக்கும்போதும், சபைக்குச் செல்லும்போதும், கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறபோதும், கிறிஸ்துவோடு நெருங்கிச் செல்லும் பிற காரியங்களிலும் இதைச் செய்கிறோம். நம் வாழ்க்கை கடினமாக இருந்தாலும், அவர் நமக்கு உதவ தயாராக இருக்கிறார் என்பதை அறிந்துகொள்வது, வலுவாக இருக்க நம்பிக்கையைத் தரும்.
இம்மைக்குரிய சுயசார்பு
இம்மைக்குரிய சுயசார்பு நம்முடைய மற்றும் நமது குடும்பத்தின் சரீர தேவைகளை கவனித்துக்கொள்வதை உள்ளடக்கியது. இதில் உணவு, வீடு, ஆரோக்கியம் மற்றும் பிற தேவைகளும் அடங்கும். சரியான கல்வியைப் பெறுதல், கற்றுக்கொள்ளுதல் அல்லது தேவையான திறன்களை வளர்த்துக்கொள்ளுதல், கடினமாக உழைத்தல், நமது நேரத்தை ஞானமாகப் பயன்படுத்துதல் மற்றும் நமது பணத்தை திறம்பட நிர்வகிப்பதன் மூலம் இதைச் செய்கிறோம்.
உணர்வுபூர்வ சுயசார்பு
உணர்வுபூர்வ சுயசார்பென்பது தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் உணர்வுபூர்வமான சவால்களை எதிர்கொள்ளும் திறன் ஆகும். நம் அனைவருக்கும் சவால்கள் மற்றும் பின்னடைவுகள் உள்ளன. சுவிசேஷத்திற்கு நன்றி. சோதனைகளுக்கு நாம் எவ்வாறு பதிலளிக்கலாம் என்பதை தேர்வு செய்வது என்பது நமக்குத் தெரியும். கர்த்தரின் மீது விசுவாசத்துடன் பதிலளிப்பது, துயரங்களை அதிக நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் திறனை அதிகரிக்கிறது.
கல்வி
நாம் எப்போதும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். இந்த வாழ்க்கை மற்றும் வரக்கூடிய வாழ்க்கை முழுவதும் நம் மனங்களை பயிற்றுவித்து, நம் திறமைகளை மேம்படுத்த வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். நாம் எவ்வளவு அதிகமாகக் கற்றுக்கொள்கிறோமோ, அவ்வளவு அதிகமாக நமக்கும், நம் குடும்பத்திற்கும், தேவைப்படுபவர்களுக்கும் நன்மைக்கேதுவான சிறந்த தாக்கத்தை ஏற்படுத்த மற்றும் வழங்க முடியும்.
சுயசார்பின் ஆசீர்வாதங்கள்
நமது சுயசார்பை மேம்படுத்தும்போது, அதிகப்படியான நம்பிக்கை மற்றும் சமாதானத்துடன் ஆசீர்வதிக்கப்படுவோம் என்று தீர்க்கதரிசிகள் போதித்துள்ளனர். நம் குடும்பங்களுக்கும், தேவைப்படும் பிறருக்கும் நம்மால் உதவ முடியும். மேலும் அதிக வாய்ப்புகள் மற்றும் தொடர்ந்து முன்னேறும் திறனுடன் நாம் ஆசீர்வதிக்கப்படுவோம்.
சபை ஆதாரங்கள்
உங்கள் பிணையங்கள் சுயசார்பு குழுக்களை நடத்தலாம். இக்குழுக்கள் சுயசார்பு, உங்கள் பணத்தை நிர்வகித்தல் அல்லது சிறந்த வேலையைக் கண்டறிதல் போன்ற திறன்களைக் கற்பிக்க முடியும். நீங்கள் Gospel Library செயலியில் தொடர்புடைய வளங்களைக் காணலாம். “புத்தகங்கள் மற்றும் பாடங்கள்” மற்றும் “சுய-சார்பு” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
© 2023 by Intellectual Reserve, Inc. All rights reserved. அ.ஐ.நாட்டில் அச்சிடப்பட்டது. ஆங்கில அங்கீகாரம்: 6/19. மொழிபெயர்ப்பு அங்கீகாரம்: 6/19. Monthly Liahona Message, April 2023. மொழிபெயர்ப்பு. Language. 19046 418