இளைஞரின் பெலனுக்காக மாதாந்தர செய்தி, ஜனவரி 2025
கிறிஸ்துவை நோக்கிப் பாருங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 6:36
2025 இளைஞருக்கான கருப்பொருள் சந்தேகத்திற்குப் பதிலாக நம்பிக்கையையும், பயத்திற்குப் பதிலாக விசுவாசத்தையும் தேர்வு செய்ய உதவும்.
பதினேழு வயதாயிருந்த கெய்லி சியர்லீடிங் குழுவில் இருந்தாள்,விபத்தின் விளைவாக மூளையில் பயங்கரமான காயம் ஏற்பட்டதுவரை. குணமடைந்து வந்த நாட்களில் அவளால் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை, அவள் தனிமையாகவும் ஒதுக்கப்பட்டவளாகவும் உணரத் தொடங்கினாள். அவள் உணர்ச்சிவசப்பட்டவளாய் போராடினாள் மேலும் உதவியை எங்கு தேடுவது என்று அவளுக்குத் தெரியவில்லை. ஊழியக்காரர்களுக்குச் செவி கொடுக்குமாறு நண்பர் ஒருவர் ஆலோசனை தந்தார். இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியைப்பற்றி அவர்கள் அவளுக்குப் போதித்தார்கள். கிறிஸ்துவைப் பற்றி அதிகம் கற்றுக்கொள்வது அவளுக்கு நம்பிக்கையைக் கொடுத்தது, தேவன் தாமே அவளை தேடி வருவதைப் போல அவள் உணர்ந்தாள்.
கெய்லி தன் அம்மாவிடம், “தேவன் என்னை நேசிக்கிறார் என்று நான் ஒருபோதும் உணர்ந்ததில்லை. ஆனால் இப்போது அவர் என்னை நேசிக்கிறார் என்பதை நான் அறிவேன்.என்று கூறினாள்.
அவளது அம்மா,மிஷல், கொஞ்சம் ஆச்சரியப்பட்டார். பல்வேறு கேள்விகள், சந்தேகங்கள் மற்றும் கவலைகள் காரணமாக கெய்லிக்கு ஏழு வயதாக இருந்தபோது மிஷல் அவரது கணவர் ப்ராக் இருவரும் பிற்கால பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையை விட்டு வெளியேறியிருந்தனர். பல கூட்டங்களும் கட்டளைகளும் இல்லாமல் தங்கள் மகள் மகிழ்ச்சியாக இருப்பாள் என்று அவர்கள் கருதினர். தங்களின் இந்த முடிவு கெய்லியை தேவனுடனான நெருங்கிய தொடர்பிலிருந்து தடுக்கும் என்று அவர்கள் ஒருபோதும் நினைத்ததில்லை. மிஷலும் ப்ராக்கும் கெய்லியின் மாற்றத்தைக் கண்டபோது, அவர்கள் தேவனுடன் நெருக்கமாக உணர்ந்து நீண்ட காலமாகிவிட்டதை உணர்ந்தனர், மேலும் அவர்கள் மீண்டும் அவ்வாறே உணர விரும்பினர்.
அவர்கள் தங்கள் ஆயரை சந்தித்தனர், விரைவில் அவளது சகோதரன் பிரேடன் உட்பட கெய்லியின் குடும்பம் சபைக்குத் திரும்பியது. தேவனுடன் நெருக்கமாக உணர்ந்து, அவருடன் மீண்டும் இணைவது—குறிப்பாக ஜெபத்தின் மூலம்—அவர்களின் விசுவாசத்தை மீட்டெடுத்தது. சபைக்குத் திரும்புவது அவர்களின் எல்லா கேள்விகளையும் கவலைகளையும் தீர்க்கவில்லை, ஆனால் தேவனுடன் வலுவான தனிப்பட்ட தொடர்பைக் கொண்டிருப்பது அவர்களின் அவநம்பிக்கையை விட முக்கியமானது என்பதை அவர்கள் உணர்ந்தார்கள்.
ஒரு நண்பர்—உங்களைப் போன்ற ஒரு இளைஞன்—கெய்லியை கிறிஸ்துவை நோக்கிப் பார்க்க அழைத்தபோது இவை அனைத்தும் தொடங்கின. அவள் அதைச் செய்தாள்!
இயேசு கிறிஸ்து கூறியிருக்கிறார்,“ஒவ்வொரு எண்ணத்திலும் என்னை நோக்கிப்பார்; சந்தேகப்படாதே, பயப்படாதே” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 6:36). 2025 இளைஞருக்கான கருப்பொருளின் பின்னால் உள்ள உத்வேகம் இதுதான். சந்தேகத்திற்குப் பதிலாக நம்பிக்கையையும், பயத்திற்குப் பதிலாக விசுவாசத்தையும் நீங்கள் எவ்வாறு தேர்வு செய்யலாம் என்பதைப் பகிர்ந்து கொள்ள எங்களை அனுமதியுங்கள்.
இடமிருந்து வலம்: சகோதரி ரூனியா, தலைவர் ஃப்ரீமன், சகோதரி ஸ்பானஸ்
தமரா டபிள்யூ. ரூனியா
நான் போராடும்போது, இயேசு கிறிஸ்துவை நீட்டிய கரங்களுடன் கற்பனை செய்வது எனக்கு எப்போதும் உதவுகிறது. நான் அவரை நோக்கி பார்க்கும்போது, “நான் இயேசுவோடு நடப்பேன்” என்ற பாடலின் வார்த்தைகள் எனக்கு நினைவுக்கு வருகின்றன: “நான் விழுந்தாலும் அவர் என்னை விட்டு விலகமாட்டார்.”
எமிலி பெல் ஃப்ரீமன்
இந்த கருப்பொருள் வசனத்தை நான் படிக்கும்போது, கலிலேயா கடலில் பேதுரு நினைவுக்கு வருகிறார். புயலில் கவனம் செலுத்துவது அவரது பயத்தையும் சந்தேகத்தையும் அதிகரித்தது, இதனால் அவர் புயல் அலைகளில் மூழ்கினார். ஆனால் இரட்சகரில் கவனம் செலுத்தியது அவர் முன்பு ஒருபோதும் செய்யாத ஒன்றை சாதிக்க அவருக்கு உதவியது: அவர் தண்ணீரின் மேல் நடந்தார்! இது குறிப்பிடத்தக்கது,மெய்யாகவே. அவரை நோக்கிப் பார்க்கும்போது நீங்கள் என்ன சாதிக்கலாம்?
ஆண்ட்ரியா முனியோஸ் ஸ்பன்னாஸ்
நான் பயமாக உணர ஆரம்பிக்கும் போது, நான் எங்கிருந்தாலும் அல்லது எந்த சூழ்நிலையில் இருந்தாலும், பரலோக பிதாவுடனும் இயேசு கிறிஸ்துவுடனும் உள்ள எனது உறவை கருத்துடன் நினைத்துப் பார்க்கிறேன் நான் என் மனதில் பல முறை திரும்பத் திரும்பச் சொல்கிறேன்: நான் தேவனுடைய குமாரத்தி நான் நன்றாக உணரத் தொடங்கும் வரை இதைத் தொடர்ந்து செய்கிறேன். அது எப்போதும் பயனுள்ளது!
இடமிருந்து வலம்: சகோதரர் வில்காக்ஸ், தலைவர் லண்ட், சகோதரர் நெல்சன்
ப்ராட்லி ஆர். வில்காக்ஸ்
உங்களிடம் யார் அதிகம் அக்கறைகொண்டுள்ளார்கள் மற்றும் நேசிக்கிறார்கள் என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். உங்கள் பெற்றோரும் சபைத் தலைவர்களுமா? சமூக ஊடகங்களில் நபர்களா? அவர்களுக்கு நீங்கள் வெறும் ஒரு எண்ணாகக் கூட இருக்கலாம். பரலோக பிதாவையும் கிறிஸ்துவையும் நோக்கிப் பாருங்கள். அவர்கள் உண்மையான அக்கறை கொண்டுள்ளனர்.
ஸ்டீபன் ஜெ. லண்ட்
ஆரோனிய ஆசாரியத்துவ குழுமம் மற்றும் இளம் பெண்களுக்கான கருப்பொருள்களை நீங்கள் படிக்கும்போது நீங்கள் தேவனின் நேசமான குமாரன் அல்லது குமாரத்தி என்பதை உங்களுக்கு அது நினைவூட்டுகின்றது என்பதை நினைவில் கொள்ளுங்கள். நம்முடைய பிதா உங்களுக்காக ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார் என்று விசுவாசமாயிருங்கள். கிறிஸ்துவை நோக்கிப் பார்ப்பது என்பது அவருடைய பாவநிவர்த்தி அந்த திட்டத்தின் மையத்தில் இருப்பதைக் காண்பதாகும்.
மைக்கேல் டி. நெல்சன்
வேதங்களை வாசிப்பது கிறிஸ்துவை நோக்கிப் பார்ப்பதாகும்! இயேசுவின் அற்புதங்கள் மற்றும் போதனைகள் நமக்கு நினைவூட்டப்படும்போது சந்தேகங்களும் பயங்களும் இயல்பாகவே மறைந்துவிடும். அவருடைய வார்த்தைகளை நம்மால் எப்போதும் அணுக முடிவதால் நாம் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். நம் வாழ்வில் நாம் அனுபவிக்கும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் அவை பொருந்தும்.
© 2025 by Intellectual Reserve, Inc. எல்லா உரிமைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. அ.ஐ.நாட்டில் அச்சிடப்பட்டது. ஆங்கில அங்கீகாரம்: 6/19. மொழிபெயர்ப்பு அங்கீகாரம்: 6/19. இளைஞரின் பெலனுக்காக மாதாந்தர செய்தி, ஜனவரி 2025மொழிபெயர்ப்பு. Tamil. 19615 418