2019
ஊழியம் செய்தலைப்பற்றி கிறிஸ்துமஸ் கதை நமக்கு என்ன போதிக்கிறது
டிசம்பர் 2019


ஊழியம் செய்தலின் கொள்கைகள், டிசம்பர் 2019

ஊழியம் செய்தலைப்பற்றி கிறிஸ்துமஸ் கதை நமக்கு என்ன போதிக்கிறது

“இது ஆண்டின் அருமையான பருவம். கிறிஸ்துமஸ் காலம் விரைவிலேயே இங்கிருக்கும் என்ற ஒரு பாடலை பாடவும் ஒரு குழந்தையாக அவர் பூமிக்கு வந்த இயேசுவின் பிறப்பின் கதையைக் கூறவும்” (“The Nativity Song,” Children’s Songbook, 52).

ministering

வால்ட்டர் ரெனேவின் இதோ தேவ ஆட்டுக்குட்டியிலிருந்து விவரம்

ஆடுகள், மேய்ப்பர்கள், தொழுவங்கள் மற்றும் நட்சத்திரங்கள் திடீரென ஒரு புதிய அர்த்தம் பெற்ற கிறிஸ்துமஸ் காலம் ஒரு அற்புதமானது. மனித வரலாற்றின் மிக முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான இயேசு கிறிஸ்துவின் பிறப்பை திரும்பக் கூறுவதில் அவைகள் முக்கிய பாத்திரங்களாயின. அநேக குடும்பங்கள் தங்கள் வீடுகளில் இயேசுவின் பிறப்பை ஒரு காட்சியாக வைக்கிறார்கள். மற்றவர்கள் அவருடைய பிறப்பின் கதையை படிப்பதை அல்லது அலங்கார ஊர்வலத்தில் கலந்துகொள்வதை கருத்தில் கொள்கிறார்கள். கிறிஸ்துவினுடைய எல்லாக் கதைகளையும் போலவே அவருடைய பிறப்பின் கதையும், ஊழியம் செய்வதைப்பற்றிய பாடங்களுடனும், உலகத்திற்கு ஒளியூட்ட அவருடைய ஒளியைப் பகிர்ந்துகொள்ளுதலைப்பற்றியும் நிறைந்திருக்கின்றன. “கிறிஸ்துமஸ் கதை ஒரு அன்பின் கதை”, என பிரதான தலைமையின் இரண்டாவது ஆலோசகரான தலைவர் ஹென்றி பி. ஐரிங் சொன்னார்

“… அவர் யாராயிருந்தார், அவர் யாராயிருக்கிறார் என்பதை கிறிஸ்து பிறப்பின் கதைகளில் நாம் பார்க்கலாம். வழியில் நம் சுமையை அது இலகுவாக்குகிறது. அது நம்மை மறக்கச்செய்து மற்றவர்களின் சுமையை இலகுவாக்க நம்மை நடத்துகிறது.”1

“சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தது” (லூக்கா 2:7)

இரட்சகருக்கு இடம் கொடுக்க சத்திரக்காரன் தவறிவிட்டான், ஆனால் நாம் அதே தவறைச் செய்யவேண்டியதில்லை! நமது உணவு மேஜைகளில், நமது வீடுகளில், நமது மரபுகளில் நமது சகோதர சகோதரிகளுக்கு இடமளிப்பதில் நமது இருதயங்களில் இரட்சகருக்காக நம்மால் இடமளிக்க முடியும். பிற மக்களைச் சேர்த்துக்கொள்ளுவதால் அநேக குடும்ப மரபுகள் இனிமையாக்கப்படலாம், அதிக நினைவுகூறப்படத்தக்கதாகலாம். கிறிஸ்துமஸை அவர்களோடு கொண்டாட ஒருவரை அழைக்கும் மரபை, டயானாவும் அவளுடைய குடும்பத்தினரும் கொண்டிருந்தனர். யாரை அவர்கள் அழைக்க விரும்புகிறார்களென அவர்கள் ஒவ்வொரு டிசம்பர் மாதமும் கலந்துரையாடி தீர்மானிக்கிறார்கள்.2 உங்கள் குடும்பமும் இதே மாதிரியான மரபை ஆரம்பிக்கலாம். விரும்பமான கிறிஸ்துமஸ் பாடல்களை ஒன்றுசேர்ந்து பாடுவதற்கு நீங்கள் ஊழியம் செய்கிற ஒருவர் உங்கள் குடும்பத்தோடு சேருவதற்கு ஒருவேளை விரும்பலாம். அந்த பகுதியில் குடும்பமில்லாத ஒருவரை உங்களுடைய கிறிஸ்துமஸ் விருந்தில் கலந்துகொள்ள அழைக்கலாம்.

சேர்த்துக்கொள்ளும் இரட்சகரின் எடுத்துக்காட்டைப் பின்பற்றுவதைவிட அவரைக் கொண்டாட சிறந்த வழி எதுவாயிருக்கும்? “அனைவரும் தம்மிடம் வரும்படியாகவும், தன் நன்மையைப் புசிக்கும்படியாகவும் அழைக்கிறார். தம்மிடம் வரும் ஒருவரையும், வெள்ளையனாகிலும், கருப்பனாகிலும் அடிமையாகிலும், சுதந்தரவாளியாகிலும், ஆணாகிலும், பெண்ணாகிலும் அவர் தடைபண்ணுவதில்லை. அவர் பிற ஜாதியானையும், நினைவுகூருகிறார். யூதனாகிலும், புறஜாதியானாகிலும் அனைவரும் தேவனுக்கு சமமானவர்களே” (2நேபி 26:33) என்பதை நினைவுகூருங்கள். இடமளியுங்கள், சேர்த்துக்கொள்ளுதலை உருவாக்குங்கள்.

“அப்பொழுது அந்த நாட்டிலே, மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள்” (லூக்கா 2:8)

குழந்தை இரட்சகரை வணங்குவதில் முதன்மையாயிருந்தவர்களுக்கு மத்தியில் மேய்ப்பர்களும் இருப்பார்கள் என்பது பொருத்தமானதாகத் தோன்றுகிறது. இயேசு கிறிஸ்துவை “இஸ்ரவேலின் மேய்ப்பராகவும்” (சங்கீதம் 80:1) “பூமி முழுவதற்கும் ஒரே மேய்ப்பராகவும்” (1நேபி13:41) பூர்வகால தீர்க்கதரிசிகள் குறிப்பிட்டார்கள்”. கிறிஸ்துவே சொன்னார், “நானே நல்ல மேய்ப்பன், என் ஆடுகளை நான் அறிந்திருக்கிறேன்” (யோவான் 10:14). நமது ஆடுகளை அறிந்து வைப்பதுவும் அவைகளைக் கண்காணிப்பதுவும் இரட்சகர் செய்கிறதைப்போல மேய்ப்பதுவும் ஊழியம் செய்வதும் ஒரு முக்கிய பகுதியாகும்.

ஒளிரும் விளக்குகள் மற்றும் அழகிய அலங்காரங்களுடன் கிறிஸ்துமஸ் சமயத்தில் அநேக காரியங்களைப் பார்க்கவேண்டியதிருக்கிறது. ஆனால் நாம் ஊழியம் செய்கிறவர்களிடத்து நமது கவனத்தைத் திருப்பி, நமது சொந்த மந்தையைக் கண்காணிக்கும்போது, ஒருவேளை இந்த காலத்தின் மிகப்பெரிய அழகு காணப்படலாம். ஒருவருக்கு பிடித்தமான விருந்தைக் குறித்துக்கொள்வதும் அல்லது ஒருவருடைய விடுமுறைத் திட்டங்களைப்பற்றிக் கேட்டறிவதுவும் கண்காணிப்பாகும். வெளிப்படையானதும் மிக வெளிப்படையாய் இல்லாததுமான மற்றவர்களின் தேவைகளை நாம் பார்க்கும்போதும், பூர்த்தி செய்யும்போதும் நாம் கண்காணிக்கிறோம்.

செரிலுடைய கணவர் மைக்கை அவள் திடீரென இழந்தபோது அவள் சிதைந்துபோனாள். அவரில்லாத அவளுடைய முதல் கிறிஸ்துமஸ் நெருங்கியபோது தனிமை அதிகரித்தது. அதிர்ஷ்டவசமாக அவளுக்கு ஊழியம் செய்யும் சகோதரி ஷானா அங்கிருந்தாள். அநேக விடுமுறைப் பயணங்களில் ஷானாவும் அவளுடைய கணவர் ஜிம்மும் அவளை அழைத்தனர். செரிலுடைய மேல் கோட்டு கிழிந்திருந்ததை அவர்கள் கவனித்து, அதற்கு ஏதாவது செயய்வேண்டுமென தீர்மானித்தார்கள். கிறிஸ்துமஸூக்கு சில தினங்களுக்கு முன்பு ஒரு அழகான புதிய மேல் கோட்டை செரிலுக்கு கிறிஸ்துமஸ் பரிசாக ஷானாவும் ஜிம்மும் கொண்டு வந்தார்கள். செரிலின் சரீரத் தேவை ஒரு இதமான மேல் கோட் என அவர்கள் அறிந்திருந்தார்கள், ஆனால் ஆறுதல் மற்றும் தோழமை அவளுடைய உணர்வுபூர்வத் தேவை எனவும் அவர்கள் அறிந்திருந்தார்கள். அவர்களால் முடிந்தளவுக்கு அந்த தேவைகளைப் பூர்த்தி செய்ய முன்வந்து, நாமும்கூட நமது மந்தைகளை எவ்வாறு கண்காணிப்பதென்பதற்கு ஒரு அழகான எடுத்துக்காட்டை முன் வைத்தார்கள்.3

மேய்ப்பர்கள் ஒருவரையொருவர் நோக்கி நாம் பெத்லகேம் ஊருக்குப் போவோம் என்றார்கள்” (லூக்கா 2:15)

“இப்போது நாம் போவோம்” என்பது ஒரு உற்சாகமான அழைப்பு! மலை ஏறிப் போவதற்கு அவர்களுடைய நண்பர்கள் அதிகக் களைப்பாயிருந்தார்கள் என மேய்ப்பர்கள் கருதவில்லை. அவர்கள் அமைதியாக பெத்லகேமை நோக்கிச் செல்லவில்லை. அவர்கள் மகிழ்ச்சியோடு ஒருவரையொருவர் பார்த்துச் சொன்னார்கள் “இப்போது நாம் போவோம்!”

குழந்தை இரட்சகரைப் பார்க்க வாருங்கள் என நமது நண்பர்களை நாம் அழைக்க முடியாவிட்டாலும், நம்மோடு சேவை செய்வதனால் கிறிஸ்துமஸ் உற்சாகத்தை (அல்லது கிறிஸ்துவின் ஆவியை) உணர அவர்களை நாம் அழைக்கலாம். “நம்மைச் சுற்றியிருப்பவர்களை தாராளமாக அணுகி நம்மையே கொடுப்பது கிறிஸ்துமஸ் உற்சாகத்தை அதிகரிக்க வழியாகும்” என முந்தைய இளம் பெண்கள் பொதுத் தலைவர் போனி எல். ஆஸ்கர்சன் சொன்னார்.4 ஒரு மெழுகுவர்த்தியை நீங்கள் ஏந்தியிருப்பதாக கற்பனை செய்யுங்கள். உங்கள் மெழுகுவர்த்தியிலிருந்து வரும் ஒளியை நிச்சயமாக மற்றவர்கள் கண்டு பயன்பெறுவார்கள், ஆனால் அவர்களுடைய மெழுகுவர்த்திக்கு ஒளியேற்ற உங்கள் மெழுகுவர்த்தியை நீங்கள் பயன்படுத்தி அவர்களே ஒளியேற்ற அவர்களை அனுமதித்தால் அவர்கள் உணருகிற வெப்பத்தை கற்பனை செய்யுங்கள்.

அவரைப் பின்பற்றுகிறவர்கள் ஜீவ ஒளியைப் பெற்றிருப்பார்கள் என இயேசுவே போதித்தார் (யோவான் 8:12 பார்க்கவும்). நாம் அவரைப் பின்பற்றி வாக்களிக்கப்பட்ட ஒளியை அனுபவித்தல் அவர் செய்ததைப்போல சேவை செய்வதின் ஒரு வழி. ஆகவே உங்களோடு சேவை செய்ய மற்றவர்களை அழைப்பதால் ஒளியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! நீங்களும் நீங்கள் ஊழியம் செய்கிறவர்களும் எவ்வாறு ஒன்றுசேர்ந்து சேவை செய்ய முடியும்? நீங்கள் ஒன்று சேர்ந்து உங்களுக்கு விருப்பமான உணவை தயாரிக்கலாம் அல்லது ஒரு சிறிய பரிசு அல்லது ஒரு வாழ்த்து மடலுடன் ஒருவரை வியப்படைய வைக்கலாம். கிறிஸ்துவின் சேவையின் எடுத்துக்காட்டைப் பின்பற்றுவதிலிருந்து வருகிற ஒளியை நீங்கள் இருவரும் ஒன்று சேர்ந்து உணரலாம்.

“அந்தப் பிள்ளையைக் குறித்துத் தங்களுக்குச் சொல்லப்பட்ட சங்கதியைப் பிரசித்தம்பண்ணினார்கள்” (லூக்கா 2:17)

அவர்களால் முடிந்தளவுக்கு அநேக மக்களுக்கு கிறிஸ்து பிறப்பின் அற்புதமான செய்தியை அவர்கள் பகிர்ந்தபொழுது மேய்ப்பர்களின் மகிழ்ச்சியான உற்சாகத்தைக் கற்பனை செய்வது எளிதானது. தூதர்களால் அறிவிக்கப்பட்டு தீர்க்கதரிசனமுரைக்கப்பட்ட மேசியா வந்தார்! அவர் இங்கிருக்கிறார்! உண்மையில் இரட்சகரின் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ளுதல் இயேசு பிறப்பின் ஒரு பெரிய தலைப்பு. தூதர்கள் பாடினார்கள். நட்சத்திரம் வழி காட்டியது. மேய்ப்பர்கள் இதை வெளி உலகுக்குத் தெரியப்படுத்தினார்கள்.

நற்செய்தியை பகிர்ந்துகொள்ளுவதிலும் இரட்சகரைக் குறித்து சாட்சியளிப்பதிலும் கிறிஸ்துமஸ் கதைக்கு நமது குரலை சேர்க்கலாம். “உங்களுடைய ஊழியம் செய்தலின் முயற்சிகளில் இரட்சகரைப் பிரதிபலிக்க உங்களுக்கு தருணமிருக்கும்போது, ‘இந்த தனிப்பட்டவரோடு அல்லது குடும்பத்தோடு சுவிசேஷத்தின் ஒளியை நான் எவ்வாறு பகிர்ந்துகொள்வேன் என உங்களையே நீங்கள் கேட்டுக்கொள்ளுங்கள்?’” என ஒத்தாசைச் சங்க பொதுத் தலைவர் சகோதரி ஜீன் பி. பிங்காம் போதித்தார். “ஆவி என்ன செய்வதற்கு என்னை உணர்த்தியது?”5

இரட்சகரிடத்திலும் அவருடைய சுவிசேஷத்திலும் உங்களுடைய சாட்சியை நீங்கள் எவ்வாறு பகிர்ந்துகொள்ளுவதென்று அறிய நீங்கள் நாடும்போது கருத்தில்கொள்ள இங்கே ஒரு சில ஆலோசனைகள் கொடுக்கப்பட்டிருக்கிறது:

  • இரட்சகரைப்பற்றி உங்கள் உணர்வுகளை தெரிவிக்கிற அல்லது அவருக்கு நீங்கள் ஏன் நன்றியுள்ளவராய் இருக்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்துகிற ஒரு வேத வசனத்தைக் கண்டுபிடியுங்கள். நீங்கள் ஊழியம் செய்கிறவர்களுடன் இதைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

  • ஒரு குறுஞ் செய்தியை அனுப்புங்கள் அல்லது ஒரு கிறிஸ்துமஸ் காணொலியுடன் சமூக ஊடக செய்தியை அனுப்புங்கள். ChurchofJesusChrist.orgல் சில அற்புதமான செய்திகளிருக்கின்றன!

  • கிறிஸ்துவைப்பற்றி உங்களுக்கு நினைவுபடுத்துகிற ஒரு விசேஷமான ஞாபகத்தை அல்லது மரபைப்பற்றி ஒரு நண்பரிடம் கூறுங்கள்.

குழந்தை இயேசு இரட்சகராயிருந்தார் என சிமியோனுக்கும் அன்னாளுக்கும் அவர் சாட்சியளித்ததைப்போல உங்கள் சாட்சியின் சத்தியத்தை பரிசுத்த ஆவியானவர் சாட்சியளிப்பார் என்று விசுவாசியுங்கள் (லூக்கா 2:26, 38 பார்க்கவும்).

“[இயேசு கிறிஸ்து] உலகத்தில் வந்ததை உண்மையில் கனம்பண்ண அவர் செய்ததைப்போல நாம் செய்யவேண்டும், மேலும் நமது சகமனிதர்களை மனதுருக்கத்தோடும் கருணையோடும் அணுகவேண்டும்”, என பன்னிரு அப்போஸ்தலர் குழுமத்தின் மூப்பர் டியட்டர் எப்.உக்டர்ப் சொன்னார். “வார்த்தையினாலும் செயலாலும் இதை நாம் தினமும் செய்யலாம். சிறிது இரக்கமுள்ளவராயிருக்க, அதிகம் மன்னிப்பவராயிருக்க, வறியோரிடத்தில் நமது மிகுதியைப் பகிர்ந்துகொள்வதில் அதிகத் தாராளமானவராயிருக்க நாம் எங்கிருந்தாலும் அது பொருட்டின்றி, இது நமது கிறிஸ்துமஸ் மரபாயிருக்கட்டும்.”6

குறிப்புகள்

  1. Henry B. Eyring, “Christmas Stories” (First Presidency Christmas devotional, Dec. 6, 2009), broadcasts.ChurchofJesusChrist.org

  2. Daiana Melina Albornoz Díaz, “Sharing Christmas,” Liahona, டிசம்பர் 2007, 17 பார்க்கவும்.

  3. Cheryl Boyle, “He Would Have Bought It for You,” Ensign, டிசம்பர் 2001, 57 பார்க்கவும்.

  4. Bonnie L. Oscarson, “Christmas Is Christlike Love” (First Presidency Christmas devotional, Dec. 7, 2014), broadcasts.ChurchofJesusChrist.org.

  5. Jean B. Bingham, “Ministering as the Savior Does,” Liahona, May 2018, 104.

  6. Dieter F. Uchtdorf, “Scatter Your Crumbs” (First Presidency Christmas devotional, Dec. 3, 2017), broadcasts.ChurchofJesusChrist.org.