2019
சேர்த்துக்கொள்ளும் கலாச்சாரத்தை சபையில் எவ்வாறு நாம் உருவாக்கமுடியும்?
ஜூலை 2019


ministering

ஊழியம் செய்தலின் கொள்கைகள், ஜூலை 2019

சேர்த்துக்கொள்ளும் கலாச்சாரத்தை சபையில் எவ்வாறு நாம் உருவாக்கமுடியும்?

நமது தொகுதிகளையும் கிளைகளையும் நாம் சுற்றிப் பார்க்கும்போது, எளிதாகப் பொருந்திப்போகிறதாகத் தோன்றுகிற மக்களை நாம் பார்க்கிறோம். பொருந்திப் போகிறதாகத் தோன்றுகிறவர்களுக்கு மத்தியிலும் அநேகர் தனியாக விடப்பட்டதாக உணருகிறார்களென்பதை நாம் உணருவதில்லை. உதாரணமாக, அமெரிக்க ஐக்கிய நாடுகளில் வயதுவந்தவர்களில் ஏறக்குறைய பாதி பேர் தனிமையானவர்களாக, ஒதுக்கப்பட்டவர்களாக, அல்லது மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டவர்களாக உணருகிறார்களென சமீபத்திய ஆய்வு ஒன்று கண்டுபிடித்திருக்கிறது.1

சேர்த்துக்கொள்ளப்பட்டவர்களாக உணருவது முக்கியமானது. இது மனித தேவையின் அடிப்படையான ஒன்று, ஒதுக்கப்பட்டவர்களாக நாம் உணரும்போது அது காயப்படுத்துகிறது. ஒதுக்கப்படுதல், துக்கத்தின் அல்லது கோபத்தின் உணர்வுகளை விளைவிக்கலாம்.2 சார்ந்திருப்பவர்களைப்போல நாம் உணராதிருக்கும்போது, அதிக சௌகரியமாக இருக்கிற ஒரு இடத்தைத் தேட நாம் முற்படுவோம். சார்ந்திருப்பவர்களாக சபையில் ஒவ்வொருவரும் உணர நாம் உதவ வேண்டும்.

இரட்சகரைப்போலவே சேர்த்துக்கொள்வது.

மற்றவர்களை மதிப்பதிலும் சேர்த்துக்கொள்வதிலும் இரட்சகர் ஒரு பரிபூரண எடுத்துக்காட்டாக இருந்தார். அவருடைய அப்போஸ்தலர்களை அவர் தேர்ந்தெடுத்தபோது அந்தஸ்திற்கு, செல்வத்திற்கு, உயர்ந்த தொழிலுக்கு அவர் கவனம் செலுத்தவில்லை. சமாரியர்களை யூதர்கள் எவ்வளவு தாழ்வாகப் பார்த்தபோதிலும், அவருடைய தெய்வீகத்தன்மையை சாட்சியளித்து, கிணற்றடியில் அவர் சமாரியப் பெண்ணிற்கு மதிப்பளித்தார் (யோவான் 4 பார்க்கவும்). அவர் இருதயத்தைப் பார்க்கிறார், அவர் பட்சபாதமில்லாதவர் (1சாமுவேல் 16:7; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 38:16, 26 பார்க்கவும்).

இரட்சகர் சொன்னார்:

“நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள், நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்கு கொடுக்கிறேன்.

“நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார்” (யோவான் 13:34-35 பார்க்கவும்).

நாம் என்ன செய்ய முடியும்?

அவர்கள் வெளியிலிருப்பதைப்போல ஒருவர் உணருகிறதாயிருந்தால் சிலநேரங்களில் அதைக்கூற கடினமாயிருக்கும். அநேக மக்கள், குறைந்தது மிகத்தெளிவாக அதைச் சொல்லமாட்டார்கள். ஆனால் ஒரு அன்பான இருதயத்துடனும் பரிசுத்த ஆவியின் வழிநடத்துதல் மற்றும் விழிப்புடனிருக்க ஒரு முயற்சியுடனும், சபைக்கூட்டங்களில், நிகழ்ச்சிகளில் சேர்த்துக்கொள்ளப்படாதவராக ஒருவர் உணரும்போது அதை நம்மால் அடையாளம்காணமுடியும்.

ஒதுக்கப்பட்டவராக ஒருவர் உணருகிற சாத்தியமான அடையாளங்கள்:

  • கைகள் இறுக்கமாக மூடப்பட்டிருத்தல் அல்லது கீழ்நோக்கிய கண்கள் போன்ற அடக்கமான உடல் மொழி.

  • அறையின் பின்னால் அமர்ந்திருத்தல் அல்லது தனியாக அமர்ந்திருத்தல்.

  • சபைக்கு வராதிருத்தல் அல்லது ஒழுங்காக வராதிருத்தல்.

  • கூட்டங்கள் அல்லது நிகழ்ச்சிகளில் முன்பே போய்விடுதல்.

  • உரையாடல்கள் அல்லது பாடங்களில் பங்கேற்காமலிருத்தல்.

கூச்சம், கவலை அல்லது சௌகர்யமில்லாதிருத்தல் போன்ற பிற உணர்வுகளுக்கும் இவைகளே அடையாளங்களாயிருக்கலாம். சபையின் புதிய அங்கத்தினர்களாக அவர்களிருக்கும்போது, வேறு நாட்டிலிருந்து, கலாச்சாரத்திலிருந்து அல்லது விவாகரத்து, குடும்பத்தினர் ஒருவரின் மரணம், அல்லது ஊழியத்திலிருந்து முன்பே திரும்ப வருதல் போன்ற ஒரு சமீபத்திய அதிர்ச்சிகரமான வாழ்க்கை மாற்றத்தின்போது “வேறுபட்டவர்களாக” அங்கத்தினர்கள் உணரலாம்.

காரணத்தைப் பொருட்படுத்தாமல் அன்போடு அணுகுவதற்கு நாம் தயங்கக்கூடாது. நாம் என்ன சொல்கிறோம், என்ன செய்கிறோம் என்பது, எல்லோருமே வரவேற்கப்படுகிறார்கள் எல்லோருமே தேவைப்படுகிறார்கள் என்ற ஒரு உணர்வை உருவாக்கும்.

சேர்த்துக்கொள்ளப்படுகிறதாய், வரவேற்கப்படுகிறதாயிருக்க சில வழிகள்:

  • சபையில் எப்பொழுதும் அதே மக்களுடன் அமராதிருங்கள்.

  • உண்மையான நபரைப் பார்க்க மக்களின் வெளிப்புறத்தோற்றத்தை கடந்து பாருங்கள். (For more on this topic, see “Ministering Is Seeing Others as the Savior Does,” Liahona, June 2019, 8–11.)

  • உரையாடல்களில் மற்றவர்களை சேர்த்துக்கொள்ளுங்கள்.

  • உங்கள் வாழ்க்கையில் அங்கமாயிருக்க மற்றவர்களை அழையுங்கள். நீங்கள் ஏற்கனவே திட்டமிட்டிருக்கிற நிகழ்ச்சிகளில் அவர்களை நீங்கள் சேர்த்துக்கொள்ளலாம்.

  • பொது ஆர்வங்களை கண்டுபிடித்து வளருங்கள்.

  • உங்களுடைய எதிர்பார்ப்புகளை ஒருவர் கொண்டிருக்காததால் நட்பை முறிக்காதிருங்கள்.

  • ஒரு நபரைப்பற்றிய தனித்துவமான ஒன்றை நீங்கள் பார்க்கும்போது அதைப் சிறப்பாக்குவதற்கு அல்லது அதை தவிர்ப்பதற்குப் பதிலாக அதில் ஆர்வத்தைக் காட்டுங்கள்.

  • அன்பை வெளிக்காட்டி உண்மையான பாராட்டுதல்களை வழங்குங்கள்.

  • அவர்களின் வேறுபாடுகள் எதுவாயிருந்தாலும் சபை எல்லோருக்குமே என நாம் சொல்லும்போது அதற்கு அர்த்தமென்ன என சிந்திப்பதற்கு நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். இதை நாம் எவ்வாறு ஒரு யதார்த்தமாக்க முடியும்?

நம்மிலிருந்து வேறுபட்ட மக்களோடு இருக்கும்போது சௌகரியமாக உணர்வது எப்போதுமே எளிதல்ல. ஆனால் நடைமுறையில், வேறுபாடுகளில் மதிப்பைக் கண்டுபிடிப்பதிலும், ஒவ்வொரு நபரும் கொண்டுவருகிற தனிப்பட்ட பங்களிப்புகளைப் பாராட்டுவதிலும் சிறப்படைய முடியும். பன்னிரு அப்போஸ்தலர் குழுமத்தின் மூப்பர் டியட்டர் எப்.உக்டர்ப் போதித்ததைப்போல, நமது வேறுபாடுகள் நம்மை ஒரு சிறந்த, சந்தோஷமான மக்களாக்க உதவும்: “தேவனின் எல்லா பிள்ளைகளிடத்திலும் குணமாக்குதல், இரக்கம் மற்றும் கருணையின் கலாச்சாரத்தை வளர்க்கவும், பெலப்படுத்தவும் வாருங்கள், எங்களுக்கு உதவுங்கள்.”3

சேர்த்துக்கொள்ளப்படுவதால் ஆசீர்வதிக்கப்படுகிறவர்கள்

போரினால் அவளுடைய தாய்நாடு சிதைந்த பின்பு கிறிஸ்ட்டல் பெச்சர் மற்றொரு நாட்டிற்கு இடம் பெயர்ந்தாள். அந்த மொழியில் அவளுக்கு சரியாகப் பேசவராது, அவளுடைய புதிய அண்டைவீட்டில் அவளுக்கு யாரையும் தெரியாது, ஆகவே முதலில் தனித்துவிடப்பட்டவளாகவும், தனிமையானவளாகவும் அவள் உணர்ந்தாள்.

சபையின் ஒரு அங்கத்தினராக தன்னுடைய தைரியத்தையெல்லாம் ஒன்றுகூட்டி அவளுடைய புதிய தொகுதியில் பங்கேற்க ஆரம்பித்தாள். அவளுடைய கடினமான உச்சரிப்பு அவளுடன் மக்கள் பேச விரும்புவதிலிருந்து அவர்களைத் தடுக்கலாம் அல்லது அவள் தனியான பெண்ணாயிருப்பதால் தீர்க்கப்படலாமென அவள் கவலைப்பட்டாள்.

ஆனால், அவளுடைய வேறுபாடுகளை கவனிக்காத, தங்களுடைய நட்பின் சமுதாயத்திற்கு அவளை வரவேற்ற பிறரை அவள் சந்தித்தாள். அன்பில் அவர்கள் அணுகி, விரைவிலேயே ஆரம்ப வகுப்பில் போதிப்பதற்கு உதவுவதில் தான் சுறுசுறுப்பாயிருப்பதைக் கண்டாள். ஏற்றுக்கொள்வதில் பிள்ளைகள் மிகப்பெரிய எடுத்துக்காட்டுகளாயிருந்தனர், அன்பு செலுத்தப்படுகிற, தேவைப்படுகிற உணர்வு அவளுடைய விசுவாசத்தைப் பெலப்படுத்தி, வாழ்நாள் முழுவதும் கர்த்தர்மீதுள்ள அர்ப்பணிப்பைத் தூண்ட உதவியது.

குறிப்புகள்

  1. Alexa Lardieri, “Study: Many Americans Report Feeling Lonely, Younger Generations More So,” U.S. News, May 1, 2018, usnews.com பார்க்கவும்.

  2. Carly K. Peterson, Laura C. Gravens, and Eddie Harmon-Jones, “Asymmetric Frontal Cortical Activity and Negative Affective Responses to Ostracism,” Social Cognitive and Affective Neuroscience, vol. 6, no. 3 (June 2011), 277–85 பார்க்கவும்.

  3. Dieter F. Uchtdorf, “Believe, Love, Do,” Liahona, Nov. 2018, 48.